Pages

வெள்ளி, ஏப்ரல் 12, 2013

சூரிய கிரகணம்

பூரண சூரிய கிரகணம் நம்மை பிரமிக்க வைக்கிற இயற்கை அதிசயம். சில நிமிஷங்கள் சூரியன் முற்றிலுமாக மறைக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை எவ்வளவு தடவை பார்த்தாலும் சலிப்புத் தட்டாது.

வருகிற 14 ஆம் தேதி பூரண சூரிய கிரகணம்  நிகழ்கிறது. இது இந்தியாவில் தெரியாது. ஆனால் ஆஸ்திரேலியாவின் வட கிழக்குப் பகுதியில் தெரியும். வட கோடியில் உள்ள கெய்ர்ன்ஸ் என்ற நகரம் மிக வாய்ப்பான இடம் என்பதால் பூரண சூரிய கிரகணத்தைக் காண ஏராளமான பேர் அங்கு குவிய ஆரம்பித்துள்ளனர்.சூரியன் உதயமாகி சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பின் சூரியன் சுமார் 2 நிமிஷ நேரம் முற்றிலுமாக மறைக்கப்படும். அந்த நேரத்தில் சூரியனை ஆராயவும் விரிவாகப் படங்களை எடுக்கவும் உலகின் பல ப்குதிகளிலிருந்து விஞ்ஞானிகள் ஏற்கெனவே கெய்ர்ன்ஸ் நகருக்கு வந்து சேர்ந்து விட்டனர்.சர்வதேச வானவியல் சங்கத்தில் சூரிய கிரகண ஆராய்ச்சிக்கென தனி பிரிவு உள்ளது. அதன் தலைவரான ஜே பாசாஷோப் சூரிய கிரகண நிபுணர். எங்காவது சூரிய கிரகணம் என்றால் இவர் உடனே கிளம்பி விடுவார். இதுவரை அவர் 55 சூரிய கிரகணங்களை ஆராய்ந்துள்ளார். இப்போதைய சூரிய கிரகணத்தை ஆராய அவர் விசேஷக் கருவிகளுடன் முகாம் போட்டுள்ளார்.சூரிய கிரகணத்தை இப்படி விழுந்து விழுந்து ஆராய்வானேன்?சூரியனின் உட்புறத்தில் வெப்பம் 15 மிலியன் டிகிரி செண்டிகிரேட். ஆனால் அதன் வெளிப்புற வெப்பம் 6000 டிகிரி (செண்டிகிரேட்) தான். எனினும் சூரியனைச் சுற்றி அமைந்த சூரிய ஜோதி (Corona)  ஒரு மிலியன் டிகிரி வெப்பம் கொண்டதாக உள்ளது. இது ஏன் என்பதை அறிவதற்காகத் தான் சூரிய கிரகணத்தின் போது ஆராய்ச்சி நடத்துகின்றனர். சூரிய ஜோதி இவ்வளவு வெப்பம் கொண்டதாக இருப்பதற்கான காரணம் இன்னும் முற்றிலுமாகக் கண்டறியப்படவில்லை.தவிர, சூரிய ஜோதி எல்லா சமயத்திலும் ஒரே மாதிரி இருப்பது இல்லை. சூரியனில் கரும் புள்ளிகள் (Sunspots) அதிகமாக இருக்கும் காலத்தில் சூரிய ஜோதி சூரியனின் எல்லாப் புறங்களிலும் காணப்படுகிறது. சில சமயங்களில் இடது புறத்திலும் வலது புறத்திலும் மட்டுமே காணப்படுகிறது. ஆகவே தான் ஒவ்வொரு பூரண சூரிய கிரகணத்தின் போதும் எடுக்கப்படுகின்ற படங்கள் வெவ்வேறு விதமாக உள்ளன.இந்த சூரிய ஜோதி பிரும்மாண்டமானது. சூரியனின் மேற்பரப்பிலிருந்து இது பல லட்சம் கிலோ மீட்டர் தூரம் வியாபித்து நிற்கிறது. இது சூரியனின் வளி மண்டலம் போன்றது.சூரியன் தினமும் தலை காட்டுகிறது. தினமும் சூரிய ஜோதி தெரியாதா?    சூரிய கிரகணத்தின் போது மட்டும் என்ன புதிதாகத் தெரியப் போகிறது.என்று கேட்கலாம்.சூரியனின் பிரகாசம் காரணமாக சூரிய ஜோதியை மற்ற நாட்களில்  காண முடியாது. சூரியனின் ஒளித் தட்டை முற்றிலுமாக மறைத்தால் தான் சூரியனைச் சுற்றியுள்ள சூரிய ஜோதி தென்படும். ஆகவே பூமியிலிருந்து சூரியனை ஆராய்கின்ற பல டெலஸ்கோப்புகளில் சூரிய ஒளித்தட்டை மறைக்கின்ற தகடு ஒன்றைப் பொருத்திக் கொண்டு சூரிய ஜோதியை ஆராய்கின்றனர்.சூரியனை விரிவாக ஆராய விண்ணில் சோஹோ (SOHO) என்னும் சுருக்கமான பெயர் கொண்ட விண்கலமும் ஸ்டீரியோ என்னும் பெயர் கொண்ட இரு விண்கலங்களும் உள்ளன. சூரிய ஒளித் தட்டை மறைக்க இவற்றில் விசேஷ ஏற்பாடு உள்ளது. ஆகவே இவை சூரிய ஜோதியை அவ்வப்போது படம் எடுத்து அனுப்புகின்றன. ஆனால் சூரிய ஒளித் தட்டை மறைப்பதற்கு இவை எல்லாம் செயற்கை ஏற்பாடுகளே.சூரிய ஒளித் தட்டை மறைப்பதற்கு மிகச் சிறந்த இயற்கை ஏற்பாடு உள்ளது. அது தான் பூரண சூரிய கிரகணம். பூமிக்கும் சூரியனுக்கும் நேர் குறுக்காக வந்து நிற்கிற சந்திரன் சூரிய ஒளித்தட்டை முற்றிலுமாக மறைத்து விடுகிறது.இவ்விதம் சூரியன் மறைக்கப்படுகிற நேரம் சில நிமிஷங்களே. அந்த சில நிமிஷ வாய்ப்புக்காகத்தான் விஞ்ஞானிகள் எங்கெல்லாம் பூரண் சூரிய கிர்கணம் தெரியுமோ அந்த இடங்களுக்கு ஓடுகின்றனர்.சூரியனை சந்திரன் முற்றிலுமாக மறைக்கின்ற நேரம் இயற்கையின் விதிகளின்படி    ஒரு போதும் ஏழு நிமிஷம் 31 வினாடிக்கு மேல் நீடிக்க் முடியாது. ஆஸ்திரேலியாவில் 14 ஆம் தேதி நிகழும் பூரண சூரிய கிரகண்த்தின் போது சூரியன் இரண்டு நிமிஷமே மறைக்கப்படும். அந்த இரண்டு நிமிஷ நேரத்தில் சூரிய ஜோதியை பல்வேறு கருவிகளைப் பய்னப்டுத்தி ஆராய்வர். புகைப்படங்களையும் எடுப்பர்.இதில் விஞ்ஞானிகளுக்கு அதிர்ஷ்டமும் இருக்க வேண்டும். ப்ல மாத காலம் திட்டமிட்டு பல ஆயிரம் கிலோ மீட்டரைக் கடந்து ஓரிடத்துக்குச் சென்று திறந்த வெளியில் சூரியனை நோக்கி  எல்லாக் கருவிகளையும் ஆயத்தம் செய்து வானை நோக்கி சூரியன் முற்றிலும் மறைக்கப்படுகின்ற அந்த கண நேரத்துக்காகக் காத்திருக்கும் போது எங்கிருந்தோ வருகின்ற மேகங்கள் சூரியனை மறைத்து விடும்.  அத்தனை முயற்சியும் வீண். இவ்விதம் நிகழ்ந்து நொந்து போன விஞ்ஞானிகள் பலர் உண்டு.


சூரியனை சந்திரன் முற்றிலுமாக மறைத்து நிற்கிறது. மறைக்கப்பட்ட சூரியனைச் சுற்றி ஒளிர்வது தான் சூரிய ஜோதி.(corona)

கருத்துகள் இல்லை: