ஜீரணிக்க ஒரு தீபாவளி மருந்து -- ( 4 மாத்திரை )
ஒரு உம்மை சொல்லியே ஆகணும்.
1. நட்பு இருக்கிறதே. அதை ரொம்ப ஜாக்ரதையாகவே தேடணும். கொஞ்சம் சாமர்த்தியம் இல்லாம நண்பனை சம்பாதிப்பதால் ஆபத்துகள் அதிகம். அவனுடைய பழக்க வழக்கங்கள், எண்ணங்கள் உன்னை சாப்பிட்டு விடும். எதிர்மறையாகவே எதையும் நோக்குபவன், எதையும் சந்தேகப்படுபவன், தன்னம்பிக்கை இல்லாதவன், எதற்கும் பயந்தவன் கடவுள் மேல் நம்பிக்கை இல்லாதவன் என்று எப்படியெல்லாமோ நண்பர்களை ரகம் பிரிக்கலாம். அவன் நெருங்கிய நண்பனாக இருந்தால் நீ உன்னை இழந்து அவன் போலவே ஆகிவிடுவாய். தைர்யசாலி, புத்திகூர்மை, தன்னம்பிக்கையோடு கடவுள் நம்பிக்கை, சுறுசுறுப்பு, வெற்றியே தேடி உழைத்து பெறுபவன், போன்ற தன்மையுடைவன் உனக்கு நண்பனாக வைத்தால் நீ கொடுத்து வைத்தவன். உன்னிடம் இருக்கும் தன்னம்பிக்கை, தைர்யம் போன்றவை அவனால் மேலும் பலப்படுமே. வெற்றி எதிலும் பெறுவாயே. நண்பன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்வோமே.
2 உத்தியோகம் - இது இரண்டாவது விஷயம் -- நீ தலையெடுப்பது என்று ஏற்பட்டால். உடனே உன்னை கவர்வது, அதாவது கொஞ்சம் சம்பளம் கூட என்று ஒரு உத்தியோகம் கிடைக்கிறது என்று வைத்துகொள்வோம். அதே நேரத்தில் ஸ்திரமான ஒரு உத்தியோகம். அதில் சேர்ந்தால் போகப் போக மேலே கொண்டு விடும், என்று நிச்சயம் தெரிந்தால். சம்பளம் கொஞ்சம் கம்மி என்றாலும் பின்னால் உனக்கு கிடைக்கப்போகும், மரியாதை, உயர்வு, அதிகாரம், மற்ற லாபங்கள் இவற்றை அனுசரிக்க வேண்டும். தினமும் குளித்துவிட்டு சட்டை மாற்றுவது போல ஒரு உத்த்யோகத்துக்கு தலை முழுகிவிட்டு ஈரம் காய்வதற்குள் மற்றொரு உத்தியோகம் சேர்பவர்களை நிறைய பார்க்கிறோமே. இப்போதைக்கு சில ரூபாய் நோட்டுகள் சௌகர்யமாக தோன்றும். பின்னர் அவதி நிச்சயம். பிற்காலத்தில் இப்படி ஈயாக சுற்றி அலைந்தவர்கள் அவஸ்தைப்பட்டு தனது அவசர முடிவுக்கு வருந்துபவர்கள் அநேகம்.
எண்ணம் அமைதியாக இல்ல்லாமல் உள்ளே புயல் உருவாகும்போது உடல் பாதிக்கப் படுகிறதே. பேர் தெரியாத நோய்கள் எல்லாம் மேலை நாட்டிலிருந்து சல்லிசாக நமது டாக்டர்களுக்கு வந்து சேர்கிறதே. அந்த காலத்தில் சகலமும் பித்தம் வாதம் கபம் மூன்றிற்குல்லேயே அடக்கமாக இருந்து குணப்பட்டது. மனம் கெட்டால் உடல் தானாக இப்போது கெடுகிறதே. முப்பது வயதிற்குள்ளே முன்னூறு வியாதிகள். உடல் தளர்ச்சி. பாடு பட்டு தூக்கமின்றி உழைத்த பணம் வெகு எளிதில் உடலை சீர் படுத்த காணாமல் போகிறதே. பாவம் இந்த கால இளைஞர்கள். மன உளைச்சல் அவர்களை தின்று விடுகிறது. பணம் பாக்கெட்டில் நிறைந்தால் மட்டும் போதுமா? வாழ்க்கை நீண்ட ஆயுளை அடிப்படையாக கொண்டது. அதை சிந்தித்து செய்வன திருந்தச் செய்யவேண்டாமா. அமைதி உள்ளத்தில் இடம் பிடிக்கட்டும். சிந்தனை தெளிவாக இருக்கட்டும். மற்றவர்களோடு ஒப்பிடாமல், உனக்கு எது தேவை, எது உன் உள்ளத்திற்கும் உடலுக்கு ஏற்றது என்ற தேர்வு சந்தோஷத்தை உனக்கு மட்டுமல்ல, உன்னைச் சேர்ந்தவர்களுக்கும் அளிக்குமே. அவசர முடிவு ஆபத்தை அல்லவோ அருகில் அழைக்கிறது.
3 உறவு -- இது மூன்றாவது விஷயம் ரொம்ப முக்யமானதும் கூட. உறவு தான் உன் வாழ்க்கை என்ற கட்டிடத்தின் அஸ்திவாரம் என்று புரிந்துகொள். உறவு உன்னை மட்டுமல்ல உன்னைச் சேர்ந்தவர்களையும் பாதிப்பது. ஒரு தவறான முடிவினால் ரெண்டு பேர் வாழ்க்கையும் அந்தரத்தில் நிற்கும். அதே சமயம் உன்னுடைய தேர்வு நல்ல உறவாக அமைந்தால் அது ரெண்டு பேர் மட்டுமல்ல அவர்களின் சுற்றத்தையும் மகிழ்விக்கும் மேஜிக் செய்யக்கூடியது. அப்போது உன் சந்தோஷம் ரெட்டிப்பாக மாறுமே. உன்னிடம் இருந்து கிளம்பும் சந்தோஷம் பலமடங்கு பெரிதாகி உன்னையே வந்து சேர்ந்து உன்னை எங்கோ உயர்த்தி விடுமே. வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்று தெரியாமலா நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். உறவின் ஆரம்ப காலத்தில் ஆசை, ஆவல் எல்லாம் உன் ;கண்ணை மறைத்து விடும். மதியை மழுங்கச் செய்து விடும். தப்பித்துக் கொள்ள வேண்டும். நிதானமாக, சரியாக கவனித்து, தீர்மானித்து, மன நிலையை நன்றாக புரிந்துகொண்டு உறவில் நுழைந்தவனுக்கு அதால் வரும் துன்பம் ஒன்றுமில்லை என்று சொல்வதை விட ரொம்ப குறைச்சல். சரி பண்ணக்கூடிய அளவில் கைவிட்டுப் போகாதது என்று எடுத்துக்கொள்ளலாம். எனவே மூளையை சரியாக பயன் படுத்திக்கொள்.
4. எதிர்கொள்ளல் -- '' வருவதை எதிர்கொள்ளடா' -- கர்ணனிடம் கிருஷ்ணன் சொன்னதை நினைவு கொள்ள வேண்டும்.
இதை நிறைய பேர் லட்சியம் செய்வதில்லை. வாழ்க்கை என்பது உனக்கு என்னவெல்லாம் சோதனை வந்தது, வந்திருக்கிறது, வரப்போகிறது என்று அலட்டிக்கொள்வதை விட்டு, வந்த , வந்திருக்கின்ற, வரப்போகும் சோதனைகளை எப்படி எதிர்கொண்டாய், எதிர் கொகிறாய், எதிர் கொள்வாய் என்று சிந்தித்து அதை சமாளிப்பது உன் வாழ்க்கை யாகும். இந்த சக்தியை உன் கைக்கடக்கமாக கட்டுக்கோப்பில் வைத்துக்கொண்டாயானால் நீ தான் ராஜா. சந்தர்ப்ப சூழ்நிலைகள் மேல் வீண் பழி போட மாட்டாய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக