Pages

வெள்ளி, ஏப்ரல் 26, 2013

சயாம் மரண ரயில் - மறக்கப்பட்ட தமிழர்களின் ஒர் வரலாறு!


சயாம் மரண ரயில் - மறக்கப்பட்ட தமிழர்களின் ஒர் வரலாறு!

NetOopsblog protected image
எத்தனைப் பேருக்கு தெரிந்திருக்கும் இந்த தமிழர்களை ? இவர்களுக்காக ஏன் ஒரு நினைவுக்குறிப்பு கூட இல்லை ? ஏன் இவர்களின் வரலாறு மறக்கப்பட்டது ? இவர்களைப் பற்றி எழுத ஏன் இவ்வளவு காலம் ஒருவருக்கு கூட மனம் வரவில்லை ? முன்னுரை மற்றும் ஆசிரியரின் உரையைப் படிக்கும் போதே தோன்றிய கேள்விகள் தான் இவை.

இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஜப்பான், அப்போதைய நிலைமையை சாதகமாக்கி தன் எல்லைகளை விரிவாக்கும் முயற்சியில் இறங்கியது. மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மற்றும் பர்மாவும் அதன் பிடியில் விழுந்தது. அப்போது தான் நேதாஜி காங்கிரஸை விட்டு விலகி இங்கிலாந்துக்கு எதிரான நாடுகளின் உதவியை நாடினார். அவரது இந்திய தேசிய இராணுவம் சிங்கப்பூரில் இருந்து இயங்கிக் கொண்டிருந்தது. அதில் பணியாற்றிவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்று கூறப்படுகிறது, அப்போது ஜப்பானுடன் உறவு வைத்துக் கொண்டார் நேதாஜி. இந்தக் காரணத்தை முன்னிட்டு இந்தியாவைக் கைப்பற்றும் திட்டத்தில் இறங்கியது ஜப்பான்.
NetOopsblog protected image

இந்தியாவை கைப்பற்ற பெரும் எண்ணிக்கையிலான படைகள் தேவை. அவற்றை ஜப்பானிலிருந்து கடல் வழியாக கப்பல் மூலமாக கொண்டு வருவது சிரமம் என்பதால் தரைவழி பாதையை தேர்ந்தெடுத்து, சயாம் (தாய்லாந்து) முதல் பர்மா வரை ஒரு ரயில் பாதை ஒன்றை இட முடிவு செய்தது. அதன் ஐந்தாவது படை அணி மேற்பார்வையிட, 16 மாதங்களுக்குள் அந்த இரயில் பாதையை நிர்மாணித்து முடிக்க வேண்டுமென கட்டளையிட்டது.



அதற்கு ஏராளமான ஆள்பலம் தேவைப்பட்டது. தொழில் நுட்ப வேலைகளுக்கு, தங்களிடம் போர்க்கைதிகளாய் இருந்த ஆங்கிலேய மற்றும் ஆஸ்திரேலிய படைவீரர்களை பயன்படுத்திக் கொண்டனர். சுரங்கம் வெட்டுதல், மண் அள்ளுதல் போன்ற வேலைகளுக்கு அடிமட்டத் தொழிலாளிகள் நிறைய பேர் தேவைப்பட்டனர். இதற்காக பெருமளவில் ஆசியதொழிலாளர்கள் கொண்டு செல்லப்பட்டனர். சயாமியர், மலாய் இனத்தவர்கள் தவிர, ஒரு இலட்சத்திற்கும் மேலான தமிழர்களும் அவர்களிடம் சிக்கினர் என மதிப்பிடப்படுகிறது. ரப்பர் தோட்டத்தில் வேலை செய்த, தனியார் நிறுவனங்களில் பணி புரிந்த, தோட்டங்களையும் வயல்களையும் கவனித்துக்கொண்டிருந்த, ஏன் சாலைகளில் சென்று கொண்டிருந்தவர்களைக்கூட விடவில்லை ஜப்பானின் கங்காணியர்கள். ஏமாற்றி, வலியுறுத்தி என எப்படி பணியவைக்க வேண்டுமோ அப்படி.

NetOopsblog protected image

போரினால் கடும் பஞ்சம் வேறு. உணவுக்காக தவித்த, உயிருக்கு பயந்த, குடும்பத்தைக் காப்பாற்ற, தன் பிள்ளைகளை அழைத்துச்செல்லாமல் தடுக்க என ஒவ்வொருவருக்கும் அடிபணிந்து போக ஒவ்வொரு காரணம். ஒரு இலட்சம் தமிழர்களில் போர் முடிந்தவுடன் திரும்பியவர்கள் பத்தாயிரத்தை கூட தாண்ட மாட்டார்கள் என குத்துமதிப்பான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் பணியாற்றிய ஆஸ்திரேலிய படைவீரர்கள் சிலர் தங்கள் அனுபவங்களை நூல்களாகக் கொண்டு வந்துள்ளனர். ஆங்கிலேயர்களோ "The Bridge on the River Kwai" என்ற திரைப்படத்தின் மூலம் தங்கள் அனுபவத்தை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே உலகத்திற்கு சொல்லி விட்டனர். அவர்களின் வலிகள் ஆவணப்படுத்தப்பட்டுவிட்டன. நம் பாடு தான் திண்டாட்டம். வெகு சில நூல்களே அதைப் பதிவு செய்திருந்தன. எப்போதோ நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்ய எண்ணி 1993'ஆம் ஆண்டு சண்முகம் எழுதியது தான் "சயாம் மரண ரயில் - சொல்லப்படாத மெளன மொழிகளின் கண்ணீர்". இதை தமிழோசை பதிப்பகம் 2007 ஆம் ஆண்டு மறுவெளியீடு செய்திருக்கிறது. இந்த புத்தகத்தைப் படித்துவிட்டு தான் இதைப் பதிவு செய்ய வேண்டுமென ஒர் உந்துதல் ஏற்பட்டது. உண்மையைச் சொன்னால் இதற்கு முன், இதில் குறிபிடப்பட்டுள்ள ஒரு விவரமும் நான் கேள்விப்பட்டதுகூட கிடையாது.

ஜப்பானிடம் சிக்கிய இந்த தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை, யூதர்களுக்கு நாஜி இழைத்த கொடுமைகளுக்கு இணையானது என இந்நூலின் பதிப்புரையில் சொல்லப்பட்டிருக்கிறது, படிக்க படிக்க அது எவ்வளவு உண்மை என உணரமுடிகிறது. அந்த களத்தில் பஞ்சத்தினால் தன் குடும்பத்திற்கு பாரமாக இருக்க விரும்பாமலும், தன் தந்தையை கண்டுபிடித்துவிடலாம் எனற நோக்கத்திலும் தானே சென்று இணையும் மாயா என்ற ஒரு இளைஞன் சுற்றியே கதையை சுழல விட்டு, தான் சொல்ல வந்த உண்மைகளை கதையெங்கும் தெளித்திருக்கிறார் ஆசிரியர், அதனூடே ஒரு மெல்லிய காதல் கதையையும் சேர்த்து ஒரு சுவாரஸ்யம் சேர்க்க முனைந்திருக்கிறார் ( நமக்கு தான் எல்லாவற்றிலும் தேவைப்படுமே!!)..

மரவள்ளிகிழங்கும், கருவாடும், சூப்பும் ஆகியவையே பெரும்பாலும் அவர்களின் உணவு. உடம்பு முடியாவிட்டாலோ, விஷப்பூச்சிகளோ பாம்போ கடித்துவிட்டாலோ, அவர்களுக்காக யாரும் நிற்பதில்லை. ஆங்காங்கே விழுந்து அப்படியே இறக்க வேண்டியது தான், முகாம்களில் சீக்கானால், மருத்துவமனை அழைத்து செல்கிறோம் என்ற பெயரில், ஒதுக்குபுறமான ஒரு கொட்டகையில் போய் விட்டுவிடுவார்கள். கும்பல் கும்பலாய் வயிற்றுபோக்கும் காய்ச்சலுமாய் இறப்பை நோக்கி செல்ல வேண்டியது தான். அழுகி நாறி இருந்தாலும், தங்களுக்கு வசதிப்பட்ட என்றாவது ஒரு நாளில் மொத்தமாய் குப்பை அள்ளுவது போல தள்ளுவண்டியில் ஏற்றி வந்து ஒரே பெரிய குழியாய் வெட்டி மொத்தமாய் போட்டு புதைத்துவிடுவார்களாம். எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தால் அந்த கொட்டகையோடு கொளுத்திவிடவும் செய்வார்கள் போல. குற்றுயிரும்
குலையுயிருமாய் கிடப்பவர்களுக்கும் மொத்தமாய் மோட்சம். மறுபடியும் ஒர் கொட்டகை முளைக்கும். இதில் எல்லாம் தவறி பிழைத்தவர்கள் அவ்வப்போது போர்விமானங்கள் போட்ட குண்டுகளில் மடிந்தார்கள். எந்தப் பக்கம் திரும்பினாலும் அவர்களுக்கு மரணம் காத்திருந்தது.

ஆங்காங்கே ஒவ்வொரு பாத்திரத்தின் உணர்வுகள், குடும்பத்தை பற்றிய கவலைகள், தாங்களும் உயிரோடு அங்கிருந்து பிழைப்போமா என கேள்விகள்,, மாயாவின் காதல் கதை, அவனுடன், உடன் பிறந்தவனைபோல உறவாடும் வேலுவின் நட்பு, முடிவை ஒட்டி அவன் மரணம் என உணர்வுப்பூர்வமாய் பயணிக்கிறது கதை. இரண்டு பெரிய குன்றுகளை வெட்டி சாய்த்து, இரும்புப் பாதை அமைக்க உதவிய நம் மக்கள், ஆற்றுப் பாலத்திற்கும் மலைக்கும் நடுவில், தூண்கள் கட்ட முடியாமல், ராட்சத சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட தொங்கும் பாலத்திலும் தண்டவாளத்தில் உயிரைப் பிடித்துக் கொண்டு பயணிப்பதைப் படிக்கும் போது, லேசாய் பயம் பற்றிக் கொள்கிறது. அங்கேயும் சந்தடி சாக்கில்
சின்ன சின்ன பலசரக்குகளை வாங்கி முகாம்களின் உள்ளேயே வியாபாரம் பண்ணிய நமது மக்களின் திறமையை நினைத்து பெருமைப்படுவதா வேதனைப்படுவதா எனப் புரியவில்லை.

இத்தனை வேதனைகளிலிருந்தும் மீண்டு வீடு திரும்பியவர்களில் சிலர், தங்கள் குடும்பம் சிதைந்ததைக் கண்டு, மறுபடியும் சயாமுக்கே சென்றிருக்கின்றனர் என்பதும் மிகுந்த வேதனைக்குரியது. சான்றுகளுக்கும் மேல்விவரங்களுக்கும் கூகிள் செய்ததில், சமீபமாக இன்னொரு புத்தகமும், அதன் வரலாறை அப்படியே சொல்ல வந்திருப்பது தெரிய வந்தது. அதற்கான தகவல்களும் சுட்டிகளும் முடிவில்.

இந்த பதிவின் மூலமாக உலகத்தமிழர்கள் அத்தனை பேரின் சார்பாகவும், இந்த களத்தில் உயிர்துறந்த அப்பாவித் தமிழர்களுக்கும் பிற நாட்டவர்க்கும் அஞ்சலி செலுத்த விரும்புகிறேன். மேலும் புலம் பெயர்ந்து தங்கள் முகம் தொலைத்து முகவரி இழந்து தவிக்கும் அத்தனை தமிழருக்கும் இப்பதிவினை அர்ப்பணிக்கிறேன்.

கருத்துகள் இல்லை: