அடுத்த பத்தாண்டுகளில் உலகம் சந்திக்கவிருக்கும் சவால்கள் என்று உலகப் பொருளாதார மன்றம் சமீபத்தில் ஓர் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.
இந்தியாவைப் பாதிக்கக் கூடிய சவால்கள் எவை?
அடுத்த பத்தாண்டுகளில் உலகம் சந்திக்கவிருக்கும் சவால்கள் என்று உலகப் பொருளாதார மன்றம் (world economic forum) சமீபத்தில் ஓர் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. சவால்கள் என்கிற பதம் கொஞ்சம் நம்மை ஆசுவாசப்படுத்துகிறது. சவால்கள் என்றால் அதைச் சந்தித்து முறியடிக்க முடியும் என்று அர்த்தம். ஆனால் வருத்தத்துக்கு உரிய விஷயம் நாம் சந்திக்கத் தயாராகவே இல்லை என்பதே.
அறுபது பக்க அறிக்கையில் முக்கிய பத்து சவால்கள் என்ன என்று வேர்ல்டு எகனாமிக் ஃபாரமே வரிசைப்படுத்தி இன்னொரு துணை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அவற்றில் பல இந்தியாவையும் பாதிக்கும் தன்மை கொண்டவை. அவை என்ன?
1. அனைத்து நாடுகளின் பொருளாதார வீழ்ச்சி
அடுத்த பத்து ஆண்டுகளில் உலகம் முழுக்க பெரிய பொருளாதார வீழ்ச்சி இருக்கும் என்கிறது அறிக்கை. இன்றைய நிலையில் இந்தியா உட்பட எல்லா வளரும் நாடுகளின் பொருளாதாரமும் வளர்ந்த நாடுகளின் பொருளாதாரத்தைச் சார்ந்தே இயங்குகின்றன. 1990-களுக்குப் பிறகு நமது பொருளாதாரம் வளர்ந்த நாடுகளாகிய அமெரிக்கா, ரஷ்யாவைச் சார்ந்து இருக்க நேரிட்டது.
அது கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அதிகமாக அமெரிக்கா நோக்கி சாய்ந்தது. 2008-இல் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி இந்தியாவைப் பாதிக்கவில்லை என்று அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேட்டி கொடுத்தாலும் விலைவாசி திடீரென ஏறியது. அப்போது வேலை இழந்த ஐ.டி. மற்றும் பி.பி.ஓ. தொழிலாளர்கள் பலருக்கு இன்றும் வேலை கிடைக்கவில்லை .
புதிய அரசும் வெளிநாட்டு மூலதனத்தை இந்தியாவிற்குள் கொண்டுவருவதன் மூலம் பொருளாதாரத்தை உயர்த்தலாம் என்று தப்புக் கணக்கு போடுகிறது. இந்த வெளிநாட்டு முதலீடுகள் உள்நாட்டு தொழிலதிபர்களை கண்டிப்பாகப் பாதிக்கும் என்பது ஒருபக்கம் இருந்தாலும் இந்த முதலீடுகள் நிலையாக இங்கேயே இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதத்தையும் இந்தியா அந்த கம்பெனிகளிடம் இருந்து பெறவில்லை.
வேறு ஓர் இடத்தில் அதிக லாபம் கிடைக்கும் பட்சத்தில் இந்த முதலீடுகள் அங்கே செல்லலாம். அப்போது இந்த முதலீடுகளை பெருமளவு நம்பியிருக்கும் இந்தியப் பொருளாதாரம் சரியும். அமெரிக்காவில் மழை பெய்தால் இந்தியாவில் ஜலதோஷம் பிடிக்கும் நிலையை மாற்றி உள்நாட்டு உற்பத்திகளைப் பெருக்கினால் மட்டுமே பொருளாதார வீழ்ச்சியைத் தவிர்க்க முடியும்.
2. வேலையின்மை அதிகரிக்கும்
வேலை என்பது என்ன? சமூகம் மேம்பட அல்லது தொடர்ந்து இயங்க, தனிமனிதன் தனது சேவையை அளித்து தனது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளுதல் என்பதுதான் வேலை (employment). அதன்படி மக்கள் தொகை அதிகமாக அதிகமாக அந்த மக்களுக்குச் செய்ய வேண்டிய சேவையும் அதிகமாக வேண்டும்.
அதாவது வேலையும் அதிகமாக வேண்டும். ஆனால் இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்த அளவுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவில்லை. 2012 -ஆம் ஆண்டு 8.5 சதவிகிதமாக இருந்த வேலையற்றோர் எண்ணிக்கை 2013-ஆம் ஆண்டு 8.8 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதில் தினக்கூலிகள், நூறு நாள் வேலைத் திட்டத்தில் இருப்பவர்கள் எல்லாம் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வேலையற்றவர்களுக்கு நிகராக தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காதவர்களின் எண்ணிக்கையும் அடுத்த பத்தாண்டுகளில் அதிகரிக்கும் என்கிறது அறிக்கை.
நாட்டின் /சமூகத்தின் தேவைகளை அறிந்து அதற்கேற்ற படிப்புகளில் சேராதது இதன் முக்கியக் காரணி ஆகிறது. உதாரணத்திற்கு இந்தியா ஒரு வருடத்திற்கு உலகத்திற்குத் தேவையான மொத்த என்ஜினீயர்களையும் உற்பத்தி செய்கிறது என்கிறது நாஸ்காம் நிறுவனம். படித்து முடித்து வெளிவரும் என்ஜினீயர்களில் வெறும் இருபது சதவிகிதம் பேர் மட்டுமே வேலைக்குத் தகுதியானவர்கள் என்றும் மொத்தம் நாற்பது சதவிகிதத்தினர் மட்டுமே பொறியியல் துறையில் வேலைக்குச் சேர்கிறார்கள் என்றும் அந்த நிறுவனம் தெரிவிக்கிறது. மீதி அறுபது சதவிகிதத்தினர் வேறு வேலைக்குச் செல்கிறார்கள். இதனால் சாதாரண டிகிரி படித்தவர்களுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
3. நீர்ச் சிக்கல்கள்
மூன்றாவது உலகப் போர் ஒன்று நடக்குமானால் அது தண்ணீருக்குத்தான் என்பது திண்ணம். வளர்ந்த நாடுகள் நீரின் அவசியத்தை உணர்ந்து செயல்பட ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகின்றன. நம்மில் மறை நீர் பற்றி பெரும்பாலானோருக்குத் தெரியவாய்ப்பில்லை. ஜான் ஆண்டனி ஆலன் என்கிற இங்கிலாந்துக்காரர்தான் மறை நீர் பற்றி விளக்குகிறார்.
ஒரு மெட்ரிக் டன் கோதுமையை விளைவிக்க 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அதனால் ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்தால் 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீர் மிச்சம். ஆனால் அந்த நீர் நமக்குத் தெரிவதில்லை. மறைந்திருக்கிறது. ஆகவே அது மறை நீர்.
வெளிநாட்டு கம்பெனிகள் காரை இந்தியாவில் உற்பத்தி செய்து அதை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது இதனால்தான் ( 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கு நான்கு லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை). இதே போல் அதிக நீர் தேவைப்படும் தோல் பொருட்கள், துணிகள், சாயங்கள் போன்றவற்றை இந்தியா போன்ற நாடுகளில் சுமத்துகின்றன வளர்ந்த நாடுகள்.
நாமும் வெளிநாட்டு மூலதனம், அந்நியச் செலாவணி என்றெல்லாம் சொல்லி நமது நீர்வளத்தை நமக்குத் தெரியாமலேயே இழந்து வருகிறோம். அதிக மறை நீர் தேவைப்படும் பொருட்களின் உற்பத்தியைப் படிப்படியாகக் குறைத்தால் மட்டுமே நமது நீர்வளத்தைக் காப்பாற்ற முடியும்.
இது தவிர்த்து, தற்போது பெருநகரங்களின் பெரும்பாலான வீடுகள் கேன் வாட்டர்களுக்கு மாறிவிட்டன. அது அனைத்தும் தனியாருடையது. சமீபத்தில் கேன் வாட்டர் முதலாளிகள் அறிவித்த ஸ்டிரைக்கால் முப்பது ரூபாய் கேன் நூறு ரூபாய் வரை சென்றது. தனியார்களுக்கு தாரைவார்க்கப்படும் நீர்வளம் பின்னாளில் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும்.
4. தனிமனித வருமான வித்தியாசங்கள்
'சிவாஜி' படத்தில் ரஜினி சொல்லும் 'பணக்காரன் இன்னும் பணக்காரனாயிட்டே இருக்கான். ஏழை இன்னும் ஏழையாகிட்டே இருக்கான்' என்பதைத்தான் அறிக்கையும் சொல்கிறது. உலகம் முழுக்க இது நடந்து கொண்டிருந்தாலும் இந்தியாவில் வேகமாக நடந்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. கடந்த பதினைந்து ஆண்டுகளில் இந்தியப் பணக்காரர்களின் சொத்து மதிப்பு பன்னிரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது.
இதைக்கொண்டு இந்தியாவின் மொத்த வறுமையை இருமுறை ஒழிக்க முடியும் என்கிறது. தற்போது இந்திய அரசாங்கம் சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் பெயரை வாங்க முயற்சி செய்து வருகிறது. கறுப்புப் பணம் இருக்கும் வங்கிகளில் சுவிஸ் நாலாவது இடத்தில் இருப்பதையும் கடந்த ஐந்து ஆண்டுகளில் சுவிஸ் வங்கியில் இருந்து அதிகளவு பணம் முதலிடத்தில் உள்ள ஐரோப்பிய சென்ட்ரல் வங்கிக்கு மாற்றப்பட்டுள்ளதையும் கவனிக்கவேண்டும்.
எதுவுமே செய்யாததற்கு சுவிஸ் வங்கியில் இருக்கும் கறுப்புப் பணங்களை வெளிக்கொண்டு வருவது நல்ல விஷயம் என்றாலும் அதுவே மொத்த கறுப்புப் பணம் என்று நினைக்கக்கூடாது. உலகில் உள்ள அனைத்து வங்கிகளிலும் அதிகளவு பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர்ப் பட்டியலை வாங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5. பருவநிலை மாற்றங்கள்
முன்பெல்லாம் ஆடியில் காத்தடிக்கும். ஐப்பசியில் மழையடிக்கும். இப்போது அந்த வரைமுறைகளை எல்லாம் இயற்கை கடந்துவிட்டது. அக்னி
நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயில் வெளுத்துகிறது. காரணம் அனைவருக்கும் தெரிந்தது, குறைந்து வரும் மரங்களும் அதிகரித்து வரும் வாகனங்களும்தான். ஆனால் தொடர்ந்து பல சாக்குகளைச் சொல்லி மரங்களை வெட்டிக் கொண்டும் வாகனங்களைப் பெருக்கிக்கொண்டும் இருக்கிறோம்.
நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயில் வெளுத்துகிறது. காரணம் அனைவருக்கும் தெரிந்தது, குறைந்து வரும் மரங்களும் அதிகரித்து வரும் வாகனங்களும்தான். ஆனால் தொடர்ந்து பல சாக்குகளைச் சொல்லி மரங்களை வெட்டிக் கொண்டும் வாகனங்களைப் பெருக்கிக்கொண்டும் இருக்கிறோம்.
பெருநகரங்களில் மரங்களைவிட வாகனங்கள் அதிகமாகிவிட்டன. அப்படியே மரம் நட்டாலும் அது மண்ணுக்கும் அந்தச் சூழலுக்கும் ஏற்றதா என்று தெரியாமல் நட்டுக் கொண்டிருக்கிறோம். அவை பெரும்பாலும் முறையான பராமரிப்பு இன்றி செத்துவிடுகின்றன. இந்தச் சிக்கலை அரசும் மக்களும் இணைந்து தீர்க்கவேண்டும்.
6. இயற்கைச் சீற்றங்கள்
இயற்கைச் சீற்றங்கள் என்பது நூறாண்டுக்கு ஒரு முறை மட்டுமே பெருமளவில் நடக்கும். ஆனால் தற்போது அடிக்கடி நிகழ்கிறது. உத்தரகாண்ட்டில் நடந்த பெருவெள்ளத்திற்குப் பிறகு கடந்த வாரம் அசாமில் ஒரு பெரிய வெள்ளம் வந்திருக்கிறது. உண்மையான காரணத்தை ஆராய்ந்து பார்த்தால் அது இயற்கையின் சீற்றமல்ல. இயல்புக்கு மாறாய் இருந்த இயற்கை மீண்டும் தன்னுடைய இயல்புக்குத் திரும்பி இருக்கிறது என்று தெரியும்.
மேற்சொன்ன இரண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளும் ஆறுகளின் பாதைகளாக இருந்திருக்கின்றன. அதன் பாதையை மனிதன் ஆக்கிரமித்துக் கொண்டால் எவ்வளவு நாள் பொறுக்கும். தற்போது சென்னையில் பல ஏரிகள் குடியிருப்புப் பகுதிகளாக இருக்கின்றன.
சிறுமழை பெய்தால் கூட நாம் நீச்சலடிக்கும் அளவுக்கு தண்ணீர் தேங்க அதுவே காரணம். அது தண்ணீரின் இடம். அங்கே போய் நாம் குடிபுகுந்துகொண்டு தண்ணீர் வீட்டுக்குள் வந்துவிட்டது என்று குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். தண்ணீர் வேண்டும் என்று டீப் போர் போடுகிறோம். பாசில் வாட்டர் (டைனோசர் காலத்தில் அதோடு மண்ணுக்குள் போன நீர்) வரை உறிஞ்சிக்கொள்கிறோம்.
பல ஆண்டுகாலமாக இறுகி இருக்கும் பாறைகளை உசுப்பிவிட்டு நில நடுக்கம் வருகிறது என்று கூச்சல் இடுகிறோம். இயற்கையோடு இயைந்து போகாதவை எல்லாம் இல்லாமல் போகும் என்பதை மனதில் கொண்டு செயல்படவேண்டிய நேரம் இது.
7. உலகளவில் அரசுகளின் தோல்வி
அரசு என்பது மக்களின் முதலாளி அல்ல, மக்களின் சேவகன். மக்கள் தங்களது தேவைகளைப் பெற்று நலமுடன் வாழ வழி செய்யும் அமைப்பு. ஆனால் பெரும்பான்மை அரசு மக்களை அப்படிக் கருதுவதில்லை. அப்படிக் கருதினாலும் அவர்களால் மக்களுக்கு நன்மை செய்ய முடியவில்லை. அதற்கு பொருளாதாரக் காரணிகள், அரசுக் காரணிகள், கலாச்சாரக் காரணிகள், அண்டைநாடுகளின் உறவு என்று பல காரணிகள் முன்வைக்கப்படுகின்றன.
குறிப்பிட்ட சிலரின் லாபத்திற்காக உழைக்கும் கருவியாக அரசு மாறிப் போகின்றன. ஏட்டளவில் இருக்கும் மக்களுக்காக, மக்களே, மக்களால் என்கிற தத்துவம் நடைமுறைப்படுத்தப்படும்போது இந்தத் தோல்வி தூக்கி எறியப்படும்.
8. உணவுச் சிக்கல்கள்
இந்தியா ஒரு விவசாய நாடு. பல விளைபொருட்களை ஏற்றுமதி செய்வதில் முன்னணியில் இருக்கிறது. அதே சமயம் இந்தியாவில் இரவு உணவு இல்லாமல் படுக்கைக்குச் செல்வோரின் எண்ணிக்கை முப்பது சதவிகிதம் என்பது எவ்வளவு துயரத்திற்குரியது. உணவு கிடைக்காமல் இருப்பது கொடுமை என்றால் கிடைத்த உணவு நச்சுத்தன்மையுடன் இருக்கிறது.
பசுமைப் புரட்சிக்காக பல செயற்கை உரங்களை இந்தியா கைக்கொண்டது. அமோக விளைச்சலுக்குப் பிறகு பெரிய பஞ்சம் வந்து சேர்ந்தது என்பது வரலாறு. அன்று கைக்கொண்ட ரசாயன உரங்களை இன்றும் பயன்படுத்தி வருகிறோம். பல நாடுகளில் ஆபத்தானவை என்று கருதப்பட்ட உரங்கள் இங்கே சாதாரணமாகக் கிடைக்கின்றன. அதிகளவு பூச்சிமருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதால் இந்தியப் பழங்களுக்கும் காய்கறிகளுக்கும் ஐரோப்பிய யூனியன் தடை விதித்திருக்கிறது.
அதைத்தான் நாம் நமது குழந்தைகளுக்கு சத்து என்று சொல்லி சாப்பிடக் கொடுக்கிறோம். பெரிய இயற்கைப் பாரம்பரியம் உள்ள இந்தியா தனது மண்ணின் விவசாயத்திற்குத் திரும்புவதே இதற்குத் தீர்வு.
9. வங்கி முதலிய பொருளாதார நிறுவனங்களின் வீழ்ச்சிகள்
அமெரிக்காவின் பெரிய பெரிய வங்கிகள் 2008 வீழ்ச்சியின்போது திவாலாகின. அந்த நிலை இந்தியாவிற்கு வருவதற்கு வெகு தூரம் இல்லை. நம் நாட்டில் கிட்டதட்ட அனைத்து வங்கிகளும் கடன் தருவதற்கும் கிரெடிட் கார்டு தருவதற்கும் அதிக ஆர்வத்துடன் இருக்கின்றன.
நமக்குத் தேவை இல்லை என்றால் கூட அலைபேசியில் அழைத்து கடன் வாங்கச் சொல்லிக் கெஞ்சுகின்றன. ஒரு வங்கி, கடன் தருவதில் அதிக ஆர்வம் காட்டுகிறது என்றால் அது நல்ல நிலையில் இல்லை என்று அர்த்தம். லாபத்தில் இயங்கும் வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் வழங்காது. நல்ல தரமான காய்கறிகளை உடைய ஒரு வியாபாரி குறைந்த விலைக்குத் தரமாட்டார் என்கிற அளவில் இதைப் புரிந்துகொள்ளலாம்.
இது தவிர்த்து இந்திய அரசு வங்கிகளில் மொத்தம் மூன்று லட்சம் கோடி வாராக்கடனாக இருக்கிறது. இதில் ஐம்பது சதவிகிதத்திற்குமேல் பெரிய நிறுவனங்கள் (கிங்ஃபிசர் நிறுவனம் மட்டுமே சுமார் 2,500 கோடி) வாங்கிய கடன்கள். சாமானியர்களின் கல்விக் கடன்களையும் வீட்டுக் கடன்களையும் மட்டுமே நெருக்கும் அரசு இந்தப் பெரிய நிறுவனங்களை நெருக்குவதில்லை. இந்த வாராக்கடன்களை முறைப்படுத்தினாலே இந்திய வங்கிகள் இருபது ஆண்டுக்கு ஸ்திரமாக நிற்கும்.
10. அரசியல் மற்றும் சமூக நிலையாமை
உலகம் அனைத்தும் ஒரே குடையின்கீழ் வந்து கொண்டிருக்கும் காலம் இது. அனைத்து அறிவும் மக்கள் முன் திறந்து கிடக்கின்றன. அதன் விளைவாக மக்கள் தாங்கள் எந்த விஷயங்களில் எல்லாம் பின்தங்கியுள்ளோம் என்று எளிதாகத் தெரிந்துகொள்கிறார்கள். இது மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையே உள்ள நம்பிக்கைகளைக் குறைக்கிறது. இதுவரை அவர்கள் பின்பற்றிவந்த அனைத்தின் மீதும் கேள்வி எழுப்புகிறார்கள்.
இது உச்சத்தை அடையும்போது உள்நாட்டுப் போர், கலவரங்கள் எல்லாம் உருவாகின்றன. இந்தியாவைப் பொருத்தவரை பெரிய உள்நாட்டு யுத்தம் என்று எதுவும் நடந்ததில்லை. பலவகையாய் பிரிந்திருக்கும் இந்தியா அமைதியாக இருப்பதில் பல நாடுகளுக்கு ஆச்சரியம் இருக்கிறது. இந்தியா தொடர்ந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால் அனைத்து மாநிலங்களையும், மொழிகளையும், இனங்களையும், மதங்களையும் சமமாக நடத்தவேண்டும்.
இந்தித் திணிப்பைக் கைவிடவேண்டும், கிழக்கு மாநிலங்களுக்கு அதிக கவனம் செலுத்தவேண்டும். எல்லோரும் இந்தியர்கள் என்பதை மனதார உணரவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக