Pages

வியாழன், ஜூலை 11, 2013

எங்கிருந்து வருகுது விண்கல்?

ரஷியாவில்  நடுவானில் வெடித்த விண்கல் எங்கிருந்து வந்திருக்க வேண்டும் என்பதை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். அது வந்த பாதையையும் அவர்களால் கணக்கிட முடிந்துள்ளது.

விண்கல் எங்கிருந்து வருகிறது? இக்கேள்வியிலேயே பதில் அடங்கியுள்ளதாகக் கூறலாம். விண்கற்கள் அனைத்துமே விண்ணிலிருந்து தான் வருகின்றன.சொல்லப் போனால் விண்வெளியில் ஒன்றல்ல லட்சக் கணக்கில் விண்கற்கள் இருக்கின்றன. நெல்லிக்காய் சைஸிலான விண்கற்களையும் சேர்த்துக் கொண்டால் கோடானு கோடி விண்கற்கள் உள்ளன.

ஆனால் இவை எதுவும் மரத்தில் மாங்காய தொங்குவதைப் போல பூமிக்கு மேலே  வானில் நிலையாக ஓரிடத்தில் இருப்பது கிடையாது. எல்லா விண்கற்களுமே பயங்கர வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகின்றன.

சூரிய மண்டலத்தில் பூமி, புதன்,  வெள்ளி, செவ்வாய், வியாழன் முதலான கிரகங்கள் தனித்தனிப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன. இதே மாதிரியில் விண்கற்களுக்கும். தனிப் பாதை உண்டு.இது செவ்வாய் கிரகத்துக்கும் வியாழன் கிரகத்துக்கும் நடுவே உள்ளது. இது Main Asteroid Belt என்று குறிப்பிடப்படுகிறது.
செவவாய் (Mars) கிரகத்துக்கும் வியாழன் (Jupiter) கிரகத்துக்கும் இடையே உள்ள அஸ்டிராய்டுகள் 
 சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் சூரிய மண்டலம் தோன்றிய போதே இந்த விண்கற்களும் தோன்றியதாகக் கருதப்படுகிறது.ஒரு பெரிய பங்களாவைக் கட்டி முடித்தபின் பார்த்தால் மீதியாக் இருக்கும் செங்கற்கள் ஒருபுறம் கிடக்கும். மிஞ்சிய மணல், ஜல்லி,ஆகியவையும் காம்பவுண்ட் சுவர் கட்டியது போக மிஞ்சிய பெரிய கருங்கற்களும் கிடக்கும். இது போல சூரிய மண்டலமும் கிரகங்களும் உருவான பின்னர் இந்த் விண்கற்கள் மிஞ்சி நின்றதாகத் தோன்றுகிறது. ஆரம்பத்தில் இந்த விண்கற்கள் கூட்டத்தில் பல கோடி விண்கற்கள் இருந்திருக்க வேண்டும்.

விண்கற்கள் உள்ள் இடத்தில் ஒரு கிரகம் உருவாகியிருக்க வேண்டும் என்றும் அப்படி உருவாமல் போனதால அந்த இடத்தில் விண்கற்களாகக் காணப்படுகின்றன.என்றும் ஒரு கருத்து உண்டு. பெரியதும் சிறியதுமான துண்டுகள் ஒன்று சேர்ந்து தான் கிரகங்கள் உருவாகின .பூமியும் இப்படித்தான் உருவாகியது.

சூரிய மண்டலத்தின் கிரகங்கள் தோன்றிய சில காலத்துக்குப் பின்னர் அதாவது சுமார் 390 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஏதோ ஒரு பயங்கர   நிகழ்ச்சியின் விளைவாக விண்கற்கள் கூட்டத்திலிருந்து  எண்ணற்ற விண்கற்கள் பூமி, சந்திரன், புதன், வெள்ளி (சுக்கிரன்), செவ்வாய் முதலிய கிரகங்கள் அமைந்த திசையை நோக்கிப் புயல் போல் கிள்ம்பி இந்த கிரகங்களைத் தாக்கின.
விண்கற்கள் தாக்குதலால் சந்திரனில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள். செவ்வாய், புதன் கிரகங்களிலும் இதே போன்ற பள்ளங்கள் உள்ளன
இவ்விதம் விண்கற்கள் தாக்கியதால் ஏற்பட்ட வட்டவடிவப் பள்ளங்களை இன்றும் சந்திரன், புதன், செவ்வாய் ஆகிய கிரகங்களில் காண முடிகிறது  பூமியில்  இவை அபூர்வமாகவே தென்படுகின்றன.விண்கற்கள் தாக்கியதால்  பூமியில் ஏற்பட்ட பள்ளங்கள்  காற்று ,மழை மற்றும் பூகம்பம் காரணமாக மேடிட்டுப் போயின. அல்லது பெரிய ஏரியாக மாறின.( வெள்ளி கிரகத்தின் தரையை நம்மால் இன்னும் விரிவாகக் காண முடியவில்லை என்பதால் வெள்ளி கிரகம் பற்றி எதுவும் திட்டவட்டமாகக் கூற முடியாது)

ஆனால் விண்கற்களால் பூமி உட்பட இந்த நான்கு கிரகங்கள் மீதான தாக்குதல் அடியோடு நின்று விடவில்லை. ஒரு கிரகத்தை அதன் பாதையிலிருந்து வெளியே தள்ள முடியாது. ஆனால் விண்கற்கள் அப்படி அல்ல.செவ்வாய், மற்றும் வியாழன் ஆகியவற்றின் ஈர்ப்பு சக்தியானது  விண்கற்கள் கூட்டத்தில்  அவ்வப்போது சலனத்தை உண்டாக்குகின்றன. இதன் விளைவாக விண்கற்கள் அவற்றின் பாதையிலிருந்து அவ்வப்போது வெளியே தூக்கி எறியப்படுகின்றன.
இந்த மேப்பில் நீல நிறத்தில் உள்ளது பூமியின் சுற்றுப்பாதை.இதை குறுக்காகக் கடக்கும் அஸ்டிராய்டுகள் சிலவற்றின் நீள்வட்டப்பாதைகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன
இப்படி தூக்கி எறியப்பட்ட விண்கற்கள் சூரியனை வழக்கமான பாதையில் சுற்றுவதற்குப் பதிலாக நீள் வட்டப் பாதையில் சுற்ற முற்படுகின்றன. அதாவது அவை செவ்வாய், பூமி, வெள்ளி, புதன் ஆகியவற்றின் சுற்றுப்பாதைகளை குறுக்காகக் கடக்கின்றன. இது ஆளில்லா லெவல் கிராசிங் வழியே லாரியும் பஸ்ஸும் ரயில்பாதையைக் கடப்பதற்கு ஒப்பானது.

பூமியின் சுற்றுப்பாதையை ஒரு விண்கல் கடக்கும் நேரத்தில் அதற்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் பல ஆயிரம் கிலோ மீட்டராக இருக்குமானால் பிரச்சினை இல்லை. ஆனால் பூமி தனது சுற்றுப்பாதையில் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடம் வழியே விண்கல் கடக்க முயன்றால் பிரச்சினைதான்.லெவல்கிராசிங்கில் லாரி மீது ரயில் மோதுவது போன்று பூமியின் மீது விண்கல் மோத நேரிடும். ரஷியாவில் இது மாதிர்த்தான் நிகழ்ந்துள்ளது.
அஸ்டிராய்ட் ஒன்று எவ்விதம் பூமியின் பாதையை க் குறுக்காகக் கடக்கிறது என்பதை விளக்கும் படம். எண்ணற்ற அஸ்டிராய்டுகள் இவ்வித்ம் பூமியின் பாதையைக் கடந்து செல்கின்றன
இது வரை நாம் பொதுவில் விண்கல் என்றே குறிப்பிட்டு வந்தோம். ஒரு விண்கல் பல நூறு கிலோ மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கலாம். அல்லது சில மீட்டர் நீளம் கொண்டதாகவும் இருக்கலாம். ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட Main Asteroid Belt ல் இப்படி வெவ்வேறு சைஸ்களிலான விண்கற்கள் உள்ளன. பொதுவில் பெரிய சைஸில் உள்ள விண்கற்களை அஸ்டிராய்ட் என்று குறிப்பிடுகின்றனர்.அந்த அளவில் இருபது அல்லது முப்பது மீட்டர் நீளமுள்ள விண்கற்களும் அஸ்டிராய்டுகள் என்றே குறிப்பிடப்படுகின்றன.

மாங்காய் சைஸ் அல்லது கூழாங்கல் அளவுக்கு இருக்கும் விண்கற்களும் விண்வெளியில் நிறையவே உள்ளன.இப்படியான விண்கல் ஒன்று வானிலிருந்து விழுவதை உங்களால் எளிதில் காண முடியும். 

கருத்துகள் இல்லை: