Pages

திங்கள், ஏப்ரல் 29, 2013

உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் நல்ல பெற்றோர்களாக இருக்கிறீர்களா?

கீழே உள்ள கேள்விகள் அனைத்துக்கும் 'ஆமாம்' என நீங்கள் பதில் சொன்னால், இந்தக்
கட்டுரையைத் தவிர்த்து வேறு பக்கங்களுக்கு நீங்கள் செல்லலாம். முழுவதற்கும்
'இல்லை' என்பது உங்கள் பதிலானால், அவசியம் நீங்கள் இதை வாசிப்பது நல்லது.
சிலவற்றுக்கு 'ஆம்' சிலவற்றுக்கு 'இல்லை' என்று நடுவில் தத்தளிப்போரும்
தங்களைச் சுயபரிசோதனை செய்துகொள்ள இதை வாசிக்கலாம்.

*உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் நல்ல பெற்றோர்களாக இருக்கிறீர்களா?
*அவர்களின் நியாயமான தேவைக ளைப் பூர்த்தி செய்கிறீர்களா?
*குழந்தைகளின் மகிழ்ச்சியான தருணங்களில் நீங்கள் பங்கேற்கிறீர்களா?
*அவர்களுக்கென தனியே நேரம் ஒதுக்குகிறீர்களா?
*அவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் என்னவென்று தெரிந்து
வைத்திருக்கிறீர்களா?

இன்னும் இதுபோன்ற கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம்தான். இதற்கான பதில்களை
யோசிக்கும்முன் ஜானவியின் பிரச்னை என்னவென்று சொல்லிவிடுகிறேன்.

ஜானவிக்கு 14 வயது மகளும் 12 வயது மகனும் இருக்கிறார்கள். ஜானவி தகவல் தொழில்
நுட்ப நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். கணவன் மகேஷ் மார்கெட்டிங் லைனில்
இருப்பவர். இருவரும் எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டே இருப்பார்கள்.
தனிமையில் விடப்பட்ட குழந்தைகளுக்கு டி.வி, கம்ப்யூட்டர், மொபைல் ஆகிய மூன்றும்
முப்பெரும் நண்பர்கள். ஜானவியின் மகள் ஸ்ரேயாவுக்கு மூக்குக்கு மேல் கோபம்
வரும். கேள்விகள் கேட்டால் பிடிக்காது. கொஞ்சம் குரலை உயர்த்தி அதட்டினாலே
அழுது ஆர்ப்பாட்டம் செய்வாள். சாப்பிடாமல் அழிச்சாட்டியம் செய்வாள். மகன்
விகாஷலுக்குப் படிப்பில் நாட்டமே இல்லை. எல்லாப் பாடத்திலும் தேர்வு பெறவில்லை.
இந்தப் பிரச்னை இத்துடன் நிற்காமல் கணவன் மனைவிக்குள் உறவு விரிசல் ஏற்படும்
அளவிற்குப் போனது. இதனால், வீட்டில் அடிக்கடி சண்டை, குழப்பம் எனப்
பிரச்னைகள் தொடர்ந்தன.

இருவருமே தங்களின் ஆத்திரம், கோபம், இயலாமை ஆகியவற்றை அப்பாவிக் குழந்தைகளின்
மீது கொட்டினர். பெற்றோர்களின் இந்த மனோபாவத்தால், அவர்களின் எதிர்ப்பு குணம்
மெதுவாக வளர்ந்தது. ஜானவிக்கு மட்டும் அல்ல... இதுபோன்ற பிரச்னைகள் நம்மை
சுற்றி உள்ள சாந்தினி, அமுதா, செல்வி, பவித்ரா என்று பெரும்பாலான பெண்களுக்கும்
உண்டு.

''குழந்தை வளர்ப்புக் கலை என இனிமையாகச் சொல்ல வேண்டிய ஒன்றைப் பிரச்னையாகப்
பார்க்கத் தொடங்கியது பெரும் வேதனை. குழந்தையைப் பெறுவது மட்டும் அல்ல... நல்ல
பெற்றோர்களாக இருப்பதும் சவாலான விஷயம்தான்!'' எனச் சொல்லும் மனநல மருத்துவர்
ஷாலினி பதின் பருவத்தைக் கடக்கும் பிள்ளைகளை எப்படிப் புரிந்துகொண்டு கையாள
வேண்டும் என்பதை விரிவாக எடுத்துக் கூறினார்.

''பதின்பருவம் என்பது சிறார்களின் உடல் அளவிலும் மனநிலையிலும் நிறைய மாற்றங்கள்
ஏற்படுத்தும் வயது. அவரவர் பாலினத்துக்குத் தகுந்த மாதிரி ஹார்மோன்கள் உற்பத்தி
அதிகரிக்கும். ஆண் என்றால் அரும்பு மீசை துளிர்விடும். பெண் குழந்தைகள்
வயதுக்கு வருவார்கள். பிள்ளைகளுக்கு எனப் பிரத்யேகமாக நேரம் ஒதுக்கி, அவர்கள்
மீது நாம் அக்கறையாக இருக்கிறோம் என்பதை உணர்த்தினால் போதும்'' என்கிற டாக்டர்
ஷாலினி மேலும் தொடர்ந்தார்.
''நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இந்தப் பருவத்தில் அவர்களுக்கு
அதிகரிக்கும். தாங்களே சுயமாக யோசிக்கவும் முடிவு செய்யவும்
ஆரம்பித்துவிடுவார்கள். பதின்வயதில் மூளையில் ஐந்து முக்கியமான மாற்றங்கள்
ஏற்படுகின்றன.

1.சிந்தனை: பதின் வயதினருக்கு மூளையின் அளவு வளரும். அவர்களின் புத்தி,
கூர்மையடையும். 'நான் சொல்றதை நீ கேட்டுத்தான் ஆகணும்' என்ற அதட்டலாகப்
பேசும் தொனி அவர்களுக்குப் பிடிப்பதில்லை. தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை
மறுத்து எதிர்க் கேள்வி கேட்பார்கள். உதாரணமாக 'என்னைக் கேட்காம ஏன் டூவீலரை
எடுத்துட்டுப் போனே?' என்று அம்மா கேட்டால் 'நீ மட்டும் அப்பாகிட்ட கேட்காம
அவரோட காரை எடுத்துட்டுப் போகலாமா?' என்று மடக்குவார்கள். பதமாகப் பேசிப்
புரியவைக்க வேண்டும்.

2.எதிர்ப் பாலின ஈர்ப்பு: பதின்பருவப் பெண்களுக்கு ஆண்கள் மீதும் அந்த வயசு
ஆண்களுக்குப் பெண்கள் மீதும் ஈர்ப்பு ஏற்படுவது இயற்கை. அதில் எந்தத் தவறும்
இல்லை. சரியாக இயல்பாக வளர்கிறார்கள் என்றுதான் அர்த்தம். இந்தச் சூழலில்
வீட்டில் ஏற்கெனவே பெற்றோர் இடையே பிரச்னைகள் இருந்தால் அது பதின்வயதினரை
பாதிப்புக்கு உள்ளாக்கும். வெளியிடங்களில் அன்பைத் தேட முனைவார்கள். வேறு பல
பிரச்னைகளுக்கு இது வழி வகுத்துவிடும். பிள்ளைகளின் முன் தேவையற்ற
வாக்குவாதங்களில் ஈடுபடக்கூடாது.

3.தன்னுணர்வு - 'பிளஸ் டூ முடிச்சிட்டு ஃபேஷன் டிசைனிங் பண்ணப் போறேன்' என்று
ஒன்பதாவது படிக்கும்போதே சொல்வார்கள். இதற்கு முன் அவர்களின் தேர்வுகள்
குழப்பமாகவும் அவர்களுக்கே உறுதி இல்லாமலும் இருக்கும். ஆனால், பதின்வயதில்
ஆழமாகத் தோன்றும் விருப்பங்கள்தான் கடைசிவரை அவர்களை வழிநடத்தும். பெற்றோர்கள்
அவர்களின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

4.மனநிலை மாறுதல்கள்: திடீர் என்று ஏற்படுகின்ற ஹார்மோன் மாற்றங்களால்
பதின்பருவத்தினரின் மனநிலைகள் அடிக்கடி மாறும். காரணம் எதுவும் இல்லாமல்
கோபப்படுவதும், சின்ன விஷயத்துக்கு எல்லாம் அழுவதும், நண்பர்களோடு சேர்ந்து
இருக்கும்போது சத்தமாகச் சிரிப்பதும், சினிமா தியேட்டரில் கைத்தட்டி விசில்
அடிப்பதும் என உணர்ச்சிக் கலவையாக இருப்பார்கள். சின்னத் தோல்வியைக்கூட
அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. பெற்றோர்கள் அவர்களுடன் அடிக்கடி
மனம்விட்டுப் பேசி அவர்களின் தேவை என்ன பிரச்னைகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள
வேண்டும். ஒரு தோழன் - தோழியைப்போல அவர்களிடம் இதமான நெருக்கத்தையும் அன்பையும்
காட்ட வேண்டும்.

4.நட்பு சூழ் உலகம்: பாய்ஸ் படத்தில் வருவது போலப் பதின்வயதினர் எப்போதும்
நான்கைந்து நண்பர்களுடன்தான் இருப்பார்கள். இந்தச் சமயத்தில் பெற்றோர்களை
விட்டுக் கொஞ்சம் விலகியே இருப்பார்கள். தங்களுடைய நண்பர்களை - அல்லது ரோல்
மாடலாக யாரை நினைக்கிறார்களோ அவர்களை அப்படியே பின்பற்ற முயற்சி செய்வார்கள்.
இத்தனை நாள் தங்களையே சுற்றிச் சுற்றி வந்த பிள்ளைகள் திடீரென்று விலகிப்
போவதைப் பார்த்து பெற்றோர்களின் மனம் சங்கடப்படும்.
'காலைலேர்ந்து எங்கடா போய்த் தொலைஞ்சே?' என்று அப்பா திட்டினால், பிள்ளைக்கு
மூக்குக்கு மேல் கோபம் வரும். 'புராஜெக்ட் வொர்க் பண்ணேன்' என்று வாயில்
வந்ததைச் சொல்வானே தவிர, உண்மையில் எங்கு போனான் என்று சொல்லமாட்டான்.
'என்னப்பா ரொம்ப பிஸியா? ஆளையே காணலையே?' என்று கேட்டுப் பாருங்கள், 'ஃபிரண்ஸோட
ஷாப்பிங் மால் வரைக்கும் போனோம்பா!' என்பான். பெற்றோர்கள் தங்கள் மீது ஆதிக்கம்
செலுத்துவதையும் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதையும் பிள்ளைகள் விரும்ப
மாட்டார்கள். பிள்ளைகள் யாருடன் பேசுகிறார்கள் பழகுகிறார்கள் என்று
பெற்றோர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

பதின்வயதினரிடம் பேசுவதைவிட அவர்கள் பேசுவதை நிறையக் கேட்க வேண்டும்.
உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கவேண்டும். அதன்பின் நம் கருத்துக்களைச் சரியான
முறையில் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அன்பும் அனுசரணையான பேச்சும்
தேவையான அக்கறையும் தோழமையான நெருக்கமும் இருந்தால் போதும் அவர்களை எளிதாகப்
புரிந்து கொள்ளலாம்.


அவர்கள் கடைப்பிடித்தே ஆக வேண்டிய சில விதிமுறைகளை அவர்களின் பங்களிப்புடனே
வடிவமைத்துத் தரவேண்டும். பதின்வயதினர் ஏதேனும் தவறு செய்தால், அதை மிக
நாசுக்காக, தனிமையில் வைத்துக் கண்டிக்கலாம். தேவை இல்லாமல் கடுமையாகக்
கண்டிக்கப்படுவதையோ, மூன்றாம் நபரின் முன்னிலையில் விமர்சிக்கப்படுவதையோ எந்தப்
பிள்ளையும் விரும்புவதில்லை.'' என்கிறார் டாக்டர் ஷாலினி.

'அடிச்சு வளர்க்காத குழந்தையும் ஒடிச்சு வளர்க்காத முருங்கையும் உருப்படாது'
எனச் சொலவடை சொல்லும் கிராமங்களில்தான், 'வளர்ந்த வாழையை வெட்டக்கூடாது'
என்றும் சொல்வார்கள். அதாவது கைக்கு உயர்ந்த பிள்ளையைக் கைநீட்டக்கூடாது
என்பதற்காக! பதின் பருவத்தில் சக தோழனாக நம் பிள்ளைகளைப் பாவிப்பவதே சரியான
அணுகுமுறையாக இருக்கும். அதைச் செய்யாமல் கண்டிப்பு காட்டும் வாத்தியாராக
நீங்கள் செயல்பட்டால், உங்கள் வாரிசுக்கும் உங்களுக்குமான இடைவெளி இன்னும்
இன்னும் கூடிக்கொண்டேதான் போகும்!
















கருத்துகள் இல்லை: