Pages

வியாழன், அக்டோபர் 02, 2014

ஜில்லுனு ஒரு பனிக்காலம்

ஜில்லுனு ஒரு பனிக்காலம்
பராமரிப்பும் பாதுகாப்பும்.....
நம் ஊரைப் பொருத்தவரை, எப்போதுமே வெயில், வெயில், வெயில்தான். மழைக் காலம், குளிர் காலம் என்று இருந்தாலும் காலநிலை மாறி, வருடத்தின் முக்கால்வாசி நாட்கள் வெப்பத்திலும், புழுக்கத்திலும் கழிகின்றன. அதனால், குளிரும் பனியும் நமக்கு ஒரு சுகமான காலம். பனிக் காலம் தொடங்கிவிட்டது. காலையில் சில்லிடும் பனிக் காற்றால், இரவு வரை வீடே ஒருவித ஈரப்பதத்துடன் இருக்கும். குளிர்காலம் என்பது நமக்கு மட்டுமல்ல, கிருமிகளுக்கும் கொண்டாட்டமான காலம்தான். இந்த இதமான தட்ப வெப்பநிலை, கிருமிகள் செழித்து வளர உதவும். விளைவு, சாதாரண ஜலதோஷம் தும்மலில் தொடங்கி, காய்ச்சல், சுவாசப் பிரச்னை என ஆரோக்கியம் கெடுவதுடன், நம்மை ஒரேயடியாக முடக்கிப்போட்டுவிடும். அதிலும், ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்னை உள்ளவர்களுக்கு, 'பனிக் காலம்' என்பதே பரிதாபத்துக்குரிய காலம்தான்! உடலின் நீர்ச் சத்தும் சருமத்தின் எண்ணெய்ப்பசையும் குறைவதால், சருமமும் வறண்டு, தோல் சுருங்கி, பொலிவிழந்துபோகும்.
தனிக் கவனமும் முன்னெச்சரிக்கையும் இருந்தால், இந்தப் பனிக் காலத்தையும், பிணியின்றிக் கடந்துவிடலாம். உடலைக் கதகதப்பாக வைத்துக்கொள்வதும், உடலுக்கு உஷ்ணம் தரும் உணவுகளை எடுத்துக்கொள்வதும், சருமத்தை வறண்டுபோகாமல் பார்த்துக்கொள்வதும்தான் குளிர் காலத்தில் கவனிக்க வேண்டிய முக்கியமான மூன்று விஷயங்கள். உடலைப் பாதுகாக்கும் குறிப்புகளை, மூத்த பொதுமருத்துவர் எஸ். சேதுராமனும், குளிர்காலத்துக்கு ஏற்ற உணவுக் குறிப்புகளை, சித்த மருத்துவர் டாக்டர் பத்மபிரியாவும், சருமத்துக்கான இயற்கை அழகுக் குறிப்புகளை அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளியும் வழங்கியிருக்கிறார்கள்.
இனி, பனிக் காலம் புத்துணர்ச்சி, பொலிவுடன் அமைய வாழ்த்துக்கள்!
''குளிர் காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது, பச்சிளம் குழந்தைகளும் முதியோர்களும்தான். அவர்களைத்தான், முதலில் கவனத்துடன் பாதுகாக்க வேண்டும்'' என்கிறார் திருச்சியைச் சேர்ந்த மூத்த பொதுநல மருத்துவர் எஸ்.சேதுராமன்.
பனிக் காலப் பிரச்னைகளும் தீர்வும்...
சளி, இருமல், தொண்டைக்கட்டு, தும்மல், தலைவலி, ஆஸ்துமா, உடல்வலி, காது அடைப்பு, சோர்வு, சரும வறட்சி, நுரையீரல் பாதிப்பு, மூட்டுவலி, சூட்டினால் ஏற்படும் கண் எரிச்சல், அலர்ஜி போன்ற சகல பிரச்னைகளும் வரிசைகட்டி வரத்தொடங்கிவிடும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு, இந்தப் பாதிப்புகள் உடனடியாகத் தொற்றிக் கொள்ளும்.
டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் தொற்றலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத குழந்தைகளுக்கு, ஃப்ளூ காய்ச்சல் மிக எளிதாகத் தாக்கலாம். இதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 'ஃப்ளூ' தடுப்பூசி போட வேண்டும். டைஃபாய்டு காய்ச்சல் வர வாய்ப்பு இருப்பதால், முன்னரே அதற்கான தடுப்பூசிகள் போட்டுக்கொண்டால் வரும் முன் காக்கலாம்.
ஏதாவது ஒரு பொருளால் ஏற்கெனவே அலர்ஜி ஏற்படுகிறது என்பது தெரிந்தால், அதைத் தவிர்த்துவிடுவது நல்லது. 'சிந்தடிக்', ஃபர் பொம்மைகள் விளையாடக் கொடுக்கக் கூடாது. இது குழந்தைகளின் அலர்ஜியை அதிகமாக்கும்.
முடிந்தவரை, வீசிங் வரும் குழந்தைகள் இருக்கும் இடத்தை, தூசி இல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். கார்ப்பெட், பெட்ஷீட், தலையணை உறை போன்றவற்றைச் சுத்தமாகப் பராமரிப்பது நல்லது. மிக பலமான வாசனைகொண்ட 'பெர்ஃப்யூம்'களைத் தவிர்ப்பதும் அலர்ஜியிலிருந்து காக்கும்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, உடைக்கு வெளியே தெரியும் கை, கால் போன்ற பகுதிகளில் கொசு விரட்டும் க்ரீம் தடவி அனுப்பலாம். இதனால் சருமத்துக்கு எந்தத் தீங்கும் இல்லை.
முதியோர்
வயது முதிர்ந்தவர்களுக்கு பனிக் காலம் வந்தாலே, 'எப்போது இந்த சீஸன் முடியும்?' என்றுதான் நினைக்கத் தோன்றும். அந்தளவுக்கு பாதிப்பின் வீரியம் மிக அதிகம். அதிலும், ஒல்லியான உடல்வாகு கொண்டவர்கள் மேலும், மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிவிடுவார்கள். தோல் மிக மெல்லியதாக இருப்பதால், அவர்களால் குளிரைத் தாங்கிக்கொள்ள முடியாமல் போகலாம். எனவே, மெலிந்த தேகத்தினர், குளிர் காலத்தில் அதிகமான அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்.
கடும் குளிரில் வெளியே போகும்போது, குளிர்ச்சியால் உடல் தாக்குப்பிடிக்க முடியாமல், மயக்கநிலைக்குப் போகக்கூடும். இதற்கு, 'ஹைப்போதெர்மியா' என்று பெயர். இது, உடனடி மருத்துவக் கவனிப்பு அளிக்க வேண்டிய அவசரநிலை ஆகும். சிலருக்கு தலைசுற்றல் ஏற்படும்.
சிலருக்கு காலில் வெடிப்பு (Frost bite) ஏற்படும். தோல் மருத்துவரின் அறிவுரையுடன் வெடிப்புக்கான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்கள், இந்தப் பருவத்தில் கூடுமானவரை வெளியே அதிகம் போகக் கூடாது. தூசி இருக்கும் இடங்களில் ஒட்டடை அடிப்பது, சுத்தம் செய்யும் வேலைகளைத் தவிர்க்கலாம்.
இதய நோய் உள்ளவர்கள், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிகமான குளிரால், இதயத்திலிருந்து 'பம்ப்' செய்யப்படும் ரத்தத்தின் அளவு (cardiac output) குறையலாம். இதயத்துடிப்பும் சீராக இருக்காது.
இதயப் பிரச்னை உள்ளவர்கள், குளிர் காலத்தில் மலை வாசஸ்தலங்களுக்குப் போகக் கூடாது. அதிகாலையில் வெளியே வருவதால், மாரடைப்பு ஏற்படலாம். பனிக் காலத்தில் அதிகாலை நடைப்பயிற்சியைத் தவிர்ப்பது நல்லது.
'ஹைப்போதைராய்டு' பிரச்னை உள்ளவர்களால் அதிகமான குளிரையோ, வாடைக்காற்றையோ தாங்கிக்கொள்ள முடியாது. முடிந்தவரை, அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் வெளியே பனியில் வராமலிருப்பது நல்லது. உடலை எப்போதும் கம்பளி ஆடையால் மூடி கதகதப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
காதுகளுக்குள் புகும் குளிர்ந்த காற்றால், காதிலிருந்து முகத்துக்குச் செல்லும் ஏழாவது நரம்பு (Seventh nerve) பாதிக்கப்படலாம். இந்த நரம்பு பாதிக்கப்பட்டால், 'பெல்ஸ் பால்ஸி' (Bell's palsy) எனப்படும் 'முக வாதம்' வரும் அபாயம் உள்ளது. எனவே, கண்டிப்பாக, குளிர் காலத்தில் காதுகளை மறைத்துக்கொள்ள வேண்டும்.
பனிக் காலத்தில் எல்லோருக்குமான பிரச்னை வறண்டுபோகும் சருமம்தான். கை, கால்களில் சருமம் வறண்டுபோய், வெள்ளை வெள்ளையாக இருக்கும். உதடுகள், பாதங்கள்கூட வெடிக்கும். கைக்குழந்தைக்கும் கூட பாதிப்பு இருக்கும். எனவே, குழந்தை முதல் பெரியோர் வரை, பனிக் காலத்தில் சருமத்தை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்று விவரிக்கிறார் இயற்கை அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி.

கருத்துகள் இல்லை: