Pages

திங்கள், செப்டம்பர் 24, 2012

காசி யாத்திரை

காசி யாத்திரை

அதிசயச் சித்தருடன் ஆன்மீகப் பயணம்
கட்டுரையாளர் - என் தந்தை அமரர் ப்ருஹ்மஸ்ரீ ஸ்ரீவித்யா உபாஸகர் நி. தண்டபாணி ஸ்வாமி தீக்ஷிதர். கடந்த 02.01.2009ல் எங்கள் அனைவரையும் தாங்கவொண்ணா துயரில் ஆழ்த்திவிட்டு, நடராஜப் பெருமானின் தூக்கிய திருவடியாகிய குஞ்சிதபாதத்தை அடைந்தார். அவரின் முதலாமாண்டு (02.01.2010) நினைவு நாளில் அவர் எழுதிய மோட்சம் தரும் காசி ஸ்தலத்தைப் பற்றிய கட்டுரையை மறுபடியும் வெளிக்கொணர்வதில் ஆத்ம திருப்தி அடைகின்றோம்.
அவரைப் பற்றி சில வரிகள். எனக்கு தந்தையாக இருந்ததோடு, உற்ற தோழராகவும், மதிமிகு குருவாகவும் இருந்தவர்.
சிந்தனையாளர். மந்திரம், சாஸ்திரம், ஓவியம், சிற்பம், ஜோதிடம், வாஸ்து சாஸ்திரம், கைரேக சாஸ்திரம், தெய்வீக யந்திரம் முதலான கலைகளில் நுட்பமான அறிவு பெற்றவர். பல மாநிலங்களில், பல ஆலயங்களுக்கு கும்பாபிஷேகத்தினை மிகச் சிறப்பாக நடத்தியவர். நூற்றுக்கணக்கானோருக்கு ஆன்மீக குருவாக இருந்து வாழ்வை வளப்படுத்தியவர். அவரால் பயனடைந்தோர் அனேகம். விஞ்ஞானம் ஆன்மீகத்தை பலருக்கும் எடுத்துச் செல்லும் கருவியாக நினைந்து, அதிலும் கணிணியை ஆன்மீகத்திற்கு தகுந்த முறையில் மாற்ற விருப்பமாக இருந்தவர். பழகுவதற்கு எளிமையானவர், இனிமையானவர். எப்பொழுதும் அவரைச் சுற்றி ஒரு பெரும் கூட்டமே இருக்கும். அதில் பலகலைகளில் தேர்ந்தவர்கள் இருப்பார்கள். சிதம்பரத்தில் அவர் அமர்ந்த இடத்தை இன்னமும் அவர் அங்கு அமர்ந்து இருப்பதாகவே அவரின் நண்பர்கள் கருதுகின்றார்கள். அவர் கடுமையான விரதமிருந்து செய்த ஜபங்களே அவர் வாழ்வில் முன்னேற்றம் தந்ததாக அவரின் நண்பர்கள் பலர் சொல்லக் கேட்டுருக்கின்றேன். விருந்தோம்பலில் சிறந்தவர். சிதம்பரம் ஆலயத்தின் முன்னேற்றம் அவரின் வாழ்க்கைக் குறிக்கோளாக இருந்தது. சிறந்த பேச்சாளர், எழுத்தாளர். புதுமையான சிந்தனைகளையே எப்பொழுதும் மேற்கொள்வார். எந்த இடத்தில் அவர் இருந்தாலும் அந்த இடத்தில் தனித்தன்மையான புதுமையான விஷயங்களைச் செய்து புகழ் அடைந்தவர். ஆன்மீகத் தகவல் களஞ்சியமாகவே வாழ்ந்தார். தொட்ட இடம் பேசும் என்பார்களே அது போல ஆன்மீகத்தில் எந்த பகுதியைப் பற்றி கேட்டாலும், கொட்டும் அருவி போல விபரங்களை அள்ளித்தருபவர். தனக்கு வந்த புகழ் மாலைகளை எனக்கு அணிவித்து அழகு பார்த்தவர். அவரைப் பற்றி சொல்ல இன்னும் பல விஷயங்கள் உள்ளன. இந்தப் பதிவுகளில் உள்ள அனைத்தும் அவரின் ஆலோசனைகளின் படியே எழுதிக்கொண்டிருக்கின்றேன்.
பயணங்கள் நிறைய செய்தவர். அதிலும் காசியைப் பற்றி அவர் விவரிக்கும்போது, நாமே காசியில் நின்று கொண்டிருப்பது போன்ற தோற்றம் ஏற்படும்.
அதை கட்டுரையாக எழுதி, எழுத்துலக ஜாம்பவான் அமரர் திரு. சாவி அவர்களிடமிருந்து பரிசு பெற்றார்.
இக்கட்டுரை "அதிசயச் சித்தருடன் வாரணாசி யாத்திரை" எனும் தலைப்பில் 1.1.1998 "சாவி" வார இதழில் வெளிவந்தது.
அவரின் நினைவில் என்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் அவர்களின் சீடர்கள் சார்பிலும் இக்கட்டுரை வெளியிடப்படுகின்றது.
இந்த கட்டுரை சுமார் முப்பத்து ஐந்து வருடங்களுக்கு முன் அவரின் காசி சென்று வந்த அனுபவம் பற்றியது. இப்பொழுது போல அப்பொழுது வசதிகள் எதுவும் கிடையாது. குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி, காசி சென்று வந்தார். அது முதல்தான் தன் வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டதாகச் சொல்வார்.
இனி 1.1.1998ல் அவர் எழுதிய காசி அனுபவ கட்டுரை....

சிதம்பரத்தில் எனது தீவிர சிவ ஸம்மேளன ஹோம பூஜையை தொடர்ந்து 96 நாட்கள் செய்து, நிறைவடையும் காலத்தில் கடைசி சில தினங்கள். மிகுந்த வசீகரத் தோற்றமுள்ள ஒரு சன்யாசி போல தோற்றம் கொண்ட ஒருவர், தாமே வலிய வந்து, என்னிடம் நட்பு கொண்டார். ஒரே வாரத்தில் உயிருக்குயிராகப் பழகி விட்டார். பல சித்து விளையாடல்களை அனாயாசமாகச் செய்தார். ஆனால் தன்னை சித்தர் என்றோ சன்யாசி என்றோ சொல்லிக்கொள்வதை விரும்பமாட்டார். பிறர் அப்படி அழைப்பதையும் விரும்பவுதில்லை. தான் ஒரு மனிதன் எனும் ஆத்மா மட்டுமே என்று அடிக்கடி சொல்லிக்கொள்வார். முழுமையாக அவரைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஒரு சமயம் சன்யாசியைப் போலவும், ஒரு சமயம் சாதாரண மனிதனாகவும் நடந்து கொள்வார். ஆனால், அவரிடம் ஒரு அசாத்தியமான அமானுஷ்யமான சக்தி உள்ளது என்பதை என்னால் மிக நன்றாக உணர முடிந்தது.
திடீரென்று ஒருநாள் "வாரணாசி சென்று வருவோம். உடனே கிளம்பு. செலவெல்லாம் என்னுடையதே" என்றார். தெய்வாதீனமான நல்வாய்ப்பாக எண்ணி நானும் உடனே கிளம்பிவிட்டேன். சிதம்பர ரகசியத்தை தரிசித்து விட்டு புறப்பட்டோம். என்னிடம் இருந்த சொற்ப பணத்தையும் வாங்கி ஆலயத் திருக்குளமான சிவகங்கையில் வீசிவிட்டார். எங்கள் இருவருக்குமே ஒரு செட் மாற்று உடை. ஒவ்வொரு ஜோல்னாப் பை.
சென்னையில் அதிசயம்:
சிதம்பரத்திலிருந்து சென்னைக்கு பஸ். சென்னை சென்று ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைந்ததுமே புதியவர் ஒருவர் ஸ்வாமிகளிடம் தாம் ராமேஸ்வரத்தில் சேகரித்த கடல் மணலைக் கொடுத்து, காசி கங்கைக் கரையில் சிவலிங்கம் பிடித்து பூஜித்து, கரைத்து விடுமாறு வேண்டிச் சென்று விட்டார்.
நாங்கள் காசிக்குச் செல்கிறோம் என்பது அவருக்கு எப்படியும் எவ்வகையிலும் தெரிந்திருக்க நியாயமில்லை. அவ்வதிசயம் கண்டு வாய் பிளந்து நின்றேன். சுவாமியோ வெறும் புன்சிரிப்பு மட்டும் நல்கினார்.
காசிக்குச் சென்றவுடனே அதிசயம்:சென்னையிலிருந்து ரயில் பயணம். அரைநாள் பயணம் செய்தவுடனே மொழி கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறது. மண்ணாலாகிய சிறு கலயங்களில்தான் டீ (சாயா). யூஸ் அண்ட் த்ரோ பாணி.
(இக்காலத்தில் பிளாஸ்டிக் கப் கூடாது என்பதற்கு நல்ல மாற்று) ஸ்வாமிகள் எச்சில் படாமல் தூக்கித்தான் குடிப்பார் வழி முழுதும் தாம் குடித்த டீ கலயங்கள் - சுமார் - அறுபதுக்கும் மேல் சேகரித்து எடுத்து வந்தார். காசியில் இறங்கியவுடன் கங்கா ஸ்னானம். கங்கைக் கரையில் பூஜைப் பொருட்கள் வாங்கி, மண்ணினால் சிவலிங்கம் பிடித்து 64 கலயங்களையும் வைத்து பூஜித்தார். என்னிடம் பூஜை கலயம் ஒன்றை அளித்தார். வணங்கிப் பெற்றுக் கொண்டேன்.
பக்கத்தில் இதனை கவனித்துக் கொண்டே குளித்து கரையேறிய ஒரு கூட்டத்தினர் திடீரென ஓடிவந்து, கலயங்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொருவர் எடுத்துக் கொண்டு ஸ்வாமிகளையும் வணங்கி, காணிக்கைகளையும் தரையில் போட்டுவிட்டுச் சென்று விட்டனர். சில நொடிகளில் கலயங்கள் காலி. காணிக்கையை சேகரித்து எண்ணினேன். ரூபாய் 1200க்கும் மேல் இருந்தது. (அப்பொழுது அது பெரிய தொகை). ஸ்வாமிகள் யாரிடமும் எந்தவகையிலும் காணிக்கையோ பணமோ வாங்கிக் கொள்ளமாட்டர். ராஜ சன்யாசி.
கங்கைக் கரை அதிசயம்:
மறுநாள் கங்கைக் கரையில் அதிகாலை எங்கள் ஈரவேட்டித் துண்டுகளை தரையில் நான்கு பக்கமும் கற்களை வைத்து, காயவைத்து விட்டு சுமார் மூன்றரை மணி நேரம் நிம்மதியாக தியானம் ஜபம் செய்துவிடு, கண் விழித்துப் பார்த்தால் வேட்டி துண்டுகள் முழுதும் காசுகளும் கரன்சி நோட்டுகளும் விழுந்திருந்தன. சேகரித்தேன். 700 ரூபாய்க்கும் மேல் இருந்தது. அதை அப்படியே அங்கு அமர்ந்திருந்த பிராமணர்களுக்கு தானமாக அளித்து விட்டார். அன்று முதல் அப்படி அங்கு அமர்ந்து தியானிப்பதில்லை. துணி காய வைப்பதுமில்லை.
கங்கை நீரோட்டத்தில் அதிசயம்:
மூன்றாம் நாள் ஸ்வாமிகள் கங்கை நதி ஓரத்தில் நீரோட்டம் அதிகமில்லாத அளவில் கம்மியாக நீர் உள்ள சுழல் நீரில் மிதந்தபடி சுழன்றுகொண்டே கண்மூடி மிதந்தபடி "ஹடயோகம்" எனும் "ஜல ஸ்தம்பனம்" செய்து கொண்டிருந்தார். கரையோரம் நானும் கூடவே பார்த்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தேன். திடீரென்று ஸ்வாமிகள் சுழலிலிருந்து விடுபட்டு அதிக அகலமான கங்கையின் நடுவுக்குச் சென்று விட்டார்.
அந்த இடம் ஹரிச்சந்திர மன்னன் மயானம் காத்த இடம். காசியின் கங்கைக் கரை மயான பூமி. திடீரென மயானம் காப்போர் சிலர் புரியாத பாஷையில் பேசிக்கொண்டே, ஒரு மர மிதவையில் ஒரு பெரிய கருங்கல் கயிறு ஆகிய பொருட்களை எடுத்துக் கொண்டு நீரில் குதித்து சாமியார் மிதந்து கொண்டிருந்த நடு ஆற்றுக்கு நீந்திச் சென்றனர். ஏதோ விபரீதம் என உணர்ந்த நான் செய்வதறியாது திகைத்து நின்றேன்.
இறைவனருளால் தமிழ் தெரிந்த ஒருவர் என் பதற்றத்துக்கு காரணம் கேட்க, நானும் கூற, அவர் "அவர்கள் வெட்டியான்கள். ஏதோ சன்னியாசியின் சடலம் கங்கையில் மிதந்து செல்வதாக நினைத்து விட்டனர். கங்கையில் அப்படி மிதக்கும் உயிரற்ற உடலை கல்லுடன் கட்டி, ஜல சமாதியில் ஆழ்த்தி விடுவார்கள். அதற்குத்தான் செல்கிறார்கள்" எனக்கூறினார்.
ஸ்வாமிகள் இதுபோல் நீரில் ஜலஸ்தம்பனம் செய்யும்போது தீவிர மௌனம் காப்பார். கண்ணும் திறக்க மாட்டார். இந்த விஷயத்தை நான் சொல்ல அவர் "எனக்கும் நீச்சல் தெரியாதே" எனக் கூற, அதே சமயம் இறைவனே தோன்றியது போல் ஒருவர் நீரில் குதித்து அந்த ஆசாமிகளிடம் நீந்திச் சென்று விஷயத்தைக் கூறி அனைவரும் ஸ்வாமிகளை கரைக்கு இழுத்து வந்து கிடத்தினர்.
சிறிது நேரம் சென்ற பிறகே கண் விழித்த ஸ்வாமிகள் நமட்டுச் சிரிப்புடன், பதற்றம் நீங்காமல் நிற்கும் என்னைப் பார்த்து "ஏன் பதறுகிறாய்! எல்லாம் இறைவன் சித்தம்!!" என்றார். அனைவரும் ஸ்வாமிகளை வணங்கிச் சென்றனர்.
காசியில் ஓடும் கங்கை நதியை 64 (படித்துறைகளாக) 'காட்' எனும் கட்டங்களாக பிரித்து பெயரிட்டுள்ளனர். ஒவ்வொரு 'காட்'டும் ஒவ்வொரு அதிசயம், பெருமை, மகிமை வாய்ந்தவை.
ஹனுமான் காட்டில் ஆஞ்சனேயர் ஆலயம் உள்ளது. கோயிலின் பின்னால் அனுமார் வால் போல ஒற்றையடிப்பாதை ஒன்று உள்ளது. இரு புறமும் அரிய மூலிகைச் செடி கொடிகள் உள்ளன. காசியிலுள்ள வைத்தியர்களின் மூலிகை சேகரிப்பு தோட்டம் இதுவே. ஹனுமான் காட் செல்லும் வழியில் கேட்பாரற்ற சிவலிங்கம் ஆலயம் இடிபாடுகளுடன் உள்ளது.
அந்த லிங்கத்தின் தலையில் தானாகவே ரேகைகளாக ஸ்ரீசக்கரம் அமைந்து அதிசயமாகக் காட்சியளித்தது.
(தற்போது அது பிரசித்தமாகி கும்பாபிஷேகம் ஆகியுள்ளது.)
அங்குள்ள பலருக்கு அதன் சிறப்பு தெரியவில்லை.
வரை கலை அதிசயம்:
அந்த ஸ்ரீசக்ர லிங்கத்தைப் பற்றி விளக்கிய ஸ்வாமிகள் அங்கு ஒரு அற்புதம் செய்து காட்டினார்.
அதாவது கட்டைகளை சேகரித்து தீ மூட்டி, அந்தத் தணலில், திடீரென்று வரவழைத்த அரையடி சதுர அளவுள்ள கனமான செப்புத்தகடு ஒன்றை வைத்து பழுக்கக் காய்ச்சினார். ஸ்கேல் போன்ற எந்தவித உபகரணமும் இல்லாமல் பக்கத்தில் கிடந்த ஒரு இரும்பு ஆணியினால் வரைவதற்கு மிகவும் கஷ்டமான, ஸ்ரீசக்ரத்தை மிக துல்லியமாக சரியான அளவுகளுடன் அரை மணி நேரத்துக்குள் கீறினார். கங்கை நீரில் அபிஷேக ஆராதனைகள் செய்தார். என்னிடம் அளித்து பத்திரமாக வைத்துக் கொள்ளும்படி கூறினார்.
அற்புத தரிசனம்:
தீபாவளி அன்று காசியில் லட்டுத் தேர் அலங்காரம் மிகவும் பிரசித்தம். முழுக்க முழுக்க லட்டுகளாலேயே தேர் வடிவமைத்து வலம் வரச் செய்வார்கள். ஆனந்தமாக தரிசனம் செய்தோம். கோயில் வாசலில் பூஜைப் பொருளாக விற்கும் முள் நிறைந்த ஊமத்தங்காய்களை பக்தர்கள் வாங்கி, விஸ்வநாதர் லிங்கத்தின் மேல் போட்டு தாமே பூஜித்து லிங்கத்தை கட்டித் தழுவிக்கொள்கிறார்கள். எங்கும் காண முடியாத மாறுபட்ட வழிபாட்டு முறை.
பகுத்தறிவு பக்தி:சில பிராமணர்கள் (கல்கத்தாவில் இருந்து வந்தவர்கள் என்று சுவாமிகள் சொன்னார்) கங்கைக் கரையில் தமது சிவலிங்கங்கள், சாளக்ராமங்களை கொண்டு வந்து பூஜித்து விட்டுச் செல்லும்போது, அங்கு விற்கும் மீன்களை வாங்கி ஒரு கையிலும், மறு கையில் பூஜைப்பெட்டியுடனும் வீடு திரும்புகின்றனர். "ஆசாரம் பூசைப்பெட்டி. அதன் மேல் கருவாட்டுப்பெட்டி' எனும் பழமொழியின் அர்த்தம் இதுதான். இது இந்த தேச சாரம்" என்று கூறிச் சிரித்தார் ஸ்வாமிகள்.
நாத்திகம் இல்லாத ஊர்:
காசியில் - பொதுவாக வட இந்தியாவிலேயே - நாத்திகம் கிடையாது. தாடி, திருநீறு, நாமம் பூண்டவர்களைக் கண்டால் வீதிகளில் செல்லும் போதே வணங்கிச் செல்கின்றனர்.
மந்திர அதிசயம்:கங்கைக் கரையில் பூஜை தியானம் செய்து முடிவில் அனைவரும் தமக்குத் தெரிந்த மந்திரங்களைக் கூறி விட்டு கடைசியாக "பம் பம், பம் பம்" என்று பலமுறை சொல்லி விட்டு உதடுகளைக் குவித்து உடுக்கை ஒலிப்பது போல் வேடிக்கையான ஒலி எழுப்பி நமஸ்கரிக்கின்றனர். அது ஸாம வேத கானமாம்.
தீபாவளியில் திடீர் மறைவு:தீபாவளி அன்று மேலும் ஒரு அதிசயம் செய்தார் ஸ்வாமிகள். என்னை விட்டு திடீரென கூட்டத்தில் பிரிந்து மறைந்து விட்டார். என்னிடம் காசு பணம் எதுவும் இல்லை. பணம் அனைத்தும் ஸ்வாமிகளிடமே இருந்தது. அவரே ராஜ உபசாரம் செய்து செலவு செய்வார். அந்த மாலை முதல் கங்கைக் கரையிலேயே ஸ்வாமிகளைப் பிரிந்த இடத்திலேயே செய்வதறியாது மனம் சோர்ந்து அமர்ந்திருந்தேன். தூங்கி விட்டேன். காலை எட்டு மணிக்கு ஸ்வாமிகள் தட்டி எழுப்பி, "காசிக்கு வந்தவர்கள் தமக்கு மிகவும் விருப்பமான ஒன்றை விட்டு விட வேண்டுமாம். எனக்கு விருப்பமானவன் நீ ஒருவனே. ஆகவே உன்னை விட்டுப் பிரிந்து காசி எல்லையைக் கடந்து ஓரிரவு தங்கினேன். பிறகு உன்னிடமே வந்து விட்டென். ஏதும் வருந்தாதே. சாங்கியம் சாஸ்திரத்துக்கு கட்டுப்பட்டே இப்படிச் செய்தேன்" என்றார். நான் சொல்ல இயலாத பல உணர்ச்சிகளுக்கு உள்ளானேன்.
காசியில் தங்கிய சில நாட்களில் நான் அதிசயங்கள் அற்புதங்களைக் கண்டேன். அவற்றில் சில:
கருடனைக் காண முடியாத அதிசயம்:
ஸ்வாமிகள் வியாழன் தோறும் கருட தரிசனம் செய்பவர். காசி எல்லைக்குள் (வெண்கழுத்து கழுகு) கருடன் வட்டமிடாதாம். உண்மை. அந்த காரணத்துக்காகவும் காசி எல்லையைக் கடந்து சென்று கருட தரிசனம் செய்து விட்டு வந்தாராம்.
காக்கை இல்லாத ஊர்:அன்று அமாவாசை. சிரார்த்தம் செய்தார். சந்யாசிக்கு ஏது சிரார்த்த கர்மா என்றேன். அவர் என்னை ஏளனமாகப் பார்த்து "நான் சன்யாசி என்று சொன்னேனா, நான் ஒரு எளிமையான மனிதன் மட்டுமே" என்று கூறி கடமையே கண்ணாக செய்து கொண்டிருந்தார். என்னிடம் பிண்டம் மற்றும் தர்ப்பணப் பொருட்களை அளித்து காக்கையை அழைத்து உணவளிக்கச் சொன்னார். நான் நீண்ட நேரம் கா கா கா என கத்தியும் ஒரு காக்கை கூட வரவில்லை. காசியில் காக்கையும் கிடையாதாம். பிறகு சொல்லி சிரிக்கிறார்.
மலர்களுண்டு; மணமில்லை: தென்னிந்தியாவில் மணம் வீசும் பூக்கள் அத்தனையும் காசியில் உண்டு. அளவிலும் மிகப் பெரியவையாக பூக்கின்றன. னால் ஒரு மலர் கூட வாசனை வீசுவதில்லை.
முடி அமிழும் அதிசயம் :திரிவேணி சங்கமத்தில் சுமங்கலிகளுக்கு கூந்தலைப் பின்னி, பின்னலின் நுனி முடிகளை வெட்டி, எல்லோரது முடிகளையும் கங்கை நீரிலேயே போடுகின்றனர். சுமங்கலிகளின் முடி மட்டும் உடனே அமிழ்ந்து விடுகிறது. மற்றவரின் முடிகள் மிதந்து செல்கின்றன.
வில்வ இலை மட்டும் அமிழும் அற்புதம்:கேதார் காட் எனும் கங்கை நதிப் பகுதியில் ஸ்வாமிகள் பல வகை மலர்களினாலும் வில்வம் துளசி இலைகளைக் கொண்டும் பூஜை செய்து அந்த பூக்கள் இலைகள் அனைத்தையும் கங்கை நீரிலேயே போட்டு விட்டார். அவைகளில் முக்கிளை எனும் மூன்று இலைகள் கொண்ட வில்வம் மட்டும் அதிரடியாக நீரினுள் அமிழ்ந்து விடுகிறது. மற்ற அனைத்தும் மிதந்து சென்றன.
ஊமைப் பல்லிகள்:
காசியில் எங்கும் பெரிய அளவில் பல்லிகள் காணப்படுகின்றன. னால் ஒன்று கூட ஓசை எழுப்புவதில்லை.
குரும்பு செய்யாத குரங்குகள்
காசி துர்கை கோயிலில் ஆயிரக்கணக்கில் குரங்குகள் உள்ளன. ஆனால் ஒன்று கூட மற்ற ஊர்களைப் போல குரும்பு, அட்டகாசம், விஷமம் செய்வதில்லை. அமைதியான காந்தீயக் குரங்குகள்.
பால் வியாபார நேர்மை அதிசயம்:தஞ்சை ஆயிரம் சந்து. காசி பதினாயிரம் சந்துகள் கொண்டது என்பது பயண மொழி. மாடுகளின் பால் கறவை அதிகம். கோதுமை வைக்கோலே உணவு. மாடுகள் மிகப் பெரிய உடல்வாகு கொண்டவை. தரையில் தவழும் அளவு மடி. தெருவின் நடுவில் ஒரு மாடு நின்று விட்டால் போக்குவரத்து தடைபட்டு விடுகிறது. பால் வியாபாரம் மிகவும் நேர்மையாக நடக்கிறது. நீர் கலந்த பால் என்றால் பால் வியாபாரியே "அச்சா தூத் நஹி ஸாப்" (நல்ல பால் இல்லை ஐயா) என்று கூறி விடுகிறார்.
கடுங்குளிர்:
வேகும் வெயில்: வெயிலும் குளிரும் மிக மிக அதிகம். வெய்யில் நாட்களில் காலையில் பெரிய வெங்காயங்களை மடியில் கட்டிக் கொண்டு சென்று, மாலையில் வீடு திரும்பியவுடன் எடுத்து உதிர்த்தால் சிறகாகக் காய்ந்து உதிர்ந்து விடும்.
குளிர் நாட்களில் மிக வேகமான நீரோட்டம் உடைய கங்கை நதியில் காலை நனைத்தவுடன் கால் விரைத்து விடுகிறது. ஆனால் அந்தக் குளிரிலும் அனைவரும் மற்றும் பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகளைக் கூட ஒரு நொடிக்குள் கங்கை நீரில் அமிழ்த்தி எடுத்து குளிப்பாட்டி விடுகின்றனர். பூஜைக்குரிய பொருட்களாகிய புலித்தோல், மான் தோல், ஸ்படிகம், ருத்திராக்ஷம், மணிமாலைகள், லிங்கங்கள், பட்டு, செம்பு, வெள்ளி பாத்திரங்கள் போன்றவை கிடைக்கின்றன.
காசி வெள்ளி என்றே பெயருடைய மட்ட வெள்ளி பூஜை பாத்திரங்கள் அனைத்தும் மிக மிக விலை குறைவு. ஏமாற்று வியாபாரமும் உண்டு. எச்சரிக்கையுடன் வாங்க வேண்டும்.
தமிழுக்கு அந்தளவுக்கு மதிப்பில்லை:பொதுவாக வட இந்தியாவில் - குறிப்பாக காசியில் - தமிழுக்கும் தமிழனுக்கும் அந்தளவுக்கு மதிப்பில்லை. தமிழர்போல் தெரிபவர்களிடம் விசாரித்தால் கூட தெரியாதவர் போல் நடித்து ஒதுங்கி விடுகின்றனர். ஓரிரு வார்த்தை ஹிந்தியில் பேசி விசாரித்தாலே ராஜ உபசாரத்துடன் வழி காட்டி உதவுகின்றனர். அனேகருக்கு ஆங்கிலம் தெரியாது. மொழி பிரசினை அதிகம். தமிழ்நாடு என்று தெரிந்தால் "மெட்ராஸ் வாலா" என்று கூறி ஏதோ தாதாவைப் பார்த்ததுபோல் பயந்து ஒதுங்கி விடுகின்றனர். தமிழர்களுக்கு ஏதேனும் சிறிதளவாவது உதவிகள் கிடைக்கிறது என்றால் அது திருப்பனந்தாள் காசி மடத்தினராலும், நாட்டுக்கோட்டை செட்டியார்களின் தர்ம சத்திரங்கள் மூலம் மட்டும்தான்.
இலவச உணவு, உடை, உறைவிடம் அதிசயம்:பிர்லா அறக்கட்டளையினரும், காளி கம்பளி வாலா எனும் தர்ம பரிபாலகர்களும், காசியில் வசிக்கும் ஧சேட்டுகளும் யாத்திரீகர்களை சரியாக அடையாளம் கண்டு, தாமே சமைத்துக் கொள்வதானால் ஸ்டவ் மற்றும் உணவு சமைக்கத் தேவையான பொருட்களும், தங்குமிடமும் மூன்று நாட்களுக்கு அளிக்கின்றனர். பணம் கொடுத்தாலும் பலர் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். குளிர் காலத்தில் தெருக்களில் நடமாடும் பயணிகளைத் தேடி வந்து நூற்றுக்கணக்கான ரூபாய் விலையுள்ள கம்பளி உடைகளை வலுக்கட்டாயமாக தர்மமாக அளித்துச் சென்று விடுகிறார்கள்.
வாரணாசி எனும் காசியில் தினசரி வாடிக்கையாக வழக்கமாக உள்ள இவைபோன்ற மேலும் பல அதிசய அற்புதங்களைக் கண்டு உணர்ந்து அனுபவித்துவிட்டு, ஸ்வாமிகளும் நானும் கிளம்பி ரயிலேறி சென்னை வந்தடைந்தோம்.
சித்தரைப் பிரிந்த அதிர்ச்சி:
சென்னை ரயில்வே ஸ்டேஷனில் ஸ்வாமிகள் திடீரென்று காணாமல் போய்விட்டார். திருநீறு பூசிய ஒருவர் ஒரு சீட்டையும் ஆயிரம் ரூபாய் பணத்தையும் என்னிடம் கொடுத்து, சாமியார் ஒருவர் கொடுக்கச் சொன்னதாக சொல்லி அளித்துவிட்டுச் சென்றுவிட்டார்.
அந்தச் சீட்டில்- "அன்பரே! சிறந்த சிவபக்தர் ஒருவரை காசிக்கு எனது செலவில் அழைத்துச் சென்று மீண்டும் அவர் ஊருக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்பது எனது நீண்ட கால வைராக்கியத்துடன் தேடியதில் நீர் நண்பரானீர். எனது சுய நலனுக்காக தங்களை உபயோகித்துக் கொண்டதாக தாங்கள் நினைத்தால் என்னை வெறுத்து, மறந்து, ஒதுக்கி விடாதீர்கள்.
தாங்கள் இறைவனருளால் பல ஆன்மீக சாதனைகள் செய்யப் போகிறீர்கள். அவை அனைத்திலும் அடியேனையும் ஒரு ஓரத்தில் நினைவில் கொள்ளுங்கள். நான் இப்போதே திருக்கைலாயம் சென்று தவம் செய்ய புறப்பட்டு விட்டேன். எனது மனமார்ந்த ஆசிகள் உங்களை எப்போதும் காத்து நிற்கும். ஆயுளும் ஆண்டவனின் அருளும் கூடினால் மீண்டும் சந்திப்போம். அனைத்துக்கும் நன்றி." என எழுதியிருந்தது. பிளாட்பாரத்திலேயே அதிர்ச்சியுடன் பலவகை உணர்வுகளால் பாதிக்கப்பட்டு நீண்டநேரம் கண்ணில் நீர் வர அமர்ந்திருந்தேன்.

கருத்துகள் இல்லை: