Pages

புதன், நவம்பர் 27, 2013

செல்போன் உறவுகள்



l2செல்போனை கையில் எடுத்தவுடன் உங்கள் நண்பர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை அதைப் பார்த்தே தெரிந்துகொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? இதை தான் "லூப்ட் (loopt) செய்கிறது. இருபத்தியோராம் நூற்றாண்டின் அற்புதம் என்றும் லூப்டை வர்ணிக்கலாம் எனும் அளவுக்கு இந்த சேவை செல்போன் திரையில் நகரவரைப்படத்தின் நடுவே நண்பர்களின் இருப்பிடத்தை சுட்டிக்காட்டி விடுகிறது.
.
இருப்பிடத்தை சுட்டிக்காட்டும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த அற்புதத்தை லூப்ட் செய்து காட்டுகிறது. இந்த அற்புதத்திற்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. அதனை பிறகு பார்க்கலாம்.
முதலில் லூப்டின் மகத்துவத்தை பார்க்கலாம்! மனித வரலாற்றிலேயே எங்கே இருக்கிறாய்? என்னும் கேள்வி, செல்போன் யுகத்தில் தான் இதுவரை இல்லாத முக்கியத்துவத்தை பெற்றிருக்கின்றது.
தியேட்டரிலிருந்து வெளியே வரும் போது, மாநாட்டு அரங்கை விட்டு வெளியே வரும் போது, பஸ் அல்லது ரெயிலை விட்டு இறங்கியதுமே பலரும் கேட்கும் முதல் கேள்வி எங்கே இருக்கிறாய்? என்பதுதான்.
அதாவது ஒவ்வொருவரும் தங்கள் நண்பர்களை தொடர்பு கொண்டு, இந்த கேள்வியை ஆர்வத்தோடு கேட்கின்றனர். பார்த்து ரசித்தவைப்பற்றி, கருத்துக்களை பறிமாறிக்கொள்வதற்காக அல்லது அடுத்த இடத்திற்கு சேர்ந்து செல்வதற்காக, நண்பர்களின் இருப்பிடத்தை அறியும் தேவை ஏற்படுகிறது.
தவிரவும், நண்பர்கள் பட்டாளம் சேரும் முன் குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் எங்கே இருக்கின்றனர் என்பதை அறியும் ஆர்வம் இயல்பானதுதானே! நண்பர்கள் மட்டும் என்பதில்லை, பாசம் மிகுந்த தாய்க்கு, மகளின் இருப்பிடத்தை அறியும் தேவை ஏற்படத்தானே செய்யும். அப்பா மகனின் இருப்பிடத்தை அறிய விரும்பலாம்.
ஒரே விழாவுக்கு செல்பவர்கள் அங்கு வரக்கூடிய சக ஊழியர்கள் அப்போது இருப்பது எங்கே என்று அறிய முக்கியமாக நினைக்கலாம். இப்படி எண்ணற்ற சூழல்களில் பலரது மனதில் தோன்றும் கேள்வி எங்கே இருக்கிறாய் என்பது தான்! இந்த கேள்வி எழுந்ததுமே செல்போனில் குறிப்பிட்ட நபரை அழைத்து இதற்கான பதிலை தெரிந்து கொள்வது சுலபமானதுதான்.
இந்த கேள்விக்கான பதில் பெறுவதை இன்னும் கூட இயல்பானதாக ஆக்கியிருக்கிறது லூப்ட் சேவை. "லூப்ட்' வசதி கொண்ட செல்போன்களில் அதன் திரையை பார்த்தாலே ஒருவருடைய நண்பர்கள் எங்கெல்லாம் இருக்கின்றனர் என்பதை தெரிந்து கொண்டு விடலாம்.
உதாரணமாக கல்லூரியில் இருந்து புறப்பட்டு, விளையாட்டு மைதானத்திற்கு பயிற்சி பெறச் செல்லும் வாலிபர் தனது நண்பர்கள் எங்கே இருக்கின்றனர், மைதானத்தை நோக்கி வரும் வழியில் இருக்கின்றனரா என்பதை சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.
இந்த வசதியால் ஏற்படக்கூடிய பலன்களை எத்தனையோ விதங்களில் கற்பனை செய்து கொள்ளலாம். திடீரென சினிமாவுக்கு போக நினைக்கும் நபர் தனது நண்பர்களில் யாரை எல்லாம் அழைக்கலாம் என்பதை செல் திரையை பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.
பூங்காவில் காத்திருக்கும் காதலனுக்கு காதலியின் வருகை செல்போன் திரையிலேயே தெரிய வரும். ஒரு குழுவாக ஒன்றிணைந்து செயல்படுபவர்கள் யார்,யார் எங்கே இருக்கின்றனர் என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப சிறப்பாக ஒருங்கிணைந்து செயல்பட முடியும்.
பொதுவாக இளைஞர்களின் மனம் கவரக்கூடிய சேவையாக இதனை அமெரிக்க வாலிபரான காம் ஆல்ட்மேன் என்பவர் தனது நண்பர்களோடு சேர்ந்து வடிவமைத்திருக்கிறார். சோபோமோர் கல்லூரியின் கம்ப்யூட்டர் கல்வி மாணவனாக இருந்தபோது, இந்த சேவையை உருவாக்கும் எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.
2005ம் ஆண்டில் ஒரு நாள் வகுப்பை விட்டு வெளியே வரும்போது, பலரும் ஒரே நேரத்தில் தங்கள் செல்போன்களை கையில் எடுத்து நண்பர்களிடம் எங்கே இருக்கிறாய்? என்று கேட்டு கொண்டிருப்பதை பார்த்தார்.
பலமுறை மாநாட்டு அரங்கிற்கு வெளியேவும், தியேட்டருக்கு வெளியேவும் யாரும் இதே கேள்வியை செல்போனில் கேட்டதை அவர் கவனித்திருக்கிறார். அவரே கூட பல முறை இந்த கேள்வியை கேட்டிருக்கிறார்.
எனவே இந்த கேள்விக்கான பதிலை செல்போனை பார்த்தவுடன் தெரிந்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? என்ற கேள்வி அவரது மனதில் அப்போது எழுந்தது. அல்ட்மோனோ கம்ப்யூட்டர் கல்வி மாணவர் அதிலும் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஜீவ ஊற்றாக விளங்கும் சிலிக்கான் பள்ளத்தாக்கை சேர்ந்தவர். அப்படியிருக்கும்போது இந்த கேள்விக்கு விடை காணாமல் இருந்து விடுவாரா?
தனது நண்பர்களுடன் சேர்ந்து செல்போன் மூலமே நண்பர்கள் இருப்பிடத்தை உடனே தெரிந்து கொள்ளும் சேவையான "லூப்ட்' உருவாக்கி விட்டனர். அமெரிக்காவில் பல முன்னணி செல்போன் சேவை நிறுவனங்கள் இந்த சேவையை வாங்கி இருக்கின்றன. இருப்பிடம் உணர்த்துவதோடு, லூப்ட் நின்று விடவில்லை. அதற்கு மேலும் சிறப்பாக நண்பர்கள் உறவுகொள்ள உதவும்,சமூக காம்பஸ் என்று இதனை ஆல்ட்மேன் வர்ணிக்கிறார்.

கருத்துகள் இல்லை: