Pages

வியாழன், செப்டம்பர் 19, 2013

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தியின் நூலாலயம்!

ஞானாலயா கிருஷ்ணமூர்த்தியின் நூலாலயம்!
எழுத்துரு அளவு
(ஒரு பொதுவுடைமைவாதியின் பொக்கிஷம், ஓய்வு பெற்ற ஆசிரியரின் அரியபணி)

புதுக்கோட்டை ஞானாலயா என்றால் அனைவருக்கும் நன்கு தெரியும். நூல்வாசிப்புப் பழக்கம் உள்ள அனைவரும் அறிந்திருக்கும் இடம். புதுக்கோட்டை பழனியப்பா நகரில் அமைந்திருக்கும் ஞானாலயா. அதை உருவாக்கி வைத்திருப்பவர் கிருஷ்ண மூர்த்தி. தனது  ஆசிரியர் பணிக் காலத்தை நிறைவு செய்திருந்தாலும், தான் படித்த அத்தனை நூல்களையும் சேமித்து வைத்திருக்கிறார்.
அவ்வாறு வாசித்ததும், சேமித்ததும் ஒன்றல்ல, நூறல்ல ஆயிரமல்ல. எண்பத்தைந்தாயிரம் நூல்களாகும்! அவற்றைப் பாதுகாப்பதற்கு ஆண் டொன்றிற்கு ரூபாய் இரண்டரை லட்சம் வரை செலவு செய்கிறார். அந்த நூலகத்தை அரசியல் கட்சிப் பிரமுகர்கள் முதல் ஏராளமானோர் பார்வையிட்டிருக்கிறார்கள். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், ஆராய்ச்சி மாணவர்களும் வந்து பார்த்துப் படித்துச் செல்கின்றனர்.  அவர்களுக்கு தேவையான குறிப்புகளை எடுத்துச் செல்கிறார்கள். அவர்கள் தங்கிப் படிப்பதற்கும் அறைகள் ஒதுக்கித் தந்திருக்கிறார்.
எண்பத்தைந்தாயிரம் புத்தகங் களையும் மிக கவனமாகப் பாதுகாத்து வருகிறார். அந்த நூல்கள் முதல் முதலாக தமிழில் அச்சேறிய 1578 ஆம் ஆண்டு வெளியான தம்பிரான் வணக்கம் முதல் இந்த மாதம் வெளியான புத்தகங்கள் வரை சேமித்து வைத்திருக்கிறார். அவற்றை தர வரிசைப்படுத்தியும் மொழிவகைப்படுத் தியும் பாதுகாத்து வருகிறார்.
புத்தகத்தின் பெயரைச் சொன்னால் அடுத்த ஒரு நிமிடத்தில் நம் கைக்கு கிடைக்கச் செய்கிறார்.  அவரது துணை வியார் டோரதி கிருஷ்ணமூர்த்தி. அவர்கள் கல்லூரிப் பேராசிரியராகவும், துணை முதல்வராகவும் இருந்து ஓய்வு பெற்றவர். கிருஷ்ணமூர்த்தியின் அனைத்து செயல்களுக்கும் ஊக்கமும், ஆக்கமுமாக இருந்து வருகிறார். அங்கிருக்கும் நைந்து போன புத்தகங் களையும் தன் கையாலேயே அழகுற கட்டமைப்பு (பைண்டிங்) செய்து பாதுகாத்து வருகிறார்கள். இவர்கள் மதமறுப்பு திருமணம் செய்து கொண் டவர்கள்.
பாராட்டு

இந்த நூலகத்தை நம் பெரியார் கல்வி வளாக ஒருங்கிணைப்பாளர் மானமிகு பேராசிரியர் ப.சுப்பிரமணியன்  புதுக்கோட்டை மாவட்ட தி.க. தலைவர் மு.அறிவொளியுடன்  அண் மையில் பார்வையிட்டுப்  பாராட்டினார். அப்போது கிருஷ்ணமூர்த்தியும்  அவரது துணைவியார் டோரதி கிருஷ்ணமூர்த்தியும் வரவேற்று நூலகத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அப் போது நம் பேராசிரியர் சுப்பிரமணியத்திடம்  கிருஷ்ணமூர்த்தி இந்நூலகத்தை பற்றி கூறும் போது:
வரலாற்று உண்மைகள் தமிழில் உள்ள அனைத்து முதல் பதிப்புகளையும் இங்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக இந்த நூலகம் தொடங்கப்பட்டது. என் தந்தையார் என்னிடம் சில ஆயிரம் நூல்களைக் கொடுத்தார். ஏற்கெனவே நல்ல வாசிப்பு பழக்கத்தையும் எனக்கு ஏற்படுத்தியிருக்கிறார். அதன் தொடர்ச் சியாக சேமித்தவைதான் இவ்வளவு நூல்களும். முதல் பதிப்பு நூல்களைக் கொண்டு வரவேண்டும் என்கிற அவசியம் என்னவென்றால் அறிஞர் அண்ணா எழுதிய புத்தகங்கள் போடு கிறார்கள். 120 பக்கம் உள்ள ஒரு  நூல் அதே பெயரில் இப்போது வெறும் 45 பக்கங்கள் மட்டுமே இருக்கிறது. காலத்திற்கேற்றவாறு தங்கள் கருத் துகளை மாற்றி வெளியிடுகிறார்கள். அப்படி என்றால் அறிஞர் அண்ணா இந்த சமூகத்திற்கு என்ன சொல்லி வைத்தாரோ அது மறைக்கப்பட்டு விட்டன என்பதுதான் உண்மை. அவை எல்லா நூல்களிலும் நடந்து விடக்கூடும் என்பதால் முதல் பதிப்பு நூல்களைச் சேமித்து வைக்கிறேன்.
நூல்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏனென்றால் அடுத்த தலைமுறைக்கு  நாம் விட்டு செல்வது இந்த புத்தகங்கள் மட்டும் தான். அடுத்து வரும் தலைமுறையினர் உறுதி யான வரலாறுகளை அறிந்திருக்க வேண்டும். அதற்கு என்னாலான முயற் சியே இந்த நூலகம். பெரும்பாலும் புகழ் பெற்றவர்கள் இதழ்களில் எழுதி யவையே பின்னாளில் புத்தகங்களாக வெளியிடுகிறார்கள். ஆனால் சிற்றி தழ்கள் அப்படி அல்ல.  சிற்றிதழ்களும் கருத்துப் பெட்டகங்கள்தான். அதனால் தான் அவற்றையும் சேமித்துப் பாதுகாத்து வருகிறேன்.
பெரியார் - காமராசர்
இந்த மக்களுக்காக தந்தை பெரியார் நடத்திய போராட்டங்கள் பெரும் பாலும் காமராஜர் ஆட்சியில் நடத்திருக்கின்றன. ஆனாலும் தந்தை பெரியார் அவர்கள் காமராஜரை ஆதரித்தே வந்திருக்கிறார். தந்தை பெரியார் என்றால் கடவுள் மறுப் பாளர் என்றும் பகுத்தறிவுச் சிந்தனைக் குச் சொந்தக்காரர் என்று மட்டுமே அனைவரும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அவரைப் பற்றி முழுமையாக எந்த  அரசியல் கட்சியும் சொல்லிக் கொள்வதும் இல்லைஅறிந்திருக்கவும் இல்லை.
தந்தை பெரியார் அவர்கள் வைக்கம் போராட்டம் , குருகுல பேராட்டம் நடத்திய போது அவர் வகித்து வந்த பதவி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் என்கிற மிகப் பெரிய பதவி. காங்கிரசில் இருந்து காங்கிரசின் வளர்ச்சிக்குப் பாடுபட்டதை காங் கிரஸ்காரர்கள் சொல்ல வேண்டும். இன்றைக்கு எத்தனை காங்கிரஸ்காரர் கள் இந்த வரலாறுகளை  சொல்லி வைத்திருக்கிறார்கள். மற்ற கட்சிக் காரர்களுக்குச் சொல்கிறார்கள். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால்? அதன் வரலாற்றை சொல்ல வேண்டுமல்லவா!
புதுக்கோட்டையில் இருந்த பார்ப்பனர்கள் எங்கே?
புதுக்கோட்டையை பார்ப்பனர் களின் கோட்டை என்று அய்யா சொல் வார்கள். நான்கு வீதிகளிலும் அவர்கள் தான் இருப்பார்கள். பார்ப்பனர்கள் இருந்த இடமெல்லாம் இன்றைக்கு இல்லாமல் போய்விட்டன. அவர்கள் வேறு தொழில்கள் பார்க்கச் சென்று விட்டார்கள். பார்ப்பனர்கள் வசித்து வந்த இடங்கள்  இன்று (மாமிச) கறிக் கடைகளாக மாறி இருக்கின்றன. பார்ப்பனீயம் ஒழிக்கப்பட்டு இருக்கிறது.
1960இல் தமிழகத்தில் இந்தி எதிர்ப்புக் கிளம்பிய போது மாண வர்கள் மத்தியில் பெரும் புரட்சி ஏற் பட்டது. அதன் விளைவாக தமிழுக்கு ஆதரவாக மாணவர்கள் கிளர்ந்தெழுந் தனர். போராட்டங்கள் நடத்தப்பட் டன. அப்போது முதன் முதலாக (65 ஆம் ஆண்டு) பார்ப்பனர்கள் சங்கம் கொண்டு வந்தார்கள். அதன்பிறகு தமிழுணர்வு கொஞ்சம் கொஞ்சமாக மங்கத் தொடங்கி விட்டது. ஏராளமான ஜாதிச் சங்கங்கள் வளர்ந்து விட்டன. வரலாற்று உண்மைகளை அடுத்த தலைமுறைக்கு  எடுத்துச் சொல்ல வேண்டும் என்றார். மேலும் அவர் கூறுகையில்: புதுக்கோட்டையில் திருக்குறள் பேரவையைத் தோற்றுவித் தவர் அண்ணல் சுப்பிரமணியன் என் பவர். திருக்குறள் பேரவையில் இருப் பவர்கள் அதை இப்போது சொல்வ தில்லை. சொல்லி வைத்தால்தானே அடுத்த தலைமுறைக்கு தெரியும்.
பொது வாழ்க்கைக்கும், பொது நிகழ்ச்சிகளுக்கும் தங்கள் துணைவியை அழைத்து வந்தவர்கள் தந்தை பெரியாரும், காந்தியும் தான். மற்றவர் கள் அழைத்து வருவதில்லை. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பெண்களுக்கு இந்த சமூகத்தை பற்றி விளக்க வேண்டும் என்பதற்காக தந்தை பெரியார் அவர்கள் திருமண வாழ்த் துரை என்பதைத் தொடங்கி வைத்தார். அதை பிரச்சார மேடைக்களமாக மாற்றிக் கொண்டார்.  தந்தை பெரியார் எழுதிய நூல்களில் மிக சிறந்த நூல்களாக  இரண்டு நூல்களைச் சொல்வேன். இனிவரும் உலகம், தத்துவ விளக்கம் என்கிற அந்த இரண்டு நூல்களை  திருமணங்களில் பரிசாக வாங்கி அனைவருக்கும் கொடுக்க வேண்டும். வெறும் கடவுள் மறுப்பாள ராக மட்டுமே பரப்புரை செய்யப்பட் டிருக்கும் அவரை அவர் எவ்வளவு பெரிய அறிஞர் என்பதைப் பற்றியும் அறிவிக்கவும் முயற்சியாக இந்த நூல்கள் இருக்கின்றன. அவர் இனிவரும் உலகம் புத்தகத்தில் சொன்ன கருத்துகள் தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களில் மின்சாரம் என்றால் என்னவென்றே அறியாத காலத்தில் தந்தை பெரியார் அவர்கள் சொன்ன தாகும். அவர் சொன்னது இப்போது நடப்பில் இருக்கிறது. அவரது தத்துவ விளக்கம் படித்தால் சமூக சிந்தனை ஏற்படும். திருச்சியில் இருந்த போது தந்தை பெரியார் அவர்கள் வரு கிறார்கள் என்றால் அவரது பேச்சைக் கேட்க கிளம்பி விடுவோம். காவல்துறையினர் அனுமதிக்கும் நேரம் வரை பேசிக் கொண்டிருப்பார். அனுமதி நேரம் முடிந்தபிறகு அந்த மைக்கை எடுத்து அந்தப் பக்கம் வைங்க என்று சொல்லி விட்டு சந்தேகம் கேட்பவர்கள் எல்லாம் பக்கத்தில் வாங்க என்று சொல்லி விட்டு அதன்பிறகு ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருப்பார். அதுபோல் பலமுறை அவரது பேச்சு கேட்டு அரசியல் தெளிவு பெற்றிருக்கிறேன்.
1967இல் மண்ணச்சநல்லூரில் டாக்டர் குப்பாச்சாமி தலைமையில் தந்தை பெரியார் அவர்களை அழைத்து வந்து விழா நடத்தியதையும் அந்த விழாவிற்கென்று ஒரு மலர் தயாரித்து வெளியிட்டதையும் அந்த மேடையில், நான் பேசியதையும் பெருமையாக கருதுகிறேன். வரலாறுகள் எப்படி திரித்துக் கூறப்பட்டு விடுகின்றன என்பதற்கும் உண்மை வரலாறுகள் தெரிய வேண்டும் என்பதற்கும் ஓர்  உதாரணம் சொல்கிறேன்.  புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கு நிதி கொடுப் பதை தந்தை பெரியார் எதிர்த்தார் என்று ஒரு கருத்து உலா வருகிறது. அது எந்த நேரத்தில் ஏற்பட்டது என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். கவிஞரின் நிலை கண்டு அவருக்கு ஏதாவது நிதி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அதற்கு நிதி வசூலிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. அப்போது தந்தை பெரியார் அவர்கள் முதல் நிதியாக ரூ. 150 கொடுத்தார். தொடர்ந்து வசூலான தொகையையும் சேர்த்து பாரதிதா சனுக்கு  வழங்கப்பட்ட.து. இது நடந்தது 1946 ஆம் ஆண்டு.
தந்தை பெரியார் மேதமை
தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் மறைந்த தலைவர்களுக்கு அய்யா அவர்கள் விடுத்த அறிக்கைகளைப் பார்த்தால் அதில் புலமை இருக்காது அய்யாவின் மேதமை தெரியும். மற்றவர் களின் அறிக்கைகளுக்கும் அய்யாவின் அறிக்கைகளுக்கும் அதுதான் வித்தி யாசம். அய்யாவின் மேதமை யாருக்கும் வராது. (தனது வாழ்க்கைத் துணைவியார்) அன்னை நாகம்மையார் மறைவின் போதும் காந்தியார் மறை வின் போதும் விடுத்த அறிக்கை களானது அவரது மேதமையை அனை வரும் வியக்கும் வண்ணம் நன்கு உணர்த்தும்)
அய்யா அவர்கள் மேடையில் பேசும் போது: நான் இங்கு பேசிக் கொண்டி ருக்கிறேன். எனது புத்தகங்கள் மூலைக் கடையில் விற்பனையாகிக் கொண்டி ருக்கின்றன. புத்தகத்தின் விலை ஒரு அணா. அருகில் உள்ள டீக்கடையில் விற்கும் டீயும் ஒரு அணாதான். டீக் குடித்தால் சிறிது நேரத்தில் காணாமல் போய்விடும். என் புத்தகத்தை வாங்கி னால் அரசியலில் தெளிவு பெறலாம். சமூக மாற்றத்தில் தன்னை இணைத்துக் கொள்ளலாம். நான் பேசுவதில் தவறு இருந்தால் மறுமுறை இங்கு நான் வரும் போது விவாதம் செய்யலாம். அடுத்த தலைமுறைப் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லலாம் என்பார்.
எதையும் உண்மையைச் சொல்ல வேண்டும் என்பதில் தந்தை பெரியார் அவர்கள் மிகச் சரியாக இருப்பார். ராமாயணத்தில் ராமன் கடைசியில் சரயு நதியில் விழுந்து தற்கொலை செய்து கொள்வதாக இருக்கிறது. ஆனால் நம்மவர்கள் எதையும் சுபமாகத்தான் முடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆயிற்றே! அதனால் ராமாயணம் சுபமாக முடிக்கப்பட்டிருக்கிறது. உண்மை மறைக்கப்பட்டிருக்கிறது. அந்த உண்மையைக் கூட நம்மைப் போன்றவர்கள் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
நூல்களைப் பாதுகாக்கும் பெரியார்
மற்ற தலைவர்களுக்கும் தந்தை பெரியார் அவர்களுக்கும் உள்ள ஒரு வித்தியாசத்திற்கு இந்த ஞானாலயத்தில் உள்ள நூல்களில் இருந்து  உண் மையைச் சொல்ல விரும்புகிறேன். 1968இல் தந்தை பெரியார் அவர்கள் ஓர் அறிக்கை விடுகிறார். அந்த அறிக்கையில் என்னிடமிருந்த அபிதான சிந்தாமணி என்கிற நூலை யாரோ எடுத்துச் சென்று விட்டார்கள். எனக்கு இப்போது அந்த புத்தகம் தேவைப்படு கிறது. அதை எடுத்துச் சென்றவர்கள் இந்த அறிக்கையைப் படித்தவுடன் என் னிடம் கொண்டு வந்து கொடுத்து விடுங்கள். அதற்கு உரிய விலையைத் தந்துவிடுகிறேன் என்று அறிக்கை விட்டார். அவரிடம் இருந்த நூல்களை எப்படி பாதுகாத்து வந்தார் என்பதற்கு அவரது நேர்மைக்கும் இது உதாரணம். தலைவர்களும், தொண்டர்களும் மற்ற தலைவர்களும் நினைவாக கொடுத்த நூல்கள் பல, பழைய புத்தகக் கடை களுக்கு போய்விட்டு இந்த நூலகத் திற்கு வந்து விட்டன. தலைவர்கள் வைத்துக் கொள்ள வேண்டிய பல நூல்களை நான் பாதுகாத்து வருவதில் எனக்கு மகிழ்ச்சிதான்.
1835 ஆம்  ஆண்டு தான் புத்தகங் கள் அச்சிடும் உரிமையை பிரிட்டிசார் நமக்கு வழங்கினார்கள். 1873 ஆம் ஆண்டு பச்சையப்பன் பள்ளியில் தமி ழுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. தமிழகத்தில் காமராசர் ஆட்சியில் ஏராளமான தமிழ்நூல்கள் புதுப்பிக்கப் பட்டன. காமராசருக்கு உதவியாக இருந்தவர் ராஜகோபால். மொழிப் பெயர்ப்பாளராக இருந்தவர் வெங்கட் ராமன். பிற்காலத்தில் குடியரசுத் தலைவராக இருந்தார்.
ஜெயின்ஸ் இந்து என்று சொல்லிக் கொள்வார்கள். அவர்கள்  ஏற்றுக் கொண்ட நூல் சீவகசிந்தாமணிதான்.
உ.வே.சா. அய்யர் தமிழில் புலமை பெற்றிருந்தார் என்றால் அவர் பயிற்று மொழி,பேசும் மொழி எல்லாம் தமிழாக இருந்தது தான்! இங்கு பலரும் பயின்ற மொழி ஒன்று, வீட்டில் பேசும் மொழி ஒன்று, பயன்படுத்தும் மொழி ஒன்றாக இருப்பதால் தான் பலருக்கும் மொழிக்குழப்பம்  உண்டு. தமிழின் அருமை தெரிய வேண்டும் என்றாலும் பழைய நூல்களை பாதுகாக்கவும் பயிலவும் வேண்டும்.
வெளிநாடுகளில் தமிழர்கள் பல வகையிலும் உயர்ந்திருக்கிறார்கள். உயர்ந்த பதவிகளில் இருக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் நிர்வாகம் நடத் துவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் சிரமப்படக் கூடும். ஆனால் அவர்கள் இரண்டாம் குடிமகனாகத்தான் நடத்தப்படுகிறார்கள். அவற்றை யெல்லாம் இன்றைய தொழில்நுட்பத் தின் வாயிலாக அறிந்திருக்கக் கூடும்.  ஆனால் பழைய புத்தகங்களில் உள்ள வற்றை அனைவரும் படித்து பயன்பெற வேண்டும். நான் இந்த நூலகத்தை நன்கு பாதுகாத்து வருகிறேன். இதைப் பாதுக்க இன்னும் பலரும் முன்வர வேண்டுமென்றார்.
நூலகத்தில் பெரியாரின் நூல்கள்
இந்த நூலகத்தில் தந்தை பெரியார் முதன் முதலாக எழுதிய ஞானசூரியன் முதல் அனைத்து பிரதிகளும் வைத்திருக்கிறார். 14.4.1949 முதல் 6.9.1952 வரை  விடுதலையில் வெளிவந்த பேப்பர் கட்டிங் செய்திகளும்  1.4.1956 முதல் 30.10.1956 உள்ள விடுதலை  நாளிதழின் பிரதிகளும் பைண்டிங் செய்யப்பட்டு, பாதுகாப்பட்டு வருகிறது. இதுபோல் ஏராளமான விடுதலை நாளிதழ்களின் தொகுப்புகளும் கட்டமைப்பு (பைண்டிங்) செய்யப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மறுபதிப்பு செய்வதற்காக பதிப்பகங் களுக்கு மூல நூல்களை வழங்குகிறார் எதையும் மாற்றக் கூடாது என்கிற நிபந்தனையோடு. இதுவரை இரண்டா யிரத்துக்கும் அதிகமான நூல்களை வழங்கியிருக்கிறார்.
மிகப் பெரிய நூலகத்தைக் கண்ட மகிழ்ச்சியுடனும், பார்த்து  வியந்த நெகிழ்ச்சியுடனும் நன்றி கூறி அங்கி ருந்து விடை பெற்றோம். இவ்வளவு அரிய பணியையும் ஏற்று தனது வயதுக்கு மீறிய பணிச்சுமையையும் ஏற்று தனது வருமானம் அனைத்தை யும் இந்த நூலகத்திற்கே செலவு செய்து நூலகத்தை நடத்தி வரும் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது வாழ்க்கைத் துணைவியார் டோரதி கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு நம்மா லான உதவிகளை ஒவ்வொருவரும் செய்ய முன்வர வேண்டும்.

கருத்துகள் இல்லை: