Pages

புதன், ஜூலை 17, 2013

நம் தேசிய கொடியை வடிவமைத்த பெண்!!

நம் தேசிய கொடியை வடிவமைத்த பெண்!!




நாம் இப்போது உபயோகிக்கும் இந்திய நாட்டின் தேசிய கொடியை, சரியான நீள அகலத்தில், சரியான வண்ணத்தில் ஓவியமாக ஒரு துணியில் வரைந்து, தனது கணவரிடம் தந்து, அதை அவர் காந்திஜியிடம் காட்ட, அண்ணல் அதற்கு இசைவளிக்க, அப்படியாக... 1947 ஜூலை 17 அன்று பிறந்ததுதான் நமது இந்திய தேசிய கொடி..!

வடிவமைத்த அந்த ஓவிய பெண்மணியின் பெயர் ஸுரியா தியாப்ஜி.

ஐடியா தந்த அவரின் கணவரின் பெயர் பத்ருதீன் தியாப்ஜி.

( பலரும் தவறாக நினைத்துக்கொண்டு இருப்பது போல... அல்லது வேண்டுமென்றே வரலாற்றை திரித்து தவறாக பரப்பப்படுவது போல... இந்திய தேசிய கொடியை வடிவமைத்தது பிங்காலி வெங்கையா அல்ல..! அல்லவே அல்ல..! )


இந்த பத்ருதீன் தியாப்ஜிதான்... இந்திய தேசிய காங்கிரசை நிறுவியவர்களில் முக்கியமான முதல் ஐவரில் ஒருவரின் பேரன்..!

அந்த ஐவரில் மீதி நான்கு பேரை பள்ளி வரலாற்றில் படித்து இருப்பீர்கள். ஆலன் அக்டேவியன் ஹியூம், வில்லியம் வெட்டர்பன், ஒமேஷ் சந்திர பானர்ஜி, தாதாபாய் நவ்ரோஜி ஆகிய நால்வரை அடுத்த பெயர்தான்... முல்லா தியாப் அலியின் மகன் பாரிஸ்டர்.பத்ருதீன் தியாப்ஜி..! (காலம் : 1844 – 1906)


சர். ஆலன் அக்டேவியன் ஹியூம், சர்.வில்லியம் வெட்டர்பன் போன்ற ஆங்கிலேயர்களால், மெத்தப்படித்த இந்தியர்களை அழைத்து, 1885 இல், INC துவக்கப்பட்டது. நோக்கம், பிரிட்டிஷ் அரசுடன் எந்த பிரச்சினை ஆனாலும் சுமுக பேச்சுவார்த்தைக்காக வேண்டி. அதன் முதல் தலைவர்...W.C.பானர்ஜி.

1886 இல், இ.தே.கா. இன் இரண்டாம் தலைவர் பாரிஸ்டர். D. நவ்ரோஜி. அடுத்த வருடம், 1887 இல் தலைவரானவர்தான் பாரிஸ்டர். பத்ருதீன் தியாப்ஜி.

இவர்தான் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் இந்திய பாரிஸ்டர். (1867)
பின்னர் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் இந்திய சீஃப் ஜஸ்டிஸ். (1902)
இவரின் மகன்தான் பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் முஸ்லிம் பொறியாளர்.
இவரின் மகளோ முதலில் வெளிநாடு சென்று படித்து வந்த டாக்டர்.

அவரின் பேரன்தான்.... நாம் முதலில் பார்த்தவர்... அவரின் பெயரும் தாத்தாவின் பெயரேதான்..! பத்ருதீன் தியாப்ஜி..!

பிப்ரவரி - 20, 1947 : ஆளும் அதிகாரத்தை இந்தியர்களுக்கு விட்டுவிடப் போவதாக இங்கிலாந்து பிரதமர் கிளிமென்ட் அட்லீ அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார்.

ஜூன் 3, 1947 : வைஸ்ராய் மவுன்ட் பேட்டன், பாகிஸ்தான் - இந்தியா என்று இரு நாடுகளாக பிரிப்பது பற்றிய தனது திட்டத்தை காங்கிரஸ் & முஸ்லிம் லீக் கட்சிகளிடம் சொல்கிறார். ஆகஸ்ட் 15 ஆட்சி மாற்றம் நடைபெறப் போவதாகவும் குறித்து தெரிவிக்கிறார்.

அத்துடன், வைஸ்ராய் மவுன்ட் பேட்டன், இந்தியா & பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டின் கொடிகளிலும், தங்கள் பிரிட்டிஷ் நாட்டின் சின்னமான யூனியன் ஜாக்கை (நீள பின்புலத்தில் சிகப்பு வெள்ளையில், ஒரு பெருக்கல் குறி மீது ஒரு கூட்டல் குறி) தத்தம் கொடியின் மூலையில், பத்தில் ஒரு பங்கு அளவில் வைக்குமாறு கோரிக்கை விடுக்கிறார். ( ஆஸ்திரேலியா, நியூசிலாந்து கொடிகளில் தற்போது உள்ளது போல...! )

இதனால், கடுப்பாகிப்போன இருவரும், தங்களுக்கான தனித்துவ கொடி வடிவமைப்பில் முழுமூச்சாக இறங்குகின்றனர். முக்கியமாக அந்த பிரிட்டிஷ் கொடியின் 'யூனியன் ஜாக்' இருக்கவே கூடாது என்று முடிவெடுத்தவர்களாக..!

ஜூன் 23 1947 : கொடி வடிவமைக்க ஒரு அட்ஹாக் கமிட்டி அமைக்கப்படுகிறது. ( Ad-hoc Committee; Dr. Rajendra Prasad (Chairman), Abul Kalam Azad, C. Rajagopalachari, Sarojini Naidu, K. M. Pannikkar, K. M. Munshi, B. R. Ambedkar, S. N. Gupta, Frank Anthony and Sardar Ujjal Singh)

முன்னர், 1916 இல் பிங்காலி வெங்கையாவால் வடிவமைக்கப்பட்ட, சுதந்திரம் வாங்க போராடிய "இந்திய தேசிய காங்கிரஸ் கொடியே நம் நாட்டின் தேசிய கொடி" என்ற வாதம் வலுப்பெறுகிறது..!


மேலே உள்ள இந்திய அரசின் தபால் தலையில் இவர் வடிமைத்த கொடி எவை எவை என்று மிகவும் தெளிவாகவே உள்ளது..!கவனியுங்கள் சாகோஸ்..!

இந்நிலையில், மும்பையில் இருந்து டெல்லிக்கு ஆர்.எஸ்.எஸ். இன் சாவர்கர், முக்கிய காங்கிரஸ் தலைவர்களுக்கு இப்படி ஒரு அவரசர தந்தி அடிக்கிறார். அதில், கொடி முழுக்க காவி நிறம் இருக்க வேண்டும் என்றும்(?!) இராட்டை இடம்பெறவே கூடாது என்றும்(?) வேறு எந்த சின்னமும் இருக்கலாம்(!) என்றும் கூறி..!

வேறு சிலர், புலிச்சின்னம் உள்ள நேதாஜி ஏற்றிய கொடிதான் வேண்டும் என்கின்றனர். இப்படியாக ஆளாளுக்கு ஒரு கருத்து சொல்லிக்கொண்டு இருக்க, அனைத்து கருத்துக்களையும் அமைதியாக கேட்டு வைக்கிறது அட்ஹாக் கமிட்டி.

இப்போதுதான், முதல் பத்தியில் நாம் பார்த்த பத்ருதீன் தியாப்ஜி, சீனில் என்ட்ரி ஆகிறார்..! அவர், கமிட்டி தலைவர் டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத்தை சந்தித்து, அவரின் தேசிய கொடியின் மாதிரியை சொல்கிறார். தலைவருக்கு இது பிடித்து விடவே, அதற்கு காந்திஜியின் ஒப்புதலையும் பெற்று வருமாறு அனுப்பி வைக்கிகிறார். காந்திஜியிடம், ராட்டைக்கு பதில் அசோக சக்கரம் மாற்றப்படுவதற்கு காரணத்தை இப்படி சொல்கிறார், பத்ருதீன் தியாப்ஜி.


அதாவது, "கிடைமட்டமான சம அளவு மூவர்ணம் கொண்ட இந்திய தேசிய கொடியின் இருபக்கத்தில் இருந்து அதை பார்த்தாலும், இடம் வலம் மாறாமல் கொடி அதே போலவே தெரியவேண்டும். இதற்கு அசோக சக்கரம்தான் சரியாக வரும். இந்திய தேசிய கொடியின் 'இராட்டை' சரியாக வராது" என்றார்..!

கூர்ந்து கேட்டுவிட்டு இதனை, ஏற்றுக்கொண்ட காந்திஜி, அவரையே உடனே ஒரு 'மாதிரி கொடி' தயார் செய்து கொண்டு வந்து காட்டுமாறு கூறுகிறார்.

மூன்று அளவு நீளமும், இரண்டு அளவு அகலமும் கொண்ட காதி கைத்தறி துணி ஒன்றை வாங்கிக்கொண்டு போய், தனது மனைவி ஸுரியாவிடம் தருகிறார். அவர் ஒரு கைதேர்த்த வண்ணத்தூரிகையாளர்.

கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திய அந்த அம்மையார், சிகப்பு+மஞ்சள் கலந்து காவி மேலேயும், கரும்பச்சையை கீழேயும், நடுவில் வெள்ளையில் கரு நீல வண்ணத்தில் 24 கால்கள் கொண்ட அசோக சக்கரமும் மிக எழிலாக வரைந்து தருகிறார்.

தியாப்ஜி அதை கொண்டு போய் காந்திஜியிடம் காண்பிக்க, அதற்கு காந்திஜி இன்முகத்துடன் ஒப்புதல் தந்து அட்ஹாக் கமிட்டிக்கு அனுப்ப, அந்த 'கொடி வடிவமைப்பு கமிட்டி' அதையே சுதந்திர இந்தியாவின் தேசிய கொடியாக அறிவிக்கிறது... ஜூலை 17, 1947 அன்று அதிகாரபூர்வமாக..!

இந்திய தேசிய கொடி பறந்து கொண்டிருக்கும் 365 தினங்களிலும் தேசிய கொடியை வடிவமைத்த அப்பெண்மணிக்கு, கோடி கரங்கள் தடுத்து மறைத்தாலும் வரலாற்றில் தக்க இடம் நிச்சயமாக உண்டு..!

ஆதார ஆவணங்கள்
Who designed National Flag : Mrs. Badruddin Tyabji
http://www.flagfoundationofindia.in/tiranga-quiz.html (official site for national flag)
http://muslims4india.com/contribution/freedom/national-flag.html (The wheel of truth, by Mr.K.Natwar Singh)

கருத்துகள் இல்லை: