Pages

வியாழன், ஜூலை 31, 2014

வையத் தலைமைகொள்!

டிசன் தன்னுடைய நிறுவனத்திற்கு ஆள் எடுக்க நேர்காணல் நடத்துவார். ஒளி வீசும் இளைஞனாக இருந்தால் அவனை இரவு உணவிற்கு அழைத்துச் செல்வார். உணவு வந்ததும் ஒரு வாய் ருசித்துவிட்டு, 'இன்னும் கொஞ்சம் உப்பு தேவைப்படுகிறது' என்று சொல்லுவார்.  பிறகு அந்த இளைஞனைக் கவனிப்பார்.  அந்த இளைஞன் உடனடியாக கொஞ்சம் உப்பை தன்னுடைய தட்டில் போட்டுக் கொண்டால் அவனை சேர்த்துக் கொள்ளமாட்டார்.  அந்த இளைஞன் தானும் ருசி பார்த்துவிட்டு உப்பு தேவையா என்று தெரிந்தபிறகு உப்பு சேர்த்துக் கொண்டால் அவனை அந்த நிறுவனத்துக்கு தேர்ந்தெடுப்பார்.

உயரிய நோக்கத்தை உள்ளத்தில் அச்சடித்துக் கொண்டவர்களுக்கு, அவர்கள் ஒவ்வொரு செய்கையுமே பதாகையாகும்.  அவர்கள் நோக்கம் மகத்தானதாக எப்போதும் எண்ணத்தில் பிரம்மாண்டமாக - விரிவதால் அதுவே அவர்களை உந்தித் தள்ளும்.  அவர்கள் உழைப்பை பிழைப்பாய் எண்ணாமல், பொழுதாக்கமாக்குவார்கள்.  அவர்கள் வியர்வையைப் பன்னீராகக் கருதுவர்; களைப்பைப் பதக்கமாய்க் கருதுவர். உண்டாக்கும் விளைவையே  விருதாக எண்ணுவர்.  உழைப்பை ஓய்வாகவும், பணி நாளை விடுமுறையாகவும், அலுவலகத்தைக் கேளிக்கைக்குரிய இடமாகவும் வரித்துக்கொண்டு பணியாற்றுபவர்களுக்கு அது இனிமைக்கான, இதமான பயணம்.

தலைமைப் பொறுப்பு கடினமாக உழைப்பவர்களுக்கே சென்று சேரும்.  நுணுக்கமாக அனைத்தையும்  அலசி, தீவிரமாக சிந்தித்து, தீர்க்கமாக முடிவெடுத்து செயலில் செம்மை சேர்ப்பவர்களையே வையம் மகுடம் சூட்டி வாழ்த்தும். அடுத்தவர்கள் இதயத்தில் ஈரப்பதத்தை ஏற்படுத்த வியர்வையே வெகுஜன மந்திரம்.

கருத்துகள் இல்லை: