ஒரு சொந்தத் தொழிலை அல்லது வியாபாரத்தை துவக்கும் எண்ணம் எழுந்த உடனேயே, என்ன செய்யப்போகிறோம். பெயர், இடம், போன்றவற்றுடன் இணையாகவே நீங்கள் சிந்தித்துக்கொண்டேஇருக்க வேண்டிய ஒரு விஷயம் மூலதனம். முதலில் நீங்கள் துவக்கப் போகும் தொழிலுக்கு எவ்வளவு மூலதனம் முதல்கட்டமாக வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இதை நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் தொழில் அல்லது வியாபாரத்தின் அளவு பற்றிய எண்ணம் தெளிவாக இருந்தால் மட்டுமே தீர்மானிக்க முடியும். 'Size matters in success at early stages' இன்று இதைத்தான் சொல்லுகிறார்கள் வல்லுநர்கள்.
ஒரு சிறிய ஸ்டேஷனரி ஷாப் என்றால், மூன்று மாத விற்பனைக்கான ஸ்டாக் செய்யும் அளவிற்கு பணம் இருக்க வேண்டும். இதைத்தவிர ஓராண்டுக்கான இட வாடகை, உதவியாளர் சம்பளம், இதர செலவுகளுக்கு பணம் வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், முதல் ஆண்டு முழுவதுமே எதிர்பார்த்த வியாபாரம் இல்லை என்றாலும் கூட அதை நடத்த உங்கள் பணம் அவசியம். வங்கிகளில் கடன் வாங்க முடியாதா? முடியும். அதற்கான அடிப்படைத் தகுதிகளில் ஒன்று, நீங்கள் இட்ட மூலதனமும் அதை நீங்கள் கையாண்ட விதங்களும். அந்தக் காலகட்டம் வரை தாக்குப்பிடிக்க உங்கள் பணம் அவசியம். ஒரு சிறிய தொழிற்சாலை என்றால், அதற்குத் தேவையான இயந்திரங்கள் கட்டமைப்புகளுக்கு வங்கிக் கடன் பெற முடியும். ஆனாலும் அதற்கும் நீங்கள் முதலில் நீங்கள் கொண்டுவர வேண்டிய பணமும் (15% முதல் 25% வரை) தொடர்ந்து முதல் மூன்று மாத உற்பத்தி/விற்பனைச் செலவுகளை சமாளிக்க பணம் தேவை. இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும் அல்லது எங்கே இருந்து அறிந்து கொள்வது என்பது உங்கள் கேள்வியா?
மாவட்ட தொழில் மையங்கள் என்பது சிறுதொழில் துவக்குவதற்கு உதவி செய்யும் ஓர் அமைப்பு. மாநில அரசுகளின் தொழிற்துறை அந்த மாவட்டத்தின் முதன்மை வங்கியுடன் இணைந்து செயலாற்றும் அமைப்பு. இவர்களிடம் மாடல் புராஜக்ட் ரிப்போர்ட்கள் கிடைக்கும். இதை இலவசமாகவே பெறலாம். அதன் அதிகாரிகள், அந்த அமைப்பில் இருக்கும் வங்கி அதிகாரி அல்லது வங்கிகளால் பயிற்றுவிக்கப்பட்ட கவுன்சிலர்கள் உதவுவார்கள். ஆனால், இதையே முழுவதுமாக நம்பி அப்படியே செயல்படக்கூடாது. இந்தத் தகவலின் அடிப்படையில் நீங்கள், உங்கள் ஆராய்ச்சிகளை செய்யவேண்டும். இந்தத் தொடரின் துவக்கப் பகுதியில் சொல்லப்பட்ட, நீங்கள் துவக்கப்போகும் தொழிலைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இந்த மூலதனம் என்பது உங்களிடமிருக்க வேண்டும் அல்லது உங்களுக்கு அவசியமானபோது, உடனே கிடைக்கும்படி இருக்க வேண்டும். இது மிக மிக முக்கியம். அவசியமான மூதலீட்டுப் பணம் அவசியமான நேரத்தில் கிடைக்காது போனால், அது வியாபாரத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் பெரும் அபாயமாகக் கூட ஆகிவிடக்கூடும்.
முயற்சியை துவக்கிய அன்றே முழு முதலீடும் பணவடிவில் கையிருப்பாக வைத்திருக்க எல்லோராலும் முடியாது. ஆனால், வரப்போகும் பணம் வரும் நிலையில்தான் இருக்கிறது என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். உதாரணத்திற்கு உங்கள் முயற்சிகளுக்கு அவசியமானபோது, பணம் தந்து உதவ ஒரு குடும்ப நண்பர் அல்லது உறவினர் வாக்களித்திருந்தால் அது உங்கள் தேவையை சந்திக்கும் அளவில் தயாராக அவரிடம் இருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். உங்கள் மீது இருக்கும் அபிமானத்தினால் சொல்லப்படும் வார்த்தைகளாகக் கூட சில சமயங்களில் இருக்கலாம். மிகத் தெளிவாக அது உங்கள் மூலதனதிற்கான பணம், தாமதங்கள், தவிர்ப்புகள் ஏற்க இயலாதவை என்பதை சொல்லவேண்டும். உதவி செய்பவர்களிடம் அப்படியெல்லாம் இருக்க முடியுமா எனக் கருதினால், நீங்கள் புரிந்து கொள்ளவேண்டிய விஷயம், நாம் செய்யப்போவது தொழில் அது நம் வாழ்வை தீர்மானிக்கப் போகும் விஷயம் என்பதை. மேலும் தெளிவாக தேவைகளைச் சொல்லவும் முடிவுகளை தாமதப்படுத்தாமலிருக்கவும் இருப்பது தொழில்முனைவர்கள் கற்றுக் கொள்ளவேண்டிய பால பாடம்.
எவ்வளவு மூலதனம் என்பதை முடிவு செய்தவுடன் அதை எப்படி சேகரிப்பது என்பதை திட்டமிடவேண்டும். பணம் உங்களுடையதா அல்லது குடும்பத்தினருடையதா...அப்படியானால், உங்கள் பிஸினசில் அவர்களும் இணையப்போகிறார்களா அல்லது பண உதவி மட்டுமா? அந்தப் பணம் கடனா? திருப்பித் தரவேண்டாம் எனற மாதிரியான உதவியா? முடிந்தபோது திருப்பிக் கொடுத்துவிடு என்பது மாதிரியா போன்றவற்றை மிகத் தெளிவாகத் தெரிந்துகொண்டு திட்டமிடுங்கள். ஏனென்றால், பிசினஸில் உங்கள் பணமாக இல்லாத எதுவும் நீங்கள் வாங்கும் கடனாகத்தான் கருதப்படும். அதைச் சம்பாதித்து திரும்பச் செலுத்துவதுதான் பிஸினஸ்.
இன்று பெரும்பாலான இளைஞர்கள் தந்தை அல்லது தாயின் பணிகளின் இறுதிக்காலத்தில் ஈட்டும் பணிக்கொடை போன்றவற்றை முதலீடு செய்து, தொழில் துவக்குவதைப் பற்றி அதிகம் பேசுகிறார்கள். அவர்கள் மனப்பூர்வமாக சம்மதித்தால் தவறில்லை. ஆனால், அவர்கள் வாழ்நாள் சேமிப்பை தங்கள் ஓய்வுக்காலத்தை, பிறருக்குப் பாரமில்லாமல் கழிக்க திட்டமிட்ட பணத்தில் நீங்கள் துவக்கும் முயற்சியில் வெற்றி பெற்று அதை முதலில் அவர்களுக்கு திருப்பித்தர வேண்டும். அதனால், அதைக் கடனாக ஏற்று அதை உங்கள் நிறுவனக் கடனாகக் கணக்கிட்டால்தான் திருப்பித் தரவேண்டிய அவசியம் ஏற்படும். அதனால், புரிந்துகொள்ளுங்கள் நண்பரே! கடன் வாங்கி முதலீடு செய்யலாம். தவறில்லை. ஆனால், யாரிடம் எவ்வளவு என்பதும் எந்த அடிப்படையில் என்பதும் மிக முக்கியம். வட்டி கொடுக்க வேண்டிய கடனாக இருந்தால், வட்டி விகிதம் நீங்கள் உங்கள் தொழிலில் சம்பாதிக்கத் திட்டமிட்டிருக்கும் லாப விகிதத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். உங்கள் லாபம் 15% இருந்தால் (ரிட்டன் ஆஃப் இன்வெஸ்மெண்ட் என்று சொல்லப்படுவது), மூதலீட்டுக்காக வாங்கும் கடனின் வட்டி அதற்கும் குறைவாகவே இருக்க வேண்டும். அதற்கும் அதிகமாகயிருந்தால், உங்கள் தொழில் முயற்சிகளின் பலன் உங்களுக்கு இல்லை, கடன் கொடுத்தவர்களுக்குத்தான் என்பதை உணரவேண்டும். அப்படி யார் கடன் கொடுப்பார்கள்? கண்டுபிடியுங்கள். ஒருவேளை உங்களுக்கு அருகிலேயே கூட இருக்கலாம்.
குஜராத்தில் வியாபாரம் செய்து, உலகப் புகழ் பெற்றிருக்கும் ஒரு சமூகத்தினர், அவர்கள் வாழும் பகுதிகளில் எல்லாம் ஒரு குழுவாக இணைந்து ஓர் அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.ஒவ்வொருவரும் இதில் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்கிறார்கள். எதற்குத் தெரியுமா? அவர்கள் சமூக இளைஞர்கள். புதிய தொழில் துவக்க மூதலீடு செய்ய, கடன் தர, மிகக் குறைந்த வட்டியில் தரப்படும் இந்தக் கடனை, முதல் இரண்டு ஆண்டுகளில் மாதத் தவணைகளாக திருப்பிச் செலுத்தவேண்டும். தவறினால், உன்னைப் போன்ற ஓர் இளைஞனுக்கு இந்த உதவியை செய்யமுடியாதுபோய்விடும் அல்லது தாமதமாகும் என்பது சொல்லப்பட்டு, அந்தக் கடனுதவி வழங்கப்படுகிறது. இதுபோன்ற சில அமைப்புகள் தமிழகத்திலும் சில சமூகத்தினரிடமும் இயங்குகின்றன. அவை உங்கள் பகுதியிலிருக்கிறதா எனக் கண்டுபிடியுங்கள் அல்லது உங்கள் மூலதன முதலீட்டுப் பணத்திற்காக உழைத்து, அந்தப் பணத்தை சேமியுங்கள். இதனால், நீங்கள் பெறப்போவது பணம் மட்டுமில்லை, அனுபவமும்தான்.
3 ஆண்டுகள் கடுமையாக உழைத்து, செலவுகளைச் சுருக்கி என் சொந்தத் தொழிலின் முதல் முதலீட்டை உருவாக்கினேன்" என்கிறார், இன்று சென்னையின் அடையாளமாகி இருக்கும் ஒரு மிகப் பெரிய தங்க நகை விற்பனை நிலையத்தின் நிறுவன அதிபர்.
மூலதனம் என்பது நீங்கள் தொழில் அல்லது வியாபாரத்திற்காகக் கொண்டுவரும் பணம் மட்டுமில்லை என்பதை தெரிந்துகொள்ளவேண்டும், ஒரு தொழிலை அல்லது வியாபாரத்தை உருவாக்கப் பயன்படும் அடிப்படையான, நிலம் அல்லது இடம், இயந்திரம், உற்பத்திக்காகப் பெற்றிருக்கும் தயாரிப்பு முறை போன்றவையும் மூலதனத்தில் அடங்கும். இவை சரியாக மதிப்பிடப்பட்டு, உங்கள் மூலதனக் கணக்கில் காட்டப்பட வேண்டும். அப்படி சேர்க்கப்பட்டிருப்பதற்கு ஒரு சான்று வேண்டும். இதை எப்படி, யாரிடம் பெறுவது? இந்தச் சான்றை ஓர் ஆடிட்டரிடம் பெற வேண்டும். இதற்கு, 'கேப்பிடல் டிப்ளாயிமெண்ட் சர்டிஃபிகேட்' என்று பெயர். பிசினஸையே துவக்கவில்லை, அதற்குள் ஆடிட்டரா என வியக்காதீர்கள். பலர் அஞ்சுவது போல ஆடிட்டர்கள் எல்லோரும் அதிகக் கட்டணம் வசூலிப்பவர்கள் இல்லை. உங்கள் ஆரம்பநிலை, புதிய தொழில் முயற்சி எல்லாவற்றையும் அறிந்தவர்கள் அவர்கள். முடிந்தவரையில் ஒரு நண்பரின் உதவியோடு இவர்களை அறிமுகம் செய்துகொள்ளுங்கள். உங்களோடு அவர் நிறுவனமும் வளரப்போகிறது என்ற நிலையில் இருப்பவர்களை தேர்ந்தெடுங்கள். நிச்சயம் உதவுவார்கள். இந்தச் சான்று பல விஷயங்களுக்கு வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடன், அரசு மானியங்கள் பெற என வருங்காலங்களில் தேவையாகயிருக்கும். இது பிசினஸைத் துவக்கும் முன்னரே வாங்க வேண்டிய அவசரம் இல்லை. ஆனால், அவசியமான ஒன்று.
வங்கிகளில் கடன் கேட்டு அணுகும்போது, அவர்கள் கேட்கும் முதல் கேள்வி... எவ்வளவு மூதலீடு செய்திருக்கிறீர்கள்? மாத டர்ன் ஓவர் எவ்வளவு என்பதுதான். விவரம் சொன்னால், இதற்குச் சான்றாக என்ன வைத்திருக்கிறீர்கள்? ஆரம்ப பேலன்ஸ் ஷீட், ஆடிட்டர் சர்டிஃபிகேட்? என்ற கேள்விக்கு பலர் சொல்லும் பதில், இப்படி ஒன்று அவசியம் என எனக்குத் தெரியாது என்பதுதான். நீங்கள் இவர்களின் பட்டியலில் சேரக்கூடாது. ஏனென்றால், நீங்கள் ஜெயிக்கப் போகிறவர்.
மூலதனத்தையும் அதைத் திரட்டுவதற்கான வழிமுறைகளையும் அறிந்த நீங்கள், தீர்மானிக்க வேண்டிய அடுத்த முக்கியமான விஷயம், உங்கள் நிறுவனத்தின் கட்டமைப்பு. உங்கள் நிறுவனத்தை ஒரு தனிநபர் நிறுவனமாக, பார்ட்னர்ஷிப்பாக அல்லது பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக எப்படி நடத்தப் போகிறீர்கள் என்பதைத்தான். எது எனக்கு நல்லது? ஏன் எனக் கேட்கும் நண்பர்கள் அடுத்த வாரம் வரை காத்திருங்கள். தொடர்ந்து பேசுவோம்...
வழிகாட்டுகிறது 'புதிய தலைமுறை'
பிஸினஸுக்குத் திட்டமிடும் காலகட்டத்தில் கூடவே நீங்கள் செய்து கொண்டிருக்க வேண்டியது பிசினஸ் சம்பந்தமான விஷயங்களை, நிலவரங்களை. அவை - நீங்கள் துவக்கப்போகும் பிசினஸுக்கு நேரடித் தொடர்பு இல்லாவிட்டாலும் கூட - அறிவதில் ஆர்வம் காட்ட வேண்டும். பல்வேறு விஷயங்களை அறிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். இன்றைய இளைஞர்களுக்கு, பத்து ஆண்டுகளுக்கு புதிய தொழில் துவக்கியவர்களை விட வாய்ப்புகள் அதிகம். எல்லா வங்கிகளும், தொழிற் கூட்டமைப்புகளும், வணிகக் கூட்டமைப்புகளும் கருத்தரங்குகளும் வகுப்புகளும் நடத்துகின்றன. அவற்றில் பங்குகொள்ள வேண்டும். குறிப்புகள் எடுக்க வேண்டும். இலவசம் அல்லது குறைவான கட்டணங்களில் நடைபெறும் இவற்றில் பங்கேற்பதின் மூலம் நீங்கள் நிச்சயம் பலனடைவீர்கள். உடனடியாக இல்லாவிட்டாலும் அந்தத் தகவல்கள், தொடர்புகள், குறிப்புகள், சந்திப்புகள் எல்லாம் நீங்கள் துவக்க இருக்கும் பிஸினஸை வளர்க்க உதவும், வரும் மார்ச் 1 மற்றும் 2 தேதிகளில், 'புதிய தலைமுறை' இப்படி ஒரு கருத்தரங்கை சென்னையில் கிண்டியிலுள்ள சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி நிலைய வளாகத்தில் நடத்துகிறது. சென்னையிலும் புறநகர்களிலும் வசிக்கும் ஜெயிக்கத் தயாராகிக் கொண்டிருப்பவர்கள் பதிவு செய்துகொண்டு பங்கேற்கலாம்.ஒரு சொந்தத் தொழிலை அல்லது வியாபாரத்தை துவக்கும் எண்ணம் எழுந்த உடனேயே, என்ன செய்யப்போகிறோம். பெயர், இடம், போன்றவற்றுடன் இணையாகவே நீங்கள் சிந்தித்துக்கொண்டேஇருக்க வேண்டிய ஒரு விஷயம் மூலதனம். முதலில் நீங்கள் துவக்கப் போகும் தொழிலுக்கு எவ்வளவு மூலதனம் முதல்கட்டமாக வேண்டும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இதை நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் தொழில் அல்லது வியாபாரத்தின் அளவு பற்றிய எண்ணம் தெளிவாக இருந்தால் மட்டுமே தீர்மானிக்க முடியும். 'Size matters in success at early stages' இன்று இதைத்தான் சொல்லுகிறார்கள் வல்லுநர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக