றெக்கை' கட்டிப் பறக்கும் ரயில்!
கன்னியாகுமரியிலிருந்து தில்லிக்கு ரயிலில் சென்றால் இப்போது எவ்வளவு மணி நேரம் ஆகும்? திருக்குறள் எக்ஸ்பிரஸில் போனால் 50 மணி நேரம். சீனாவில் இப்போது அதிவேக ரயில் ஒன்றை விட்டிருக்கிறார்கள். அதேபோன்ற ரயிலில் போனால்... நம்புங்கள்... வெறும் 8 மணி நேரம்தான். அந்த ரயிலில் போனால், மதுரையிலிருந்து சென்னைக்கு வெறும் ஒன்றரை மணி நேரம் 6 நிமிடத்தில் வந்துவிடலாம்.
கடந்த மாதம் 26 ஆம் தேதி சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து குவாங்சூ என்ற நகருக்கு விடப்பட்டது
எ 801 என்ற ரயில்.
இரண்டு ஊர்களுக்கும் இடைப்பட்ட தூரம் 2,298 கி.மீ. மணிக்கு சுமார் 300 கி.மீ. வேகத்தில் பறக்கும் இந்த ரயிலில் முதல் நாளிலேயே பயணம் செய்ய ஆவலாக முண்டியடித்துக் கொண்டு 2000 பேர் முன்பதிவு செய்திருந்தனர்.
இப்படிப்பட்ட அதிவேக ரயில்களை விடுவது
சீனாவுக்குப் புதியதல்ல. 2008 இல் பெய்ஜிங்குக்கும், டியான்ஜின் நகருக்கும் இடையில் அதிவேக ரயில் ஒன்று விடப்பட்டது.
இந்த பெய்ஜிங் - குவாங்சூ ரயில் 300 கி.மீ. வேகத்தில் பறக்கிறது என்பதற்காக, எங்கேயும் நிற்காத நம்ம ஊர் "பாயின்ட் டூ பாயின்ட் பஸ்' போன்ற ரயில் என்று நினைத்துவிடாதீர்கள். 35 இடங்களில் அது நின்று... நின்று செல்கிறது.
இந்த ரயில் பாதையை அமைக்கவும், பாதுகாக்கவும் சீன அரசு ஏறக்குறைய 2,71,959 கோடி ரூபாய்களைச் செலவிட்டிருக்கிறது. இனிமேல் இந்த ரயில் பாதைகளில் இப்போது விட்டிருப்பதைப் போன்ற அதிவேக ரயில்கள் ஒன்றல்ல... இரண்டல்ல... முந்நூறு... இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் சர்சர்ரென்று மாறி மாறிப் பறக்கவிருக்கின்றன.
எதற்கு இவ்வளவு செலவு? இதற்குப் பதிலாக விமான சேவைகளையே விரிவுபடுத்தியிருக்கலாமே? என்று கேட்கிறீர்களா?
சீனாவின் அடிக்கடி மாறும் வானிலை, பயமுறுத்தும் சூறாவளி, தாக்கும் புயல் ஆகியவைதான் சீன அரசின் கவனத்தை அதி வேக ரயில்களின் மீது திருப்பியிருக்கின்றன. அதைவிட முக்கியமான காரணம் ஒன்றுண்டு.
சீனாவின் வளர்ந்துவரும் பொருளாதார வளர்ச்சியில் சில நடுத்தர நகர்ப் பகுதிகள் விடுபட்டுப் போய்விட்டனவாம். அந்த நகரங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த அதிவேக ரயில் பாதை உதவுமாம்.
ஒரு பயணிகள் ரயில் சேவையை நிறுத்தினால், அதற்குப் பதிலாக ஆறு சரக்கு ரயில்களை சீன அரசு விடுகிறது.
இந்த எ 801 ஆறு மாதத்துக்கு முன்பே "றெக்கை' விரித்துப் பறந்திருக்க வேண்டியது, கடந்த மார்ச் மாதத்தில் விடாமல் பெய்த பலத்த மழையின் காரணமாக இரண்டு புல்லட் ரயில்கள் மோதி 40 பேர் இறந்துவிட்டனர். அதனால்தான் கொஞ்சம் தாமதம்.
சரி இந்த ரயிலுக்குக் கட்டணம் எவ்வளவு கேட்கிறீர்களா? அதுதானே நமக்கு முக்கியம்? 139 டாலர். அதாவது 7,638 ரூபாய்!
விமானத்திலேயே போய்விடலாம் என்கிறீர்களா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக