Pages

புதன், செப்டம்பர் 26, 2012

அபிராமி அந்தாதியின் ஆதி (வி)நாயகர்

அபிராமி அந்தாதியின் ஆதி (வி)நாயகர்

அபிராமி அந்தாதியின் ஆதி (வி)நாயகர்

தந்தைக்காக தனயன் ஆடிய தாண்டவம்

சிதம்பரம் ஸ்ரீ கற்பக கணபதி


சிதம்பரம்.
சைவர்களுக்குத் தலையாய கோயில்.
பஞ்சபூத ஸ்தலங்களுள் ஆகாய ஸ்தலம்.
பெரும் பெருமைகளும், புராதனமும் கொண்டது. வேத புராண இதிகாச காலங்களிலும் மேன்மை பெற்றதாகத் திகழ்ந்தது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றாலும் புகழ் வாய்ந்தது.

இவ்வாலயத்தில் இருக்கும் ஒவ்வொரு கல்லும் ஒரு புராணம் பகரும்.

சிதம்பரம் - ஒரு புகழ்பெற்ற ஸ்தலமாக மட்டுமல்லாமல் பல கலைகள் (நாட்டியம், சாஸ்திரம், சங்கீதம், சிற்பம், ஓவியம் & இதர) விளைந்த செழித்த கலா பீடமாகவும் திகழ்ந்தது.

தமிழ்ச் சைவத்தின் உயிர் மூச்சாகிய, பன்னிரு திருமுறைகளின் எந்த ஒரு பதிகம் பாடத் தொடங்கினாலும், 'திருச்சிற்றம்பலம்' என்றே சிதம்பரத்தின் மறு பெயரைச் சொல்ல என்ற காலம் காலமாகத் தொடர்ந்து வரும் மரபு, இத்தலத்தின் மேன்மையை உணர்த்துகின்றது.

அனைத்துக் கலைகளிலும் தேர்ந்த ஸர்வகலா மேதைகளான தீக்ஷிதர்கள் எனும் தில்லை வாழந்தணர்கள் திருமுன்பு, பல பெரிய புலவர்களும், சிதம்பரத்திற்கு வந்து, தமது படைப்புகளை பட்டியலிட்டு, புகழ் பெற்றிருக்கின்றார்கள். (இன்றளவும் நாட்டிய மாணவர்கள் தங்கள் முதல் நாட்டியமாகிய அரங்கேற்றத்தை சிதம்பரத்தில் அர்ப்பணிக்க விரும்புகின்றார்கள்.)
கவிச்சக்கரவர்த்தி கம்பர் தனது கம்பராமாயணத்தை சிதம்பரத்தில் தான் அரங்கேற்றினார்.
சேக்கிழார் பெருமான், சிவனடியார்களின் பெருமைகளைப் போற்றும், திருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணத்தை தில்லை தீக்ஷிதர்கள் தலைமையில், ஆயிரங்கால் மண்டபத்தில் அரங்கேற்றினார்.
ஸகலகலா சங்கமம் மட்டுமல்லாமல், ஸகல தெய்வங்களும் சங்கமிக்கும் ஒரே திருத்தலம் சிதம்பரம். சிதம்பரம் நடராஜப் பெருமானுக்குச் செய்விக்கப்படும் ஆறு கால பூஜைகளில், ஆறாவது கால பூஜையும், இரவு வேளை பூர்த்தி பூஜையும் ஆகிய அர்த்தஜாம பூஜையில் அனைத்து தெய்வ அம்சங்களும் நடராஜ மூர்த்தியிடம் ஐக்கியமாகிவிடுவதாக சிதம்பர க்ஷேத்ர புராணங்கள் தெரிவிக்கின்றன.
நம் தேசத்திலிருக்கும் பல புகழ்பெற்ற ஆலயங்களின் மூர்த்திகள் இவ்வாலயத்திற்குள் வீற்றிருக்கின்றார்கள். (திருக்கடையூர் கால ஸம்ஹார மூர்த்தி, காசி அன்னபூரணி, சபரிமலை சாஸ்தா, திருச்சி தாயுமானவர்...)
சிதம்பரம் ஆலயம் சுமார் 47 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கின்றது. நடுநாயகமாகவும், ஆலயத்தின் இதயம் போன்ற இடத்திலும் நடராஜர் நர்த்தனம் ஆடுகின்றார். அந்த மைய இடத்தைச் சுற்றி, பல்வேறு சிறப்புகள் கொண்ட பல ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. சிதம்பரம் நடராஜர் ஆலயத்தினுள் அமைந்த ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு வகையில் சிறப்பு பெற்றன.
அச்சிறப்பு பெற்ற கோயில்களுள் ஒன்றாகிய, ஸ்ரீ கற்பக கணபதி ஆலயம் பற்றி சிறிது காண்போம்.
சிதம்பரம் ஆலயத்திற்கு நான்கு கோபுரங்கள் நான்கு வேதங்களாக அமைந்திருக்கின்றன.
நான்கு கோபுர வாயில்கள் வழியேயும் நடராஜரை தரிசனம் செய்ய வரமுடியும்.
ஸ்ரீ கற்பக கணபதி :
எந்தவொருச் செயலைத் தொடங்கும் முன்னும் பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்குவது போல, ஆலய தரிசனம் செய்யும் முன்னும், விநாயகரை வழிபடவேண்டும் என்பது ஆன்றோர்கள் வாக்கு.
நான்கு கோபுரங்களின் வழியேயும் வருகை தரும்போது, முதற்கண், முழுமுதற் கடவுளாகிய கணபதியை வழிபட வகை அமைந்த ஒரு அற்புதத் தலம் சிதம்பரம்.
மேற்கு கோபுரம் வழியே நடராஜரை தரிசனம் செய்ய வருபவர்கள் முதலில், கற்பக கணபதியை வழிபட வேண்டும்.
மேற்கு கோபுரத்தின் கல்ஹாரம் எனும் அமைப்பில், கருங்கல் புடைப்புச் சிற்பமாக அமைந்திருப்பவர் ஸ்ரீ கற்பக கணபதி. அந்தப் புடைப்புச் சிற்பத்தை மையமாகக் கொண்டு ஆலயம் அமைந்திருப்பது அதிசிறப்பானது.

பொதுவாக, விநாயகர் ஆலயம் கிழக்கு நோக்கியே அமைந்திருக்கும். ஸ்ரீ கற்பக கணபதி மேற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிப்பது மிகவும் சிறப்பாகக் கூறப்படுகின்றது.
கற்பகத் தரு என்றால் கேட்டதைக் கொடுக்கும் தேவலோக மரம் என்று பொருள். அதுபோல், நாம் கேட்கும் வேண்டுதல்களை உடனடியாகத் தரக்கூடியவர் ஸ்ரீ கற்பக கணபதி.
சிதம்பரத்தின் நான்கு ரத வீதிகளில் மேற்கு ரத வீதி - இவரின் பார்வைபடும்படியாக அமைந்திருக்கின்றது. இவரின் பார்வையால், மேற்கு ரத வீதி செல்வ நடமாட்டம் (money circulation) மிக்கதாக, கடை வீதியாக (bazaar street) அமைந்திருப்பது இவரின் வரம் தரும் தன்மையைக் காட்டுகின்றது.
ஸ்ரீ கற்பக கணபதி - வணிகர்களின் வழிபாட்டில் மிக முக்கிய இடம் பெறுபவர்.
செல்வங்களை வாரி வழங்கும் செல்வகணபதியாகவும் திகழ்பவர். 'ருணமோசன கணபதி' என்று போற்றப்படுபவர். ருணம் என்றால் கடன். மோசனம் - நீக்குபவர். கடன்களை அகற்றி வாழ்வில் செல்வங்களை அள்ளித் தருபவர். ஸ்ரீ ருணமோசன கணபதி ஸ்தோத்திரம் கொண்டு வழிபாடு செய்பவர்கள், வாழ்வில் ஸகல செல்வங்களையும் பெறுவார்கள்.
[நவக்ரஹங்களில் செல்வங்களுக்கு அதிபதியாக விளங்கும் சுக்ர பகவான், விநாயகரைப் போற்றி வழிபட்ட ஸ்தோத்திரம் - ருணமோசன மஹாகணபதி ஸ்தோத்திரம். ஒவ்வொரு வரியின் முடிவிலும் 'ருணமுக்தயே' (கடன் நீங்கவேண்டும்) என்று அமையும்.
ஸ்ரீ கற்பக கணபதியைப் போற்றிடவும், கடன்கள் அகலவும் மற்றும் ஒரு ஸ்தோத்திரம் உண்டு. ஸ்ரீக்ருஷ்ணயாமளம் எனும் பெருமந்திரத் தொகுப்பில் அடங்கியதும், ஸ்ரீ சிவபெருமானாலேயே - கடன்களை அகற்ற வல்ல, கணபதியைப் போற்றிட வழிசெய்யும் ஸ்தோத்திரம் - அருளப் பெற்றதும் ஆகிய இதன் ஒவ்வொரு வரி முடிவிலும் 'ருணநாசம் கரோது மே' (கடன் நசித்துப் போகவேண்டும்) என்று அமையும்.]
ஸ்ரீ கற்பக கணபதி புராணம்:
பொதுவாக கணபதி ஆலயங்கள் கிழக்கு நோக்கி அமைந்திருக்க, கற்பக விநாயகர் ஏன் மேற்கு முகமாக அமைந்திருக்கின்றார்?
இதற்கென்று தனி புராணம் உண்டு.
அத்ரி மகரிஷியின் புத்திரரும், முனிச்ரேஷ்டரும், தவம் செய்வதில் ஈடற்றவரும், பெரும் தவ வலிமை கொண்டவரும், அதே சமயம் அதீத முன் கோபம் கொண்டவரும், கோபம் வந்தால் உடனே சாபம் அளிப்பவரும் ஆகிய துர்வாச மகரிஷி, ஒரு சமயம், சிதம்பரத்தில் நடராஜப் பெருமானின் திருநடனத்தைக் காண, தன் சீடர்கள் சூழ பரிவாரங்களோடு, மேற்கு கோபுர வாயில் வழியாக வந்தார்.
அவர் வரும் சமயம், நிசித காலம் எனும் நள்ளிரவுப் பொழுது ஆகிவிடுகின்றது. கோயில் பூஜைகள் அனைத்தும் முடிந்து திருக்காப்பிட்டு நெடுநேரமும் ஆகிவிட்டது.
ஆயினும், துர்வாசர் நடராஜப் பெருமானின் திருத்தாண்டவக் கோலத்தை ஆர்வமுடன் காண வருகின்றார். நெடுந்தூரத்திலிருந்து நடந்து வந்த காரணத்தால் அனைவரும் பசித்திருக்கின்றனர்.
பசியோடும், ஆவலோடும் வரும் துர்வாசரைக் கண்ட அனைவரும் அஞ்சுகின்றார்கள். திருக்காப்பிடப்பட்டுள்ளதால், நடராஜரைக் காண முடியாத துர்வாசர் சாபம் கொடுத்துவிடுவாரோ என்று பயம் கொள்கின்றார்கள்.
அனைத்துலக் காரணியும், அனைவருக்கும் அன்னமிடும் அம்பிகையின் அம்சமாகிய, அன்னபூரணி தேவி தோன்றி, முதலில் துர்வாசர் முதற்கொண்டு, சீடர்கள் வரை அனைவருக்கும் அன்னமிட்டு வயிறைக் குளிர்விக்கின்றாள். (குஞ்சிதாங்கிரிஸ்தவம் - 143ம் பாடல்.)
[துர்வாசருக்காகத் தோன்றிய அன்னபூரணி, இன்றும் ஆலய பிரசாதங்கள் சமைக்கும் இடமாகிய மடைப்பள்ளியின் முகப்பு மண்டபத்தில் மேற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கின்றாள். இவர்கள் அனைவரும் அன்னம் புசித்த இடம் - இன்றும் மேற்கு கோபுரத்திற்குச் சற்றுத் தொலைவில் 'மேலமடம்' (அகோர சிவாச்சாரியர் மடம் - இங்கு துர்வாசருக்கு சிலை உண்டு) அமைந்திருக்கின்றது.]
தந்தைக்காக தாண்டவம் ஆடிய தனயன் :

வயிறு குளிர்ந்த அனைவரும், மனம் குளிர தரிசனம் செய்ய வருகின்றார்கள். ஆயினும், கதவுகள் சாற்றப்பட்ட நிலையில் எப்படி நடராஜரை தரிசனம் செய்ய முடியும்?
இங்கு தான் விநாயகர் அருள் பாலிக்கின்றார்.
தரிசனம் செய்ய வரும் அனைவரையும் மேற்கு கோபுரத்தின் வாயிலில் விநாயகர் தோன்றி வரவேற்கின்றார்.
துர்வாசர் விநாயகப் பெருமானை வணங்கி வழிபடுகின்றார்.
விநாயகப் பெருமான், துர்வாசரின் தரிசன விருப்பத்தை மனதில் கொண்டு, தன் தந்தையாகிய நடராஜப் பெருமான், எப்படி ஆனந்த நடனக் காட்சியை நல்கினார் என்பதை, தனது பெருத்த உடலோடு, விடைத்த பெரிய காதுகளோடு, சலங்கை ஒலிக்க, அங்கங்கள் குலுங்க நடனமாடிக் காட்டுகின்றார்.
இதைக் கண்ட அனைவரும், ஐங்கரனின் ஆட்டத்தில் மனம் குலுங்கி சிரித்து மகிழ்கின்றனர்.
இத்தாண்டவத்தைக் கண்ட அனைவரும் நடராஜப் பெருமானின் திருக்கோலத்தை நினைந்து மனம் குளிர்கின்றனர்.
துர்வாசரும், கண்ணால் கற்பக கணபதி தந்த காட்சியைக் கண்டு, உள்ளம் குளிர்ந்து, உவகை கொண்டு, நடராஜ நடனத்தை தரிசித்த திருப்தியுடன், உலக மக்கள் அனைவரும் உமது நடனக் காட்சியைக் காண வேண்டும் என்று வரம் வேண்டிக்கொண்டு, நடராஜரைத் தரிசிக்காமலேயே, கணபதியின் ஆட்டத்தை நெஞ்சத்தில் கொண்டு, மனதால் ஆனந்த தாண்டவத்தை தரிசித்து, தனது ஆசிரமம் திரும்புகின்றார்.
அனைவர் மனதிலும் பயம் விலகி இன்பமயம் பொங்கச் செல்கின்றனர்.
இதுவே, கற்பக கணபதி மேற்கு கோபுர கல்ஹாரத்தில் குடி கொண்ட புராணம்.
இந்தப் புராண சம்பவம் - தீக்ஷிதர் குல ரத்தினமும், வடமொழியும், தென்மொழியும் தெளிவாகக் கற்றவரும், பெரும் ஞானியும், கி.பி. 14ம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும் ஆகிய ஸ்ரீ உமாபதி சிவம் அவர்கள், ஸ்ரீ கற்பக கணபதி மேல், தாம் இயற்றிய 'ஸ்ரீ கற்பக கணேச பஞ்சரத்னம்' எனும் ஸ்லோகத்தில் விவரிக்கின்றார். (தூர்வாஸ: ப்ரமுகாகிலர்ஷ விநுத: ஸர்வேச்வரோக்யோ வ்யய: & ஆயாந்தம் நிசி..)
ஸ்ரீ கற்பக கணபதியே சிதம்பரம் ஆலயத்தின் ஸ்தல விநாயகராக கொண்டாடப் படுகின்றார்.
ஸ்ரீ கற்பக கணபதி மூர்த்தியை, உமாபதி சிவம் 'வாஞ்சாகல்ப கணபதி' எனும் வழிபாட்டு முறைப்படி வணங்கியிருக்கின்றார். வாஞ்சாகல்ப வழிபாடு - வேண்டும் வரங்களை விட அதிகமாக வழங்கச் செய்யும் முறை.
நடராஜ மூர்த்தியைப் போல் தாண்டவாமாடிய கற்பக கணபதியைக் காண நந்திகேசரும் வந்திருக்கின்றார்.
பொதுவாக விநாயகர் ஆலயத்தில் மூஞ்சூறு எனும் எலி வாகனம் தான் விநாயகர் எதிரில் அமைந்திருக்கும்.
ஆனால், கற்பக கணபதி ஆலயத்தில், நடேச அம்சமாக நாட்டியம் ஆடியவருக்கு எதிரில் நந்தி வாகனம் அமைந்திருப்பது சிறப்பான ஒன்றாகும்.
(வல்கலன் எனும் அசுரனை அழிக்க தேவேந்திரன் - சிவ வாகனமாக - நந்தியாக வடிவெடுத்து வந்தான் என்று உமாபதி சிவம் தாம் இயற்றிய குஞ்சிதாங்கிரிஸ்தவத்தில் குறிப்பிடுகின்றார். (பாடல் எண்:41). அந்த இந்திர நந்திதான் இங்கு விநாயகருக்கு எதிரில் இருப்பதாகக் கூறுவார்கள்.)

நடராஜ அம்சமாக விளங்கிய கணபதி ஆலயத்திற்கு நேரெதிரே, சிவ விருக்ஷமாகிய வில்வ மரத்தினை - உமாபதி சிவம் (கி.பி.14ம் நூற்றாண்டு) ஸ்தாபித்தார். அம்மரம் இன்றும் விளங்குகின்றது.
அந்த மரத்தின் இடத்தில் இருந்த ஒரு நாகப் பாம்பினை அங்கிருந்து அகற்றி, கோயிலின் அருகேயே ஒரு துவாரம் அமைத்து, அதற்கு வழிபாடும் செய்தார். அந்த நாகம் இருந்த இடம் இன்று 'ராகு' கிரஹமாக அமைந்து பக்தர்களால் வழிபாடு செய்யப்படுகின்றது.
வரலாறு :
வரலாற்றின் அடிப்படையில் பார்த்தோமானால்,
கி.பி.1178 முதல் 1218 வரை தமிழகத்தை ஆண்ட மூன்றாம் குலோத்துங்கன், சிதம்பரம் ஆலயத்திற்கு பல்வேறு திருப்பணிகளை செய்துள்ளான்.
இந்த விநாயகரின் கீழ் 'குலோத்துங்கச் சோழ விநாயகர்' என்று பொறிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டுக் குறிப்பு ஒன்று - இராஜாக்கள் தம்பிரான் திருமாளிகை மேலைத் திருமாளிகையில் நிலையெழு கோபுரத் திருவாசல் புறவாசல் தென்பக்கத்து எழுந்தருளியிருந்து பூசை கொண்டருளுகிற குலோத்துங்கச் சோழ விநாயகர் - என்று விவரிக்கின்றது.
ஆக, மேற்கு கோபுரம், குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் உறுதிபடுத்துகின்றனர். (க. வெள்ளைவாரணார், தில்லைப் பெருங்கோயில் வரலாறு)
எனினும், பின் வந்த முதலாம் சுந்தர பாண்டியன் - இக்கோபுரத்தை பெரிதும் பழுதுபார்த்து புதுப்பித்தமையால், இக்கோபுரம் 'சுந்தரபாண்டிய கோபுரம்' என்று பிற்காலக் கல்வெட்டுகளால் அறியப்படுகின்றது.
நாட்டியமாடும் கோலத்தில் அமைந்த முதல் விநாயகர் விக்ரஹம் என்ற பெருமையும் ஸ்ரீ கற்பக கணபதிக்கு உண்டு.

அபிராமி அந்தாதியின் ஆதி (வி) நாயகர்
செம்மொழியாம் தமிழ் மொழியில் அமைந்த பல்வேறு பிரபந்த வகைகளுள் ஒன்றான அந்தாதி என்பது சிறப்பு வாய்ந்தது.
ஒரு பாடலின் கடைசி அடியில் உள்ள இறுதி (அந்தம்) வார்த்தையை,
அடுத்து வரும் பாடலுக்கான ஆரம்பமாகக் (ஆதி) கொண்டு,
பாட்டுடைத் தலைமையைப் போற்றுவது. (அந்தம்+ஆதி = அந்தாதி)

அவ்வகையில், பிற்காலத்தில் எழுதப்பட்டதும், மக்களின் மனதில் எளிதில் இடம்பெற்றதும், மிகவும் பிரபலமானதும், ஆதிசக்தியான அம்பிகையைப் போற்றுவதும், பொருட்சுவையும், அழகிய சொல்லமைப்பும், அருமையான பண்ணமைப்பும் கொண்ட 'அபிராமி அந்தாதி' - திருக்கடையூரில் வாழ்ந்த சுப்ரமண்யன் என்ற இயற்பெயர் கொண்ட 'அபிராமப் பட்டர்' அவர்களால் இயற்றப்பட்டது.
இவர், தமிழ், வடமொழி, சங்கீதம், ஜோதிடம் போன்ற கலைகளைக் களங்கமறக் கற்றவர்,
திருக்கடையூரில் அருள்பாலிக்கும் அபிராமியைத் துதித்துப் பாடப்பட்டது அபிராமி அந்தாதி.
அபிராம பட்டரின் பக்திக்காக, அமாவாசையை, அபிராமவல்லி தனது தாடங்கத்தை (தோடு) வீசி பெளர்ணமியாக பிரகாசிக்கச் செய்தாள்.
அபிராமி அந்தாதியின் முதல் பாடல் - விநாயகரை வழிபடுகின்ற - காப்புச் செய்யுள்.

தாரமர் கொன்றையும் செண்பக மாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே உலகேழையும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்பொழுதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே.

தில்லை ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே - என்று அபிராம பட்டர் - சிதம்பரத்தில் அமைந்து அருள்பாலிக்கும் - தில்லை ஸ்தல விநாயகராகிய ஸ்ரீ கற்பகக் கணபதியைத் தான் குறிப்பிடுகின்றார் என்று அபிராமி அந்தாதியையும், சிதம்பரத்தையும் இணைந்து ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள்.
ஆய்வாளர்கள் சிலர் - திருக்கடையூரில் அருளும் 'கள்ளவாரணப் பிள்ளையாரை'த் தான் குறிப்பிடுகின்றார் என்பார்கள். இந்தப் பிள்ளையாரைப் போற்றி தனியாக 'கள்ளவாரணப் பிள்ளையார் பதிகம்' அபிராம பட்டர் பாடியிருக்கின்றார்.
ஆகவே தான், சிதம்பரம் கற்பக விநாயகரைப் போற்றி எழுதியிருக்கின்றார் என்பார்கள்.
அபிராமி அந்தாதிக்கு ஆதி (முதல்) பாடல் விநாயகரைப் போற்றி அமைந்திருக்கின்றது.
அபிராமி அந்தாதிக்கு மற்றும் ஒரு சிறப்பு உண்டு. ஒரு பாடலுக்கும், அடுத்து வரும் பாடலுக்கும், அந்தம் ஆதி எனத் தொடர்பு உண்டு என்பது பலரும் அறிந்தது.
அபிராமி அந்தாதி (தொகுப்பு) முழுவதையும் எடுத்துக்கொண்டால் அதுவும் அந்தாதியாகத் தான் அமைகின்ற மாண்பு மிக மிகச் சிறப்பு வாய்ந்தது.
காப்புச் செய்யுளுக்கு அடுத்ததாக, அபிராமியைப் போற்றும் முதல் பதிகம் - 'உதிக்கின்ற செங்கதிர்' என்று தொடங்குகின்றது.
நூறாவது பாடல் - 'குழையைத் தழுவிய' என்று தொடங்கி 'உதிக்கின்றவே' என்று நிறைவுறுகின்றது.
இந்த 'உதிக்கின்றவே' என்ற கடைசி பதம் (அந்தம்), முதல் பதிகத்தில் 'உதிக்கின்ற செங்கதிர்' என்று தொடங்குகிறது (ஆதி).
ஆக, இந்த அந்தாதியை ஒவ்வொரு முறை சொல்லும் போதும் அதன் பலன் அளவிடற்கரியது என்று பக்தர்கள் சிலாகிப்பார்கள்.
(சிதம்பரத்தில் அரங்கேற்றப்பட்ட, பெரிய புராணம் 'உலகெலாம்' எனத் தொடங்கி, இறுதியில் 'உலகெலாம்' என்று நிறைவுபெறும்.)
அந்தாதி - உரைப்பது என்னவெனில், பரம்பொருள், அவரே ஆதி. அவரே அந்தம்.
ஆதியும் அந்தமும் தொடர்பில் இருப்பதால் - ஒரு இணைப்பு நிறைவு செய்வதால் - ஆதியும் அந்தமும் இல்லாத இறையை இடைவிடாது இறைஞ்சினோமானால், இப்பிறப்பில் இன்பமும், மறுமையில் இறைவனிடத்திலும் (முக்தி) கொண்டு செல்லும் என்பது தெளிவுபடக் கூறுகின்றது.
அபிராமி அந்தாதியின் ஆதி நாயகரும், தந்தையாகிய நடராஜரின் தாண்டவத்தை ஆடிக் காட்டி அருளிய, தனயனாகியவரும், சிதம்பரம் ஸ்தல விநாயகரும் ஆகிய கற்பக விநாயகரின் பாதம் பணிந்து பயனுறுவோம் !
*****
பி.கு. : துர்வாசருக்காக நடனமாடியவர் கற்பக கணபதி. மேற்கு கோபுர வழி வரும் பக்தர்கள் இவரைத் தான் முதலில் வழிபட வேண்டும். விநாயகரைத் தரிசித்தால், உடன் முருகனையும் வழிபட வேண்டும் அல்லவா?
கற்பக கணபதியைத் தரிசித்து கிழக்கு நோக்கி கோயில் உள் சென்று இடது புறம் திரும்பினால், அதே மேற்கு கோபுரத்தில், கல்ஹாரத்தில் புடைப்புச் சிற்பமாக விளங்கும் குமரக்கோட்டத்தில் அமைந்திருக்கக் கூடிய முருகப் பெருமானை வழிபட வேண்டும்.
இந்த முருகருடைய சிறப்புக்களில் ஒன்று : அருணகிரிநாதருக்கு முருகப் பெருமான் நடராஜர் போன்று தாண்டவமாடிக் காட்டினார். முருகனின் தாண்டவமாடியக் காட்சியை 'தரிகிட தரிகிட தாகு டாத்திரி .. அணிதிகழ் மிகுபுலி யூர்வியாக்ரனும் அரிதென முறை முறை ஆடல்காட்டிய பெருமாளே' என முருகனின் தாண்டவத்தைப் புகழ்ந்து போற்றுகின்றார். (இக்கோயில் பற்றி பிறகு விபரமாகப் பார்க்கலாம்)
தாண்டவமாடிய விநாயகர் & முருகரின் தரிசனத்திற்குப் பிறகு நடராஜ மூர்த்தியை தரிசனம் செய்வது மரபு.

நமசிவாய வாழ்க !

நமசிவாய வாழ்க !
அண்டமெங்கும் நிறைந்திருக்கும் அருட்பெரும் சக்தியாக விளங்கும் சிவபெருமானை வழிபடும் வகை சைவம் ஆகும். அங்கிங்கெணாதபடி வியாபித்திருக்கும் சைவப்பெரும் பரம்பொருளை வழிபடுபவர்கள் சைவர்கள் என்று போற்றப்படுவார்கள்.
சைவர்களின் முக்கியமான கடமைகள் என சிவபுராணங்கள் கூறுபவை - விபூதி எனும் திருநீற்றினை நெற்றியில் எப்பொழுதும் தரித்திருப்பது.
ருத்ர அம்சமாக விளங்கும் ருத்ராக்ஷத்தை அணிந்திருப்பது.
பஞ்சாக்ஷரம் என்று போற்றப்படும் நமசிவாய எனும் மந்திரத்தை முப்பொழுதும் சொல்லிக்கொண்டிருப்பது.
(ருத்ராக்ஷம், விபூதி பற்றி முந்தைய பதிவுகளில் கண்டிருந்தோம்.
ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் பொருளாம் ஈசனிடமிருந்து உலகங்கள் தோன்றின. உயிர்கள் தோன்றின. ஆகையால் அவருக்கு பசுபதி என பெயர். உலகத்திலிருக்கும் அனைத்திற்கும் ஆதாரம் பரமேசனே என்பது தான் பசுபதியின் அர்த்தம்.
பஞ்சபூதங்களையும் (நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்) தோற்றுவித்தவர் பரமானந்த நடனம் செய்யும் பரம்பொருள்.
நடராஜ மூர்த்தியின் டமருகம் எனும் உடுக்கையிலிருந்து ஒலி தோன்றியதாகவும், அதிலிருந்து எழுத்துக்களும், மொழிகளும் தோன்றியதாகவும் புராணங்கள் கூறுகின்றன. (மாகேச்வர சூத்ரம்)
வேதங்களும், உபநிடதங்களும், புராணங்களும் தெய்வங்களால் அருளப்பட்டவை. தெய்வ அருள் பெற்ற அடியார்கள், தெய்வங்களைப் பற்றிய பாடல்களைப் பாடியுள்ளனர்.
வேதங்கள் - மகேஸ்வரனின் மூச்சுக் காற்றிலிருந்து ரிஷிகளால் உணரப்பட்ட மந்திரங்களின் தொகுப்பாக அமைந்துள்ளது. வேதங்களே இந்து மதத்திற்கு ஆணிவேர்.
மனப்பூர்வமாக சொல்லப்படும் மந்திரங்களுக்கு தெய்வங்கள் கட்டுப்படுவார்கள் என்பது வேத வாக்கு.
தெய்வங்களுக்குரிய மந்திரங்களை மனமாரச் சொன்னால், தெய்வங்கள் மனமிரங்கி, நம் மனம் குளிர அருள்வார்கள்.
தெய்வ அருள் எளிதில் கிட்ட, அத்தெய்வத்திற்குரிய மந்திரங்களை, மனதால் தியானிப்பது அல்லது சொல்வது - வழிவகுக்கும்.
தெய்வங்களைப் போற்றும் வேத மந்திரங்களை பிழையில்லாமல் சொல்ல மிகுந்த பயிற்சி வேண்டும்.
ஸ்லோகங்கள் அல்லது தெய்வத் திருப்பதிகங்களை படிப்பதற்கும் அல்லது மனனமாகச் சொல்வதற்கும் பயிற்சிகள் அவசியம்.
கஷ்டங்களை நீக்க வல்ல மந்திரங்களை, எளிதில் சொல்வதற்கு ரிஷிகள் போன்றோர்கள், எளிய மக்களும் மிக இலகுவாகச் சொல்ல ஏதுவாக மூல மந்திரங்கள் எனும் எளிய மந்திரங்களை வகுத்துள்ளனர்.
இந்த மந்திரங்கள் சொல்வதற்கு எளிதாகவும், ஆனால் மிக மிக வீரியம் நிறைந்தவையாகவும் அமைந்திருக்கும்.
இவை மிக எளிமையான வழிமுறைகள் கொண்டது. எப்பொழுதும் சொல்ல முடிவது.
உடல் வலிமை பெற, உணவு உரம் போல அமைந்து, உடற்பயிற்சி செய்வது அவசியமானது. அது போல், மனம் திறன் பெற, மந்திரம் உரமாகி, மனப்பயிற்சி செய்வது இன்றியமையாதது.
இந்த மூல மந்திரங்கள், தெய்வங்களைப் போற்றும் பெரும் மந்திரத் தொகுப்பில் உள்ள சாராம்சங்களைச் சாறு பிழித்து எடுத்திருப்பதாக அமைந்திருக்கும். ஒரு பழத்தை முழுமையாகச் சாப்பிடுவதை விட அதன் சாற்றினை அருந்துவது எளிதானதல்லவா?
மூல மந்திரம் என்பது, தெய்வத்தினைப் போற்றும் சக்தி வாய்ந்த மந்திரங்களின் ஆரம்ப எழுத்துக்களை மட்டுமே, அதாவது அதன் மூல எழுத்துக்களை மட்டுமே கொண்டு சுருங்கச் சொல்வதாக இருக்கும். சுருக்கமும், விளக்கமும் தகுந்த குரு வாயிலாகவே கற்க வேண்டியிருக்கும்.
பல்வேறு தெய்வங்களுக்கு, பலவிதமான மூல மந்திரங்கள் உண்டு.
அவற்றில் மேலானதாகக் கருதப்படுவது, சிவபெருமானைப் போற்றக்கூடிய பஞ்சாக்கரம் அல்லது திருவைந்தெழுத்து எனப்படும் நமசிவாய எனும் ஐந்தெழுத்து மூலமந்திரம்.
இந்த ஐந்தெழுத்து மந்திரம் (நமசிவாய) சிவபெருமானே நமக்குச் சொல்லித் தருவதாக எடுத்துக்கொண்டு, எவர் வேண்டுமானாலும் எப்பொழுதும் சொல்லக் கூடியது.
உரு ஏறத் திரு ஏறும் என்பார்கள். மூல மந்திரங்களை எவ்வளவுக்கு எவ்வளவு ஜபிக்கின்றோமோ அவ்வளவுக்கு அவ்வளவு தெய்வத் திருவருள் கிடைக்கும்.
மற்ற மூலமந்திரங்களில் - எழுத்துக்கள் அதிகமிருக்கும். (முருகனைப் போற்றும் சடாக்ஷரம் - ஆறெழுத்து - சரவணபவ, மஹா விஷ்ணுவைப் போற்றும் அஷ்டாக்ஷரம் - எட்டெழுத்து - ஓம் நமோ நாராயணாய, அம்பிகையைப் போற்றும் சோடசாக்ஷரம் - 16 எழுத்து). மிகக் குறைந்த எழுத்துக்கள் - ஐந்தே எழுத்துக்களைக் கொண்ட - பஞ்சாக்ஷரம் - எளிதில் உருவேற்ற அதாவது ஜபிக்க ஏற்றது. மிக விரைவில் அதிக எண்ணிக்கையிலான ஜபங்கள் செய்ய இயலுவதால், இறையருள் மிக எளிதில் கிடைக்கும்.
வேதங்கள் நான்கு ; அவை ருக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம்.
இதில் இரண்டாவதாக அமைந்திருக்கும் யஜுர் வேதம், தெய்வங்களைப் போற்றி வழிபாடு செய்யக்கூடிய யாகங்களையும், பூஜைகளையும் - பெரும்பான்மையாகக் கூறுகின்றது.
யஜுர் வேத மந்திரங்களின் மையமாக அமைந்திருப்பது, சிவபெருமானைப் போற்றக் கூடிய ஸ்ரீ ருத்ரம் எனும் மந்திரத் தொகுப்பு. யஜுர் வேத மையமான ஸ்ரீ ருத்ரத்திற்கும் நடுவாக அமைந்திருப்பது "நமசிவாய" எனும் ஐந்தெழுத்து மந்திரம். ('நம: சிவாய'ச சிவதராயச)
யஜுர் வேதத்திலுள்ள எழுத்துக்களையெல்லாம் ஒவ்வொரு எழுத்தாகக் கொண்டு, மாலை போன்று தொடுத்து, இறைவனுக்கு அர்ப்பணிப்பது போல் அமைத்தால், மாலையின் நடுநாயகமாக, நமசிவாய அமையும். (சிதம்பரம் ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு, நமசிவய எனும் எழுத்துக்கள் பதித்த ரத்தினங்களால் ஆன பதக்கம் சாற்றப்பட்டிருப்பது - அவர் வேத நாயகன் என்பதை எடுத்துக்காட்டுகின்றது.)
ஆகையினால், சிவப்பரம்பொருளை தொழுதிடும் அடியவர்கள் எக்கணமும் 'நமசிவாய' மந்திரத்தைச் சொல்லிக்கொண்டேயிருக்க வேண்டும் என சிவபுராணங்கள் வலியுறுத்துகின்றன.
நமசிவாய - என்று சொல்லும்போது, வேத முழுமையும் சொல்லிய பலன் கிட்டும்.
நாம் வேண்டும் விருப்பங்களை மிக விரைவில் கிடைக்க வழிசெய்யும். மனம் நிரம்பிய மணவாழ்வு பெறச்செய்யும். அனைத்து செல்வங்களையும் தரும். (சிவம் என்றால் மங்கலம் என்றே அர்த்தம்)
நமசிவாய எனும் ஐந்தெழுத்து மூல மந்திரத்தின் சிறப்பினை பல்வேறு புராணங்களும், அடியார்களின் வாழ்க்கை வரலாறுகளும் எடுத்து இயம்புகின்றன.
சிதம்பரம் மற்றும் பஞ்சாக்ஷரம் சம்பந்தமான - மிக முக்கியமான ஒரு சம்பவத்தை மட்டும் இங்கு காண்போம்.
இந்து மதத்தின் புகழ், வேத காலம் முதற்கொண்டு புகழ்பெற்று விளங்கியிருக்கின்றது.
ஆயினும், இடைப்பட்ட சில காலத்தில், மன்னராட்சி முறையால், அவர்கள் கொண்ட மதத்தை மக்களைப் பின்பற்ற உத்தரவிடுவதாலும், வேற்றுமத தலையீடு இருந்ததாலும், இந்து மதத்தின் புகழ் சரியத் தொடங்கியது.
புகழின் சரிவை, இறையருளால், அந்தந்த காலத்தில், மஹான்கள் பிறந்து, இந்து சமயத்திற்குப் பெரிதும் ஏற்றத்தைப் பெறத் தொண்டு ஆற்றியுள்ளார்கள்.
தமிழத்தில், இடைக்காலத்தில் சமணமும், பெளத்தமும் ஆதிக்கம் பெற்றிருந்த சமயத்தில், தமிழர்களும் பிறமத மோகத்தில் மூழ்கியிருந்தார்கள்.
இதனைப் பொடிப்பொடியாக்க, தெய்வாம்சம் பொருந்திய அடியார்கள் தோன்றி, வேற்றுமதத்தில் மூழ்கியிருந்த மக்களின் உறக்கத்தைத் தட்டியெழுப்பினார்கள்.
தமிழும், சைவமும், பக்தியும் தழைக்க அயராது பாடுபட்டார்கள். பக்தியை மிக எளிமையாக்கினார்கள். உதாரணமாக, சாதாரண மக்களும் எளிய முறையில் இறைவனை வழிபட வழிவகை செய்தார்கள். நமசிவாய எனும் எளிய மந்திரத்தை மக்களின் மனதில் ஆழ ஊன்றுவித்தார்கள். ஒரு பெரும் ஆன்மீகப் புரட்சியையே தோற்றுவித்தார்கள். அக்காலத்தில் அவர்கள் ஊன்றிய ஆன்மீக விதை இன்று மிகப்பெரும் ஆலமரமாக விரவியிருக்கின்றது.
அந்த அடியார்கள் சென்று பாடிய சிவத்தலங்கள் - பாடல் பெற்ற சிவத்தலங்கள் என்று போற்றப்பட்டு - சிவபக்தர்களால் பெரும் போற்றுதலுக்கு உள்ளாகியிருக்கின்றது.

மேற்சொன்ன அடியார்களில் மிக முக்கியமானவர்கள் நால்வர் பெருமக்கள் என்று போற்றப்படும், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞான சம்பந்தர் ஆகியோர்.
இந்த நால்வரில் காலத்தால் முந்தையவர் மாணிக்கவாசகர்.
அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர் என தமிழ் மூவராகத்தான் அனேக காலம் கொண்டாடப்பட்டு வந்தனர். ஆயினும், காலத்தால் பிற்பாடுதான் நால்வராகச் சேர்க்கப்பட்டவர் மாணிக்கவாசகர்.

மதுரையில் அரசாண்டு கொண்டிருந்த பாண்டிய மன்னனிடம், மந்திரியாகப் பணியாற்றியவர் திருவாதவூரர். அரசாங்கத்தைப் பலப்படுத்த, குதிரைகள் வாங்க அரசனால் பணிக்கப்பட்டு, குதிரைகள் வாங்க வந்த வழியில், திருப்பெருந்துறை எனுமிடத்தில், குருந்த மரத்தடியின் கீழ் வீற்றிருந்த சிவபெருமானின் திருவடி ஒளியைக்கண்டு பணிந்து, அவரையே ஞான ஆசானாகக் கொண்டு, மனம் மாறி தாம் ஒரு அமைச்சர் என்பதை மறந்து, குதிரை வாங்க அரசன் கொடுத்த பணத்தையெல்லாம் கொண்டு, கோயில் கட்ட, இதை அறிந்து கோபம் கொண்ட அரசன், தூதனை அனுப்பி விபரம் கேட்க, குதிரைகள் வாங்காத அமைச்சரைத் அரசன் தண்டிக்க, தனது அடியவன் பெறும் கஷ்டங்களைப் பொறுக்காத சிவபெருமான், ஒரு திருவிளையாடலை நடத்தத் திட்டமிட்டு, நரிகளையெல்லாம் குதிரைகளாக்கி, திருவாதவூரர் அனுப்பியவன் என்று கூறி, குதிரைகளை அரசனிடம் சேர்ப்பிக்க, அன்றிரவே குதிரைகள் எல்லாம் நரிகளாக மாறி கூவி குதிரை லாயத்திலிருந்து தப்பித்து ஓட, இதை அறிந்த மன்னன் மறுபடியும் திருவாதவூரரை திரும்பத் தண்டிக்க, இம்முறை மதுரை வழிபாயும் வைகை நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடச் செய்ய, இதனை சரிசெய்ய ஆற்றங்கரை ஓரத்திலிருக்கும் அனைவருக்கும் முறைவைத்து, ஆற்று உடைப்பை அடைக்கச் செய்ய உத்தரவிட, அதில் ஒரு முறை கொண்ட பிட்டு எனும் உணவை விற்கும், சிவபெருமான் மீது அளவற்ற பக்தி கொண்ட வந்தி எனும் வயோதிகப் பெண்மணி மட்டும் அடைக்காமல் இருக்க, சிவபெருமான் ஒரு வேலையாளாய் வந்தியிடம் வந்து, தான் உடைப்பை சரிசெய்வேன் என்று கூறி அதற்குக் கூலியாக பிட்டு மட்டும் வாங்குவேன் என்று கூறி, பிட்டை மட்டும் அவ்வப்பொது உண்டு, உடைப்பை சரிசெய்யாமல் திருவிளையாடல் புரிய, மன்னவன் ஒரு இடத்தில் மட்டும் உடைப்பு அடையாமல் இருக்கக் கண்டு, கோபம் கொண்டு, அவ்விடத்திற்கு வந்து, வேலையாளாக இருந்த சிவபெருமான் மீது பிரம்பால் அடிக்க, அந்த அடி அண்டமெங்கும் உள்ள அனைத்து ஜீவராசிகளின் மீதும், அரசன் மீதும் விழுந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற மன்னவன் திகைக்க, ஒரு கூடை மண்ணை எடுத்து உடைப்பில் போட்டு வைகையை அந்த ஏவலாள் சரிசெய்து, மறைந்தனர். மேலும் சிவபெருமான் அசரீரியாக, தனது அன்பைப்பெற்ற திருவாதவூரர் பெற்ற துன்பத்திற்காக தான் ஒரு திருவிளையாடல் புரிந்தேன் என்று கூற, மன்னன் மகிழ்ந்து திருவாதவூரரைப் பணிய, அவர் மந்திரிப்பதவி ஏற்க மறுத்து, சிவத்தொண்டே என் வாழ்நாள் தொண்டு என மன்னனிடம் கூற, அவர் விருப்பப்படியே, திருவாதவூரர் சிவத்தொண்டு புரிய உரிய உதவிகள் செய்தனன்.
இவர் பல தலங்கள் வழியே சிதம்பரம் வந்தடைந்தார்.
இவர் பாடிய பாடல்களின் வார்த்தைகள் எல்லாம் மாணிக்கம் போன்று இருந்தமையால், இறைவனே இவருக்கு 'மாணிக்கவாசகர்' என்று பெயரிட்டார்.
இவரின் பாடல்கள் - திருவாசகம் ஆகும். பன்னிரு திருமுறையில் எட்டாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றது. சிவானந்த ரசமாகிய திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பார்கள். அந்தளவுக்கு தெய்வத்தமிழால், இறைவனைப்பாடி, கேட்பவர் அனைவரும் உருகும்படி பாடல்கள் அமைந்திருக்கும்.
தனது உயிர்மூச்சாக நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தைக்கொண்டவர் மாணிக்கவாசகர். ஆகையினால் தான், 'நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க' என்று தொடங்கும் சிவபுராணம் எனும் பாடலைப் பாடியவர்.
தன்னை அடியார்க்கும் அடியாராகவும், மிக மிக எளிமையானவராகவும் தனது பாடல்கள் மூலம் அறிவித்தவர்.
இவர் ஒரு சமயம், சிதம்பரத்தில் தங்கியிருந்து, நடராஜப் பெருமான் மீது ஆரா அன்பு கொண்டு, சிவத்தொண்டு ஆற்றிவந்தார்.
அச்சமயம், சிவனடியார் ஒருவர் ஈழம் எனும் இலங்கை சென்று, எப்பொழுதும் பொன்னம்பலம், சிற்றம்பலம் என்று கூறிவந்தார்.
அதுசமயம், இலங்கையில் புத்தமதம் ஓங்கியிருந்தது. அரசவை வீரர்கள், அடியாரின் பிறமதச் சொல்கேட்டு, கோபம் கொண்டு, அரசன் முன் நிறுத்தினர்.
அரசன், அடியார் கூறிய வார்த்தைகள் கேட்டு, இதன் பொருள் என்னவென வினவ, சிதம்பரத்தின் சிறப்பையும், சைவத்தின் மேன்மையையும், நடராஜரின் புகழையும், பெருமை பொங்க பதில் கூற, தன் மதத்தின் மீது மதம் கொண்டிருந்த அரசன், சிதம்பரத்தில் தன் மதத்தை வேரூன்றச் செய்வேன் என்று சபதமிட்டு, தன் பரிவாரங்களுடனும், தனது மத துறவிகளுடனும் சிதம்பரம் வந்தான்.
சிதம்பரத்தில் தனது மத துறவிகளுடன் வந்து, எவர் மதம் உயர்ந்தது என்பதைப் பற்றி வாதம் செய்ய அழைப்பு விடுத்தான்.
புத்த மதத் துறவிகளுடன் வாதம் புரிய தகுந்த நபர் மாணிக்கவாசகர் தான் என்று அனைவரும் உணர்ந்து புத்தர்களுடன் வாதம் புரிய அவரை, ஆயிரங்கால் மண்டபத்திற்கு அழைத்து வந்தனர்.
அங்கு, மாணிக்கவாசகரின் அருட்தோற்றப் பொலிவினைக் கண்ட புத்த துறவிகள், மன்னன் இவரைப் பார்த்துவிட்டால், மனம் மாறிவிடுவானோ என்றஞ்சி, ஒரு திரையமைத்துக் கொண்டு, மன்னவன் மாணிக்கவாசகரைப் பார்க்காவண்ணம், திரையின் ஒரு பக்கம் மாணிக்கவாசகரையும், மறு பக்கம் தாங்களும் நின்று கொண்டனர்.
புத்த மதத் துறவிகள் சிவனை நிந்தித்து வார்த்தைகளை வீச, அதைக் கேட்கப் பொறாத மாணிக்க வாசகர், தில்லையம்பலக் கூத்தனை மனதார நினைந்து, புத்தமதத் துறவிகளின் சொல் திறத்தை நீக்க, வாகீஸ்வரியாக விளங்கும் சரஸ்வதியை வேண்டிக்கொண்டு, துறவிகள் அனைவரையும் அக்கணமே ஊமையாக்கினார்.
திடுக்கிட்ட மன்னவனும், துறவிகளும் செய்வதறியாது திகைத்தனர்.
ஆயினும், மன்னவன் மாணிக்கவாசகர் மீது மதிப்பு கொண்டு, அவரை நோக்கி, 'வாக்குத் திறமையுள்ள எனது மத துறவிகளை ஊமையாக்கினீர்கள்.
எனக்கு ஒரு மகள் உண்டு. அவள் பிறவியிலேயே ஊமை. அவளையும் இங்கு அழைத்து வந்திருக்கின்றேன். அவளைப் பேச வைத்தால், நானும், எனது மதத் துறவிகளும் சைவ சமயம் சேருகின்றோம்' என்று கூறினான்.
மாணிக்கவாசகர் நட்டமாடும் நம்பிரானின் மேனியில் அமைந்திருக்கும், ஐந்தெழுத்து மந்திரத்தை, மனம் முழுக்க நிரப்பிக்கொண்டு, மன்னவனின் மகளுக்கு, ஐந்தெழுத்து மந்திரத்தின் ஒவ்வொரு எழுத்தையும் கற்றுக்கொடுத்தார்.
முதலில் 'ந' எனும் எழுத்தை மட்டும் சொல்லச் சொல்லிப் பழக்கப்படுத்தினார். அதை இளவரசி சொன்ன பிறகு, 'ம' என்கிற எழுத்தை மட்டும் பழக்கப்படுத்தி, தொடர்ந்து சி, வ, ய எனும் எழுத்துக்களைச் சொல்லக் கற்றுக்கொடுத்தார். இந்த ஐந்து எழுத்துக்களும் நன்கு சொல்ல பழகிய இளவரசியை, 'நமசிவய' என்று சொல்லுமாறு பணிக்க, அவளும் 'நமசிவாய' என்று சொல்லி முடித்ததும், இறையருளாலும், திருமந்திரமாகிய திருவைந்தெழுத்தை, பக்தியுடன் கூறியதாலும் - வாக்கு வன்மை பெற்று - பேசும் திறனைப் பெற்றாள்.
புத்த மதத் துறவிகள், சைவத்தை நிந்தித்து முன்னர் கேட்ட கேள்விகளுக்கான, தமது பதிலாக மாணிக்கவாசகர் - முன்னர் ஊமையாக இருந்தவளும், தற்போது தெய்வத் திருவருளால் பேசும் திறன் பெற்ற இளவரசியைக் கொண்டே - பதிலிறுத்தார். அது 'திருச்சாழல்' எனப்படும் அருமையான திருப்பதிகம் ஆகும்.
இதைக் கண்ட மன்னவன், மனம் மகிழ்ந்து, திரை விலக்கி, மாணிக்கவாசகரைப் பணிந்து, தானும், தன் மதத்தைச் சார்ந்த துறவிகள் அனைவரோடும் சைவ சமயம் சேர்ந்தான்.
மாணிக்கவாசகர், மறுபடி இறைவனை நினைந்து, துறவிகள் அனைவருக்கும் வாக்கு வன்மை கொடுத்தார்.
(சிதம்பரத்தில், மாணிக்கவாசகர் சொல்ல சொல்ல நடராஜ மூர்த்தியே - ஓர் அந்தணர் வேடம் கொண்டு - கைப்பட எழுதிய, திருவாசக ஓலைச் சுவடிகள், இன்றும் பாண்டிச்சேரி, அம்பலத்தாடி மடத்தில், திருமூலிகைக் காப்பிடப்பட்டு, பாதுகாக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றது.)
திருவாசகத்தின் பெருமையை ஆன்றோர்கள் அருமையாகக் கூறுவார்கள்.
இறைவன் இறைவனுக்குக் கூறியது ஓம் எனும் பிரணவம் (முருகப்பெருமான் பரமசிவனுக்குக் கூறியது)
இறைவன் மனிதனுக்குக் கூறியது பகவத் கீதை (ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் கூறியது)
மனிதன் மனிதனுக்குக் கூறியது திருக்குறள் (திருவள்ளுவர் - மக்களுக்கு நல்வாழ்வு பெற நல்வழி காட்டியது)
மனிதன் இறைவனுக்குக் கூறியது திருவாசகம் (மாணிக்கவாசகர் - ஆடல்வல்லப் பெருமானாகிய தில்லையம்பலவாணருக்கு கூறி எழுதச் சொன்னது)
நடராஜருடன் இரண்டறக் கலந்த மாணிக்கவாசகரைப் போற்றும் வண்ணம், சிதம்பரத்தின் மஹோத்ஸவமாகிய மார்கழி ஆருத்ரா தரிசனத்தின் பத்து தினங்களிலும், மாலை வேளையில், நடராஜப் பெருமானுக்கு நேரெதிரே மாணிக்கவாசகரை நிறுத்தி, பக்தன் பதிகம் என்ற பெயரில், மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பதிகங்களைப் பாடி 21 தீபாராதனைகள் காட்டப்பெறுவது கண்களைப் பனித்து, நெஞ்சத்தை நெகிழவைக்கும் நிகழ்ச்சி.
சிதம்பரத்தின் பொன்னம்பலத்தில், 21600 தங்க ஓடுகள் பதிக்கப்பட்டிருக்கின்றன. இது நாம் ஒரு நாளில் நாம் உள்ளிழுத்து விடும் மூச்சுக்காற்றின் சராசரி எண்ணிக்கை. அந்தத் 21600 தங்க ஓடுகளிலும் நமசிவாய எனும் ஐந்தெழுத்துப் பொறிக்கப்பட்டிருக்கின்றது.
சைவத்தின் உயிர்மூச்சாகிய நமசிவாய எனும் பஞ்சாக்ஷரத்தை மனமார சொல்லிக்கொண்டு, நடராஜ மூர்த்தியை தரிசித்தால், கல்வியில் சிறப்பும், நாவன்மையும், வழக்குகளில் வெற்றியும், கலைகளில் புகழும் அடையமுடியும்.
கற்றுணை பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே என்று உரைத்த அப்பர் சுவாமிகளுக்கும், ஐந்தெழுத்துக்கும் உள்ள தொடர்பையும்,
நமசிவாயத் திருப்பதிகம் பற்றியும்,
நாயன்மார்களில் ஐந்தெழுத்தை மட்டுமே ஓதி முக்தி பெற்றவரையும்,
திருமூலர் தனது திருமந்திரத்தில் கூறியுள்ள வாசியோகம் மற்றும் பஞ்சாக்கரத்தைப் பற்றியும்,
சிறப்பு வாய்ந்த பஞ்சாக்ஷர யந்திரம் பற்றியும்,
ஸூக்ஷ்ம பஞ்சாக்ஷரம் பற்றியும்,
விபரமாகப் பிறிதொரு சமயம் காண்போம்.

நல்லன யாவையும் நல்கும் நமசிவாய என்று நாளும் கூறி நற்கதி பெறுவோம் !

கருத்துகள் இல்லை: