Pages

செவ்வாய், ஜூன் 04, 2013

வலிப்பு நோயைக் குணப்படுத்தும் பூசணிக்காய்

வலிப்பு நோயைக் குணப்படுத்தும் பூசணிக்காய் . . . .



பறங்கிக்காய் போன்ற தோற்றத்தில் சாம்பல் நிறத்தில் காணப்படும் பூசணிக்காய். இது சாம்பல் நிறத்தில் காணப்படுவதால்தான் ஆங்கிலத்தில் இதற்கு ஆஷ் கார்ட் (Ash Gourd) என்று பெயர் இட்டுள்ளனர். ஆஷ்கார்ட் என்பதற்கு தமிழில் சாம்பல் பூசணி என்று பொருள்.


கோடைக்காலத்தில் வெப்பத்தினால் உடலில் அதிகம் உண்டாகும் வெப்பத்தை பூசணிக்காய் தணிக்கிறது. அதனால் இதைக் கோடைப் பூசணி என்றும் வழங்குவார்கள்.

பூசணிக்காயின் தாயகம் வடக்கு மெக்ஸிகோவும், தென்னமெரிக்காவுந்தான். இதன் தாவர விஞ்ஞானப் பெயர் பெனின்காசா ஹிஸ்பிடா (Banincasa Hispida) என்பதாகும்.

சாம்பல் பூசணியின் இலைகளும், விதைகளும், பூசணியைப் போலவே முழுவதும் ஊட்டச் சத்து நிரம்பியவை.

இதில் உள்ள ஊட்ட உணவுகளுக்காகவும் மருத்துவக் குணங்களுக்காவுமே பூசணியைப் பயிர் செய்கின்றனர். இது படர் கொடியைச் சேர்ந்தது. தென்னமெரிக்கர்களின் விருப்பமான காய்கறிகளுள் சாம்பல் பூசணியும் ஒன்றாகும். இக்காய்கறி பெண்களுக்கு ஏற்படும் வலிப்பு நோய், தலைப்பேன்கள், சிறுநீர் பிரியாமை முதலியவற்றைக் குணப்படுத்திவிடுகிறது.

முடி நன்கு வளரவும், தலையில் பேன்கள் குடியேறாமல் இருக்கவும், வறண்ட முடிகள் எண்ணெய்ப் பசையுடன் காட்சியளிக்க பின் வருமாறு செய்ய வேண்டும். பூசணியின் தோலையும், விதைகளையும் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி இறக்கி வைத்துக் கொள்ளவும். தினமும் இந்த எண்ணெயைத் தலையில் தேய்த்தால் போதும், பலன் கிடைக்கும்.

இது மட்டுந்தானா?

1 கிராம் பூசணியில் கிடைக்கும் கலோரி 15 தான். இதனால் நீரிழிவு நோயாளிகளும், உடல் பருத்த ஊளைச் சதை நோயாளிகளும் இதைச் சமைத்து உண்ணலாம். உடல் பருக்காது, உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியையும் தருகிறது.

சிறுநீர் நன்கு பிரிய உறுப்புகளைத் தூண்டுகிறது. பாலுணர்ச்சியைத் தூண்டுகிறது. தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தை ஏற்படுத்திவிடுகிறது. திடீர் திடீர் என்று ஏற்படும் வலிப்பு நோய்களையும் குணமாக்கிவிடுகிறது.

மேற்கண்ட அனைத்து நன்மைகளையும் பெறப் பூசணிக்காயைச் சமைத்து உண்டால் போதும், மனத்திற்கு அமைதி ஏற்படும். உடலும் சுறுசுறுப்பாய் இருக்கப் புதுப்பிக்கப்படும்.

பலவீனமான இருதயமா?

நன்கு பழுத்த பூசணியின் சதையை மட்டும் எடுத்துக் கொதிக்கும் தண்ணீரில் சிறுசிறு துண்டுகளாய் நறுக்கிப் போடவும். ஆறியதும் இரு தேக்கரண்டி சர்பத் சேர்த்து அருந்தவும். இது முக்கியமான மருந்தாகும்.

இதயம் பலகீனமாய் உள்ளவர்கள், இரத்த சோகை நோயாளிகள், புற்றுநோயாளிகள், உடல் உடையை அதிகரிக்க விரும்புகிறவர்கள் இந்த மருந்தை தினமும் (ஒருவேளை) தயாரித்து அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும், உடலின் வெப்பம் தணியவும், ஆணின் உயிரணுக்கள் அடர்த்தியுடன் வெளிப்படவும் இந்த மருந்தை அருந்த வேண்டும்.

இரத்த வாந்தியா?

இரத்தத்தை உறையச் செய்வதில் சாம்பல் பூசணி முக்கிய இடத்தை வகிக்கிறது.

பூசணியின் சதையை மட்டும் எடுத்து வெயிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும். பிறகு, அதை இடித்துப் பொடிபோலச் சாப்பிட்டால் இரத்த வாந்தி, கோழை முதலியன குணமாகும்.

மூலம், சிறுநீர் ஆகியவற்றில் வரும் இரத்தம், நுரையீரல்கள் மற்றும் மூக்கு வழியாக வரும் இரத்தம் முதலியவற்றை இறுகி உறையச் செய்ய முடியும். இதற்காகத் தோல் நீக்கிய பூசணிக்காய்த் துண்டுகளை மிக்ஸி மூலம் சாறாக மாற்றி, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசத்தையும் சேர்த்து அருந்தினால் போதும். இரண்டு மூன்று முறை இவ்வாறு அருந்தியதுமே இரத்தம் உறைந்து விடும். இரத்த வாந்தியின் போதும் இந்த முறையில் அருந்தலாம்.

சிறுநீர் நன்கு பிரியவும், உடலில் உள்ள கழிவுகள் வெளியேறவும் பூசணிக்காயை உணவில் சேர்ப்பது நலம். பூசணிக் கொடியின் இளந்தளிர் இலைகளுக்கும் இதே மருத்துவக் குணங்கள் உள்ளன.

பழுத்த பூசணிக்காயை இனிப்பு வகைகள் செய்யப் பயன்படுத்தலாம். பழுத்த பூசணியின் சதையைச் சாறாக்கிக் சர்பத் சேர்த்து அருந்தினால் உடல் வெப்பம் தணியும்; குளிர்ச்சி உண்டாகும்.

வயிற்றுக் கோளாறுகள் குணமாக…..

சூடான தோசை வார்க்கும் தட்டில் பூசணியைப் பிழிய வேண்டும். சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அழுத்தினால் போதும். அதில் கிடைக்கும் சாற்றுடன் அதே அளவு தண்ணீர் சேர்த்து அருந்த வேண்டும். தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் வயிற்றுப் புண் முற்றிலும் குணமாகும். இந்தச் சாறு அருந்திய மூன்று மணி நேரத்திற்குப் பிறகே வேறு வகையான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்.

இந்த முறையில் சாப்பிட்டால் உணவுப் பாதையில் உள்ள வீக்கம் பொருமல் போன்றவையும் குணமாகும்.

குடல் புழுக்கள் வெளியேறும்!

பூசணியின் விதைகள் குடல் புழுக்களை அழிக்கும் தன்மையைப் பெற்றுள்ளன. தோல் நீக்காமல் தேங்காய்ப் பாலுடன் சேர்த்து இந்த விதைகளைச் சாப்பிட வேண்டும். இதன் மூலம் குடலில் உள்ள எல்லா வகையான புழுக்களும் அகன்றுவிடும். இந்த விதையில் உள்ள பழுப்பு நிற எண்ணெயும் மருத்துவக் குணம் நிரம்பியது.

பூசணிக்காயின் விதைகளை அகற்றிவிட்டுச் சதையை மட்டும் வேக வைக்க வேண்டும். புண்களின்மீது இந்தச் சதையை நன்கு பிசைந்து வைத்துக் கட்ட வேண்டும். புண்களினால் ஏற்படும் கெட்ட நாற்றம் நீங்கி, புண்கள் குணமாகும்.

சாம்பல் பூசணியில் சிறிதளவே புரதம், மாவுபொருள்கள் ஆகியன உள்ளன. ஆனால் அதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து ஆகியனவும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் 'பி' குரூப் வைட்டமின்களும், 'சி' வைட்டமினும் தக்க அளவில் உள்ளன. இதனால்தான் இதயம் பலம் பெறுகிறது. உடலின் எடையும் அதிகரிக்கிறது. நரம்புக் கோளாறுகளும் குணமாகின்றன.

மலச்சிக்கல் இன்றி நலமுடன் வாழ வேண்டும் என்னும் ஒரே நோக்கத்தில் அவ்வப்பொழுது பூசணிக்காய் சாப்பிட்டால் மேற்கண்ட அனைத்து நன்மைகளையும் தொடர்ந்து பெறலாம்.

வெளியில் பச்சை நிறத் தோலுடன் காட்சி அளிக்கும் பூசணிக்கு கல்யாணப் பூசணிக்காய் என்று பெயர். இதில் சதை அதிகம் இருக்கும். இதுவும் காக்கை வலிப்பு, நரம்புக் கோளாறுகள், பித்தக் கோளாறுகள் முதலியவற்றைக் குணமாக்குகிறது.

எனவே, பூசணிக்காயை உங்கள் உணவில் ஒதுக்காமல் சேர்த்துக் கொள்ளுங்கள்.

திருஷ்டி சுற்றிப் போட மட்டுமே பூசணியைப் பயன்படுத்துகிறவர்கள், இதன் மருத்துவப் பயனையும் சத்துணவையும் அறிந்தால் உணவாகப் பயன்படுத்தி உடல் நலம் பெறுவார்கள் என்பது உறுதி.

கருத்துகள் இல்லை: