ஆழ்வார்கள் அருளிய அமுதம்
ஆழ்வார்கள் அருளிய அமுதம்
பன்னிரு ஆழ்வார்கள்
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய பன்னிரண்டு பேர்களும் வைணவ சமயத்தின் பன்னிரு ஆழ்வார்கள் என போற்றப்படுகின்றனர்.
இவர்கள் இயற்றியது வைணவத் தமிழ் வேதம் என போற்றப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தம் நூலாகும். இவை திருவாய்மொழி எனவும் போற்றப்படும். வைணவ ஆலயங்களில் இராப்பத்து, பகல் பத்து போன்ற திருவிழாக்களில் எதிரெதிரே வரிசையாக அமர்ந்து திருவாய்மொழி பாடுவதைக் கேட்க இரு செவிகள் போதாது.
1.பொய்கையாழ்வார் : வைணவ சமயத்தார் கவிஞர் தலைவன் என பொய்கையாழ்வாரைப் போற்றுகின்றனர். பொய்கையாழ்வார் துவாபர யுகத்தில், ஐப்பசி மாதம் திருவோண நக்ஷத்ரத்தில், வளர்பிறை அஷ்டமியில் செவ்வாய்க் கிழமையில் காஞ்சிபுர ஆலயத்தில் "சொன்னவண்ணம் செய்தான்" ஸன்னிதி அருகில் உள்ள பொய்கையில் பொற்றாமரை மலரில் அவதரித்தவர். திருமாலின் பாஞ்சசன்யம் எனும் சங்கின் அம்சம். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் முதல் திருவந்தாதி என்னும் "வையந்தகளியா" எனத்தொடங்கும் நூறு பாடல்களைப் பாடியவர்.
2.பூதத்தாழ்வார் : துவாபர யுகத்தில் சித்தார்த்தி வருஷம், ஐப்பசி மாத நவமி திதியில் அவிட்ட நக்ஷத்ரம் அன்று மஹாபலிபுரத்தில் நந்தவனத்தில் இருந்த குருக்கத்தி மலரில் அவதரித்தவர். "அன்பே தகளியா" எனத்தொடங்கும் நூறு அந்தாதி பாடல்களை பாடியவர். இவர் நந்தக அம்சம்.
3.பேயாழ்வார் : நந்தக அம்சம், இவர் துவாபர யுகம், சித்தார்த்தி வருஷம், ஐப்பசி தசமியில் வியாழக்கிழமை சதய நக்ஷத்ரத்தில் மயிலாப்பூர் கேசவப் பெருமாள் சன்னிதிக்கு அடுத்த புஷ்கரணியில் அல்லிப்பூவில் அவதரித்தவர். திருமாலை அனைவரும் ஞானக்கண்ணால் கண்டு உணர்ந்து அருள்பெற வழியைக் கூறும் "திருக்கண்டேன்" எனத்தொடங்கும் நூறு பாடல்களை மூன்றாம் திருவந்தாதியாகப் பாடினார்.
வைணவ சமயத்தில் தமிழ் வேதம் என போற்றப்படும் நாலாயிர திவ்யப் பிரபந்தம், பன்னிரு ஆழ்வார்களும் திருமாலைப் பாடிய திருவாய் மொழி எனப் பெயர் பெற்றுள்ளது. நாலாயிரம் பாடல்களும் மகாவிஷ்ணுவின், தசாவதார அருளிச்செயல்களை விளக்குகின்றன.
தமிழ்வளர்ச்சியில் பெரும்பங்கு கொண்ட பன்னிரண்டு ஆழ்வார்களும் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தினை, இனிய, எளிய, தூய தமிழில் இயற்றியுள்ளது இதன் சிறப்பம்சமாகும்.
(1) பொய்கையார், (2) பூதத்தார், (3) பேயார் ஆகிய முதல் மூன்று ஆழ்வார்கள் ஒவ்வொருவரும், நூறு வெண்பா பாடல்களைக் கொண்ட, மூன்று அந்தாதிகளும்,
(4) திருமழிசையாழ்வார் நான்முகன் திருவந்தாதி மற்றும் திருச்சந்த விருத்தமும்,
(5) நம்மாழ்வார் ருக்வேத சுருக்கமாக திருவிருத்தம்,
யஜுர்வேத சாரமாக திருவாசிரியம்,
ஸாமவேத விளக்கமாக திருவாய்மொழி,
அதர்வணவேத குறிப்புகளாக பெரிய அந்தாதி, ஆகிய நான்கையும்,
(6) மதுரகவியாழ்வார் கண்ணினுண் சிறுத்தாம்பும்,
(7) குலசேகர ஆழ்வார் திருமாலை பேரரசனாகப் போற்றும் பாசுரங்களும்,
(8) பெரியாழ்வார் திருப்பல்லாண்டும்,
(9) ஒரே பெண் ஆழ்வாராகிய, சூடிக்கொடுத்த சுடர்க்கொடி எனவும், நாச்சியார் என்றும் போற்றப்படும், ஆண்டாள் திருப்பாவை மற்றும் பாசுரங்களும்,
(10) தொண்டரடிப்பொடியாழ்வார் திருமாலை மற்றும் திருப்பள்ளியெழுச்சியும்,
(11) திருப்பாணாழ்வார் அமலனாதிப்பிரான் பாசுரங்களும்,
(12) திருமங்கையாழ்வார் பெரியதிருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுகூற்றிருக்கை, சிறிய திருமடல் மற்றும் பெரிய திருமடல்
ஆகிய அனைத்தும் கூடிய பிரபந்தங்களே திருவாய்மொழி எனும் நாலாயிர திவ்யப் பிரபந்தம் என வழங்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக