Pages

வியாழன், ஜூலை 24, 2014

தந்தையை மிஞ்சிய தனயன் - ராஜேந்திர சோழன் முடிசூடிய 1000 ஆண்டு




தந்தையை மிஞ்சிய தனயன் - ராஜேந்திர சோழன் முடிசூடிய 1000 ஆண்டு
கங்கை கொண்ட சோழன், கடாரம் வென்றான் என்ற மெய்க்கீர்த்திக்கு சொந்தக்காரரான ராஜேந்திர சோழன் மாமன்னராக முடிசூடிக்கொண்ட ஆயிரமாவது ஆண்டு விழா அவரது பிறந்தநாளான 25–ந் தேதி (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும் என்பதை தனது புஜ, பல பராக்கிரமத்தால் நிரூபித்துக்காட்டிய வீரமறவன் ராஜேந்திர சோழன்.

இவரது தந்தையார் சோழ சாம்ராஜ்ஜியத்தின் தன்னிகரற்ற மன்னர் ராஜராஜ சோழன். தமிழரின் கட்டிடக்கலையின் சிறப்பை உலகெங்கும் பறை சாற்றும் தஞ்சைப் பெரிய கோவிலைக்கட்டி அதன்மூலம் சிரஞ்சீவி புகழைப் பெற்றவர்.

ராஜராஜ சோழனின் வல்லமையை, தமிழ்ப்பற்றை, நிர்வாகத்திறனை நாடறியும். ஆனால் அவரது மைந்தர் ராஜேந்திர சோழனின் நதிமூலம், ரிஷிமூலம், செயலாற்றல், வீரத்தின் வெளிப்பாடு பெரும்பாலும் வெளி உலகிற்கு தெரியாமல் வரலாற்று செப்பேடுகளிலும், கல்வெட்டுகளிலும் சிறைபிடிக்கப்பட்டு விட்டன.

பூர்வதேசமும், கங்கையும், கடாரமும் கொண்ட கோப்பரகேசரிவர்மன் என்று கல்வெட்டுக்கள் புகழ்ந்து கூறும் பெருமைக் குரியவர் ராஜேந்திர சோழன்.

விஜயலாய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப்பேரரசு, ராஜேந்திரன் காலத்தில் தான் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் ஒப்பாரும், மிக்காரும் இல்லை என்ற சிறப்பைப் பெற்றவர் ராஜேந்திர சோழன்.

ராஜேந்திர சோழன் மாமன்னர் ராஜராஜனுக்கும், அவரது மனைவி வானவன்மாதேவிக்கும் ஆடி மாதத்து ஆதிரை நாளில் திருமகனாக பிறந்தவர். மதுராந்தகன் என்பது இவரது இயற்பெயராகும்.

கி.பி.1012–ல் ராஜராஜ சோழனால் இளவரசராக நியமிக்கப்பட்டார். கி.பி.1014–ல் தன் தந்தையின் மரணத்திற்கு பின்பு சோழப்பேரரசராக ராஜேந்திர சோழன் என்னும் திருநாமத்தோடு அரியணையில் அமர்ந்தார். அவர் மாமன்னராக முடிசூடிக்கொண்ட ஆயிரமாவது ஆண்டு விழா அவரது பிறந்தநாளான 25–ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

கி.பி.1044 வரை முப்பதாண்டு காலம் பரந்துப்பட்ட சோழப்பேரரசின் சக்கரவர்த்தியாக திகழ்ந்தார்.

இந்திய வரலாற்றில் வீரத்தில் இவருக்கு நிகராக மற்றொரு அரசனை கூற முடியாது.

***

ராஜேந்திர சோழனின் மகிமை - பாலகுமாரன்

தஞ்சை இனியும் தலைநகராக இருப்பதற்குண்டான தகுதியுடையதாக இல்லை. தெற்கே பாண்டியர்கள், சேரர்கள் அமைதியாக உட்கார்ந்து விட்டார்கள். அந்த இடத்தை ராஜேந்திர சோழனின் மகன்கள் மன்னராக பதவியேற்று ஆட்சி செய்கிறார்கள். வடக்கே கீழை சாளுக்கியம் என்று அழைக்கப்படுகின்ற ஆந்திர மாநிலம் மிக இணக்கமாக இருக்கிறது. ஆனால் வடமேற்கே இருக்கின்ற இப்பொழுது கர்நாடகம் என்று அழைக்கப்படுகின்ற மேலை சாளுக்கியம் இடையறாது தொந்தரவு கொடுத்துக்கொண்டிருக்கிறது. காவிரிக்கு நடுவே தடுப்பணை ஏற்படுத்த அவர்கள் முற்படுகிறார்கள். அல்லது படையெடுத்து வந்து திருவொற்றியூர் வழியாக மயிலை திருவல்லிக்கேணியை தாக்குகிறார்கள். தொண்டை நாடு அவதிப்படுகிறது. தொண்டை நாட்டிற்கு கீழே உள்ள நடுநாடு விரைவில் அவர்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

<![if !vml]><![endif]>எனவே ராஜேந்திர சோழன் தன்னுடைய தலைநகரை மாற்ற விரும்புகின்றான். இடையே இருக்கின்ற காவிரி, கொள்ளிடம், குடமுருட்டி, ஆறு போன்றவைகளை தாண்டி படைகள் வரவேண்டியிருப்பதால் அவைகளையெல்லாம் கடந்து ஒரு மிகப்பெரிய புல்வெளியை தேர்ந்தெடுத்து அதிலே தன் தலைநகரை நிறுத்த விரும்புகின்றான்.

அந்த இடம் மேடாக இருக்கிறது. அதற்கு அருகே ஜெயங்கொண்டம் என்ற ஊர் இருக்கிறது. கிழக்கே உடையார்குடி என்கிற சோழர்களின் பரம்பரை ஊர் இருக்கிறது. கொள்ளிடம் அருகே இருக்கிறது. எனவே அந்த இடமே சிறந்த இடம் என்று தேர்ந்தெடுத்து தந்தையைப் போலவே மிகச் சிறப்பாக தன் வழிபாட்டுக்கென்று ஒரு கோவில் எழுப்பி பெருவுடையார் என்று தஞ்சையிலுள்ள பிரகதீஸ்வரரை அழைக்கிறோமே, உண்மையிலேயே தஞ்சையில் இருப்பதைவிட மிகப்பெரிய ஒரு சிவலிங்கம் அமைத்து, அப்பாவின் கோவிலைவிட மிக அழகான சிற்பங்கள் வைத்து, தன்தந்தையான ராஜராஜனைவிட சிறப்பாக தான் இருப்பதை பறைசாற்றிக்கொள்ள விரும்பி அற்புதமான ஒரு நகரை அமைக்கிறான். அதற்கு கங்கை கொண்ட சோழபுரம் என்று பிற்பாடு பெயரிடுகிறான்.

பெரிய மதில்கள், அதற்குள்ளே ஊர். ஆறேழு மாளிகைகள். காவலர்களுக்கான குடியிருப்புகள். பணியாளர்களுக்குண்டான இடங்கள். பல தெருக்கள் கொண்ட நகரையே அங்கு ஸ்தாபிக்கிறான். நித்த வினோத பெருந்தச்சனான ரவி என்பவனுடைய தலைமையில் அந்த கோவில் உருவாகிறது. சதுரம், எண்கோணம், வட்டம் என்கிற விதத்தில் கோவில் விமானம் அமைகிறது. அது நெளிந்து நெளிந்து இருப்பதாக காட்சியளிக்கிறது. தஞ்சை விமானம் ஒரு குத்தாக நெடிய உருவமாக காட்சியளிக்கிறபோது இந்த விமானம் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது.

<![if !vml]><![endif]>உள்ளே சண்டேஸ்வர நாயனாருக்கு உண்டான சிற்பம். யார் சண்டேஸ்வர நாயனார். தான் சிவலிங்கம் வைத்து பூஜை செய்தபோது, மாடுகள் மேய்வதை கண்டுகொள்ளாதபோது தன் தந்தை வந்து தன்னை அடிக்க, அதைப்பற்றி கவலைப்படாது பூஜை செய்ய, தான் பூஜை செய்த சிவலிங்கத்தை உதைக்க முற்பட கையில் இருந்த கோலால் தந்தையின் காலை உடைத்தவர் சண்டேஸ்வர நாயனார். அவர் பக்தியை மெச்சி சிவபெருமான் அவருக்கு பட்டம் சூட்டினார். அந்தச் சிலை கோவிலில் மிகச்சிறப்பாக இருக்கிறது. பெரிய வண்ணப் பூமாலையை கொண்டு சண்டேஸ்வர நாயனார் தலையில் சிவபெருமானே சூட்டுகிறார். அருகே உமைதேவி அதை கனிவுடன் பார்த்துக்கொண்டிருக்கிறார். மிக பய பக்தியுடன் சண்டேஸ்வர நாயனார் அதை வாங்கிக் கொள்கிறார். பரதகண்டத்திலேயே மிக அழகிய சிற்பம் இது. இந்த சண்டேஸ்வர நாயனார் ராஜேந்திர சோழரின் சாயலில் இருப்பதாக பெரியவர்கள் சொல்கிறார்கள்.

ராஜேந்திர சோழனை அழகன் என்றும், காமவேள் என்றும் குறிக்கிறார்கள். எப்படிப்பட்ட காமவேள் சிவனின் முக்கண் தொடாத காமவேள் மிக அழகன் என்று வர்ணிக்கிறார்கள். அவன் அழகன் மட்டுமல்ல. மிகுந்த திறமை மிக்கவன்.

மேலை சாளுக்கியம் என்கிற கர்நாடகத்திலிருந்து தாக்குதல் வராமல் இருக்க கீழை சாளுக்கியத்தில் மணவினை முடித்துக்கொள்கிறான். தன் மகள் அம்மங்காவை அந்த ஊர் மன்னன் ராஜராஜ நரேந்திரனுக்கு மண
முடிக்கிறான். ராஜராஜ நரேந்திரனின் தந்தை விமலாதித்தன். அவன் ராஜேந்திர சோழனின் தங்கையை மணமுடித்திருக்கிறான். தங்கை மகனுக்கு தன் மகளை மணமுடித்து அரசியல் உறுதி செய்து கொள்கிறான். அங்கு தன் படையை நிறுவுகிறான். மேலை சாளுக்கியத்திலிருந்து அதாவது மேற்கே இருந்து மட்டும் தொந்தரவு வரவில்லை. வடக்கே இருந்தும் கலிங்கத்திலிருந்தும் தொந்தரவு வருகிறது. அப்படியா, படைகளை கலிங்கத்திற்கு அனுப்பு. கலிங்க மன்னன் விழுகிறான். அதற்கு மேல் உள்ள ஒட்ட தேசமும் விழுகிறது. அதற்கு மேல் உள்ள தட்சிணலாடமும் நாசமடைகிறது. வங்கத்தில் உள்ள பால அரசர்கள் அடிபடுகிறார்கள். அவ்வளவு தொலைவு தன் படைகளை அரசியலுக்காக அனுப்பி, அதே சமயம் தந்தை செய்யாத ஒரு பெரிய செயலையும் செய்யவேண்டும் என்று தீர்மானித்து பெரும் தவலைகளில் கங்கை நீரை எடுத்து வருகிறான்.

கங்கை நீரை மட்டுமல்ல, தெய்வத்திரு உருவங்களும் பிடுங்கிக் கொண்டு வரப்படுகின்றன. பெண்டிர் பண்டாரமும் அள்ளிக் கொண்டு வருகிறான். சோழ தேசம் செழிப்பாகியது. எப்பொழுது ஊர் என்று வந்து விட்டதோ நீர் வரவேண்டும். தன்னுடைய வீரர்களாலும், தான் பிடித்து வந்த சேர தேசத்து, பாண்டிய தேசத்து வீரர்களாலும் மிகப்பெரிய ஏரி வெட்டுகிறான். அந்த ஏரிக்கு நடுவே சாரம் அமைத்து பெரும் தவலைகளை அங்கு கொண்டு போய் உயரே வைத்து அந்த நீரை தூண்போல விழச் செய்கிறான். கங்கை நீர் அந்த ஏரியில் கலக்கிறது. அதற்கு கங்கை கொண்ட சோழப் பேரேரி என்று பெயர் வருகிறது. இப்பொழுது பொன்னேரி என்று அழைக்கப்படுகிறது.

யானைகளாலும், பசுமாடுகளாலும், அடிமை வீரர்களாலும் கங்கை கொண்ட சோழபுரம் நிரம்பி வருகிறது. அதற்கு அந்த பேரேரி வசதியாக வாழ மிகவும் உதவுகிறது.

இரட்டைச்சுவர் கொண்ட அரண்மனைகள் எழுப்பப்படுகின்றன. இரண்டு விதமான மதில் சுவர்கள் இருக்கின்றன. எந்த எதிரியும் ஒருபொழுதும் தாக்காதவாறு மிக உறுதியாக பத்திரமாக அந்த ஊர் இருக்கிறது. அந்த ஊரிலிருந்து எடுக்கப்பட்ட பரவையின் சிலை இப்பொழுது சென்னை அருங்காட்சியகத்தில் இருக்கிறது. மிக அற்புதமான சிலை அது. சுந்தரமூர்த்தி நாயனாரின் துணைவியார் பரவை நாச்சியாரின் சிற்பமாக இருக்கலாம். அதற்கு பரவை என்கிற ராஜேந்திர சோழரின் அனுக்கி மாதிரியாக நின்றிருக்கலாம். மிக அழகான பெண் உருவம். அலங்காரமான நகைகள். மிக ஒயிலாக முடிக்கப்பட்ட தலை அலங்காரம். சிறிய சிரிப்பு. குறுகிய இடை. வளமான உடல் என்று கண்ணை கவருகிறது.

யார் அந்த பரவை. ராஜேந்திர சோழருக்கு என்ன முக்கியம். திருவாரூரில் அவள் தேவரடியார் கூட்டத்தைச் சேர்ந்தவள். அவளை கோவில் வாசலில் சந்திக்கிறான். வியக்கிறான். பேசுகிறான். காதல் வயப்படுகிறான்.

''மன்னா, நான் தேவரடியாள். தாசி. நீங்கள் சொடுக்கினால் வரவேண்டியவள். என்னைப்போய் மனைவி என்கிறீர்களே.''

''ஆமாம். நீ தேவரடியார் அல்ல. நீ என் மனைவி. பலர் பார்க்க திருமணம் செய்வேன். நீ ராஜேந்திர சோழனை கணவன் என்று கூறலாம்.'' அவளை தேர் ஏற்றி ஊர் முழுவதும் வலம் வந்து, உனக்கு என்ன வேண்டும் சொல் என்று கேட்க, எனக்கு எதுவும் வேண்டாம். இது செங்கல் கோவிலாக இருக்கிறது. இதை கற்றளியாக மாற்ற முடியுமா என்று திருவாரூர் கோவிலை கேட்கிறார்கள். இரண்டே வருடங்களில் அந்த கோவில் கற்றளியாக மாறுகிறது. அவள் பத்தாயிரம் கழஞ்சுக்கு மேல் செலவழித்து கருவறை சுவற்றையும், முன் மாடத்தையும் தங்கத்தால் இழைக்கிறாள். வேறு சில இடங்களை செப்புத்தகடால் அலங்கரிக்கிறாள். திருவாரூர் புகழ் பெறுகிறது. அவள் உயரத்திற்கு ஒரு விளக்கு செய்வித்து, அந்த விளக்கை கருவறையில் வைத்து ஏற்றி தியாகேஸ்வரரை ராஜேந்திரன் வணங்குகிறான். அது மட்டுமா பரவையின் பெருமை? இல்லை. ராஜேந்திர சோழனின் மகன் அவர்கள் இருவரின் சிலைகளைச் செய்து திருவாரூர் கோவிலில் ஒரு தனி சன்னதி ஏற்படுத்தி வழிபாட்டிற்குரிய இடமாகச் செய்கிறான். தந்தையின் பட்டமகிஷி அல்ல. மனைவி அல்ல. கூத்தி அல்ல. அனுக்கி. கேர்ள் பிரெண்ட் என்று அழைக்கப்படுகின்ற அந்த பெண்மணிக்கு அத்தனை மரியாதை கிடைத்திருக்கிறது. அத்தனை மரியாதைக்குரிய பெண்ணாக அவள் திகழ்ந்திருக்கிறாள்.



பராந்தகன் காலத்தில் சோழர்கள், பாண்டியர்களை ஜெயிக்கிறார்கள். ஆனால் பாண்டிய மன்னனின் மணி முடியையும், செங்கோலையும் பறிக்க முடியவில்லை. அவை ஈழம் என்கிற ஸ்ரீலங்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டன. அங்கு அடைக்கலமாக வைக்கப்பட்டன. அடுத்து அடுத்து வந்த மன்னர்களும் அதைப் பெற போராடுகிறார்கள். ஆனால் கிடைக்கவில்லை. ராஜராஜர் முழு முயற்சி செய்கிறார். முடியவில்லை. ஆனால் ராஜராஜரின் மகன் ராஜேந்திர சோழன் ஸ்ரீலங்காவின் மீது படையெடுத்து நாற்புறமும் வளைத்துக்கொண்டு, காடுகளை அழித்து உள்ளே புகுந்து அந்த மணிமுடியையும், செங்கோலையும் கைப்பற்றுகிறார். உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. கொடுத்துவிடு என்று கேட்டு வாங்குகிறார். அதை கொடுத்த பிறகு ஸ்ரீலங்கா மன்னனின் மணிமுடியையும், அவன் மனைவியின் அழகிய முடியையும் பறித்துக் கொள்கிறார். அவனை கொண்டு வந்து சோழ தேசத்தில் சிறை வைக்கிறார். அவன் உயிருக்கு ஒரு ஆபத்தும் இல்லை. அவன் சோழ தேசத்திலேயே செத்துப்போகிறான். தமிழருக்கும், சிங்களவருக்கும் உண்டான பகைமை இன்று நேற்றல்ல. அது ஆயிரம் வருஷத்து பகைமை.

கங்கை கொண்ட அந்த ராஜேந்திரன் பட்டமேற்று ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. அதை மிகப்பெரிய விழாவாக கங்கை கொண்ட சோழபுரத்தில் இருக்கின்ற ராஜாராம் கோமகன் என்ற ஒரு பொறியியல் வல்லுனர் பெரிதாகக் கொண்டாடுகிறார். விளக்குகளால் கங்கை கொண்ட சோழபுரத்தை அலங்கரிக்கிறார். இந்த ஜூலை இருபத்திநாலு, இருபத்தைந்து தேதிகளில் கற்றறிந்த பல அறிஞர்கள் கூடுகின்ற விழாவாக பெரும் ஊர்வலமாக ராஜேந்திர சோழனை போற்றும் வண்ணம் நடைபெற இருக்கிறது. பரதகண்டத்திலேயே ராஜேந்திர சோழன் ஒருவன்தான் தடுத்து போர் செய்யாது, மற்றவரை அடித்து அடித்து போர் செய்தவன். கிழக்கே வணிகர்களுக்கு தொந்தரவு இருப்பதால் அங்குள்ள ஸ்ரீவிஜயம், இலங்காசோகம், கடாரம், காம்போஜம் எல்லாவற்றையும் அடித்து பிடுங்கியவன். பெரும் பொருள் கொண்டு வந்து சோழ தேசத்தை நிரப்பியவன். இன்றைய ஜாவா, சுமித்ரா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேஷியா எல்லாம் அவனால் தாக்கப்பட்டவை. அங்கிருந்து தோரணங்களும், யானைகளும், பெரும் நிதிக்குவியல்களும் சோழ தேசம் வந்து சேர்ந்தன. அப்படிப்பட்ட ஒரு தமிழ் மன்னனை, தமிழரின் சிற்பத்திறனை உயர்த்தியவனை நாம் கொண்டாட வேண்டும். அவனை வணங்க வேண்டும். தமிழின் சிறப்பை உலகறியச் செய்த அவனை வாழ்த்த வேண்டும். எனவே, ஜூலை இருபத்தி நாலு, இருபத்தைந்து கங்கை கொண்ட சோழபுரம் வாருங்கள். அந்த கோவிலை பாருங்கள். உங்கள் குழந்தைகளை கூட்டிவந்து காட்டுங்கள். தமிழ் மக்களின் பெருமையைச் சொல்லுங்கள். அவசியம் வாருங்கள்.

***

கங்கை கொண்ட சோழபுரம் - குடவாயில் பாலசுப்பிரமணியன்

விஜயாலய சோழன் காலத்தில் இருந்து ராஜராஜன் காலம் முடியும் வரை தஞ்சை தலைநகரமாக இருந்தது. ராஜேந்திர சோழன் முதல் 10 ஆண்டுகள் மட்டுமே தஞ்சையில் இருந்தார். பின்பு கங்கை கொண்ட சோழபுரத்திற்கு தலைநகரை மாற்றினார்.

இதுகுறித்து பிரபல வரலாற்று அறிஞரும், கல்வெட்டு ஆராய்ச்சியாளருமான முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:–

இந்திய திருநாட்டிலும், கடல் கடந்த கீழ்த்திசை நாடுகளிலும் எண்ணற்ற வெற்றிகளை குவித்தவர் ராஜேந்திர சோழன். ஒவ்வொரு முறையும் பல்லாயிரக்கணக்கான யானைகளும், குதிரைகளும், தேர்களும், காலாட்படையும் ஆறுகளும், வயல்களும் மிகுந்த மருதநில பகுதியான தஞ்சையில் இருந்து புறப்பட்டு வடபுலம் செல்ல, காவிரியின் அத்தனை கிளை நதிகளையும் கடக்க வேண்டும். சாலைகள் பழுதடையும். பசுமையான விளைநிலங்கள் பாழ்படும். இதை அனுபவபூர்வமாக உணர்ந்த ராஜேந்திரன் தான் விரும்பிய ஒரு புது தலைநகரத்தை கொள்ளிடத்திற்கு வடக்கே நிறுவ விரும்பினார். அதனால் உருவானதே கங்கை கொண்ட சோழபுரம் என்னும் கங்காபுரியாகும்.

<![if !vml]><![endif]>தற்போதைய வங்கதேசம், மேற்கு வங்காளம் ஆகியவற்றை அப்போது பாலர் என்னும் அரச மரபினர் ஆட்சி செய்தனர். வடபுலம் நோக்கி படை எடுத்துச்சென்ற ராஜேந்திர சோழனின் பெரும்படை கங்கை பேராற்றைக் கடந்து பல நாடுகளை வென்று இறுதியாக பாலர்களின் வங்க தேசத்தையும் கைப்பற்றி வெற்றிவாகை சூடியது. பின்னர் அங்கிருந்து திரும்பும் போது கங்கை நீரை குடங்களில் சுமந்து வந்தனர். வெற்றிச் செய்தி அறிந்த ராஜேந்திர சோழன் கோதாவரி ஆற்றங்கரை வரை சென்று கங்கை நீருடன் திரும்பும் தன் பெரும் படையை எதிர் கொண்டு அழைத்து அப்புனித நீரால் தான் தோற்றுவித்த புதிய நகரின் மணி மகுடமாக திகழ்ந்த சிவலாயத்திற்கு கடவுள் மங்கலம் (நன்னீராட்டு) செய்தார்.

மேலும் அந்நகரின் குடிநீர் தேவைக்காக புதிதாக ஏரியை தோற்றுவித்து அதில் அப்புனித நீரை ஊற்றி சோழ கங்கம் என அதற்கு பெயரும் இட்டார். கங்கை கொண்ட சோழன் என்று பட்டம் புனைந்து கொண்டதோடு புதிய நகரத்திற்கு கங்கைகொண்ட சோழபுரம் என்றும், அங்கு அவர் எடுத்த பெருங்கோவிலுக்கு கங்கைகொண்ட சோழிச்சரம் என்றும் அதன் மூலவருக்கு கங்கைகொண்ட சோழிச்சரமுடைய பரமசாமி என்றும் பெயர்களைச் சூட்டி வரலாற்றில் என்றும் நிலைப்பெறச்செய்தார்.

சிவபாத சேகரன் என தன்னை கூறி கொண்ட ராஜராஜ சோழனின் மாட்சிமையை எவ்வாறு தஞ்சை ராஜராஜேச்சரம் என்னும் பெரியகோவில் காட்டி நிற்கின்றதோ அது போன்றே சிவசரணசேகரன் என்று தன்னை குறிப்பிட்டுக்கொண்ட ராஜேந்திர சோழனின் அருஞ் சாதனைகளை கங்கை கொண்ட சோழிச்சரம், சந்திரன், சூரியன் உள்ளளவும் காட்டி நிற்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

***

பிரம்மதேசம் கல்வெட்டு

தஞ்சையில் பிறந்து, கங்கை கொண்ட சோழபுரத்தில் வாழ்ந்து கடல் கடந்த வெற்றிகளை தழுவி, இந்திய வரலாற்றில் தனியிடம் பெற்ற மாமன்னன் ராஜேந்திர சோழன் கி.பி.1044–ம் ஆண்டில் வட ஆற்காடு மாவட்டம் பிரம்ம தேசம் என்னும் ஊரில் தங்கியிருந்த போது மரணம் அடைந்தார்.

இதனை பிரம்மதேசம் கல்வெட்டு கூறுகிறது.

கருத்துகள் இல்லை: