Pages

செவ்வாய், ஜனவரி 22, 2013

இந்திய பெருங்கடல்

உலகிலுள்ள ஐந்து பெருங்கடல்களுள் பசிபிக், அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு அடுத்தபடியாக பெரிய கடலாக விளங்குவது இந்திய பெருங்கடல் ஆகும். தெற்கே தெற்கு பெருங்கடலும், மேற்கே ஆப்பிரிக்காவும், வடக்கே ஆசியாவும், கிழக்கே ஆஸ்திரேலியாவும் இப்பெருங்கடலின் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் மொத்த பரப்பளவு 6,85,56,000 சதுர கி.மீ. ஆகும்.
சர்வதேச நீர்பரப்பு ஆய்வு மையம் இரண்டாயிரமாண்டில் இந்திய பெருங்கடலின் எல்லைகளை வரையறை செய்தது. அதன்படி இந்திய பெருங்கடலின் தெற்கே 60 டிகிரிக்கு கீழ் உள்ள பகுதி பிரிக்கப்பட்டு தெற்கு பெருங்கடலின் (அன்டார்க்டிக்) எல்லை விரிவாக்கப்பட்டது.
இந்திய பெருங்கடலின் மிக ஆழமான பகுதி ஜாவா நீர்வழி ஆகும். இதன் ஆழம் 7,258 மீட்டர் ஆகும். இக்கடலில் அதிகமாக பெட்ரோலியப் பொருள்களும், இயற்கை எரிவாயுக்களும் இயற்கையாக, மிகுதியாக காணப்படுகின்றன. உலக பெட்ரோலிய பொருள்கள் உற்பத்தியில் 40 சதவிகிதம் இந்தியப் பெருங்கடலிலிருந்து கிடைக்கிறது. மீன் போன்ற கடல் உணவுப் பொருள்கள் அதிக அளவில் கிடைப்பது இக்கடலின் மற்றுமொரு இயற்கை வளமாகும். இந்திய பெருங்கடல் நாடுகள் உட்பட ரஷ்யா, ஜப்பான், தென்கொரியா, தாய்வான் நாட்டு மீன்பிடி கப்பல்கள் இதை தங்கள் மீன்பிடித் தளமாக பயன்படுத்துகின்றன.
இந்திய பெருங்கடல் முக்கியமான கடல்பாதைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஆசியாபகுதிகளை இது ஐரோப்பாவுடன் இணைக்கிறது.

கருத்துகள் இல்லை: