பனங்கிழங்கு:
பனம் விதைகள் முளைக்கும்போது, நிலத்துட் செல்லும் வேரில் மாப்பொருள் சேமிக்கப்பட்டுக் கிழங்காக உருவாகின்றது. இதுவே பனங்கிழங்கு ஆகும்.ஒரு முனை கூராகவும், மறு முனை சுமார் ஒரு அங்குலம் விட்டம் கொண்டதாகவும் உள்ள ஒடுங்கிய கூம்பு வடிவான இக் கிழங்கு ஒரு அடி வரை நீளமானது.
பயன்கள்:
பனங் கிழங்கைப் பச்சையாக உண்பதில்லை. உடனடியாக உண்பவர்கள் அதனை நீரில் இட்டு அவித்து உண்பர். (சிலர் நெருப்பில் வாட்டிச் சுட்டுத் தின்பதும் உண்டு)
கிழங்கை அவிக்காமல் நெடுக்கு வாட்டில் இரண்டாகக் கிழித்து, வெய்யிலில் காய விடும்போது, சிலநாட்களில் அது நீரை இழந்து, கடினமான ஒன்றாக ஆகும். இது ஒடியல் என அழைக்கப்படுகின்றது. இதை அப்படியே உண்பதில்லை. இதனை மாவாக்கிப் பிட்டு, கூழ் முதலிய உணவு வகைகளைச் செய்யப் பயன் படுத்துவது வழக்கம். அவித்த கிழங்கை வெய்யிலில் காயவிட்டுப் பெறப்படும் பொருள் புழுக்கொடியல் (புழுக்கிய ஒடியல்) எனப்படும். புழுக்கொடியலை நேரடியாகவே உண்ணலாம். ஒடியல், புழுக்கொடியல் இரண்டுமே, நீண்டகாலம் கெட்டுப்போகாமல் இருக்கக் கூடியன. (இந்தப் பயன்பாடு தமிழகத்தில் தற்போது இல்லை).
இலக்கியத்தில் பனங்கிழங்கு:
நாரை எனும் பறவையின் நீண்ட கூரிய அலகு, இளம் மஞ்சள் நிறமான, நீண்ட கூம்பு வடிவம் கொண்ட பனங்கிழங்கு போலிருப்பதால், சத்திமுற்றப்புலவர் எனப்படும் சங்ககாலப் புலவர் ஒருவர் நாரையின் அலகுக்கு உவமையாகப் பனங்கிழங்கைப் பின்வருமாறு எடுத்தாண்டுள்ளார்.
நாராய் நாராய் செங்கால் நாராய்
பனம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய் ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக