சூரிய மண்டலத்தில் சூரியனை சுற்றும் கிரகங்களில் சனி முக்கியமான ஒன்றாகும். மொத்தமுள்ள எட்டு கிரகங்களில் வியாழன் தான் மிகப் பெரியது. சனி அதற்கு அடுத்த இடத்தை வகிக்கிறது.
சனி கிரகத்தை வானில் காண்பதற்கு டெலஸ்கோப் அல்லது பைனாகுலர்ஸ் தேவையில்லை. வெறும் கண்ணால் எளிதில் காணலாம். ஆனால் அது ஒளிப்புள்ளியாகத் தான் தெரியும். சனி கிரகத்தின் வளையங்க்ள் தெரியாது.மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலிருந்து வானில் தெரிகின்ற கிரகங்களை ஆராயத் தொடங்கினான். வானில் ஓர் இடத்தில் தென்படுகின்ற ஒரு கிரகம் அதே இடத்துக்கு மறுபடி வந்து சேர எவ்வளவு ஆண்டுகள் ஆகின்றன என்பதைக் கணக்கிடலானான்.வெறும் கண்ணால் பார்த்தால் தெரிகின்ற புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்து கிரகங்களும் வானில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும். இவற்றில் சனி கிரகம் தான் மிக மெதுவாக நகருகிறது என்று ஆதி நாட்களில் கண்டறிந்தார்கள். ஆகவே சனி கிரகத்துக்கு சனைச்சர (शनैश्चर) என்று பெயர் வைத்தன்ர். இது சம்ஸ்கிருத மொழியிலான சொல். அதற்கு 'மெதுவாகச் செல்கின்ற(து)வன்' என்று பொருள். அப்பெயர் காலப்போக்கில் சனைச்சரன் ஆகியது. பின்னர் சுருக்கமாக சனி என்று அழைக்கப்படலாயிற்று.சனி கிரகம் சூரியனை ஒரு தடவை சுற்றி முடிக்க 29.5 ஆண்டுகள் ஆகின்றன. இத்துடன் ஒப்பிட்டால் வியாழன் கிரகம் சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க 11.86 ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறது. கெப்ளர் (Kepler) என்ற ஜெர்மன் வானவியல் நிபுணர் கண்டறிந்து கூறிய விதிகளின்படி ஒரு கிரகம் எந்த அளவுக்கு சூரியனிலிருந்து மிக அப்பால் உள்ளதோ அந்த அளவுக்கு அது தனது சுற்றுப் பாதையில் மெதுவாகச் செல்லும். சூரிய மண்டலத்தில் சனி கிரகம் வியாழனுக்கு அப்பால் ஆறாவது வட்டத்தில் அமைந்துள்ளது.
நாம் காணும் வானில் சூரியனும் சந்திரனும் செல்கின்ற பாதையில் தான் கிரகங்களும் நகர்ந்து செல்கின்றன. இப்பாதைக்கு வான் வீதி (zodiac) என்று பெயர். அடையாளம் காண்பதற்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த நாளிலேயே வானவியலார் இதை 12 ராசிகளாகப் பிரித்தனர். இந்த ராசிகள் நட்சத்திரங்கள் அடங்கியவை. இந்த ராசிகளின் எல்லைகள் நாமாக கற்பனையாக ஏற்படுத்திக் கொண்டவை. கிரகங்கள் நகர்ந்து செல்லும் போது இயல்பாக இடம் மாறிக் கொண்டிருக்கும். ஒரு கிரகம் சிம்ம ராசியில் இருப்பதாக வைத்துக் கொண்டால் அக்கிரகத்துக்குப் பின்னால் பல கோடி கிலோ மீட்டருக்கு அப்பால் சிம்ம ராசி நட்சத்திரங்கள் இருக்கும்.
சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து திருவான்மியூருக்கு ஆட்டோவில் வந்து கொண்டிருக்கிற ஒருவர் திருவான்மியூரில் இருக்கிற தனது உறவினரிடம் செல் போனில் சில நிமிஷங்களுக்கு ஒரு முறை எல்.ஐ.சி யில் இருக்கிறேன், ராயப்பேட்டையில் இருக்கிறேன், மயிலாப்பூரில் இருக்கிறேன் என்று தாம் கடக்கும் இடங்களை வரிசையாகச் சொல்லிக் கொண்டே வருவதாக வைத்துக் கொள்வோம். கிரகங்களும் இவ்விதமாகத் தான் வானத்து ராசிகளைக் கடந்து செல்கின்றன.அந்த வகையில் வானில் கன்யா ராசி எனப்படும் பகுதி வழியே இதுவரை நகர்ந்து கொண்டிருந்த சனி கிரகம் கன்யா ராசியின் கற்பனையான எல்லையைக் கடந்து துலா ராசி வழியே நகர்ந்து செல்லத் தொடங்கியுள்ளது. இதுவே சனிப் பெயர்ச்சி ஆகும். இதிலிருந்து எந்த கிரகமும் ஒரு ராசியில் ஒரே இடத்தில் நிலையாக இருப்பது கிடையாது என்பதைப் புரிந்து கொண்டிருக்கலாம்.செவ்வாய், வியாழன் ஆகிய கிரகங்களை நீங்கள் டெலஸ்கோப் மூலம் பார்த்தால் ஒளி வட்டமாகத் தெரியும். ஆனால் சனி கிரகம் மட்டும் அலாதியானது. அதற்கு சனி கிரகத்தின் வளையங்க்ளே காரணம். டெலஸ்கோப் மூலம் பார்த்தால் சனி கிரகமானது ஒரு வாஷர் நடுவே உள்ள கோலிக்குண்டு மாதிரியாகக் காட்சி அளிக்கும்.
வியாழன், யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றுக்கும் வளையங்கள் உள்ளன என்றாலும் அவை மெல்லியவை. ஆகவே அவை எடுப்பாகத் தெரிவதில்லை. ஆனால் சனி கிரகத்தின் வளையங்கள் கண்ணைக் கவர்கின்றன.சனி கிரகத்தை வடிவில் சிறியவையான கோடானு கோடி பனிக்கட்டி உருணடைகள் சுற்றி வருகின்றன. இவை தான் வளையங்களாகக் காட்சி அளிக்கின்றன. பூமியும் சனியும் எந்தெந்த இடங்களில் உள்ளன, அத்துடன் இரண்டும் சம தளத்தில் உள்ளனவா என்பதைப் பொருத்து சனி கிரகம் தனது வளையங்களுடன் வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு விதமாகக் காட்சி அளிக்கிறது. இந்த பனிக்கட்டி உருண்டைகள் அனைத்தும் வியக்கத்தக்க ஒழுங்குடன் சனி கிரகத்தைச் சுற்றி வருவது அற்புதமான காட்சியாகும்.(காண்க படம் -1 மற்றும் படம்-2). இப்படங்கள் பூமிக்கு உயரே பறக்கும் ஹ்ப்புள் (Hubble) டெலஸ்கோப் வெவ்வேறு சமயங்களில் எடுத்தவை.பூமிக்கு ஒரு சந்திரன் தான் உண்டு. ஆனால் சனி கிரகத்துக்குப் பெரியதும் சிறியதுமான 62 சந்திரங்கள் உள்ளன. இவற்றில் பலவும் வடிவில் சிறியவை. சனி கிரகம் சூரியனிலிருந்து சுமார் 140 கோடி கிலோ மீட்ட்ர் தொலைவில் உள்ளது. அவ்வளவு தொலைவில் சூரியனின் வெப்பம் உறைக்காது. ஆகவே சனி கிரகம் உறைந்த பனிக்கட்டி உருண்டையாக உள்ளது (சூரியனிலிருந்து பூமி உள்ள தூரம் சுமார் 15 கோடி கிலோ மீட்டர்).1979 ஆம் ஆண்டில் தொடங்கி பயனீர்--1, வாயேஜர்-1, வாயேஜர்-2 ஆகிய ஆளில்லா விண்கலங்கள் சனி கிரகத்தை ஆராய்ந்தன. 1997 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்டு 2004 ஆம் ஆண்டில் சனி கிரகத்தை சென்றடைந்த காசினி-ஹைகன்ஸ் (Cassini-Huygens) விண்கலம் தொடர்ந்து சனி கிரகத்தை ஆராய்ந்து படங்களை அனுப்பி வருகிறது.ரோமானிய புராணத்தில் சனி விவசாயத்தின் கடவுளாகக் கருதப்படுகிறார். இந்திய ஜோசிய முறையில் சனி கிரகம் பாபக் கிரகமாக, கெடுதல் செய்வதாகக் கருதப்படுகிறது.ஜோசியத்தில் நம்பிக்கை வைப்பது அவரவர் விருப்பம். ஆனால் ஜோசியத்தில் நம்பிக்கை உள்ளவர்களும் சரி, நம்பிக்கை இல்லாதவர்களும் சரி, சனி கிரகத்தின் பெயரையே வசைச் சொல்லாக ஆக்கி விட்டனர். 'சனியன் பிடித்த பஸ் தினமும் லேட்டா வருது'. 'சனியன் பிடித்த மழை எப்ப நிக்குமோ தெரியல?'. இப்படியாக எதற்கெடுத்தாலும் சனி கிரகத்தைத் திட்டித் தீர்ப்பது வேதனைக்குரியதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக