Pages

புதன், ஜூலை 04, 2007

சத்தியமே உன் விலை என்ன?


சத்தியமே உன் விலை என்ன? 
அசோக சக்கரவர்த்தியின் தந்தை பிம்பிசாரன் மகத நாட்டை ஆண்டு கொண்டிருந்த காலம். ஜைனமத ஸ்தாபகரான மஹாவீரர் அந்த வழியாகப் பயணித்துக் கொண்டிருந்தார். தலைநகரான பாடலிபுத்திரத்தின் புறப்பகுதியில் ஒரு தோட்டத்தில் குடில் அமைத்திருந்தார். தினமும் மக்கள் கூட்டம் கூட்டமாகத் தோட்டத்தின் பக்கம் போவதைக் கண்டார் அரசர். அவர்கள் மஹாமுனிவரின் தரிசனத்திற்காகப் போய்க் கொண்டிருக்கின்றனர் என்பதை அறிந்து கொண்டார். பிம்பிசாரனுக்கு ஒரே வியப்பு ! ராஜாவாகிய நான் கூறியனுப்பினால் தான் யாராவது அரண்மனை முற்றத்திற்கு வருகின்றனர். மற்றபடி யாரும் வருவதில்லை. அப்படியிருக்கும்போது இந்த முனிவரை மட்டும் மக்கள் இப்படி போய்ப் பார்க்கும் மர்மம் என்ன? என யோசித்தார். அரசர் முனிவரைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். மஹாவீரருக்கு சத்ய தரிசனம் ஆகியுள்ளதால், அவரைத் தரிசித்தால் எல்லா வளங்களும் கிடைக்கும் என்பதால் இவ்வளவு மக்கள் செல்கிறார்கள் என அறிந்தார். அதனால் அந்த சத்தியத்தை எப்படியாவது தான் அடைய வேண்டுமென பிம்பிசாரன் ஆசைப்பட்டார். ஒரு தட்டு நிறைய பொற்காசுகளை மந்திரிகளிடம் தந்து, சத்தியத்தை வாங்கி வரும்படி கூறி அனுப்பினார். சென்றவர்கள் வெறுங்கையுடன் திரும்பினர். முனிவர் அவர்களைப் பார்த்துப் புன்னகை செய்ததோடு சரி, ஒன்றும் கூறவில்லை ! பிறகு சக்கரவர்த்தி தானே புறப்பட்டார், சத்தியத்தை வாங்கி வருவதற்கு! அவர் பின்னால் வண்டி நிறைய செல்வமும் சென்றது. அனைத்தையும் முனிவரின் காலடியில் சமர்ப்பித்து, பிம்பிசாரன் தன் கோரிக்கையைத் தெரிவித்தார். முனிவர் அவரைப் பார்த்துப் புன்னகைத்தார்; அவ்வளவுதான். மன்னர் தான் கொடுத்த திரவியங்கள் அவருக்குக் குறைவாகப்பட்டது போ<லும்; அதனால்தான் மௌனம் சாதிக்கிறார் என்று எண்ணினார். ஒன்றாக இருந்த வண்டி இரண்டாயிற்று; நான்கு... பத்தாயிற்று. ஊஹூம் ! அப்போதும் முனிவரின் பதில் அதே புன்னகைதான் !
இறுதியில் பிம்பிசாரன் தன் தலையில் இருந்த கிரீடம், வாள், அரசு இலச்சினை மோதிரம் அனைத்தையும் அவரது அடிகளில் சமர்ப்பித்து, இப்போதாவது சத்தியத்தைத் தாருங்கள் எனக் கோரினார். மஹாவீரர் அமைதியாக, அரசே ! சத்தியத்தைத் தேடி நான் என் வாழ்நாளின் நாற்பது ஆண்டுகளைக் கழித்திருக்கிறேன். நானொரு ராஜகுமாரனாக இருந்தேன் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த சத்தியத்திற்காக நான் ராஜ்யத்தைத் தியாகம் செய்தேன். அதனால் இதை விற்க மாட்டேன்; தானமும் செய்ய மாட்டேன். ஒன்று சொல்கிறேன். உங்கள் நாட்டில் ஒருவர் இருக்கிறார். ஒருவேளை அவர் உங்களுக்கு உதவலாம். போய்ப் பாருங்கள் ! என்று சொல்லி, அந்த மனிதர் இருக்கும் இடத்தைச் சொன்னார் மஹாவீரர். பிம்பிசாரன் அந்த நபரைத் தேடிப் போனார். அம்மனிதர் ஒரு துப்புரவுத் தொழிலாளி. சேரியில் ஒரு குடிசையில் குடியிருந்தார். தங்கத் தேர் தன் வாசலில் வந்து நின்றதும் பரபரப்பாக ஓடி வந்தவர் அரசர் சொன்னதைக் கேட்டுப் பதிலளித்தார். மஹாபிரபு ! நான் ஒரு கூலிக்காரன். என்னிடம் சத்தியம் இருக்கிறது. எந்தப் பிரதிபலனும் இன்றி நான் அந்தச் சத்தியத்தை உங்களுக்குக் கொடுக்கத் தயார். ஆனால் நீங்கள் அதை ஏற்கத் தயாரா? என்று கேட்டார். பிம்பிசாரன், ஆமாம், நான் அதற்காக எவ்வளவு ஆவலுடன் இருக்கிறேன் தெரியுமா? என்று கேட்டார். அந்த ஏழை தெளிவாக, அரசே! உங்கள் உடல், மனம், புத்தி எல்லாம் பக்குவப்பட்டுள்ளதா? நான் இப்போது சத்தியத்தைப் பற்றிப் பேசினால் நீங்கள் கேட்கப்போவது வெறும் மொழி, வார்த்தைகளின் ஜாலம்தான். சத்தியத்தைச் சொற்களில் அடக்க முடியாது. தவிர நான் கண்ட, காணும் சத்தியம் உங்கள் சத்தியம் ஆகாது. சத்திய தரிசனம் ஒரு தனி மனிதனின் ஆத்மானுபவம். வார்த்தைகளால் விவரிப்பதல்ல என்றார். பிம்பிசாரன் தெளிவடைந்தார்.

கருத்துகள் இல்லை: