Pages

புதன், மே 01, 2013

அறிவு, உழைப்பால் ரூ. 27 ஆயிரம் கோடி சம்பாதித்தேன்: நிலக்கடலை வியாபாரி கூறுகிறார்


அறிவு, உழைப்பால் ரூ. 27 ஆயிரம் கோடி சம்பாதித்தேன்: நிலக்கடலை வியாபாரி கூறுகிறார்

தாராபுரம்- பழனி ரோட்டில் உப்புத்துறை பாளையத்தில் தரை தளம் மட்டுமே உள்ள ஒரு சாதாரண கான்கிரீட் வீடு...

ஒட்டு மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. மிகப்பெரிய தியாகியோ, சாதனையாளரோ, பெரும் தலைவர்களோ வாழ்ந்த வீடல்ல அது.
சாதாரண நிலக்கடலை வியாபாரி வாழும் வீடு.

ராமலிங்கம், வயது 53. இவர்தான் அந்த வீட்டின் சொந்தக்காரர். இப்போது ரூ. 27 ஆயிரம் கோடிக்கு அதிபதி....! எப்படி வந்தது இந்த பணம்? இதற்கு விடை தேடி புலனாய்வு அதிகாரிகள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் கடலை வியாபாரி ராமலிங்கமோ சர்வ சதாரணமாக அதிகாரிகளிடம் கடலை போடுகிறார்.

நான் வைத்திருக்கும் ரூ. 27 ஆயிரம் கோடிக்கான அமெரிக்க கடன் பத்திரமும் உண்மையானதுதான். இது நான் முறைப்படி சம்பாதித்தது. சட்டத்துக்கு புறம்பாக நான் எந்த காரியமும் செய்யவில்லை என்று ஆணித்தரமாக கூறுகிறார்.
அதிகாரிகள் கேட்கும் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கெல்லாம் பளிச்... பளிச்... என்று தயங்காமல் பதில் கூறுகிறார்.

அவரது முகத்தில் எந்த விதமான சலனமோ, பதட்டமோ இல்லை. இந்தியா முழுவதும் இருந்து பத்திரிகைகள், ஊடகங்கள் ராமலிங்கம் வீட்டை சுற்றி முற்றுகையிட்டுள்ளன. அதைதான் ராமலிங்கம் புன்னகையோடு பார்த்து ஆச்சரியப்படுகிறார்.

வியக்க வைக்கும் ராமலிங்கத்தை பற்றி....

பூர்வீகம் பொள்ளாச்சி அருகே உள்ள தொண்டாமுத்தூர். தந்தை ராமசாமி. தாயார் திருமலையம்மாள். 30 ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடி தாராபுரத்துக்கு குடிபெயர்ந்தார்கள். ஒரு வாடகை வீட்டில் குடியேறினார்கள்.
நிலக்கடலை, தேங்காய் பருப்புகளை வாங்கி கமிஷனுக்கு விற்கும் தொழிலில் ராமலிங்கம் ஈடுபட்டார். அதில் கிடைக்கும் கமிஷனை வைத்தே குடும்ப சக்கரம் உருண்டது.

பிறகு சொந்தமாக நிலக்கடலை வாங்கி இருப்பு வைத்து விற்கும் அளவுக்கு ஓரளவு பண வசதியுடன் வாழ்ந்தார். ஆனால் வியாபாரத்தில் பலரை ஏமாற்றி கவிழ்த்துள்ளார் என்பது 2009-ல் மன்னார்குடி கலியபெருமாள் போலீசில் கொடுத்த மோசடி புகாருக்கு பிறகுதான் தெரிய வந்தது. ரூ. 25 லட்சம் மோசடி செய்ததாக வழக்கு பதிவானது.

ஆனால் தான் திவால் ஆகிவிட்டதாக மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து அதில் இருந்து தப்பித்து கொண்டார். ஏமாற்றப்பட்டவர்கள் பணத்துக்காக ராமலிங்கத்தை தேடி அலைந்தார்கள். ஆனால் ராமலிங்கம் சொந்த வீடு தேடி அலைந்தார். அப்போதுதான் உப்புத்துறை பாளையத்தில் தற்போது குடியிருக்கும் வீட்டை 15 சென்ட் நிலத்துடன் சேர்த்து விலைக்கு வாங்கினார்.

இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். அவர் என்ஜினீயரிங் படித்து வருகிறார். மகள் தாராபுரத்தில் ஒருதனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
ராமலிங்கம் காலையில் எழுந்ததும் வேட்டி மடித்து கட்டி கொண்டு சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ரோட்டோர கடையில் டீ குடித்து செல்வார்.

மனைவியும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று மினி பஸ் பிடித்து தாராபுரம் டவுனுக்கு சென்று பொருட்கள் வாங்கி வருவார்.
அக்கம்பக்கத்து வீடுகளில் யாருடனும் பேச்சு வைத்து கொள்வதில்லை. அதனால் மற்றவர்களும் அவர்களை கண்டு கொள்வதில்லை.

கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் ஒரு இனோவா கார் வாங்கி உள்ளார். இப்படிப்பட்ட ராமலிங்கத்திடம்தான் ரூ.28 ஆயிரம் கோடி.... இது எப்படி சாத்தியம்....? புரியாத புதிராக அதிகாரிகளும், சாதாரண மக்களும் வியக்கிறார்கள்.

ஆனால் இது என் உழைப்பில் வந்த பணம் என்று சத்தியம் செய்கிறார் ராமலிங்கம். பிரேசில் நாட்டைச் சேர்ந்த எனது நண்பர் டேனியல் என்பவருடன் சேர்ந்து சர்வதேச கடன் பத்திரங்களை வாங்கி மாற்றி கொடுப்பது, தங்க கட்டிகள் வாங்கி விற்றது போன்ற வணிகங்களில் ஈடுபட்டேன். இதற்கான முறையான ஆவணங்களை அரசுக்கு கொடுத்து இருக்கிறேன். அதற்கான வரிகளையும் கட்டி இருக்கிறேன்.

கடந்த ஆண்டு ராமநாதபுரம் தொண்டியில் கச்சா எண்ணை இறக்குமதி செய்து பெட்ரோல், டீசலை பிரித்து எடுத்து இந்தியாவில் விற்பனை செய்வதற்காக ரூ. 1 லட்சம் கோடி மதிப்பில் பரணீஸ் ரிபைனரீஸ் தொழிற்சாலை தொடங்க அனுமதி கேட்டு மத்திய ரசாயனத் துறைக்கு அனுமதி கேட்டு திட்ட மதிப்பீடு மற்றும் ஆவணங்களுடன் மனு செய்தேன். ஆனால் இதுவரை பதில் தரவில்லை.

இந்த தொழிற்சாலையை தொடங்கினால் 10 லட்சம் பேருக்கு என்னால் வேலை வாய்ப்பு கொடுக்க முடியும். துறைமுக பகுதியில்தான் இந்த மாதிரி தொழிற்சாலை நிறுவ முடியும். ஏற்கனவே இந்த பகுதியில் ரிலையன்ஸ் தொழிற்சாலை உள்ளது என்கிறார்.

ஒரு சாதாரண மனிதர் ரூ. 1 லட்சம் கோடியில் தொழிற்சாலை தொடங்க அனுமதி கேட்டதும் மத்திய வருமான வரித்துறையின் கழுகுப் பார்வை தாராபுரத்தை நோக்கி திரும்பியது. ரகசியமாக திரைமறைவில் விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்போதுதான் 19 முறை மலேசியா, சிங்கப்பூர், அரபு நாடுகளுக்கு ராமலிங்கம் சென்று வந்திருப்பது அதிகாரிகளுக்கு கண்ணில் தென்பட்டது. உஷார் அடைந்த அதிகாரிகள் ராமலிங்கத்துக்கும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா? என்ற சந்தேக கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள்.

இந்த நிலையில் ராமலிங்கம் தன்னிடம் இருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள அமெரிக்க பத்திரங்களை பணமாக மாற்ற சென்னையில் உள்ள ஒரு முன்னணி தனியார் வங்கி மற்றும் அரசு வங்கியை நாடினார்.

பொதுவாக அமெரிக்க டாலர்களை மாற்ற வரும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் மலர் தூவி வரவேற்காத குறையாக அமர்க்களமாக வரவேற்கும்.
ராமலிங்கத்தின் ரூ. 27 ஆயிரம் கோடி அமெரிக்க பத்திரத்தை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். பத்திரங்கள் உண்மையானதுதானா? என்று பரிசோதித்து விட்டு பணம் தருவதாக சொல்லி இன்று போய் நாளை வாருங்கள் என்று அனுப்பி வைத்தனர்.

இத்தனை கோடி பணமா? என்று அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரிகள் வருமான வரித்துறையின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.
திடுக்கிட்டு கண்விழித்த வருமான வரித்துறையினர் தாராபுரத்துக்கு படையெடுத்தனர். 16 வாகனங்களில் மும்பை, சென்னை, கோவை, ஈரோட்டை சேர்ந்த அதிகாரிகள் ராமலிங்கம் வீட்டை கடந்த 31-ந்தேதி முற்றுகையிட்டு அதிரடி சோதனை நடத்தினார்கள். காலை 8 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 8 மணிக்கு மேலும் நீடித்தது.

அவரது வீட்டில் இருந்து லேப்டாப், 5 பைல்கள், ரூ. 27 ஆயிரத்து 500 கோடி மதிப்புள்ள அமெரிக்க பத்திரங்களை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். ஆனால் பணம் மட்டும் ரூ. 5 ஆயிரத்து 500 மட்டுமே கிடைத்தது.

அதிகாரிகள் வங்கிகளில் பணபரிவர்த்தனை பற்றி ஆய்வு செய்து கணக்குகளை முடக்கினார்கள். லாக்கர்களும் சீல் வைக்கப்பட்டன.

சென்னை வருமான வரித்துறை அலுவலகத்துக்கு ராமலிங்கத்தை நேரில் அழைத்து துருவி துருவி விசாரித்தார்கள். அனைத்து கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் சொன்ன ராமலிங்கம், இவ்வளவு பணமும் எனது உழைப்பு, அறிவு, சொந்த முயற்சியால் வந்தது என்று அதிகாரிகளிடம் சாதாரணமாக கூறினார். அதிகாரிகள் அதிர்ந்தார்கள். கடலை வியாபாரியிடம் ரூ. 27 ஆயிரம் கோடி பணமா? என்றதும் பத்திரிகைகள் படம் பிடிக்க விசாரணை அலுவலகத்தை சூழ்ந்தார்கள்.

ஆனால் அதிகாரிகள் நைசாக பின்வாசல் வழியாக ராமலிங்கத்தை காரில் அழைத்து சென்று சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இறக்கிவிட்டு சென்றார்கள்.
மீண்டும் அழைப்போம்! விசாரிப்போம்! என்று அவரிடம் சொல்லி அனுப்பினார்கள். எப்போது அழைத்தாலும் நான் வருகிறேன் என்றபடி தாராபுரத்துக்கு புறப்பட்டு சென்றார்.

லட்சக்கணக்கில் பணம் வைத்திருந்தாலே கிடுக்கிபிடி போட்டு விசாரிக்கும் அதிகாரிகள் கண்களில் கோடிக்கணக்கில் பணம் புரண்டது தெரியாமல் போனது எப்படி? பெரும்புள்ளிகளின் பினாமியாக இந்த பத்திரங்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததா? தேச பாதுகாப்பு இவ்வளவுதானா? உண்மைகள் வெளிச்சத்துக்கு வருமா? என்ற பல விதமான கேள்விகளோடு பொதுமக்கள் விழி மூடாமல் தாராபுரத்தை உற்று நோக்கி கொண்டிருக்கிறார்கள்!

படித்தது 8-ம் வகுப்பு பேசுவது 5 மொழிகள்

ராமலிங்கம் படித்தது வெறும் 8-ம் வகுப்புதான். ஆனால் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய 5 மொழிகளும் அவருக்கு அத்துபடி. 5 மொழிகளிலும் சரளமாக பேசி வெளுத்து வாங்குகிறார். அதை கேட்டு அதிகாரிகளே வியந்து பேனார்கள்.

கருத்துகள் இல்லை: