Pages

திங்கள், மே 19, 2014

பாம்பன் ரயிலுக்கு வயது 100!


பாம்பன் ரயிலுக்கு வயது 100! சுவாரசியமான சில வரலாற்று தகவல்கள் புகை படங்களுடன் !!



 

கி.பி.1480-ல் ஏற்பட்ட கடும் புயலால் பாம்பன் ராமேஸ்வரம் பகுதிகள் இந்தியாவின் நிலப்பரப்பில் இருந்து துண்டிக்கப்பட்டு தனி தீவு ஆனது. ராமேஸ்வரம் தீவில் ஒளிந்திருந்த இரண்டாம் சடையக்கன் சேதுபதியை பிடித்துவர திருமலை நாயக்கரின் தளபதியான ராமசுப்பையனால் பாம்பனாறு பகுதியில் கற்களால் பாலம் அமைக்கப்பட்டது. அதன் பின் ஆங்கிலேயர் ஆட்சியின் போது ராமேஸ்வரம், பாம்பன் துறைமுகங்களில் இருந்து இலங்கைக்கும், உள்நாட்டு துறைமுகங்களுக்கும் சிறு கப்பல்கள் மூலம் வணிகம் செய்து வந்தனர். 1854ஆம் ஆண்டில் 80 அடி அகலத்தில் 4400 அடி நீளத்திற்கு சுமார் 14 அடி ஆழப்படுத்தப்பட்டதன் விளைவாக பாம்பன் கால்வாயில் பெரிய கப்பல்களும், போர் கப்பல்களும் பயணிக்க தொடங்கின.
1874ல் குஜராத்தை சேர்ந்த கட்ஜ் குரூப் பாம்பன் கடலின் மேல் பாலம் அமைப்பதற்காக முதன் முதலில் ஆய்வு நடத்தினர். அதனைத் தொடர்ந்து வந்த ஆங்கிலேயர்கள் தங்கள் வியாபார தொடர்பை விரிவாக்கும் வகையில் இந்தியாவையும், இலங்கையையும் இணைக்க முயன்றனர். அதனடிப்படையில் பாம்பன் கடலிலும், தனுஷ்கோடி-தலைமன்னார் இடையிலும் பாலம் அமைக்க திட்டமிட்டனர்.
அப்போதைய கவர்னர் ஜெனரலான மன்றோ நடத்திய இந்த ஆய்வில் பாலம் அமைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்ததால் இந்த திட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து, சென்னை மாகாண துணை கவர்னர் ஜெனரலாக இருந்த ரைட்சன் என்பவரால் 'டுவின் ரயில் பெரி சர்வீஸ்' என்ற திட்டம் ஆய்வு செய்யப்பட்டது. இதன்படி, சென்னையில் இருந்து வரும் ரயிலை தனுஷ்கோடி வரை கொண்டு செல்வது. பின்னர் அந்த ரயிலின் எஞ்சினை தவிர்த்து மற்ற ரயில் பெட்டிகளை அப்படியே கப்பலுக்குள் இழுத்து செல்வது. ரயிலுடன் செல்லும் கப்பல் தலைமன்னாரில் மீண்டும் தரையிறக்கப்பட்டு எஞ்சின் பொருத்திய ரயிலாக இயக்க திட்டமிடப்பட்டது. இதற்கான திட்ட மதிப்பீடாக அன்றைய நாளில் ரூ.229 லட்சம் என கூறப்பட்டது. இங்கிலாந்து அரசு இந்த திட்டத்திற்கும் அனுமதி அளிக்கவில்லை.
இதன் பின்னர்தான் மேலே ரயிலும், கீழே கப்பலும் செல்லும் வகையில் 'டபுள் லீப் கேட்லீவர்' முறையில் பாலம் கட்ட 1899ல் திட்டமிடப்பட்டது. இந்த பாலத்திற்கான பணிகளுக்கும், தனுஷ்கோடி-தலைமன்னார் இடையேயான போக்குவரத்திற்கு பயன்படும் 2 கப்பல்கள் வாங்குவதற்கும் ரூ.70 லட்சம் ஆகும் என உத்தேசிக்கப்பட்டது.
1902ல் துவங்கிய பாம்பன் பாலப்பணிகளுக்கான பொருட்கள் அனைத்தும் இங்கிலாந்திலிருந்து கொண்டு வரப்பட்டன. குஜராத்தை சேர்ந்த கரோரி-கட்ஜ் குடும்பத்தினரே இந்த பணியினை மே்கொண்டனர். பாலத்திற்கான பணிகள் நடந்து வந்த போது ஏற்பட்ட இயற்கை சீற்றத்தால் ஏராளமான மனித உயிர்பலியும், பொருட் சேதமும் நிகழ்ந்துள்ளது. இந்த பணியின் போது இறந்து போன ஆங்கிலேய பொறியாளர்கள் சமாதிகள் இன்றும் பாம்பனில் உள்ளது. அதனையெல்லாம் பொருட்படுத்தாது ஆகஸ்ட் 1910ல் பாலத்தின் கட்டுமான பணிகள் துவங்கின. கடலின் நடுவே 144 தூண்கள் அமைக்கப்பட்டன. அதே காலத்தில் தூண்களை இணைக்கும் இரும்பு காரிடர்களை பொருத்தும் பணியும், அதன் மேல் தண்டவாளங்கள் அமைக்கும் பணியும் நடந்தன. 1913 டிசம்பரில் இப்பணிகள் நிறைவு பெறவே பாலத்தின் இடையே கப்பல் செல்வதற்கான பணிகள் துவங்கின. ஜெர்மனியை சேர்ந்த ஷெர்சர் ரோலிங் லிப்டின் கம்பெனியிடம் இந்த பணி ஒப்படைக்கப்பட்டது. இதன் படி கப்பல் செல்லும் கால்வாய் பகுதியில் 124 அடி ஆழத்திற்கு இரண்டு தூண்கள் அமைக்கப்பட்டது.
அதன் மேல் பகுதியில் பாஸ்கல் எனப்படும் இரண்டு லீப்கள் பொருத்தப்பட்டன. (இந்த முறையில் அமைக்கப்பட்ட உலகின் முதல் பாலம் இதுதான்). இந்த பாலத்தின் இருபுறங்களிலும் உள்ள ராக் அன்ட் பினியன் கியர் சிஸ்டம் இயக்கப்பட்டவுடன் ஷெர்சர் பாலம் மேல் நோக்கி எழுந்து இரண்டாக பிரிந்து அவ்வழியே செல்லும் கப்பலுக்கு வழி விடும் வகையில் அமைக்கப்பட்டது.
பாலம் பிளவுபட்டு அதிகபட்சமாக 81 டிகிரி உயரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் இருபுறமும் இதனை இயக்குவதற்கான பணிகளில் ஒரே நேரத்தில் 16 பேர் பணியாற்றுவர். இந்த பாலத்தை வடிவமைத்த 'ஷெர்சர்' பெயரிலேயே இந்த தூக்கு பாலம் அழைக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு நிறைவடைந்த இந்த பாலத்தின் வழியாக 1914 பிப்ரவரி 24ல் முதல் ரயில் போக்குவரத்து துவங்கியது. அப்போதைய தென் இந்திய ரயில்வே கம்பெனி லிமிடெட்டின் நிர்வாக மேலாளர் நெவில் ப்ரீஸ்ட்லி இந்த பாலத்தை திறந்து வைத்தார். அதே நாளில் தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு கப்பல் பயணிகள் கப்பல் போக்குவரத்தும் துவக்கப்பட்டது. சென்னையில் இருந்து புறப்படும் 'போட் மெயி'லில் தனுஷ்கோடி வந்து அங்கிருந்து இலங்கை செல்ல ஒரே டிக்கட் வழங்கப்பட்டது. இந்த பாலத்தின் மூலம் இந்திய-இலங்கை ரயில்வேக்களுக்கு இடையேயான தூரம் சுமார் 35 கி.மீட்டராக குறைந்தது. பாம்பனில் இருந்து ராமேஸ்வரம் தீவின் கிழக்கு முனையில் அமைந்திருந்த தனுஷ்கோடி வரை ரயில் இயக்கப்பட்டது. அதே வேளையில் இந்தியா – இலங்கை இடையே பயணிகளையும், சரக்குகளையும் சுமந்து செல்ல தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே ரயில்வே நிர்வாகத்தால் நீராவி படகுகளும் இயக்கப்பட்டன.
சுமார் 50 ஆண்டுகள் ரயில் சேவையாற்றிய பாம்பன் பாலத்தை 1964ல் ஏற்பட்ட புயல் சேதபடுத்தியது. 124 ஸ்பான்கள் சீற்றம் கொண்ட அலையினால் அடித்து செல்லப்பட்டது. ஆனால் ஷெர்சர் பாலத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. இதையடுத்து, தென்னக ரயில்வே பொறியாளரான ஸ்ரீதரன் தலைமையில் பணியாற்றிய தொழிலாளர்கள் போர்கால அடிப்படையில் செயல்பட்டு 67 நாட்களில் சேதமடைந்த பாலத்தை கட்டமைத்தனர். இதற்கென 5 மாதங்களுக்கு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு 1965 மார்ச் மாதம் ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டன.
மதுரை-ராமேஸ்வரம் இடையிலான மீட்டர்கேஜ் பாதை அகல ரயில்பாதையாக அறிவிக்கப்பட்டது. இதற்கு ஏதுவாக கடலின் மேல் புதிய பாலம் அமைக்க சர்வதேச அளவில் ஒப்பந்தம் கோரப்பட்டது. ரூ.800 கோடி செலவில் இப்பணியை மேற்கொள்ள ஒப்பந்த புள்ளிகளை அந்நிறுவனங்கள் சமர்பித்தன. ஆனால், ரயில்வே பொறியியல் வல்லுநர்கள், சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகம், தமிழ்நாடு கட்டுமான பொறியியல் துறை வல்லுநர்கள் இணைந்து ஆய்வு செய்து பழைய பாலத்தையே அகல ரயில் செல்லும் பாலமாக சீரமைத்தனர். 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 40 நாட்கள் தங்கள் உழைப்பை செலுத்தி பாம்பன் பாலத்தில் அகல ரயில் செல்ல வழி வகுத்தனர். இதற்கென பாலத்தில் 32000 ரிவிட்ஸ் பொறுத்தப்பட்டுள்ளதுடன் தலா 700 கிலோ எடை கொண்ட 95 ஸ்டீல் பிளேட்டுகள் இந்த பாலத்தில் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த பாலத்திற்கான கட்டுமான பணிகளில் 4 ஆயிரம் டன் சிமெண்ட், 1 லட்சத்து 36 ஆயிரம் கனசதுர அடி களிமண், 18 ஆயிரம் கனசதுர அடி கற்கள், 3 ஆயிரம் கன சதுர அடி மண், 80 ஆயிரம் கன சதுர அடி பாறைகள் மற்றும் 2200 டன் எஃக்கு ஆகியன பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை தவிர சரக்கு ரயில் போக்குவரத்தினையும் தாங்கும் வகையில் சப்போர்டிவ் ஸ்டோன்கள் பாலத்தின் நான்கு புறமும் அமைக்கப்ப்பட்டுள்ளன. இத்தனைக்கும் ஆன மொத்த செலவே வெறும் 24 கோடிதான்.
2057.5 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாம்பன் பாலம் இந்தியாவில் கடல் மீது அமைக்கப்பட்ட 2 வது மிக நீண்ட பாலமாகும். சுமார் 229 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட இந்த பாலத்தினை தற்போது அமைப்பது என்றால் 700 கோடி செலவாகும்.
பாலத்தின் ரயில் போக்குவரத்து குறித்து தகவல் தெரிவிக்க 5 வகையான முறைகள் கையாளப்படுகின்றன. இது தவிர காற்று மணிக்கு 58 கி.மீ வேகத்திற்கு மேல் வீசினால் தானியங்கி சிக்னல்கள் ரயில் போக்குவரத்துக்கான அனுமதியை நிறுத்திவிடும். பொதுவாக ரயில் பாலங்கள் அனைத்தும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பராமரிக்கப்படும். ஆனால் பாம்பன் பாலம் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் பராமரிப்பு செய்யப்படுகிறது. இதற்கென ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. அதற்கு காரணம் உலகில் அதிக அரிமானம் கொண்ட கடல் பகுதிகளில் பாம்பன் 2ம் இடத்தை பெற்றிருப்பதுதான்.
அந்த அளவிற்கு அரிமான தன்மை கொண்ட பகுதியில் அமைந்திருந்தாலும் தன்னை நம்பி பயணம் செய்யும் பயணிகளின் உயிருக்கு தனது நூறாண்டு வாழ்வில் ஒரு சிறு ஊறு கூட விளைவித்ததில்லை. அதே நேரத்தில் இயற்கையின் சீற்றத்தாலும் சில மனிதர்களின் அலட்சியத்தாலும் பாம்பன் பாலத்துக்கு கடந்த ஆண்டு ஜனவரி 13 இரவில் சேதம் ஏற்பட்டது. பாம்பன் கால்வாயை கடக்க வந்த இந்திய கடற்படை கப்பல் ஒன்று காற்றின் வேகத்தால் இழுத்து வரப்பட்டு பாலத்தில் மோதியது. இதனால் பாலத்தின் 142 வது தூண் நிலை மாறி ரயில் தண்டவாளம் சேதமானது. இதனால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மீண்டும் ஒரே வாரத்தில் பாலம் சீரமைக்கப்பட்டது.
பழம் பெருமைகளை மட்டுமல்லாது பாரின் மூளை முடுக்குகளில் இருந்து எல்லாம் சுற்றுலா பயணிகளை சுமந்து வரும் ரயில்களை தாங்கும் இந்த வலிமையான பாலம் இந்திய ரயில்வேயின் வியக்கதக்க பொறியியல் அதிசயம் ஆகும். தனது நூறாவது வயதினை பிப்ரவரி 23ல் கம்பீரமாக நிறைவு செய்தது உள்ளது. அதனை போற்றும் வகையில் தென்னக ரயில்வே துறையினர் விழாக்கள் பல நடத்த உள்ளனர். அதன் துவக்கமாக கடந்த 27ஆம் தேதி பாம்பனில் முன்னாள் குயடிரசுத் தலைவர் அப்துல்கலாம் தலைமையில் விழா நடந்தது. இதில் பங்கேற்ற கலாம், ராமேஸ்வரத்தில் பிறந்த தனக்கும் தனது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தீவின் மக்களுக்கு பாம்பன் பாலம் எப்படியெல்லாம் உதவுகிறது எனவும், பாலத்தினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
விழாவின் முத்தாய்ப்பாக மண்டபத்தில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் பாம்பனுக்கு பயணித்த கலாம், "கீழே ஆழமான கடல் மேலே தெளிவான வானம் இடையில் தென்றலாக வீசிய கடல்காற்று ஆகியவற்றுக்கு மத்தியில் பாம்பன் பாலத்தில் நான் மேற்கொண்ட பயணம் என்னை பரவசபடுத்தியது" என கூறியதுடன் இந்த பெருமைமிகு பாலம் உருவாக காரணமான ஒவ்வொரு தொழிலாளிக்கும் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து கொண்டார்.
நாட்டின் பாரம்பரிய சின்னமாக பாம்பன் பாலத்தை உலக அளவிலான சின்னமாக அறிவித்து கௌரவிக்க வேண்டும் என்பதே கலாம் உள்ளிட்ட அனைத்து மக்களின் விருப்பம் ஆகும்.

























































கருத்துகள் இல்லை: