ஈடில்லா இயற்கை உணவு!
விடிந்தும், விடியாத அந்த அதிகாலை வேளையிலே ஒரு சின்னஞ்சிறிய கடைமுன் கூட்டம் நிரம்பி வழிகிறது. கூட்டத்திற்கு காரணம் அங்கு வழங்கப்படும் இயற்கை உணவுகள்தான்.
சிவகாசி தபால்நிலையம் பக்கத்தில் உள்ள தாய்வழி இயற்கை உணவகத்தில் நிலவேம்பு கஷாயம், ஆடாதொடை ரசம், கத்தாழை சூப், அடுப்பில் வைக்காமல் உருவாக்கப்பட்ட பேரீச்சை அவல், பலவித பயறு வகைகள், நெல்லிக்காய் சாலட், வெந்தயக்களி, சின்ன வெங்காயம் போட்ட கம்மங்கூழ் என்று எப்போதோ, எங்கோயோ கேட்ட பழமையான பராம்பரியமான உணவு வகைகளை வழங்கிக் கொண்டு இருக்கிறார் கடையின் உரிமையாளரும் இயற்கை ஆர்வலருமான சிவகாசி மாறன்ஜி.
நமது பழமையான உணவு என்பதை மறந்ததால்தான் இன்றைக்கு இவ்வளவு நோய் நொடிகள், எப்போதும் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் எந்நாளும் தொல்லை இல்லை என்று சொல்லும் மாறன்ஜி கடையில் வழங்கப்படும் பொருட்களின் விலையோ இரண்டு ரூபாயில் இருந்து ஏழு ரூபாய்க்குள்அடங்கிவிடும். ஒரு வரியில் சொல்வதானால் விலை குறைவு ஆரோக்கியம் அதிகம்.
நிலவேம்பு கஷாயம் குடித்தால் போதும் டெங்கு காய்ச்சல் பக்கத்திலேயே வராது. வந்தாலும் பயந்து ஒடிவிடும். இப்படி இங்குள்ள ஒவ்வொரு உணவு பொருளுக்கும் பின்னணியில் நிறைய ஆரோக்கியமும், மருத்துவ குணங்களும் நிறைந்து உள்ளன.
அடுப்பில் வைக்காமல் நூற்றுக்கணக்கான அறுசுவை உணவுகளை தயார் செய்யமுடியும். அதற்கு பெண்கள் முன்வர வேண்டும். வாரத்தில் ஒரு நாள் அடுப்பு பற்ற வைக்காமல் சமைத்தாலே நாட்டிற்கும் வீட்டிற்கும் எவ்வளவோ பலன்கள் உண்டு என்று சொல்லும் மாறன் இயற்கை உணவை எல்லாரிடமும் கொண்டு சேர்ப்பதற்காக நிறையவே உழைத்து வருகிறார்.
இதை இளைஞர்கள் கையில் சேர்த்துவிட்டால் அது அற்புதமான ஆரோக்கியமான இந்தியாவிற்கு வழிவகுத்துவிடும் என்பதில் உறுதியாக இருக்கும் இவர் இது தொடர்பாக பள்ளி, கல்லூரியில் பொருட்காட்சி நடத்துவது, கருத்தரங்குகள் நடத்துவது என்று எப்போதும் பிசியாக இருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக