Pages

புதன், மார்ச் 27, 2013

காற்றில் கரையும் திருவையாறு அசோகா!

காற்றில் கரையும் திருவையாறு அசோகா!

திருவையாறு.  
காவிரிக் கரையோரம் அமைந்திருக்கும் இந்த அழகான ஊரின் பெயரை வாசிப்பதே இசை ரேகைகளை மனமெல்லாம் பரவச் செய்யும். நீண்ட இசை மரபைக் கொண்ட இந்த ஊரின் பெருமையை உலகம் அரை நூற்றாண்டுக்கு முன்னர் வரை இசையால் மட்டுமே அறிந்திருந்தது. ஆனால், நிகழ்காலத் திருவையாற்றின் கதையை அசோகாவை விட்டுவிட்டு எவரேனும் எழுத முற்பட்டால் அது ஒருபோதும் நிறைவடையாது. வெற்றுப் புகழ்ச்சியல்ல; அத்தனையும் உண்மை!

        
திருவையாறு தெற்கு வீதியில் அமைந்திருக்கும் அந்தப் பழமையான கடையைக் காலை 10 மணிக்குத் திறக்கிறார்கள். ஆனால், திறப்பதற்கு முன்னதாகவே காத்திருக்கிறது கூட்டம். வாழை இலையில், கொசுறாகக் கொஞ்சம் காரத்துடன் பரிமாறப்படும் அசோகாவை ஏதோ பசி நேரத்தில் சாப்பாடு சாப்பிடுவதுபோல் சுடச்சுடச் சாப்பிட்டு முடித்து, நிறைவுக்காக ஒரு காபியையும் குடித்து(!)  வீட்டுக்குப் பொட்டலமும் கட்டிக்கொண்டு வெளியேறுகிறது அந்தக் கூட்டம். காலையில் தொடங்கும் இந்த அட்டகாசம் இரவு 10 மணி வரை தொடர்கிறது. ஏதோ ஒரு நாள் மட்டும், ஒரு சிலர் மட்டும் அல்ல. நாள்தோறும், நூற்றுக் கணக்கானோர்!

தொடக்கத்தில், வண்டியில் கடையைக் கடந்து செல்லும்போது சுற்றுவட்டாரக்காரர்களைச் சாப்பிடவைத்த அசோகா ருசி, காலப்போக்கில் அதற்காகவே வண்டி கட்டிக்கொண்டு வரும் அளவுக்குக் கட்டிப்போட்டுவிட்டது. சுற்றுவட்டாரக்காரர்கள் மட்டுமல்ல; திருவையாறு இசை விழாவுக்கு வரும் பாடகர்கள் மட்டுமின்றி ரசிகர்கள் பலரும் கச்சேரி முடிந்ததும் அடுத்து தேடுவது அசோகாவைத்தான். அப்படி என்னதான் இருக்கிறது திருவையாறு அசோகாவில்?

இனிப்புப் பண்டங்களிலேயே இந்த அசோகாவின் விசேஷம் என்னவென்றால், இதைச் சாப்பிட வேண்டியதில்லை என்பதுதான். நாக்கில் பட்டாலே போதும்; காற்றில் இசை கரைவதுபோல அசோகா கரைந்துவிடும். சாப்பிடுபவர் செய்ய வேண்டியதெல்லாம் அதன் ருசியை மெய் மறந்து அனுபவிக்க வேண்டியது மட்டும்தான். சில பண்டங்களைச் சூடாக சாப்பிட்டால்தான் ருசிக்கும். சில பண்டங்களை ஆறவைத்துதான் சாப்பிட வேண்டும். அசோகாவோ எப்படிச் சாப்பிட்டாலும் ருசிக்கும். நெய், பாசிப் பருப்பு, மைதா, பால்திரட்டு, ஜாதிக்காய், முந்திரி, திராட்சை இன்னும் பல இத்யாதி கொண்டு தயாரிக்கப்படும் திருவையாறு அசோகாவின் தன்னிகரற்ற ருசிக்கு மற்றொரு முக்கியக் காரணம் காவிரித் தண்ணீர். அதனாலேயே, திருவையாறு தவிர்த்து வேறெந்த ஊரிலும் அசோகா பெயரெடுக்க முடியாமல் போய்விட்டது என்று சொல்வோரும் உண்டு.

திருவையாற்றில் இந்தச் சுவையான பாரம்பரியத்துக்கு வித்திட்டவர் பி.வி. ராமய்யர். தேர்ந்த சமையல் கலைஞரான ராமய்யருக்கு வழக்கமான ஐட்டங்களில் விருப்பமில்லை. எதையும் வித்தியாசமாகவே செய்து பழகிய அவர், தன் வாழ்வில் கண்டறிந்த அரிய பண்டம்தான் இந்த அசோகா. அந்தக் காலத்தில் ராமய்யர் கடையின் அசோகாவும் அவருடைய மற்றொரு கைப்பக்குவமிக்க தயாரிப்பான தூள் பஜ்ஜியும் இந்த வட்டாரத்தில் ரொம்பப் பிரபலம். ராமய்யர் காலத்துடன் தூள் பஜ்ஜி போயிற்று. அசோகாவை, காலம் 'ஆண்டவர் கடை' மூலம் மீட்டெடுத்தது. ஒரு சின்ன இடைவெளிக்குப் பின் அதே கட்டடத்தில் ராமய்யரின் அதே கைப்பக்குவம், அதே சிறப்புமிக்க உபசரிப்புடன் 'ஆண்டவர் கடை'யில் அசோகா பாரம்பரியம் தொடர்கிறது. கடை உரிமையாளர் கோவி. கணேசமூர்த்தி கடைக்கு வரும் ஒவ்வொருவரையும் இரு கைகளையும் கூப்பி வணங்கி வரவேற்று உபசரிக்கிறார். "எந்த மாற்றத்தையும் புகுத்தாமல் பாரம்பரியமான அதே முறையில் அதே தரத்தில் அசோகா தயார் செய்கிறோம். மற்றபடி, ஊர்வாகுக்கொண்ட எந்தப் பண்டமும் ருசிக்கும். அசோகாவைப் பொறுத்த அளவில் அதில் திருவையாற்றுவாகு கலந்திருக்கிறது. அதுதான் ருசி'' என்கிறார் கணேசமூர்த்தி.

உண்மைதான். அசோகாவில் திருவையாற்றுவாகு இருக்கிறது. திருவையாற்றிலிருந்து புறப்படும்போது வீட்டுக்கு வாங்கி வந்த அசோகா பொட்டலத்தைப் பிரித்ததும் மனம் திருவையாற்றுக்குச் செல்கிறது. காற்றில் கரைகிறது மனம், இசை, அசோகா!

கருத்துகள் இல்லை: