எறும்பு குழுவாக வாழும் அறுகால்கள் கொண்ட ஒரு பூச்சியினமாகும். இவை வியப்பூட்டும் வகையில் குழு அல்லது குமுக ஒழுக்கம் (சமூக ஒழுக்கம்) கொண்ட வாழ்வைக் கொண்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட குமுகத்தில் (சமூகத்தில்) அல்லது குழுவில் உள்ள எறும்புகள் தமக்கிடையே செய்திகளைப் பரிமாறிக் கொள்ள வேதிப்பொருள்களைப் பயன்படுத்துகின்றன (chemical communication). இது நுட்பமானதும் மிகவும் சிக்கலானதும், இலகுவில் புரிந்து கொள்ளப்படாததாகவும் இருக்கிறது.
உலகின் எல்லாப் பகுதிகளிலும் எறும்புகள் காணப்பட்டாலும், இவற்றில் பெரும்பாலானவை வெப்ப வலயங்களிலேயே வாழ்கின்றன. பல்வேறுபட்ட தரவுகளின்படி, இத்தரவுகள் தங்களுக்குள் சிறிதளவு மாறுபடினும், எறும்பிலுள்ள இனங்களின் (species) எண்ணிக்கை, 2009 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, உயர் எல்லையாக, கிட்டத்தட்ட 22,000 இனங்கள் இருப்பதாக அறியப்படுகிறது. இவ்வாறு மிகக்கூடிய எண்ணிக்கையில் இனங்களை உள்ளடக்கி இருப்பதனால், எறும்புகள் உலகின் விரிவாக உயிர்வாழ்வதில் வெற்றி நாட்டிய உயிரினமாகவும் கருதப்படுகிறது. எறும்புகளின் மிகவும் ஒழுங்காக கட்டமைக்கப்பட்டிருக்கும் குமுக வாழ்வு, தமது வாழ்விடத்தை தமக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் இயல்பு, தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ளும் திறன் போன்றவையே எறும்புகளின் வெற்றிக்கான காரணங்களாக கருதப்படுகின்றன. பொதுவாக எறும்புகளைக் காண முடியாத இடம் தென் பனிமுனைப் பகுதியாகும். எறும்புகள் ஏறத்தாழ 110 முதல் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்தான் தனி வகையான உயிரினமாக உருப்பெற்றன எனக் கருதுகின்றார்கள். நிலவுலகில் பூக்கும் நிலைத்திணை(தாவரம்) தோன்றிப் பரவிய பின்னரே (100-140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்) எறும்புகள் பல்வேறு உள்ளினங்களாக வளர்ச்சி பெற்றன.எறும்புகள் உயிரியல் வகைப்பாட்டில் குளவி, (wasps), தேனீ (bees) போன்ற பூச்சிகளையும் உள்ளடக்கிய உறையுடைய இறகிகள் (Hymenoptera) என்ற உயிரினவரிசையில் தொகுக்கப்பட்டுள்ளன. இவ்வரிசையில் இருக்கும் ஏனைய உயிரினங்களிலிருந்து எறும்புகள் தமது தனித்தன்மையான உருவவியல் அமைப்புக்களாக வளைந்த உணர்விழை அல்லது உணர்உறுப்பு/உணர்கொம்பு, மற்றும் கணுப் போன்ற மிக ஒடுங்கிய இடுப்பு (node-like slender waist) என்பவற்றைக் கொண்டிருப்பதால் வேறுபட்டு, ஃவோர்மிசிடீ (Formicidae) என்னும் குடும்பத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
ஒர் எறும்புக் குமுகத்தில் அல்லது சமூகத்தில் உள்ள எறும்புகளின் எண்ணிக்கை மிகவும் வேறுபடக் கூடியது. சில குழுக்கள், மிகக் குறைவான எண்ணிக்கையில் தனியன்களை கொண்டிருக்கும் அதேவேளை, சில குழுக்கள் பல மில்லியன் எண்ணிக்கையிலான தனியன்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு குழுவிலும் பொதுவாக ஒன்று அல்லது ஒரு சில இனம்பெருக்கும் திறன் கொண்ட அரசி (queen) என அழைக்கப்படும் பெண் தனியன்களும், இனம்பெருக்கும் திறன் கொண்ட சில 'சோம்பேறிகள்' (drones) என அழைக்கப்படும் ஆண் தனியன்களும், இனம்பெருக்கும் திறனற்ற பெரும் எண்ணிக்கையிலான 'வேலையாட்கள்' (workers), 'போராளிகள்' (soldiers) ஆகத் தொழிற்படும் பெண் தனியன்களும் காணப்படும். இவற்றில் வேலையாட்களும், போராளிகளுமான இனம்பெருக்கும் திறனற்ற பெண் எறும்புகளே எந்நேரமும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பனவாகும். அரசியும், சோம்பேறிகளும் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு சந்ததியைப் பெருக்குவதில் மட்டும் பங்கெடுக்கும்.
ஏனைய பூச்சிகளைப் போலவே எறும்புகளும், உடலுக்கு வெளியான எலும்புக்கூட்டையும் (external skeleton), மூன்று சோடி கால்களையும், துண்டங்களாலான உடலையும் (segmented body), தலைப் பகுதியில் எண்ணற்ற நுண்ணிய வில்லைகளால் ஆக்கப்பட்ட இரு கூட்டுக் கண்களையும் (compound eyes), தலையின் முன்பகுதியில் இரு உணர்விழை அல்லது உணருறுப்பு / உணர்கொம்புகளையும் (antennae) கொண்டிருக்கும். வளைந்த உணர்கொம்பைக் கொண்டிருப்பதாலும், இவற்றின் இரண்டாவது வயிற்றுத் துண்டமானது மிகவும் ஒடுங்கி, கணுப் போன்ற இடுப்புப் பகுதியைக் கொண்டிருப்பதாலும் இவை ஏனைய பூச்சிகளிலிருந்து தனித்து பிரித்தறியக் கூடியவாக உள்ளன. சில எறும்பினங்களில் இரண்டாவது, மூன்றாவது வயிற்றுத் துண்டங்கள் இணைந்தே இந்த இடுப்புப் பகுதியை உருவாக்கும்.கூட்டுக்கண்கள் விரைவான அசைவுகளை இலகுவாக இனம்காண உதவினாலும், பார்வையின் நுணுக்கம் குறைவாகவே இருக்கும். அத்துடன் இவை ஒளியின் அடர்த்தியையும், ஒளியலைகளின் முனைவாக்கத்தையும் (polarization) அறியவல்ல, மூன்று தனிக் கண்களையும் தலையின் முன்புறத்தில் கொண்டிருக்கும். முதுகெலும்பி விலங்குகளுடன் ஒப்பிடும்போது இவை மந்தமான, அல்லது இடைத்தரமான பார்வையையே கொண்டிருக்கும். இவற்றில் சில முற்றாக குருடானவையாகவும் இருக்கின்றன. அதே வேளை, அவுஸ்திரேலியாவில் இருக்கும் புல்டாகு (Bulldog) என்றழைக்கப்படும் எறும்பு போன்ற, அதிகரித்த பார்வையைக் கொண்ட சில வகை எறும்புகளும் உள்ளன.
தலையின் முன்பகுதியில் இருக்கும் வளைந்த உணர்விழைகள் அல்லது உணர்கொம்புகள் வேதிப் பொருட்கள், காற்று மின்சாரம், மற்றும் அதிர்வுகளை அறிந்துணரக் கூடிய உறுப்பாகும். இவை மேலும் தொடுகை (தொடு உணர்வு) மூலம் சைகைகளை வழங்கவும், பெற்றுக் கொள்ளவும் கூடிய உறுப்பாகவும் உள்ளது. தலையின் முன் பகுதியில் மிகவும் வலுவான 'வாயுறுப்பு' எனப்படும் தாடையைக் கொண்டிருக்கிறது. இந்த வாயுறுப்பானது, உணவை காவிச் (பற்றிச்) செல்லவும், பொருட்களை கையாளவும், கூட்டை அமைக்கவும், தமது பாதுகாப்பிற்கும் பயன்படுகின்றது.சில இனங்களில் இப்பகுதியில் காணப்படும் பை போன்ற அமைப்பானது உணவை சேகரித்து வேறு எறும்புக்கோ, குடம்பிகளுக்கோ வழங்குவதற்காக பயன்படுகின்றது.ஆறு கால்களும் உடலின் நடுப்பகுதியில் இணைந்திருக்கும். கால்களின் நுனிப்பகுதியில் காணப்படும் நகம் போன்ற அமைப்பு மேற்பரப்புகளைப் பற்றிப் பிடிக்கவும், ஏறுவதற்கும் உதவும். பொதுவாக அரசியும், ஆண் எறும்புகளும் இரு சோடி மென்சவ்வாலான சிறகுகளைக் கொண்டிருக்கும். அரசிகள் தமது இனப்பெருக்க பறப்பின்போது தமது சிறகுகளை இழந்துவிடும். இனப்பெருக்க பறப்பு என்பது, இனப்பெருக்கத்திற்காக அரசி எறும்பானது, ஆண் எறும்புகளுடன் புணர்ச்சியை நிகழ்த்த மேலே பறப்பதாகும். புணர்ச்சியின் பின்னர் அவை சிறகுகளை இழந்து, கீழே இறங்கி புதிய ஒரு குழுவை அல்லது சமூகத்தை உருவாக்கத் தயாராகிவிடும். இது போன்ற இனப்பெருக்க பறப்பு தேனீக்களிலும் நடைபெறும். எனினும் சில எறும்பு இனக்களில் சிறகுகளற்ற அரசி, ஆண் எறும்புகளும் இருப்பதைக் காணலாம். எறும்புகளின் வயிற்றுத் துண்டங்களே, அவற்றின் முக்கியமான உள்ளுறுப்புக்களைக் கொண்டிருக்கும். இவ்வுள் உறுப்புக்கள் இனப்பெருக்க, மூச்சு, கழிவுத் தொகுதிகளைக் கொண்டன. பெண் எறும்புகளான வேலையாட்களில், முட்டை இடுவதற்கான உறுப்பானது, கொடுக்கு (sting) எனும் அமைப்பாகத் திரிபடைந்திருக்கும். இவ்வமைப்பானது அவற்றின் இரையை அடக்கி கையாள்வதற்கும், தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் பயன்படும்கறையான்கள் உருவவியலில் எறும்புகளை ஒத்திருப்பதால் அவற்றை வெள்ளை எறும்புகள் என்றும் அழைக்கின்றனர்.உயிரின வேறுபாடு: எறும்புகள் கறையான்களைப் போல காணப்பட்டாலும், உயிரின வகைப்பாட்டின் படி ஆராய்கின்ற போது எறும்புகள், கறையான்களிலிருந்து முற்றிலும் வேறுபடுகின்றன.கறையான்களில் போல் நேரான உணர்விழை/உணர்கொம்பைக் கொண்டிராமல், எறும்புகள் வளைந்த உணருறுப்பு/உணர்கொம்பைக் கொண்டிருக்கின்றன.கறையான்கள் எறும்புகளில் இருப்பது போன்ற மிக ஒடுங்கிய இடுப்பு போன்ற பகுதியைக் கொண்டிருப்பதில்லை.கறையான்கள் கிட்டத்தட்ட ஒரே நீளமுடைய இரு சோடி இறக்கைகளைக் கொண்டிருக்கின்றன. ஆனால் எறும்புகளில் இரண்டாவது சோடி இறக்கைகள், முதலாவது சோடி இறக்கைகளை விட நீளம் குறைந்தவையாக இருக்கின்றன.
பல்லுருத்தோற்றம் (Polymorphism):
எறும்பு இனங்களில் பல்லுருத்தோற்றம் அவதானிக்கப்படுகின்றது. சில எறும்பு இனங்களின் குழுக்களில், இனப்பெருக்கும் தன்மையற்ற பெண் எறும்புகளில், உருவம் சார்ந்து வேறுபாடு கொண்ட சாதிகள் காணப்படுகிறது. அவை சிறிய, இடைத்தரமான, பெரிய உருவம் கொண்டனவாக காணப்படும். சில இனங்களில் இடைத்தரமானவை இல்லாமல் சிறியவை, பெரியவை என்று மிகவும் இலகுவாக வேறுபாட்டைக் காட்டும் இரு வகைகள் மட்டுமே இருக்கும். நெசவாளர் எறும்பு இனம் (Weaver ants) இவ்வகையாக இரு முற்றாக வேறுபடுத்தக் கூடிய சிறிய, பெரிய உருவங்களை மட்டும் கொண்டிருக்கும்.வேறு சில இனங்களில் சிறிய, பெரிய உருவங்களுக்கு இடையில் தொடர்ச்சியாக வேறுபட்ட அளவில் உருவங்கள் இருக்கும். Pheidologeton diversus என்ற இன எறும்பில் சிறியவற்றிற்கும், பெரியவற்றுக்கும் இடையில் உலர்நிறை வேறுபாடு 500 மடங்கு அதிகமாக இருக்கும்.இவற்றில் பெரியவை அசாதாரணமாக பெரிய தலையையும், அதற்கேற்றாற்போல், பலமுள்ள வாயுறுப்பையும் கொண்டிருக்கும். இவை வேலையாட்களாகவே தொழிற்பட்டாலும், மேலதிகமாக போரிடும் வல்லமையைப் பெற்றிருப்பதால், 'போராளிகள்' என அழைக்கப்படும். வேலையாட்களின் வயதிற்கேற்ப அவற்றின் தொழிற்பாடு மாறுபடும். சில இனங்களில் இளம் வேலையாள் எறும்புகள், தொடர்ந்து உணவு கொடுக்கப்பட்டு, 'வாழும் உணவு சேமிப்புக் கலம்' போன்று உணவை சேமிக்கும். இப்படிப்பட்ட பலவுருத்தோற்றமானது ஊட்டச்சத்து, ஓமோன்கள் போன்ற சில சூழலியல் காரணிகளினால் ஏற்படும் என முன்னாளில் நம்பப்பட்டது. ஆனால் Acromyrmex sp. இல் இதற்குக் காரணம் பிறப்புரிமையியல் வேறுபாடே காரணம் எனக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இனப்பெருக்கமும், விருத்தியும்:
வழமைபோலவே, எறும்பின் முதல் நிலையாக முட்டையே கருதப்படும். இந்த முட்டையானது கருக்கட்டி விருத்தியடையின், இருமடிய (diploid) நிலையைப்பெற்று அடுத்த சந்ததியின் பெண் எறும்புகளை உருவாக்கும்.
கருக்கட்டாத முட்டைகள் விருத்தியடையும்போது, ஒருமடிய (haploid) நிலையில் ஆண் எறும்புகளாக உருவாகும். எல்லாப் பூச்சிகளையும்போல், முட்டைகள் தொடர்ந்த உருமாற்றத்தில் (metamorphosis), முதலில் குடம்பியாகி (larva), பின்னர் கூட்டுப்புழுவாகி (pupa), பின்னர் முழுவளர்ச்சியடைந்த எறும்பாக மாறும்.
குடம்பி நிலையில் அவை அசைவற்று இருக்குமாதலால், வேலையாட்கள் அவற்றிற்கு உணவூட்டி கவனித்துக் கொள்ளும். பொதுவாக வேலையாட்கள் தமது உடலினுள் சென்று சமிபாட்டுக்குப் பின்னர் திரவ நிலையை அடைந்த உணவை மீண்டும் எடுத்து குடம்பிகளுக்கு ஊட்டும். சிலநேரம் திண்ம உணவும் வேலையாட்களால் குடம்பிகளுக்கு வழங்கப்படும்.
கூட்டுப்புழுக்கள் துணையுறுப்புக்களை (appendages) இழந்து, உறங்கு நிலையில் இருக்கும்.
உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
எறும்பின் கூட்டுகண்
எறும்பின் இறக்கை
Lasius niger வாய்
நுனி வாய்
பின்பக்கம்
எறும்பின் புழை
எறும்பின் கால்
எறும்பின் கால்மூட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக