Pages

புதன், நவம்பர் 28, 2012

ஜோதிடம் உண்மையா? பொய்யா?


ஜோதிடம் உண்மையா? பொய்யா? :

ஜோதிடம் உண்மையா? பொய்யா? இதை எந்த அளவுக்கு நம்பலாம்? "ஜோதிஷ்" என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து மருவி வந்த சொல்லே ஜோதிடம் ஆகும். ஜோதிஷ் என்றால் ஒளி அல்லது வெளிச்சம் என்று பொருள். இருளில் பாதை தெரியாத ஒருவருக்கு எந்த திசையில் செல்வது என்று சரியான வழிகாட்டுவதே ஜோதிடம் ஆகும். இதை நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம்.

ஒரு மருத்துவர் ஒரே விதமான நோய்க்கு மூன்று பேருக்கு ஒரே விதமான மருந்தை கொடுத்தபோது ஒருவருக்கு குணமாகிறது, மற்றொருவருக்கு இன்னும் சில நாட்கள் மருந்தும் சிகிச்சையும் தேவைப்படுகிறது. வேறொருவருக்கு குணமாகும் அறிகுறியே தெரியவில்லை என்றால் தவறு மருத்துவருடையது அல்ல. அதனால் மருத்துவம் பொய்யாகி விடாது. ஒவ்வொருவருடைய உடல் தன்மைக்கு ஏற்றவாறு மருந்து வேலை செய்கிறது. எனவே சிலருக்கு அடுத்தக் கட்ட சிகிச்சை சிலருக்கு தேவைப்படுகிறது. இதைப் போலவே ஒருவருடைய முன்பிறவி பாவ புண்ணியத்திற்கேற்ப (நோயாளியின் உடல் தன்மைக்கேற்றபடி) பலன்கள் மாறுபடும். அது மட்டுமல்ல. அவருடைய முன்னோர் செய்த பாவமும் ஒரு தண்டனையாக அவரைத் தொடரும். இதையும் ஒரு உதாரணத்தோடு விளக்கலாம். அனில் அம்பானியோ, முகேஷ் அம்பானியோ பிறந்த அதே நேரத்தில் அதே ஊரில் பிறந்த வேறு யாரோ ஒருவர் அதே கிரக நிலைகள் இருந்தாலும் இவர்களைப்போல் கோடீஸ்வராக ஆகவில்லை. ஒருவர் மகிழ்ச்சியாக வாழ்வதும் அல்லது துன்பப்படுவதும் பல தலைமுறைகளாக செய்த வினைப்பயன்களே காரணமாகும்.


ஒருவருடைய ஜாதகம் என்பது அவர் பிறந்தபோது ஒன்பது கிரகங்கள் இருந்த ராசிகள், ஒன்றுக்கொன்று எந்த விதமான தொடர்பில் இருக்கின்றன, பலம், பலமின்மை, மறைவிடங்கள் அல்லது அசுபமான இடங்கள் மற்றும் கிரகங்களின் பார்வைகள் போன்றவற்றுக்கு அறிவியல் ரீதியான விளக்கங்கள் இருக்கின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட ஜோதிட நூல்களே இதற்கு ஆதாரங்கள்.
ஒருவருடைய ஜாதகப்படி கிரகங்கள் நன்மையோ அல்லது தீமையோ செய்தே தீரும். மருத்துவர் கொடுத்த உரிய மருந்தும் சரியான சிகிச்சையும் ஒருவருக்கு நல்ல பலன் தரவில்லை. அதைப் போலவே சில நேரங்களில் சிலருக்கு கிரக நிலைகள் சாதகமாக இருந்த போதிலும் பூர்வ புண்ணிய பலம் இல்லையென்றால் நல்லது நடப்பதில்லை. இதை ஒரு ஜோதிடரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு அதற்குரிய சரியான பரிகாரங்களை செய்தால் நற்பலன் பெறலாம். பரிகாரம் என்றதும் நிறைய பணம் செலவு செய்து செய்வது என்று பொருள் அல்ல. இறைவனை மனதால் நினைத்து வணங்குவது, மற்றவர்களுக்கு உதவுவது, பிறர் துன்பம் போகும் வகையில் நற்ச்செயல்களை செய்வது தான்.
நம்முடைய இறை பக்தி, நல்லொழுக்கம், பிறர்க்கு தீங்கு செய்யாமலிருத்தல், மற்றவருக்கு உதவி செய்தல் போன்றவற்றால் நமக்கு நன்மைகள் ஏற்படும். முன்பிறவி வினைப்படி தீமைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு வெற்றி பெரும் வல்லமையை நமக்குத் தரும். மேலும் இப்போது செய்யும் நல்ல செயல்களால் பிறகு நமக்கு நன்மை ஏற்படும்.எனவே ஜோதிடம் என்பது நம் முன் வினைப்பயன் சார்ந்த அறிவியல், வாழ்க்கையில் முக்கியமான நேரங்களில் நாம் அடுத்து எடுக்க வேண்டிய நிலை என்ன? போக வேண்டிய பாதை எது? என்று வழிகாட்டும் ஒளி என்றும் சொன்னால் மிகையாகாது.

கருத்துகள் இல்லை: