Pages

திங்கள், செப்டம்பர் 10, 2012

பழமொழிகளில் பெண்கள்

சமுதாயத்தில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் நடைபெற்ற அல்லது சந்தித்த ஒரு
நிகழ்ச்சியினைக் கூற சுருக்கமான முறையினை அறிஞர்கள் கையாண்டனர்.
அவர்களைப் பின்பற்றி மற்றவர்களும் அம்மொழியினைத் திரும்பத் திரும்ப
கூறும்போது பழமொழி தோன்றிற்று. உலகமொழிகள் பெரும்பாலனவற்றிலும்
பழமொழிகளாகவே கருதப்படுகின்றன. உண்மை நடப்புகளை ஆதாரமாகக் கொண்டு
முன்னோர் கூறிய அனுபவ மொழியாதலால் அவற்றை அனுபவ மொழி என்றும், முதுமொழி
என்றும், பழமொழி என்றும் அழைக்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் இதனை
"proverb" என்று கூறுவர். சமுதாய நிகழ்வுகளைப் பிரதிபலித்துக்
காட்டக்கூடிய காலக் கண்ணாடியாகவும் விளங்குகின்ற பழமொழிகள் பெண்களின்
நிலையினை எவ்வாறு சித்தரிக்கின்றன என்பதை ஆய்கிறது இக்கட்டுரை.
தாய்மையின் சிறப்பு:-
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வணங்கத் தக்கவர்களின் வரிசையில் முதலில்
வைத்துப் போற்றப்படுபவர் தாய், பிள்ளையைப் பெற்று வளர்த்து ஆளாக்குவதில்
தாயின் பங்கு அளவிடுதற்கரியது, பிறந்தது முதல் ஒவ்வொரு பருவத்திலும் ஆண்,
பெண் இருபாலருக்கும் தாயின் துணை அவசியமாகிறது. என்பதை "தாய் முகங்காணாத
பிள்ளை மழை முகங்காணாத பயிர்" என்ற பழமொழி வெளிப்படுகிறது. பாதுகாப்பற்ற
சமூகச் சூழலில் ஆண் பிள்ளையைக் காட்டிலும் பெண் பிள்ளையை வளர்ப்பது
தாய்க்கு சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது. எனவே தாயின்றி பெண்பிள்ளை
வளர்வதும் வாழ்வதும் கடினம் என்பதை "தாய் செத்தாள் மகள் திக்கற்றாள்"
என்ற பழமொழி கூறுகிறது.
பெண் வளர்ந்து பருவம் அடைந்தபிறகு திருமணம் செய்து கொடுப்பது உலக வழக்கு,
திருமணத்திற்குப் பெண் எடுப்பதற்கு முன்பு பெண்ணின் குலம், கோத்திரம்
என்று எல்லா நிலைகளையும் விசாரித்தப்பிறகே மாப்பிள்ளை வீட்டார் பெண்
எடுக்க சம்மதிப்பர். பெண்பிள்ளையின் வளர்ப்பு, தாயின் பொறுப்பாக
இருப்பதால் தாயை வைத்தே பெண்ணின் குணத்தை அறியலாம் என்ற வழக்கமும்
சமுதாயத்தில் நிலவியது. "தாயைப் பார்த்து பெண்ணைக் கொள்ளு" "பாலைப்
பார்த்து பசுவைக் கொள்ளு, என்ற பழமொழியும், "தாயைத் தண்ணீர் துறையில்
பார்த்தால் மகளை வீட்டில் பார்க்க வேண்டியதில்லை", என்ற பழமொழியும்
தாய்மையின் பொறுப்புணர்ச்சியை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
கணவன் மனைவி உறவு:-
மாறி வரும் சமுதாயத்தில் நகர்ப்புறத்திலும், கிராமப்புறங்களிலும்
திருமணங்கள் வரதட்சணையின் அளவைப் பொறுத்து நிச்சயிக்கப்படுகின்றது. கோடான
கோடி செல்வம் இருந்தாலும் குடும்பம் நடத்துவதற்குக் குணமுள்ள பெண்ணே
தகுதியானவள் என்று முன்னோர் கூறிய அறிவுரையை, கோடி தனம் இருந்தாலும்
குணமில்லா மங்கையருடன் கூடாதே என்ற பழமொழியால் அறியலாம். புண்ணியம்
செய்தவனுக்கே சிறந்த பெண் மனைவியாக அமைவாள் என்பதும் மக்களின் நம்பிக்கை,
எனவேதான். பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு, பண்டம் வாய்க்கும்
பாக்கியவானுக்கு என்கின்றார். கணவன் கட்டுக்கடங்காமல் ஊர் சுற்றித்
திரிபவனாக இருந்தாலும் பண்புள்ள பெண் மனைவியாக அமையும்போது கணவனும்
ஒழுக்க சிலராக மாறிவிடுவதுண்டு, இதனை பெண்டாட்டி கால்கட்டு பிள்ளை
வாய்க்கட்டு என்ற பழமொழி அறிவிக்கிறது.
திருமணமானபின் கணவனையே தெய்வமாக எண்ணி வழிபடும் முறை நாட்டுப்புறப்
பெண்களிடம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. இதனை, கணவனுக்கு மிஞ்சின
கடவுள் இல்லை. கடலுக்கு மிஞ்சிய ஆழம் இல்லை என்ற பழமொழியால் அறியலாம்.
கணவன் மனைவியருக்கிடையே உறவுநிலை சுமூகமாக நடைபெற வேண்டும். மனைவி கணவனை
மதிக்காமல் நடந்து கொண்டாலும். கணவன் மனைவி மீது வெறுப்பைக் காட்டினாலும்
குடும்ப அமைப்பு சிதைந்து போகும் அபாயம் ஏற்படலாம். வேண்டாத பெண்டாட்டி
கைபட்டால் குற்றம் கால்பட்டால் குற்றம் அடங்காப் பெண்சாதியாலே
அத்தைக்கும் நமக்கும் பொல்லாப்பு போன்ற பழமொழிகள் கணவன் மனைவி உறவு
பிளவுபட்டால் ஏற்படும் நிலையை உணர்த்துகிறது. மேலும் மனைவியின்
மேன்மையைக் கணவன் அறிந்து நடக்க வேண்டும் என்பதும் குடும்ப அமைப்பு
சிதையாமல் காக்க வேண்டிய பொறுப்பு மனைவிக்கு உரியது என்பதும்
இப்பழமொழிகள் மூலம் பெறப்படுகின்றது.
மாமியார் மருமகள் உறவுநிலை:-
இல்லறத்தில் மாமியாரும் மருமகளும் ஒற்றுமையாக வாழ்கின்றனர் என்பது
எங்கும் காண இயலாத ஒன்றாக இருக்கிறது. மகனின் அன்பு தன்னிடம் இருந்து
பிரிந்து செல்வதை தாய் விரும்பாததாலும், கணவன் தன்மீது காட்டும் அன்பை
மாமியார் தடுக்கிறாள் என்று மருமகள் எண்ணுவதாலும் இருவருக்கிடையே
வெறுப்புணர்வு தோன்றுகிறது. இதுவே மாமியார், மருமகள் உறவுநிலைப்
போராட்டத்திற்குக் காரணமாக இருக்கிறது. மாமியார் மெச்சிய மருமகள் இல்லை
மருமகள் மெச்சிய மாமியாருமில்லை என்ற பழமொழி மாமியார் மருமகள் உறவு
நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறது. மாமியார் மருமகள் இணைந்து வாழும்
கூட்டுக் குடும்பத்திற்குள் மாமியார் தவறு செய்தால் அது அவளுக்குப்
பெரிதாகத் தெரிவதில்லை. மருமகள் சிறு தவறு செய்தாலும் அதனைப் பெரிதாக்கி
மருமகள் மீது பழிசுமத்தி மகிழ்வாள் மாமியார் என்பதை மாமியார் உடைத்தால்
மண்கலம், மருமகள் உடைத்தால் பொற்கலம் என்ற பழமொழி தெரிவிக்கிறது,
அன்பற்று இருக்கும் மாமியாரிடம் மருமகள் மரியாதையாக நடந்து கொண்டாலும்
அவள் மீது குற்றம்தான் சுமத்துவாள் என்பதை, அன்பற்ற மாமியாருக்கு
கும்பிடுகிறதும் குற்றம் தான் என்ற பழமொழியால் அறியலாம். இருப்பினும்
ஆணிக்கு இணங்கின பொன்னும், மாமிக்கு இணங்கின பெண்ணும் அருமை என்ற பழமொழி
மாமியார் எவ்வளவு கொடுமை செய்தாலும் அவளுக்கு அடங்கி நடப்பவள்தான் சிறந்த
மருமகள் என்று கருதும் நிலை இருக்கின்றது என்பதைக் காட்டுகிறது.
கைம்பெண்நிலை:-
விதவைப் பெண்களைச் சமுதாயத்திலிருந்து ஒதுக்கி வைத்துப் பார்க்கும்
பழக்கம் இன்றும் மக்களிடையே காணப்படுகிறது. மங்கல நிகழ்வுகளில் பங்கு
பெறுவும் அப்பெண்களை அனுமதிப்பதில்லை, நாட்டுப்புற மக்களிடையே இவ்வுணர்வு
சற்று மிகுதியாகவே காணப்படுகிறது. கைம்பெண்களுக்குப் பெண்பிள்ளை
இருந்தால் அப்பெண்ணை வளர்த்து திருமணம் செய்து கொடுக்கும் வரை மிகவும்
எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது. மக்களுக்கு செய்யும்
சிரில் ஏதேனும் குறை இருந்தால் தாயின் கைம்மை நிலையைச் சுட்டிக்காட்டி
பழி சுமத்துவது சமூக வழக்கம் ஆதலால், கைம்பெண்டாட்டி பெற்ற பெண் ஆனாலும்
செய்யும் சடங்கு சிராகச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
பெண்களை அடக்கி வைத்திருந்தமை:-
சங்க காலத்தில் பெண்கள் கல்வியறிவுடன் திகழ்ந்து ஆணுக்கு நிகராக நின்று
கவி இயற்றும் புலமையும் பெற்றிருந்தனர். இருப்பினும் நாட்டுப்புறங்களில்
பெண்கள் அடக்கியே ஆளப்பட்டிருக்கின்றனர், என்பதை பழமொழிகள்
வெளிப்படுத்துக்கின்றன. அடக்கமே பெண்ணுக்கழகு என்றும், எண்ணக் கற்று
எழுத்தற வாசித்தாலும் பெண் புத்தி பின் புத்தி என்றும் கூறி பெண்களின்
அறிவை ஆண்டிருக்கின்றனர்.
பெண்ணை யார் என்ன பேசினாலும் அவள் மௌனமாகத்தான் இருக்க வேண்டும் என்றும்,
எதிர்த்துப் பதில் பேசும் பெண் பண்பற்றவள் என்றும் இச்சமுதாயம் எண்ணியது.
அவ்வாறே சிரித்துப் பேசுகின்ற பெண்கள் நம்பிக்கைக்குரியவர்கள் அல்லர்
என்ற கருத்தும் மக்களிடையே நிலவுகிறது. பெண்டிற்கழகு எதிர்பேசாதிருத்தல்
என்றும், அழுகிற ஆணையும் சிரிக்கிற பெண்ணையும் நம்ப கூடாது. என்றும்
வழங்கப்பட்டு வரும் பழமொழிகள் இதற்கு உதாரணமாக அமைந்திருக்கிறது. இவ்வாறு
பெண்களின் சுதந்திரத்திற்குத் தடை விதித்து அவர்கள் மீது அடக்கு
முறைகளைச் செலுத்தி வருவதை இன்றும் நாட்டுப்புற மக்களிடையே காண
முடிகின்றது.
நாட்டுப்புறக் கூறுகளில் ஒன்றான பழமொழிகளில் பெண்களின் பங்கு மிகுதியாக
இருக்கின்றது. பெண்களின் சிறப்புகளைப் பழமொழிகள் எடுத்துரைத்தாலும்
பெண்ணை இரண்டாந்தர குடிமகளாகச் சமுதாயம் எண்ணியிருக்கிறது என்பதையும்
சமுதாயத்தில் உரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்பட்ட நிலையில் பெண்கள்
வாழ்ந்திருக்கின்றனர் என்பதையும் எடுத்துரைக்கும் பழமொழிகளே பேரளவு
காணப்படுகின்றன.

கருத்துகள் இல்லை: