Pages

திங்கள், ஜனவரி 07, 2013

விண்ணிலிருந்து விழுந்த ஓட்டு!



விண்ணிலிருந்து விழுந்த ஓட்டு!
அதிஷா

உலகமே நகம் கடித்தபடி காத்திருந்து பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்கத் தேர்தல் ஒருவழியாக முடிந்து ஒபாமா, நாற்காலியைத் தக்கவைத்துக் கொண்டார்.  365 கோடி ரூபாய் செலவில் நடந்த ஒரு மெகா பட்ஜெட் தேர்தல் இது.

கோடிக்கணக்கானவர்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்திருந்தாலும் ஒரு ஓட்டு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். அது அமெரிக்காவில் எந்த மாகாணத்திலிருந்தும் வரவில்லை. சயின்ஸ் ஃபிக்ஸன் கதைகளில் வருவதைப்போல விண்ணிலிருந்து விழுந்திருக்கிறது.

அமெரிக்காவில் வாழும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் போட்ட ஓட்டுதான் அது. இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்ட சுனிதா வில்லியம்ஸ் தற்போது சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடத்தில் தங்கிப் பணியாற்றி வருகிறார். அவர் சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடத்தின் பொறுப்பாளராகவும் இருக்கிறார். இங்கே தற்போது 33 பேர் தங்கியிருந்து, ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சுனிதாவும் ஃபோர்ட் என்பவரும்தான் அமெரிக்கர்கள். இந்த இருவரும்தான் தற்போது இந்தத் தேர்தலில் விண்ணிலிருந்து ஓட்டுப் போட்டுள்ளனர்.

1997ம் ஆண்டு முதலே நாசாவில் பணியாற்றும் விண்வெளி வீரர்கள், தேர்தல் சமயத்தில் விண்ணில் இருந்தால் அங்கிருந்தே ஓட்டுப்போடும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். இது என்கிரிப்ட் (மறைக்குறியீடாக்கம்) செய்யப்பட்ட மின்னஞ்சலாக தங்களுடைய ஓட்டுகளை நேரடியாக நாசாவில் இருக்கிற மிஷன் கண்ட்ரோல் அலுவலகத்துக்கு அனுப்பிவிடவேண்டியதுதான். அது அப்படியே தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பிவிடப்படும்.

1997ம் ஆண்டு இதற்கான அனுமதி தரப்பட்டபோது உலகிலேயே முதன்முதலாக டேவிட் வோல்ஃப் என்பவர், ரஷ்யாவின் மிர் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து தன்னுடைய வாக்கைப் பதிவு செய்தார். அவர் வாக்களித்தது ஒரு லோக்கல் தேர்தல்தான். 2004ம் ஆண்டு சீன வம்சாவளியை சேர்ந்த லீராய் ச்சியாவ் என்பவர்தான் முதன்முதலாக அதிபர் தேர்தலுக்கு விண்வெளியிலிருந்து வாக்களித்தார். அதற்குப் பிறகு இதோ இப்போது சுனிதா வில்லியம்ஸ் வாக்களித்துள்ளார்.

அமெரிக்காவில் நாம் ஊரில் இருந்தால் மட்டும்தான் வாக்களிக்க முடியும் என்கிற நிலையெல்லாம் இல்லை. அங்கே ஆப்சன்டி பேலட் (ASBENTEE BALLOT) என்கிற முறை உண்டு. இதனைப் பயன்படுத்தி உலகில் எந்த மூலையிலிருந்தும் நம்மால் வாக்களிக்க இயலும். நம்மூரில் உள்ளதுபோல தபால் ஓட்டு மட்டுமல்லாது, மின்னஞ்சல் மூலமாகவும், ஃபேக்ஸ் மூலமாகவும்கூட வாக்களிக்க இயலும்.

சாண்டிப் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெரும்பாலான மக்கள் ஃபேக்ஸ் மற்றும் மின்னஞ்சல் மூலமாகத்தான் வாக்களித்துள்ளனர். நாம் வாக்களித்துவிட்டால் நம்முடைய வாக்கு, தேர்தலில் சேர்க்கப்பட்டதா என்கிற அக்னாலேஜ்மெண்ட் கடிதமும் அனுப்பிவைக்கப்படுகிறது. வெவ்வேறு நாடுகளில் பாதுகாப்புப் பணிகளுக்காகத் தங்கியிருக்கிற ராணுவ வீரர்களும்கூட இந்தத் தேர்தலில் மின்னஞ்சல் மூலமாக வாக்களித்துள்ளனர்.

அமெரிக்கா தன்னுடைய வாக்காளர்களின் ஒவ்வொருவருடைய ஓட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலத்தில் அதற்கேற்ப தன்னுடைய வாக்களிக்கும் முறைகளை மாற்றிக்கொள்கிறது. விண்ணிலிருந்து விழுந்திருக்கும் சுனிதாவின் வாக்கே இதற்கு சாட்சியாக இருக்கிறது.

நாமோ இன்னமும் மின்னணு வாக்களிக்கும் இயந்திரமே வேண்டாம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம். வாக்குச்சாவடிக்குப் போனால், நம் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்குமா, இருக்காதா என்பதே கேள்விக்குறி! இன்னமும் பழைய தபால்முறையையே பின்பற்றுகிறோம்.  பல விஷயங்களில் அமெரிக்காவைப் பின்பற்றும் நம்முடைய அரசு, இதுமாதிரி விஷயங்களிலும் அமெரிக்காவிடம் கற்றுக்கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை: