உங்களுக்கு என்று ஒரு இணைய வட்டம் இருக்கிறது.அந்த வட்டத்தில் உங்களுக்கு என்று நண்பர்கள் இருக்கின்றனர்.அந்த நண்பர்கள் நீங்கள் சொல்லப்போகும் விஷய்த்தை தெரிந்து கொள்ள ஆர்வத்தோடு இருக்கின்றனர்.உங்களுக்கும் கூட நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதற்கான விஷயங்கள் இருக்கின்றன.
இணைய வட்டம் என்னும் போது பேஸ்புக்,டிவிட்டர் சார்ந்த நண்பர்களை உள்ளடக்கிய உங்களுக்கான சமூக வலைப்பின்னல் என்று புரிந்து கொள்ளலாம்.
இப்போது இந்த வட்டத்தில் உங்களுக்கான விஷயங்களை பகிர்ந்து கொள்வதற்கான வண்ணமயமான இணைய பலகை ஒன்றை பார்க்கலாம். அந்த பலகையை உருவாக்கி கொள்வதும் சுவாரஸ்யமானது அதோடு மிகவும் சுலபமானது.
டேக்.காம் தளம் தான் இந்த இணைய பலகையை வழங்குகிறது.
இந்த இணைய பலகை கிட்டத்தட்ட இணைய அறிவிப்பு பலகை அல்லது தகவல் பலகை போன்றது தான்!
கடைகள்,ஓட்டலில் அறிவிப்பு பலகை வைக்கப்ப்டட்டிருக்கும் அல்லவா?அதே போல பள்ளிகள்,அலுவலகங்களில் அறிவிப்பு பலகை இருக்கும் அல்லவா?
இவை போன்ற ஒரு தகவல் பலகையை இணையத்தில் உருவாக்கி கொண்டு இணையத்தில் பகிர்ந்து கொள்ள உதவுவது தான் டேக்.காமின் சிறப்பு.
இந்த தளம் மூலம் அறிவிப்பு பலகையை உருவாக்கி கொள்ள கொஞ்சம் கூட கஷ்டப்பட வேண்டாம்.இவ்வளவு ஏன் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள கூட வேண்டாம்.
தளத்தின் நுழைந்ததுமே அதன் முகப்பு பக்கத்திலேயே உங்களுக்கான இணைய பலகை தோன்றும்.
அந்த பலகையில் தகவலுக்கான தலைப்பை டைப் செய்து தேவை என்றால் துணை தலைப்பையும் டைப் செய்து கொள்ள் வேண்டும்.அதன் பிறகு எந்த விஷயத்தை வெளியிட விருப்பமோ அதனை டைப் செய்ய வேண்டும்.இதற்குள் தகவலுக்கு இடையே வர வேண்டிய புகைப்படத்தையும் இணைத்து கொள்ளலாம்.
அவ்வளவு தான் உங்களுக்கான இணைய பலகை தயார்.நீங்கள் டைப் செய்யத்துவங்கியவுடனே உங்கள் பலகைக்கான இணைய முகவரி ஒன்றும் உருவாக்கப்பட்டு விடும் .அந்த முகவரியை உங்கள் இணைய வட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.
பேஸ்புக் அல்லது டிவிட்டர் நண்பர்கள் அந்த இணைப்பை கிளிக் செய்தால் உங்கள் இணைய அல்லது தகவல் பலகையை பார்ப்பார்கள்.
நண்பர்களுக்கு எதை சொல்ல வேண்டுமோ அல்லது எந்த தகவலை வெளியிட வேண்டுமோ அவற்றை எல்லாம் இப்படி இணைய பலகை வழியே பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த இணைய பலகையை எப்படி பயன்படுத்தி கொள்வது என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது.காரணம் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பதே விஷயம்.
உதாரணத்திற்கு திருமணத்திற்கான அழைப்பிதழை பகிர்ந்து கொள்ள விரும்பினால் திருமண அழைப்பு என்னும் தலைப்பில் ஒரு பலகையை உருவாக்கிவிட்டு அதில் திருமண பத்திரிகையையும் புகைப்படமாக இணைத்து நண்பர்களை அழைக்கலாம்.
இதே போல பிறந்த நாள் போன்ற நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழையும் வெளியிடலாம்.
ஏன்,ஏதேனும் பொருளை விற்க விரும்பினால் வரி விளம்பரமாக இந்த பலகையையே உருவாக்கி கொள்ளலாம்.
சுற்றுலா போய் வந்த அனுபவத்தை,இசை நிகழ்ச்சி பார்த்த அனுபவத்தை கூட இந்த பலகை வழியே பகிர்ந்து கொள்ளலாம்.
நண்பர்களுக்கு சுவாரஸ்யம் அளிக்ககூடும் என நினைக்கும் எந்த விஷயத்தையும் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கும் விவரங்களை இந்த பலகை வழியே தெரிவிக்கலாம்.
இந்த பலகையை உருவாக்கி கொள்வது தான் எளிதானது என்றாலும் அதன் உள்ளடக்கத்திலும் தோற்றத்திலும் கூடுதலாக அழகியல் அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு மாற்றங்களை செய்து கொள்ளலாம் என்பது இந்த தளம் தரும் இன்னொரு ஆச்சர்யம்.
ஆம் இணைய பலகையின் பின்னணி தோற்றம் உட்பட பல அம்சங்களை விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ளலாம்.வலைப்பதிவுக்கான தோற்றத்தை தேர்வு செய்து கொள்வது போல இணைய பலகைக்கான தோற்றத்தை தேர்வு செய்து கொள்வதோடு அதன் வண்ணங்களையும் கூட தீர்மானித்து மாற்றிக்கொள்ளலாம்.
பலகையின் தன்மைக்கேற்ப பின்னணி வடிவத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.விடியோ போன்றவற்றை இணைக்கும் வசதியும் இருக்கிறது.தகவல்கள் மற்றும் தலைப்புகளிம் எழுத்துரு வடிவத்தையும் இஷ்டம் போல மாற்றிக்கொள்ளலாம்.
கருத்துக்களை தெரிவிக்கும் வசதியும் இருக்கிறது.
இந்த பலகையை நண்பர்களோடு மட்டுமே பகிர்ந்து கொள்ளலாம்.விரும்பினால் இணையத்திலும் வெளியிடலாம்.
கிட்டத்தட்ட ஒரு வலைப்பதிவு போன்ற செறிவுடனேயே இந்த பலகையை வடிவமைத்து விடலாம்.
இப்படி பொதுவாக அனைவரோடும் பகிர்ந்து கொள்ளப்பட்ட பலகைகள் பல்வேறு தலைப்புகளின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.அவற்றை ஒரு பார்வை பார்த்தால் இந்த தளத்தை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என ஒரு புரிதல் கிடைக்கும்.
பேஸ்புக்கும் டிவிட்டரும் உங்களுக்கான இணைய வட்டமாக இருக்கும் போது அதில் பகிர்ந்து கொள்ளும் விஷயத்தை இணைய தகவல் பல்கை வடிவில் பகிர உதவும்.
இணையதள முகவரி;http://tackk.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக