Pages

வெள்ளி, நவம்பர் 14, 2014

ஜில்லுனு ஒரு பனிக்காலம்

ஜில்லுனு ஒரு பனிக்காலம்
சருமப் பாதுகாப்பு
குழந்தைகள்:
ஒரு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, தலையில் (ஸ்கால்ப்) உள்பகுதியில் அடை அடையாக இருக்கும். பனிக் காலத்தில் இது மேலும் அதிகரிக்கலாம். இதனால் அரிப்பு, நமைச்சல் தாங்காமல் குழந்தை அழுதுகொண்டே இருக்கும். சில குழந்தைகளுக்கு, புருவம், முதுகு மற்றும் முடியிலும் வெள்ளைநிறப் பொடி போல் ஒட்டியிருக்கும். இதைப் போக்க...
வீட்டிலேயே குளியல் பொடி தயாரித்து வைத்துக்கொண்டு, குழந்தையைக் குளிப்பாட்ட பயன்படுத்தலாம்.
பயத்தம்பருப்பு, வெந்தயம், கடலைப்பருப்பு மூன்றையும் சமஅளவு எடுத்து, சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு வெயிலில் நன்கு காயவைத்து, மிஷினில் பட்டுப்போல அரைத்துக்கொள்ள வேண்டும். இதை சலித்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கு, ஒருநாள் விட்டு ஒருநாள், உச்சி முதல் பாதம் வரை இந்தப் பொடியைக் குழைத்து, நன்றாகத் தேய்த்துக் குளிப்பாட்டி, மிருதுவான துவாலையால் துடைக்க வேண்டும். இதனால், குழந்தை, எந்தச் சருமப் பாதிப்பும் இன்றி புத்துணர்ச்சியாக இருக்கும்.
விளையாடும் வயதில் உள்ள குழந்தைகளுக்கு, முழங்காலில் இருந்து பாதம் வரை வறண்டு போய், அரிப்பெடுக்கும். சொறியும்போது, திட்டுத்திட்டாகக் கறுத்துவிடும். இதைப் போக்க...
ஆலிவ் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயைக் கால்களில், முட்டி முதல் பாதம் வரை நன்றாகத் தடவி 10 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு, சோப் போட்டுக் குளிப்பாட்டி, மெல்லிய துணியால் துடைக்க வேண்டும். அரிப்பு, சொறி போவதுடன், கறுமையும் மறைந்து சருமத்தின் இயற்கை நிறத்தைத் தரும்.
பாதத்தின் அடிப்பகுதியும் சில குழந்தைகளுக்கு வறண்டு இருக்கும். சூடான பாலில் கடலை மாவைக் குழைத்து, வெதுவெதுப்பான சூட்டில் முழங்கால் முதல் பாதம் வரை தடவி, வெதுவெதுப்பான நீரில் கழுவிட வேண்டும். இதை வாரம் ஒரு முறை செய்யலாம். கால்களில் வறட்சி மறைந்து, மென்மையாகும்.
டீன் ஏஜ்
சாதாரண காலத்திலேயே பொடுகு பெரும் பிரச்னைதான். அதிலும், குளிர் காலத்தில் கேட்கவே வேண்டாம். இதற்கு, மிக முக்கியமான காரணமே, இன்றைய பெண்கள் தலையில் எண்ணெயே வைக்காமல் விடுவதுதான். இதனால் தலைக்குள் இருக்கும் சருமம் வறண்டுவிடும்.
இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெயில் அரை டீஸ்பூன் மிளகு போட்டுக் காய்ச்சி இறக்கவும். எண்ணெய் இளஞ்சூடாக இருக்கும்போதே, தலையில் தடவி, நன்றாக வாரிக்கொள்ள வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து, ஒரு டீஸ்பூன் கடலை மாவு, ஒரு டீஸ்பூன் வெந்தயத்தூள் போட்டுக் கரைத்து, தலையில் லேசாகத் தேய்த்து நன்றாக அலசிக் குளிக்க வேண்டும்.
கை, கால்களில் தோல் வறண்டு, லேசாக நகம் பட்டுக் கீறினால்கூட, வெள்ளை வெள்ளைக் கோடுகளாகத் தெரியும்.
இதைப்போக்க... ஏடுடன் இருக்கும் பாலில், ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெயை விட்டு, கரண்டி அல்லது 'விப்பர்' கொண்டு நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையைக் கை, கால்கள், கழுத்து என எல்லா இடங்களிலும் தடவி வைத்திருந்து, சாதாரண சோப் போட்டுக் குளிக்க வேண்டும்.
நடுத்தர வயதினர் (30 முதல் 60)
தோலில் சுருக்கம் அதிகமாகத் தெரியும். பால் சம்பந்தப்பட்ட பொருட்களைக்கொண்டு, இந்தச் சுருக்கத்தைப் போக்கலாம். பால், தயிர், வெண்ணெய் என ஏதாவது ஒன்றைச் சிறிதளவு எடுத்து, நன்றாக அடித்துக்கொள்ள வேண்டும். அதை அப்படியே சுருக்கம் உள்ள கை, கழுத்து, முகம் போன்ற இடங்களில் தேய்த்து, 10 நிமிடம் கழித்துக் குளிக்கலாம். அல்லது ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, இரண்டு உள்ளங்கைகளையும் பரபரவெனத் தேய்த்து, முகம், கழுத்து, கை, கால்களில் தடவி வைத்திருந்து, வெறும் தண்ணீர் ஊற்றிக் கழுவலாம். இதனால், பனியால் சருமம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படும்.
இந்த வயதினருக்கு, தேஙகாய்ப்பால் மிகச் சிறந்தது. தலையில் தேய்த்துக் குளித்தால், கேசம் மிருதுவாக இருக்கும். தலையில் அரிப்பு, பொடுகு மறையும். உடம்பில் தேய்த்துக் குளிக்கும்போது, சருமத்தில் சுருக்கம் மறைந்து, பொன்போல மினுமினுக்கும்.
60 வயதுக்கு மேல்
சோப் உபயோகிப்பதைத் தவிர்க்கலாம். அதற்குப் பதிலாக, தேநீர் தயாரித்த பின் எஞ்சும் தேயிலைத்தூளை, சிறிது தண்ணீர்விட்டு ஊறவைத்து, அதை மிக்ஸியில் போட்டு அரைத்து, உடலிலும் தலையிலும் தேய்த்துக் குளிக்கலாம். ரசாயனம் கலக்காத, பேபி ஷாம்பூ அல்லது மைல்டு ஷாம்பூ உபயோகிக்கலாம்.
ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் கலந்து வைத்துக்கொள்ளவும். குளிக்கும்போது, முதலில் உடலில் தண்ணீரை விட்டுக்கொண்டு, பிறகு இந்த எண்ணெய்க் கலவையைத் தேய்க்க வேண்டும். முதியவர்களின் சருமம் மிகவும் வறண்டு இருப்பதால், எண்ணெயை முதலில் தடவக் கூடாது. தண்ணீரை உடலில் ஊற்றிய பின் தடவினால், எண்ணெய் சமமாகப் பரவும். பிறகு, டீத்தூள் தேய்த்துக் குளிக்கலாம்.
கசகசாவை அரைத்துப் பால் எடுத்து, அதை உடலில் தடவிக் குளித்தால் வறட்சியைப் போக்கி மினுமினுக்கும்.

கருத்துகள் இல்லை: