Pages

புதன், மே 01, 2013

வெளி நாட்டு வாழ்க்கை - சுயநலமா? குடும்ப நலமா?


மீண்டும் இந்திய வாழ்க்கை- கசப்பும் இனிப்பும்...

பதிவர் ஆதிமனிதன்- தஞ்சையில் பிறந்து வளர்ந்தவர்; அமெரிக்காவில், குடும்பத்துடன் பல வருடங்கள் வசித்து விட்டு, தனது நிறுவனத்தின்  சென்னை கிளைக்கு மாற்றல் பெற்று வந்துள்ளார். அமெரிக்கா பற்றியும், தமிழக அரசியல் மற்றும் சமூக சூழல் குறித்தும் தன் தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார் ஆதிமனிதன்.
வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பிய பின் அவருக்கு ஏற்பட்ட உணர்வுகளை பிரதிபலிக்கும் ஒரு மினி தொடரை இங்கு எழுத இசைந்துள்ளார். தன் சொந்த மண்ணுக்கு திரும்பிய கதையை இவர் வீடுதிரும்பலில் எழுதுவது பொருத்தம் தானே !

********
மீண்டும் இந்திய வாழ்க்கை - கசப்பும் இனிப்பும்...
இந்தியா திரும்பி ஐந்து மாதங்கள் ஆகப் போகின்றன. இந்தியா திரும்பப் போகிறோம் என்பதில் இருந்த ஆர்வமும், ஆசையும் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.
என்னதான் இங்கு பிறந்து வளர்ந்திருந்தாலும் சில வருடகால அந்நிய மண்ணின் வாழ்க்கை கொஞ்சம் அதிக பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது போலும். அதற்கு காரணம் இந்தியாவின் இயற்கை வெட்ப நிலையோ அல்லது ஏறினால் கார் - இறங்கினால் கார் என்ற வசதி குறைவோ இல்லை. நிச்சயம் மாற முடியும் என்றாலும், மாறாத நம் இந்திய மனப்பான்மையும் இங்குள்ள அரசியல் சூழ்நிலையுமே இந்தியா மீது சலிப்பு தட்டுவதற்கு எனக்கு புரிந்த முக்கிய காரணங்கள்.
முதலாவது நம் கல்வி முறை. சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்னமும் வெள்ளைக்காரன் விட்டு சென்ற நடை முறைகளையும் பாட திட்டங்களையும் வைத்துக் கொண்டு ஏன் அழுகிறோம் என எனக்கு தெரியவில்லை. கல்வி கற்பதை ஒரு மிகப் பெரிய பாரமாக ஆக்கி வைத்திருக்கிறது நம் கல்வி முறை.
பள்ளிகளுக்கான யூனிபார்ம் ஆகட்டும், மூட்டை போல் தூக்கிக் கொண்டு போகும் நோட்டு புத்தகங்களாக இருக்கட்டும். இரண்டு வாரத்துக்கு ஒரு முறை ஏதாவது ஒரு தேர்வை நடத்தி குழந்தைகளை புத்தக சாம்பிரானிகளாக ஆக்கிக் கொண்டு இருக்கிறார்கள். அடிக்கும் வெய்யிலில் பிநோபார்ம் என்று ஒரு ஆடை வடிவம். அதை போட்டுக்கொண்டு ஒரு மணி நேரம் கூட நம்மால் இருக்க முடியாது. அதை எப்படி பெண் பிள்ளை நாள் முழுதும் அணியும்? இன்னொரு கொடுமை: பறக்கும் புழுதியில் வாரத்துக்கொருமுறை வெள்ளை நிற யூனிபார்ம் வேறு போட வேண்டுமாம்.
இதை என் நண்பர் ஒருவரிடம் சொன்னபோது " இதுக்கே இப்படி சொல்றியே ! என் பெண்ணோட பள்ளியில் நீல கலர் டாப்ஸ் ; முழு வெள்ளை பேன்ட் தான் யூனிபார்ம். வெள்ளை கலர் பேன்ட் என்பதால் எட்டாவதுக்கு மேல் உள்ள பெண்கள் ஒவ்வொரு மாசமும் படுற வேதனை கொடுமை. ஆனா எந்த பெற்றோருக்கும் இதை எதிர்த்து,  வெள்ளை கலர் பேன்ட் வேண்டாம் என சொல்லக்கூட தைரியம் இல்லை !" என்றார்.

ஒரு சில பெரிய பள்ளிகளில் கூட முழுமையான விளையாட்டு மைதானம் இல்லை. பள்ளி கட்டடத்திற்கு நடுவே உள்ள இடத்தில் மாணவர்களுக்கு இன்னமும் 'த்ரோ' பால் விளையாட்டு தான் சொல்லிக் கொடுக்கிறார்கள். இதிலிருந்தே தெரிகிறது இவர்கள் படிப்பைத் தவிர மற்றவைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம். அப்புறம் ஒலிம்பிக்கில் மட்டும் எப்படி தங்கத்தை அள்ளிக் கொண்டு வர முடியும்?
படம்: இணையத்திலிருந்து 

மாலை நேரத்தில் எங்கள் தெருவில் இருக்கும் பல பெற்றோர்களை ஒரே இடத்தில் சந்திக்க வேண்டுமானால் அருகே உள்ள ஸ்டேஷனரி ஷாப் சென்றால் போதும். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு 'பட சார்ட்டை' தேடிக் கொண்டு இருப்பார்கள். நாளைக்கே ஒட்டி கொண்டு வர வேண்டும் என முதல் நாள் தான் பிள்ளைகளுக்கு இம்மாதிரி வேலையை கொடுக்கிறார்கள். இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலானோர் வேலை முடிந்து வீடு வந்து சேரவே இரவாகி விடுகிறது. வருவதற்குள் குழந்தைகள் தவிக்கும் தவிப்பு இருக்கிறதே! ஏன் அதை இரண்டு நாட்களுக்கு முன்பே தெரிவித்தால் என்ன?
அதே போல் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பை வார நாட்களில் அலுவல் நேரத்தில் வைக்கிறார்கள். எங்கள் அலுவலகம் குழந்தைகள் படிக்கும் பள்ளியிலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தாண்டி உள்ளது. எப்படி நான் நாலு மணிக்கு வந்து ஆசிரியர்களை சந்திப்பது? எங்களுக்கு இரண்டு குழந்தைகள் என்பதால் அடுத்தடுத்து இரு வேறு தினங்களில் இப்படி நான்கு மணி மீட்டிங்கிற்கு பள்ளி வர வேண்டும் ! இதே பள்ளி ஆசிரியர் மற்றும் பிரின்சிபாலின் குழந்தைகள் வேறு பள்ளியில் படித்தால் இவர்களும் லீவு போட்டு விட்டு தானே போக வேண்டும்?
அடுத்ததாக இங்குள்ள தமிழ்ப்பாடம். நான்கு ஐந்தாம் வகுப்பு குழந்தைகளுக்கு கொடுக்கப் பட்டிருக்கும் செய்யுளும் பழங்கால பாடல்களும். நமக்கே உச்சரிக்க முடியவில்லை. நினைவில் நிற்க மாட்டேன் என்கிறது. குழந்தைகள் எப்படி மனப்பாடம் செய்து எழுத முடியும்? சாதாரணமாக தற்போது உபயோகப்படுத்தும் சொற்களையும், இப்போதைய தமிழையும் சொல்லிக் கொடுத்தாலே போதும் ! இவர்கள் சொல்வதையெல்லாம் படித்தால், குழந்தைகளுக்கு தமிழ் மேல் வெறுப்பு தான் வரும். வரும் இல்லை ஏற்கனவே வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இப்படி கூறுவதால் எனக்கு தமிழ் மேல் பற்றோ விருப்போ இல்லை என்று நீங்கள் கருதினால்.... அது தவறு. அமெரிக்காவில் இருந்தவரை அவர்கள் பாட திட்டத்தில் தமிழ் இல்லாத போதும் ஒவ்வொரு வருடமும் இங்கிருந்து தமிழ் பாட புத்தகங்களை வரவழைத்து அதை தினமும் என் மனைவி இரு பிள்ளைகளுக்கும் தொடர்ந்து தமிழ் கற்றுக் கொடுத்தார். இன்று, சென்னை வந்து, ஐந்தே மாதங்களில் இன்னும் நன்றாக தமிழ் பயின்று கடந்த தேர்வில் தமிழில் என் மூத்த பெண் அவளது வகுப்பில் முதல் இடம் எடுத்து உள்ளார்.
என்னைப்பொறுத்தவரை, நம் தாய் மொழியை தெரிந்து கொள்வது அவசியம் மட்டுமன்று, பெருமையும் கூட. ஆனால் ஆங்கிலத்தை தாய் மொழியாக கொண்ட மேலை நாடுகளில் ப்ரைமரி வகுப்பில் சேக்ஸ்பியர் பாடம் நடத்துவதில்லை. எனவே அவர்கள் தங்கள் தாய்மொழியை கற்பதில் கஷ்டப்படுவதில்லை. மாறாக இங்கு சங்க இலக்கிய பாடல்களை சிறு வகுப்புகளில் வாசிக்கும் போது பிள்ளைகளுக்கு தமிழ் மீது வெறுப்பு வர வாய்ப்பு உண்டு.
தயவு செய்து உங்கள் இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டு தமிழை எல்லாம் தமிழ் MA படிப்பவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். தமிழின் மீது ஆர்வம் வருகிற மாதிரி பாடல்களையும், பாடங்களையும் பாட புத்தகத்தில் வைப்பது பற்றி அரசு யோசித்தால் நலம் !

 

வெளி நாட்டு வாழ்க்கை - சுயநலமா? குடும்ப நலமா?

வெளி நாட்டு வாழ்க்கை - சுயநலமா? குடும்ப நலமா?- ஆதிமனிதன்

//
இங்குள்ள பெற்றோர்களை அவர்களுக்கு வயதாகும் போது கூட இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால், அது நாள் வரை நல்லதொரு சூழ்நிலையில் எந்த வசதி குறைவும் இன்றி மேலை நாடுகளில் வளர்ந்து வந்த நம் குழந்தைகளுக்கு நிச்சயம் அசவுகரியத்தை கொடுக்கிறது.//

வெளி நாடு வாழ் இந்தியர்கள் ஒரு கட்டத்தில் இந்தியா திரும்ப பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இது தான் எனக்கு தெரிந்து யாரும் எதிர் வாதம் செய்ய முடியாத முக்கிய காரணம். அது நெருங்கிய குடும்ப உறவுகளின் மறைவு மற்றும் துக்கங்களில் கலந்து கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை.
சிங்கப்பூர், துபாய் ஒரு இரண்டு மூன்று மணி நேர விமான பயணம். அதிகபட்சமாக லண்டனிலிருந்து அவசரத்துக்கு இந்தியா திரும்ப வேண்டுமாயின் பத்து பன்னிரண்டு மணிநேரம் தான். ஆனால், இரண்டு கண்டங்களை தாண்டி அமெரிக்காவிலிருந்து வருவதென்றால். அது தான் அங்கு வாழும் இந்தியர்களுக்கு என்றுமே ஒரு சவாலான விஷயம்.

தாய் தந்தையர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பின் ஓரளவு நாம் நிம்மதியாக தூங்க முடியும். இல்லையென்றால் அது அனல் மேல் பூனை வாழ்க்கை தான். சமீபத்தில் அமெரிக்காவில் வாழும் பதிவுலக நண்பர் ஒருவரை சரியாக மணியை கணக்கு பார்க்காமல் இரவு ஒன்பது மணி என்று நினைத்துக்கொண்டு அழைத்து விட்டேன் (நான் கலிபோர்னியாவில் இருந்த நினைப்பில் அவ்வாறு அழைத்து விட்டேன். ஆனால் அவரோ நியூ யார்க்கில் உள்ளார். அப்போது அவருக்கு இரவு நடு சாமம்). நண்பர் பதறி அடித்துக்கொண்டு பேசினார். அப்போது தான் எனக்கு அவருடைய டைம் ஜோன் உரைத்தது. உடனே மன்னிப்பு கேட்டுக்கொண்டு நாளை பேசுகிறேன் என்று வைத்து விட்டேன்.
அடுத்த நாள் நண்பரிடம் பேசியது அவரின் வார்த்தைகளில்.

"
தப்பா எடுத்துக்காதீங்க ஆதி. நைட் பன்னிரண்டு மணிக்கு இந்தியா நம்பரை பார்த்தவுடன் பதறி விட்டேன். ஊரில் அம்மா அப்பா இருவரும் தனியாக உள்ளார்கள். அந்த நேரத்தில் அழைப்பு வந்ததும் என்னமோ ஏதோ என்று பதறி விட்டேன்".
இது தான் அங்கு பல குடும்பங்களில் நடக்கிறது ! சில நேரங்களில் அவசரத்துக்கு மணி பார்க்காமல் ஏதாவது சின்ன விசயத்திற்கு இந்தியாவிலிருந்து நடு சாமத்தில் எங்களை அழைத்து விடுவார்கள். அங்கு நமக்கு பி.பி எகிறி விடும். தனிப்பட்ட முறையில் அமெரிக்காவில் நான் இருந்த கால கட்டத்தில் என்னுடைய நெருங்கிய உறவுகள் பலர் தவறி விட்டார்கள். அங்கு உட்கார்ந்து கொண்டு என்ன செய்ய முடியும்? அடுத்த பிளைட் பிடித்து இங்கு வந்தால் கூட நான் ஊர் போய் சேர்வதற்கு மூன்று நாட்கள் ஆகிவிடும். அங்கேயே ஓரிரு நாள் உட்கார்ந்து அழுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது.
துக்கம், இறப்பு மட்டுமல்ல. திருமணம் போன்ற சந்தோசமான நேரங்களில் கூட ஒரு சிலரால் அனுபவிக்க முடியாமல் போவதுண்டு. ஒரு கல்யாணம் காட்சி என்றால் அங்கிருந்து ஒரு வாழ்த்து தான் பெரும்பாலான வெளி நாட்டு வாழ் இந்தியர்களால் சொல்ல முடிகிறது. மிக நெருங்கிய உறவுகள் திருமணம் மட்டும் நன்றாக திட்டமிட்டால் கலந்து கொள்ள முடியும். அதுவும் அவரவர் குடும்ப பொருளாதாரத்தை பொறுத்து தான். என் நெருங்கிய நண்பர் ஒருவர் தன் சொந்த தம்பி திருமணத்திற்கு செல்லவில்லை. கேட்டதற்கு, அதற்க்கு குறைந்தது ஒரு வாரம் லீவு போட வேண்டும். எல்லா செலவுகளையும் சேர்த்தால் குறைந்தது ஒரு லட்சம் ஆகும் நான் மட்டும் போய் வர. அதை பணமாக தந்தால் தம்பி திருமணத்தை இன்னும் சிறப்பாக நடத்த முடியும். அதனால் நான் போக வில்லை. கல்யாண சி.டி பார்த்துக்கொண்டால் போதும் என்றார்.
ஒன்றை மட்டும் இந்த பதிவின் மூலம் தெரிய படுத்திக்கொள்ள விரும்புகிறேன். வெளி நாடுகளில் போய் வாழ்பவர்களை பற்றி பலருக்கும் பல வித கருத்துக்கள் இருக்கும். அதில் ஒன்று மட்டும் நிச்சயம். வேலை நிமித்தம் வெளி நாடு செல்லும் பெரும்பாலானோர் தான் மட்டும் சுகமாக வாழ வேண்டும் என நினைத்து அங்கு போவதில்லை அல்லது இருப்பதில்லை. சென்ற பதிவில் மனோ சாமிநாதன் அம்மா அவர்களின் பின்னூட்டம் இப்படி தான் இருந்தது...

//
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபுக்குடியரசில் 35 வருடங்கள் வாசம். ஆரம்பத்தில் பிரச்சினைகளை சமாளிக்க, அதன் பின் மற்ற‌வர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக்கொடுக்க, பிறகு நம்மை நிலை நிறுத்திக்கொள்ள‌, அதன் பின், அன்பின் நிர்ப்பந்தங்களுக்காக என்று இத்தனை வருடங்கள் கடந்து வந்தாயிற்று. //
இந்தியா திரும்புவது என முடிவு செய்த பின் என் சிறியவளிடம் தெரிவித்த போது முடியவே முடியாது என்றாள். குழந்தைகளுக்கு முதல் பிரச்சனை இங்குள்ள பள்ளிகளும், பாட புத்தகங்களும், படிப்பு முறையும் தான். நான் அவளிடம் கேட்டது இது தான். உனக்கு உன் அம்மா அப்பா கூட இருக்க வேண்டுமா இல்லையா? இல்லை நீ மட்டும் தனியாக இங்கு இருந்து கொள்கிறாயா என்று ! அதற்கு அவள் "இல்லை, நீங்க ரெண்டு பேரும் எப்பவும் என் கூட தான் இருக்கணும்" என்றாள். அதற்கு நான், "பாத்தியா, உனக்கு மட்டும் உன் அப்பா அம்மா கூட இருக்கணும். எங்களுக்கு மட்டும் அந்த ஆசை இருக்காதா? எங்க அப்பா அம்மா அங்கு தனியா தானே இருக்காங்க. அவங்க கூட இருக்கணும்னு எங்களுக்கும் ஆசையா இருக்காதா?"  அவளுக்கு முழுதும் புரிந்ததா என எனக்கு தெரியாது. அது தான் தற்போது என் மன நிலையும்.
எனக்கு தெரிந்து பலரின் வெளி நாட்டு வாழ்க்கை இப்படிதான் அமைகிறது. அது மட்டுமல்ல. உரலுக்கு ஒரு பக்கம் இடி மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பார்கள். அது போல் தான் எங்கள் நிலைமை. இங்குள்ள பெற்றோர்களை அவர்களுக்கு வயதாகும் போது கூட இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அது அது நாள் வரை நல்லதொரு சூழ்நிலையில் எந்த வசதி குறைவும் இன்றி மேலை நாடுகளில் வளர்ந்து வந்த நம் குழந்தைகளுக்கு நிச்சயம் அசவுகரியத்தை கொடுக்கிறது. ஒரு பக்கம் நம்மை பெற்ற பெற்றோர். மறு பக்கம் மனைவி குழந்தைகள் அவர்களின் எதிர்காலம். இரண்டுக்கும் நடுவில் மதில் மேல் பூனையாக இன்று பலர் தத்தளிப்பது எல்லோரும் அறிந்த ஒன்று.
அதில் தற்போதைக்கு ஒரு பக்கம் நான் குதித்து விட்டேன். இருந்தாலும் மனது அடுத்தப்பக்கத்தை எட்டி எட்டி பார்கிறது. கொஞ்ச நாள்/வருடங்கள் கழித்து எம்பி குதித்து மறு பக்கம் தாவ கூட முயற்சிக்கும். அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று தற்போதைக்கு குதித்த இடத்தில் சந்தோசமாக இருக்க இந்த குரங்கு மனசு முயற்சித்து பழகி கொண்டு இருக்கிறது !

அம்மா- அப்பா - சொந்தம் இனிக்கும் இந்திய வாழ்க்கைஆதிமனிதன் 

என்ன தான் மனைவி குழந்தைகள் கொண்டாட்டங்கள் என வெளி நாடுகளில் நாம் வசித்து வந்தாலும், நம் நினைவுகளில் இருந்து நம்மை பெற்ற பெற்றோரை அகற்ற முடியாது. ஒரு தீபாவளி பொங்கல் பிறந்த நாள் என்று வரும் போது அவர்கள் கூட இல்லையே என்ற நினைப்பு நெஞ்சை வாட்டும்.
இப்போது பல வசதிகள் இருக்கின்றது. போன், ஈமெயில், சாட் என்று. இருந்தாலும் அவர்கள் கூட இருந்து, அவர்களோடு சேர்ந்து பெரிய குடும்பமாக
சந்தோசத்தை அனுபவிக்க முடியவில்லை என்ற ஏக்கம் எனக்கு எப்போதும் உண்டு.
வெளி நாட்டில் இருந்த வரை ஒவ்வொரு பண்டிகையின் போதும் என் தந்தையிடம் பேசும் போது, என்னப்பா? எப்படி போகுது பண்டிகையெல்லாம்?" என கேட்டால். "ஹ்ம்ம்..என்னவோ போகுது . நீ இல்லாதது தான் பெரிய குறை. நீ, புள்ளைங்க எல்லாம் இங்க இருந்தா தான் இன்னும் நல்லா இருக்கும். நீ எப்ப வர?" என்று தான் கேட்பார்.
சின்ன வயதில் தீபாவளிக்கு இருபது ரூபாய்க்கு பதிலாக இருபத்தி ஐந்து ரூபாய்க்கு வெடி வாங்க வேண்டும் என அவரிடம் அவரிடம் சண்டை போட்டு கையை காலை ஆட்டிக்கொண்டு அழுத போது தவறுதலாக என் கைபட்டு அவரின் வாட்ச் கீழே விழுந்ததெல்லாம் நினைவுக்கு வந்து தொலைக்கும்.


மாட்டு பொங்கல் அன்று வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு மாடுகளுக்கு பூ, பொட்டு வைத்து சாமி கும்பிட்ட பின், கையில் ஒரு தட்டை வைத்துக்கொண்டு அதை ஒரு கையில் குச்சியை வைத்து அடித்துக்கொண்டே சத்தமாக அவருக்கு தெரிந்த பழைய பொங்கல் பாட்டை பாடியபடி எங்களையும் 'பொங்கலோ பொங்கல்னு' சத்தம் போடுங்கனு (நான் வெட்கப்பட்டுக்கொண்டு சத்தம் போட மாட்டேன்) மாடுகளை சுற்றி சுற்றி வருவார்.
இவையெல்லாம் பொங்கல் தினங்களில் மனதில் மீண்டும் மீண்டும் எழும் எண்ணங்கள் !.என்ன தான் அவர்களுக்கு வீடு, வாசல், வசதிகள் என அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்திருந்தாலும், நாமும் அவர்கள் கூடவோ அல்லது அருகிலோ இருந்து அவ்வப்போது அவர்களை சென்று பார்த்து வந்தால். அதில் கிடைக்கும் நிம்மதி, திருப்தி. இவையெல்லாம் உள்ளூரில் பல நடைமுறை
கஷ்டங்களை எதிர் கொண்டாலும், நமக்கு மனதுக்கு நிம்மதி தரும் விஷயங்கள்.
அடுத்ததாக அண்ணன்/தம்பி அக்காள்/தங்கை மற்றும் குழந்தைகளுக்கு மாமா,
சித்தப்பா, அண்ணன் தம்பி என நெருங்கிய குடும்ப உறவுகளோடு உரிமையோடு உறவோடும் சூழ்நிலை ஒரு பெரிய மகிழ்ச்சியை தருகிறது. வெளி நாடுகளில் வாழும் போது ஒரு சிலருக்கு நெருங்கிய குடும்ப உறவுகள் அங்கேயே இருப்பதுண்டு. அப்படி இருந்தால் ஓரளவு ஓகே. இங்கு வந்த பின் என் மகள் அண்ணா அண்ணா என்று என் அண்ணன் பையனிடம் பேசுவதும், அப்பா உங்களுக்கு தெரியுமா? அண்ணனுக்கு இது தெரியும் அது தெரியும் என ஒரே அண்ணன் புராணம் தான். புதிதாக அவள் அண்ணன் அக்கா என்று எல்லோருடனும் எந்த வித பார்மாலிட்டி இல்லாமல் பேசி சிரிப்பது பார்த்து எங்களுக்கு அவ்வளவு சந்தோஷம். எல்லாம் இந்தியா தந்த சந்தோஷம்.
பெரும்பாலாவனவர்களுக்கு இது தெரிந்து இருக்கும் என நினைக்கிறன். அமெரிக்காவில் பொதுவாக பெயர் சொல்லித்தான் எல்லோரையும் கூப்பிடுவார்கள்.அவரவர் பெயருக்கு முன் யார் அவர் என்பதை பொறுத்து தேவையானால் முன்னே மிஸ்டர், மிஸ், அங்கிள் என்று சேர்த்து கொள்வார்கள். அதே போல் உறவினரை தவிர வேறு யாரையும் முறை வைத்து அங்கிள் ஆண்டி என்று அழைக்க மாட்டார்கள். இதை ஒன்றும் நான் தவறாக கூறவில்லை அவர்கள் கலாச்சாரம் அப்படி.
அடுத்ததாக வெரைட்டி இன் லைப். அமெரிக்காவை பொறுத்தவரை இங்கு கிடைப்பதும் பெரும்பாலும் அங்கு கிடைகிறது. அதே நேரம் இங்கு நமக்கு கிடைக்காத நான் ஏங்கும் பலவும் அங்கு கிடைகிறது. ஆனால் இவை எல்லாம் ஒரு கட்டத்தில் போர் அடித்து விடுகிறது. ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன். மெக்சிகன், இட்டாலியன், சைனீஸ், ஜாப்பனீஸ் என்று எத்தனையோ உணவகங்கள் இருந்தாலும் செயின் ரெஸ்டாரன்ட் மற்றும் ப்ரோசஸ்ட் புட் என்பதால் ஒரு கட்டத்தில் எல்லாம் ஒரே மாதிரியாக போய் விடும்.
சாப்பாடு மட்டுமில்லை. சில நேரங்களில் நன்றாக உள்ளது என ஒரு டீ ஷர்ட் பக்கத்தில் உள்ள கடையில் நாம் வாங்கி வந்தால் அடுத்த நாள் நம் நண்பர் ஒருவரும் அதே ஷர்ட்டை அதே கடையில் வாங்கி இருப்பார். இதையெல்லாம் ஒரு உதாரணத்திற்கு தான் சொல்கிறேன். எனக்கென்னவோ தினமும் புது புது முகங்கள், பல தரப்பட்ட கடைகள் என மிகவும் வெரைட்டி நிறைந்ததாக தான் நம்மூரை நான் எண்ணுகிறேன்

இந்தியா ஏன் கசக்கிறது - பயமுறுத்தும் சாலைகள்

இந்தியா ஏன் கசக்கிறது - பயமுறுத்தும் சாலைகள் - ஆதிமனிதன்.
சென்ற பதிவிற்கு வீடுதிரும்பல் வாசகர்கள் தந்த ஆதரவு மிகுந்த மகிழ்வை தந்தது. எல்லோருக்கும் நன்றி.
போரிஸ் பெக்கரில் தொடங்கி மேலை நாடுகளில் இருந்து யார் இந்தியா வந்தாலும், அவர்கள் பார்த்து வியக்கும், பயப்படும் ஒரே விஷயம் நம் நாட்டு சாலைகளையும் அதில் பயணிக்கும் வாகன ஓட்டிகளையும் தான் !


சில ஆண்டுகள் மேலை நாடுகளில் இருந்து விட்டு மீண்டும் தாயகம் திரும்பும் என்னைப் போல் பலருக்கும் மீண்டும் பழகிக் கொள்ள சவாலாகவுள்ள விஷயம் நம் போக்குவரத்து முறைதான். அந்த அளவிற்கு மேலை நாடுகளில் போக்குவரத்து ஒழுக்கம் மேலோங்கி இருக்கும்.
உலகில் உள்ள வாகனங்களில் இரண்டு சதவிகிதத்திற்கும் குறைவான வாகனங்களை கொண்டுள்ள நம் நாட்டில் தான் சாலை விபத்துகள் அதிகம். இந்திய அரசின் 2010 ஆம் ஆண்டு அறிக்கையின் படி 2010-ல் மட்டும் ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோர் விபத்துகளில் சிக்கியுள்ளனர். அதில் இறந்தவர்கள் மட்டும் 1.3 லட்சத்திற்கும் அதிகமானோர். அதாவது இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒருவர் விபத்தில் சிக்குகிறார்கள். ஒவ்வொரு நான்கு நிமிடத்திற்கும் ஒருவர் விபத்தில் பலியாகிறார். இவை எல்லாவற்றுக்கும் அரசை மட்டுமே குற்றம் சொல்லி பயனில்லை. மக்கள் மனம் மாறினால்தான் இம்மாதிரி விபத்துக்களை தவிர்க்க முடியும்.
நம்ம ஊரில் பெரும்பாலான இரவு நேர விபத்துக்கள் குடித்து விட்டு வண்டி ஓட்டுவதினால் ஏற்படுவதாக தகவல் ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒருவர் அளவுக்கு மீறி குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது என்பது மிகப் பெரிய குற்றம். 'Accidents are not considered as accidents always'.
ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு அளவுகோல் உண்டு. As per California law, 0.08 % is the maximum content of alcohol you can have it in your blood) குடித்து விட்டு வாகனம் ஓட்டி ஒருவர் மீது மோதி அவர் உயிர் இழந்து விட்டால், குடித்து விட்டு வண்டி ஓட்டியவர்க்கு கொலை குற்றத்திற்கு ஈடான தண்டனை கிடைக்க வாய்ப்புண்டு.
நியூ யார்க், சிக்காகோ போன்ற பெருநகரங்களில் நீங்கள் அதிகமாக குடித்தபின் உங்களால் வண்டி ஓட்ட முடியவில்லை எனில் ஒரு நம்பருக்கு அழைத்தால் போதும். அவர்கள் உங்களை வீட்டிற்கே இலவசமாக காரில் கொண்டு வந்து விட்டு விடுவார்கள். இதற்கேன்றே அங்கு பொது நல அமைப்புகள் உண்டு. நம்ம ஊரில் இதை பற்றியெல்லாம் யாரும் பெரிதாக அலட்டிக்கொள்வதாக தெரியவில்லை. நாமாகவே தான் திருந்த வேண்டும்.
யாரோ ஒருவருக்கு தான் விபத்து நடக்கும்; நமக்கல்ல என்ற அலட்சியம் கூடாது; இந்தியாவில் ஒவ்வொரு நிமிடமும் நடக்கும் விபத்து நமக்கும் நடக்கலாம்; ஒவ்வொரு நான்கு நிமிடத்தில் இறக்கும் நபராய் நாம் இருந்து விட்டால் குடும்பத்தின் நிலை என்ன ஆவது? இதை நினைத்தாவது மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதை முற்றிலுமாய் தவிர்க்க வேண்டும்.
அடுத்து லேன் டிசிப்ளின். நான் முதன் முதலில் சென்னைக்கு வந்த போது அண்ணா சாலையில் 'Follow Lane Discipline' என்ற போர்டை பார்த்திருக்கிறேன். ஆனால் அந்த டிசிப்ளினை யாரும் பின்பற்றுகிற மாதிரியே தெரிய வில்லை. ஆங்காங்கே நடக்கும் சிறு விபத்துக்கள் முதல் பெரும் விபத்துக்கள் வரை நாம் லேன் டிசிப்ளின் பின்பற்றினால் பெரும் அளவு குறைந்து விடும்.
இத்தனைக்கும் தற்போது எல்லா நெடுஞ்சாலைகளிலும் குறைந்தது இரண்டுக்கு மேற்பட்ட வழித்தடங்கள் உள்ளன. உலகில் சிறிய உயிரினமான எறும்புகள் கூட ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக தான் செல்லும். ஆனா நாம பாருங்க ரெண்டு கோட்டுக்கு நடுவுல தான் வண்டியை ஓட்டுவோம். இப்படி ஓட்டும்போது நீங்கள் எப்படி செல்ல போகிறீர்கள் என்று முன்னால் போகிறவருக்கும் தெரியாது, பின்னால் வருபவரும் குழம்பி போக வாய்ப்புண்டு.
வெளி ஊர்களில் இருந்து சென்னை திரும்புகையில், சென்னையை நெருங்குகையில் கவனித்து பாருங்கள். மூன்று லேன்களில் ஆறு வண்டிகள் அடைத்துக் கொண்டு போகும். அதனாலேயே ஆங்காங்கு வரும் டிராபிக் ஜாம். சற்று முன் தான் மேல்மருவத்தூர் அருகே வண்டியை ரெண்டு மணி நேரம் நிப்பாட்டி விட்டு சாவகசமாக எல்லோரும் சாப்பிட்டு வருவார்கள். ஆனால் ரோட்டில் வந்தவுடன் அவர்களால் சிறிது பொறுமையாக இருந்து போக முடியவில்லை.
அமெரிக்கா போன்ற நாடுகளில் அத்தனை மைல் வேகத்தில் (ப்ரீ வேக்களில் குறைந்தது 110 முதல் 130 கிலோமீட்டர் வேகத்தில்) வண்டிகள் தொடர்ச்சியாக சென்றாலும் விபத்துக்கள் மிகவும் குறைவே. அதற்கு முக்கிய காரணம் எல்லோரும் லேன் டிசிப்ளினை பின்பற்றுவது தான். மினசொட்டவில் நாங்கள் இருந்த நகரத்தின் அருகே உள்ள பாலத்தை தினமும் 1.5 லட்சம் வாகனங்கள் கடக்கின்றன. ஆனால் அங்கு மூன்று வருடங்களில் ஒரு விபத்து கூட ஏற்பட்டு நான் பார்த்ததில்லை.
அடுத்ததாக சிக்னல். நம்மூரில் சிக்னலை ஒரு பொருட்டாகவே யாரும் எடுத்துக் கொள்வதில்லை. அப்படியே நாம் மதித்து நின்றாலும் பின்னால் உள்ளவர்கள் திட்டியோ, ஹாரன் அடித்தோ நம்மை விரட்டுவார்கள். இரண்டு நாட்களுக்கு முன் பூந்தமல்லி ஹை ரோட்டில் ஒரு சிக்னலில் வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டேன். எனக்கு தெரியும் அந்த குறிப்பிட்ட சிக்னலை யாரும் மதிப்பதில்லை என்று. எங்களுக்கு பின்னால் வந்த எந்த வாகனமும் ரெட் சிக்னலில் நிற்கவில்லை. பின்னால் உட்கார்ந்திருந்த என் மகள் "என்னப்பா? யாருமே நிக்கல. நம்ம மட்டும் தான் நிற்கிறோம்?" என்று கூறினாள். "இப்படியே எல்லோரும் நினைத்தால் என்ன செய்வது? நாமாவது நிற்போம்" என்று கூறினேன்.
அமெரிக்காவில் சிக்னலில் வண்டியை நிறுத்தாவிட்டால் அது மிக பெரிய முற்றம். Signal jump என்று கூறுவார்கள். இரவு நடு சாமம் ஆனாலும், அங்கு ஈ, காக்கா இல்லை என்றாலும் கூட STOP சிம்பல் மற்றும் சிகப்பு சிக்னலுக்கு நீங்கள் வண்டியை நிறுத்தி தான் ஆக வேண்டும். நீங்கள் மஞ்சள் சிக்னலின் போதே வண்டியின் வேகத்தை குறைத்து விட வேண்டும். அப்படி உங்களால் பாதுகாப்பாக நிறுத்த முடியாத பட்சத்தில் தொடர்ந்து நிறுத்தாமல் சிக்னலை கடந்து விட வேண்டும். இன்டர்செக்க்ஷனில் (சாலையின் நடுவில்) வண்டியை நிறுத்த கூடாது. இங்கு நாம் பாதி ரோட்டை தாண்டி தான் அடுத்தவருக்கும் வழி விடாமல் அடைத்துக் கொண்டு நிற்கிறோம்.
அமெரிக்கர்கள் மட்டும் தான் ஒழுக்கமானவர்கள். நாம் இல்லை என்று நான் சொல்ல வரவில்லை. அங்கு மக்கள் அப்படி இருப்பதற்கு எனக்கு தெரிந்து இரு முக்கிய காரணங்கள்: ஒன்று பிறந்ததிலிருந்தே அவர்கள் அவ்வாறான ஒழுக்கத்திற்கு தங்களை பழக்கப் படுத்திக் கொண்டார்கள். இரண்டாவது அப்படி நீங்கள் ஏதும் போக்குவரத்து விதிகளை மீறும் பட்சத்தில், மாட்டிக் கொண்டீர்களானால் உங்களுக்கு கிடைக்கும் தண்டனை (சிறையோ/அபராதமோ) இரண்டுமே கடுமையாக இருக்கும். அங்கு போலீசார் லஞ்சம் வாங்க மாட்டார்கள். ஆதலால் லஞ்சம் கொடுத்து எஸ்கேப் ஆகவும் முடியாது.
சாலை பாதுகாப்பு பற்றி என்னுடைய பழைய பதிவு  பதிவெழுத வந்த காலத்தில் மிகவும் ரசித்து எழுதியது. அப்போது நல்ல வரவேற்பையும் பெற்றது.
எப்படி குழந்தைகள் சின்ன வயதிலேயே கோவிலுக்கு போனால் செருப்பை கழட்டி போடவும், புத்தகத்தை மிதித்து விட்டால் தொட்டு கும்பிடவும் நாம் சொல்லி தந்ததை கடைசிவரை அவர்கள் அவர்களையும் அறியாமல் பின் பற்றுகிறார்களோ அதே போல் நம் பிள்ளைகளுக்கு சிறு வயதிலிருந்தே போக்குவரத்து விதிமுறைகளை சொல்லி தந்து, நாமும் அவர்கள் முன் விதிகளை பின்பற்றினால் எதிர் காலத்திலாவது விபத்தில்லா ஒரு நல்ல தலைமுறை உருவாக வாய்ப்புண்டு.
*******
அமெரிக்காவில் சாலை போக்குவரத்து சம்பந்தப்பட்ட சில சுவாரசிய குறிப்புகள்:

#
அங்கு பெட்ரோல் பம்ப் என்று சொல்ல மாட்டார்கள். கேஸ் ஸ்டேஷன் என்று தான் அழைப்பார்கள்.

#
பொதுவாக எல்லோரும் முழு டான்க்கையும் புல் செய்வார்கள். பெட்ரோல் போட யாரும் இருக்க மாட்டார்கள். நாம் தான் கீழே இறங்கி நாமே போட்டுக் கொள்ள வேண்டும்.

#
சாலைகளில் ஹாரன் சத்தம் கேட்பது மிக மிக அரிது. யாரையாவது எச்சரிக்கை செய்யவோ அல்லது தவறு செய்யும் சக ஓட்டுனரை கடுமையாக திட்ட மட்டுமே ஹாரன் அடிப்பார்கள். இங்கு வந்த பிறகு குழந்தைகள் அவ்வப்போது ஹரனை அடித்து சந்தோசப்பட்டுக் கொள்கிறார்கள்.

#
ஹை பீமை நினைத்த போதெல்லாம் போட்டு ஓட்ட முடியாது. அதற்கென்று சில விதிமுறைகள் உண்டு.

#
காலையும் மாலையும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்/பின் ஹெட் லாம்ப் ஆன் செய்திருக்க வேண்டும். இதனாலேயே பெரும்பாலான வண்டிகளில் ஆட்டோமேடிக் லைட் ஆன் சிஸ்டம் இருக்கும்.

#
ஆறு வயது வரை குழந்தைகளுக்கு பேபி சீட் அல்லது பூஸ்டர் சீட் உபயோகப் படுத்தவேண்டும். தவறினால் மிக பெரிய தண்டனை உண்டு.

#
முன் இருக்கையில் அமருபவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும்.

#
பன்னிரண்டு வயதிற்கு மேல் தான் யாரும் முன் இருக்கையில் அமர்ந்து போகலாம். 



இந்தியா Vs USA - சொர்க்கமே என்றாலும் நம்மூரு போலாகுமா?

இந்தியா Vs USA --ஆதிமனிதன் 
*******
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போலாகுமா? என்னடா இவ்வளவு நாள் அமெரிக்கா அப்படி இருக்கும், இப்படி இருக்கும்னு சொல்லிட்டு இருந்த ஆதி மனிதன்  இப்ப அப்படியே பிளேட்ட திருப்பி போடுறானேன்னு பாக்குறீங்களா?

வெளியூர், வெளி நாடுகள் என்று பல இடங்களுக்கு போனால்தான், நம்மிடம் என்ன இருக்கு என்ன இல்லை என்று தெரிந்து கொள்ள முடியும். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் பல நல்ல விஷயங்கள் இருக்கு. அதே அளவு (இந்தியர்களை பொறுத்தவரை) கெட்ட விஷயங்களும் !அதற்குள் போகும் முன், இந்த பதிவின் முதல் வரியை மீண்டும் ஒரு முறை படிப்போம்.

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போலாகுமா?

ஆமாங்க. அப்படி இல்லன்னா நான் ஏன் இங்கு திரும்பி வர போகிறேன்? இதை எழுதும் போது ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. நான் ஊர் திரும்புவதால், என்னுடைய காரை விற்பதற்காக விளம்பரம் கொடுத்திருந்தேன். அதை பார்த்து ஒரு எகிப்த்தியர் காரை பற்றி விசாரிக்க என் அலுவலகம் வந்திருந்தார். கலிபோர்னியாவில் இந்தியர்கள் அதிகம் என்பதால் அனேகமாக யாராக இருந்தாலும் இந்தியர்களை எளிதில் அடையலாம் கண்டு விடுவார்கள்.

இந்த எகிப்தியரும் என்னை சரியாக கண்டுகொண்டு நீங்கள் இந்தியரா என கேட்டார். நானும் ஆமாம் என்றேன். அடுத்து ஏன் நீங்கள் காரை விற்கிறீர்கள் என கேட்டார். நான் முழுவதுமாக இந்தியா திரும்புகிறேன். அதனால் தான் காரை விற்கிறேன் என கூறினேன். அதற்க்கு அவர், இந்தியா ஏன் திரும்பி போகிறீர்கள். உங்கள் நாடும் எங்கள் நாடு போலவே ஏழை நாடு. அங்கு என்ன இருக்கிறது. அரசாங்கம் சரியில்லை அது இது என பேச ஆரம்பித்து விட்டார்.

உடனே நான், "ஐயா, தயவு செய்து உங்கள் நாட்டுடன் எங்கள் நாட்டை ஒப்பிடாதீர்கள். நீங்கள் எல்லாம் உங்கள் நாடு பிடிக்காமல் அல்லது அங்கு வாழ முடியாமல் இங்கு வந்திருக்கிறீகள். ஆனால் நாங்கள் அப்படி இல்லை. வேலை நிமித்தம் இங்கு வருகிறோம். விருப்பப்பட்டால் இங்கேயே இருப்போம். இல்லை என்றால் என்றைக்கு  வேண்டுமானாலும்  சந்தோசமாக நாங்கள் திரும்பி செல்வோம். வாழ வழி இல்லாமல் நாங்கள் இங்கு வரவில்லை" என்று. 

எதற்கு இதை  சொல்கிறேன் என்றால்,  உண்மை அதுதான் !  நாங்கள் யாரும் இந்தியா பிடிக்காமல் அமெரிக்கா செல்வதில்லை. எப்படி ஒரு வங்கியில் ப்ரோமோஷன் கொடுத்தால், வெளி மாவட்டம்/மாநிலத்திற்கு மாற்றி அனுப்புகிறார்களோ அது போல் தான் நன்றாக வேலை செய்பவர்களுக்கு வெளி நாடு செல்லும் வாய்ப்பு  IT துறையில் உள்ளவர்களுக்கு கிடைக்கிறது. அதில் நமக்கு பெருமை தானே? இன்னும் சொல்லப்போனால் சில நேரங்களில் அமெரிக்கர்களே நம்மிடம் ரிப்போர்ட் செய்வார்கள். சிலர் சொல்வது போல் இந்திய IT மக்கள் யாரும் அங்கு கொத்தடிமைகள் போல் நடத்தப்படுவதில்லை.

மீண்டும் இந்தியா வர எல்லோருக்கும் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அதில் நிச்சயமாக ஒன்று உண்டு. அது நம் உறவுகளோடு கலந்து வாழவும், பிள்ளைகளுக்கு நம் கலாச்சாரம் பண்பாடு குடும்ப பாசம் மறந்து விட கூடாது என்பதும் தான்.

அமெரிக்காவில் ஐந்து வயதிற்குள்ளேயே குழந்தைகள் தனி அறைக்குள் தங்களை சிறை வைத்துக் கொள்வார்கள். கேட்டால் ப்ரைவசி என்பார்கள். பிறகு எப்படி அக்காள் தங்கை அண்ணன் தம்பி என ஒற்றுதல் ஏற்படும். அவர்கள் (அமெரிக்கர்கள்) கலாச்சாரப்படி அது சரி. ஏனென்றால் வளர்ந்து பெரியவ(ள்)ன் ஆன உடனேயே பெற்றோரை விட்டு பிரிந்து விடுவர். பின் வருஷம் ஒரு முறை அவர்களை போய் பார்பதே பெரிய விஷயம். நாம் அப்படி இல்லையே ! கல்யாணமாகி குழந்தைகள் பெற்ற பின் கூட தாய் தந்தையாரிடமும் சகோதர்களிடமும் கலந்து தானே எல்லாம் செய்கிறோம்.

எட்டு வயதான போதே (கொஞ்சம் லேட்டு தான்) என் சின்னவள் தனி அறை கேட்டு வாங்கி விட்டாள். கதவின் முன் புறம், 'Enter with permission' என எழுதி ஒட்டி விட்டாள். நான் உட்பட என் மனைவி, பெரிய மகள் என யாராக இருந்தாலும் கதவை தட்டி விட்டு தான் உள்ளே செல்ல வேண்டும். நினைத்து பாருங்கள். எட்டு வயது குழந்தை நம்மூரில் என்ன செய்யும்? எப்போதுமே தனக்கு அக்காள், அண்ணன் இருந்தால் அவர்களை சுற்றி சுற்றி வரும். இரவானால் தாயின் மடி தேடும். இவை எல்லாம் அமெரிக்காவில் மிஸ்ஸிங். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் குழந்தைகள் தனியாக படுப்பது நன்று தான். ஆனால் நான்கு, ஐந்து வயதில் என்றால் அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

இப்படியே போனால் பின் ஒரு நாள், எனக்கு இன்னாருடன் இன்ன தேதியில் கல்யாணம். அவசியம் வந்து போங்க என பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பும் நிலைமை வந்து விடும் என்று தான் பல (சில!) இந்திய குடும்பங்கள் ஒரு கட்டத்தில் சொந்த நாட்டுக்கு திரும்பி விடுகின்றனர்.

கருத்துகள் இல்லை: