Pages

வியாழன், ஜனவரி 21, 2016

வியக்க வைக்கும் விளாம்பழம்

பழம் பெருமை பேசுவோம் : வியக்க வைக்கும் விளாம்பழம்
நாகரிகம் கற்றுத்தந்த தயக்கம் காரணமாகவோ, உடைக்கவும், உண்ணவும் தயங்கும் சோம்பேறித்தனம் காரணமாகவோ அலட்சியமாக கருதப்படும் கனி விளாம்பழம்.

இந்தியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான், வங்காளதேசம், மலேசியா, இலங்கை ஆகிய ஆசிய நாடுகளில் ஏதோ ஒன்றுதான் இதன் தாயகமாக இருக்கக்கூடும் என அனுமானிக்கப்படுகிறது.

கி.மு முதல் நூற்றாண்டிலேயே இந்திய மக்களின் உணவுப்பொருளாக, மருந்தாக, அழகு சாதன களிம்பாக பயன்பாட்டில் இருந்திருக்கிறது. ஆயுர்வேத சாத்திர நூலான சரகா சம்ஹிதாவில் விளாம்பழத்தை மையமாக்கி பல மருந்து பொருட்கள் தயாரிப்பது பற்றி குறிப்புகள் உள்ளன.



சீனப் பயணி யுவான் சுவாங்கின் பயண குறிப்பு களிலிருந்தும், படைத்தளபதியாகவும் கவிஞராகவும் இருந்த சவுந்தர்யாவின் பாடல்களிலிருந்தும் இந்தியர்கள் விளாம்பழத்தை பயன்படுத்தியிருந்தது தெரிய வருகிறது. கி.பி 14–ம் நூற்றாண்டில் விளாம்பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் 'தனகா' என்னும் அழகு சாதனப்பொருள் இன்றைய மியான்மரில் பயன்படுத்தியிருப்பது பற்றி பர்மிய கவிஞர் ஷின் மகாரத்சாரா என்பவர் தனது பாடல்களில் குறிப்பிட்டிருக்கிறார்.

ரூட்டேசி தாவரக்குடும்பத்தைச் சார்ந்த விளாம்பழத்தின் தாவரவியல் பெயர் Limonia Acidossima. இந்த பெயர் சமீபத்தில்தான் சூட்டப்பட்டது. இதற்கு முன் Ferroni Elephantam என்ற பெயரில் தான் அழைக்கப்பட்டது.

யானை விரும்பி உண்ணும் கனி என்பதால் இந்த பெயர் இருந்திருக்கலாம். பொதுவாக மலச்சிக்கலை தீர்த்து அஜீரணக்கோளா றினை நீக்கும் தன்மை விளாம்பழத்துக்கு உண்டு என்பதால் இந்தியர்கள் யானைக்கு உணவாக அளிப்பது வழக்கம். அதனால்தான் இந்துக்கள் யானை முகம் கொண்ட விநாயகருக்கு விளாம்பழத்தை படைத்தனர். விநாயகரை துதித்துப்பாடும்

'கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்'

என்ற பாடலில் விநாயகருக்கு விருப்பமான கனிகளாக விளாம்பழத்தையும் ('கபித்தம்' என்றால் விளாம்பழம், 'ஜம்பூ' நாவல் பழத்தைக் குறிக்கும்) நாவல் பழத்தையும் அடையாளம் காட்டப்படுகின்றன. இதையேத்தான் பிள்ளையார் கதை என்னும் பாடலில்

'தீதுஅகல் மாங்கனி தீங்கத லிப்பழம்
வருக்கை கபித்த மாதுளங் கனியொடு'

என்று பிள்ளையாருக்கு உவப்பான கனிகளாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

(கதலி – வாழைப்பழம், வருக்கை – வருக்கைப்பலா, கபித்தம் – விளாம்பழம்)

அத்துடன் விளாம்பழத்தை wood apple என்று ஆங்கிலத்தில் அழைத்தாலும் அதன் இன்னொரு பெயர் Elephant apple என்பதையும் கவனிக்கலாம்.

பிற பயன்கள்

முற்றாத கனியாத விளாம்பழத்தின் உள் சதைப்பகுதியினைச் சுற்றியுள்ள ஒருவித ஒட்டும் தன்மையுள்ள பிசினை தண்ணீர் புகாத சிமெண்ட் கலவையாக தயாரித்து கட்டிட வேலைகளில் பயன்படுத்துகிறார்கள்.

ஓவியக்கலையில் ஆயில் பெயிண்டிங் வண்ணங்களில் இன்னும் சற்று ஒட்டும் தன்மை வேண்டி இதே பிசினை உபயோகிக்கிறார்கள். அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் மூலப் பொருளில் ஒன்றாகவும் பயன்படுகிறது.

விளாம்பழத்தின் கடின ஓட்டிலிருந்து சிறிய வகை பெட்டிகள் (மூக்கு பொடி டப்பா போல) தயாரிக்கப்படுகின்றன. விளா மர வேரிலிருந்து செயற்கை ஆபரணங்கள் உருவாக்கப்படுகின்றன.

விளாம் பழ வகைகள்

இந்தியா முழுமைக்கும் உள்ள விளாம் பழத்தினை மஞ்சள் விளா, கோட் விளா என பிரிக் கிறார்கள். இரண்டும் சுவையில் மட்டும் வேறுபட்டவை. மஞ்சள் விளா சற்று புளிப்புத்தன்மை சேர்ந்தது. கோட் விளா கரிக்கும் சுவை சிறிதளவு உண்டு. ஆனால் இரண்டுமே மருத்துவ குணம் உடையவை தான்.

தமிழகத்தில் விளாம்பழத்தை பெரு விளா, சித்தி விளா, குட்டி விளா என மூன்றாக பிரிக் கிறார்கள். சித்தி விளாவின் காய்கள் வடிவத்தில் சிறியவை. தற்சமயம் அதிகம் காணப்படுவதில்லை. குட்டி விளா கொடி போல படரக்கூடியவை. இதன் இலைகள் வாசம் மிகுந்தவை. இந்த வகை விளாக்களும் அரிதான ஒன்றுதான். பெரு விளா நாம் வழக்கமாக காணும் பழமே.

விளாம் பழத்தின் வேறு பெயர்கள் வளவு, வெள்ளில், கபித்தம், கடிப்பகை ஆகும்.

விளாம்பழத்தில் உள்ள சத்துக்கள்

31 சதவிகிதம் கார்போஹைட்ரேட்டுகள் நிரம்பிய விளாம்பழத்தில் வைட்டமின் ஏ, பி, ஆகியனவும், இரும்பு, கால்சியம் சத்துக்களும், கரோட்டினும் உள்ளன.

இலக்கியங்களில் விளாம்பழம்

விளாம்பழம் பற்றிய பாடல்கள் நமது தமிழ் இலக்கியங்களில் விரவி கிடக்கின்றன. புறநானூறு 181–வது பாடலில்

'மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில்
கருங்கண் எயிற்றி காதல் மகனொடு
கான இரும்பிடிக் கன்றுதலைக் கொள்ளும்'

பொருள்: ஊர் நடுவில் உள்ள விளாமரத்தில் இருந்து விழும் விளாம்பழத்தை எடுத்து உண்ண மறக்குல பெண்ணொருத்தியின் மகனும் செல்வான். அதைப்போல யானையின் குட்டியொன்றும் செல்லுமாம்.

பெரியாழ்வார் கண்ணனின் வீரதீர பராக்கிரமத்தை சொல்லும்போது, 'யானையின் கன்று ஒன்றை எறிந்து விளாம்பழத்தை விழச்செய்வானாம் கண்ணன்' என்னும் பொருள் பட

'கானக வல் விளவின் காயுதிரக் கருதிக்

கன்றது கொண்டெறியும் கருநிற என் கன்றே!' என்று பாடியிருக்கிறார்.

நற்றிணையில் கயமனார் என்னும் புலவர் தனது பாடல் ஒன்றில்

'விளாம்பழம் கமழும் கமஞ்சூற் குழிசிப்

பாசந்த தின்ற தெயகால் மத்தம்

நெய்தெரி இயக்கம் வெளி முதல் முழங்கும்

வைபுலர் விடியல்' என வர்ணிக்கின்றார்.

விடிகின்ற பொழுதில் இடையர் குல பெண்கள் விளாம்பழ வாசம் கொண்ட பானையிலிருந்து வெண்ணை எடுக்கும் பொருட்டு மத்தினால் கடைந்து கொண்டிருந்தனர் என்று குறிப்பிடுகிறார்.

பாரதிதாசனும் தனது இருண்ட வீடு கவிதையில்

'ஓட்டை நீக்கி உள்ளீடு தன்னைக்

காட்டி விளாம்பழம் கருத்தாய்த் தின்என்று

அதையும் குழந்தையின் அண்டையில் வைத்தார்' என்கிறார்.

இன்னும் நந்திக்கலம்பகம், அகநானூறு ஆகியவற்றிலும் கூட விளாம்பழம் பற்றிய பாடல்கள் உள்ளன.

கவனிக்கப்படாத எல்லாவற்றிலும் ஏதோ ஒரு மகத்துவம் வாய்ந்த அற்புதம் புதைந்தே இருக்கிறது நம் கண்ணுக்குத் தெரியாமல்... இலக்கியத்தின் இலக்கு இப்படி புதைந்து போனவற்றையும், மக்கள் மறந்து போனவற்றையும், நமக்கு நினைவுபடுத்துவது தானே.. வியக்கவைக்கும் விளாம்பழம் என்னும் பொக்கிஷத்தை போற்றுவோம்... புசிப்போம்.

----

விளாம்பழத்தின் மருத்துவ பயன்கள்

தயிருடன் விளாங்காயை கலந்து சாப்பிட்டால் உடல் உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள், அல்சர், வாய்ப்புண் ஆகியன தீரும். விளாம்பழ சதைப்பற்றுடன் வெல்லம் அல்லது தேன் சேர்த்து சாப்பிட்டால் குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிக்கும்.

வெறுமனே விளாம்பழத்தை சாப்பிடுவது ரத்த விருத்திக்கு நல்லது. நோய்க் கிருமிகளை கண்டு அழிக்கும் திறன் இருப்பதால் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் மார்பக புற்று நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் உள்ளது. பித்தம் தொடர்பான அனைத்து நோய்களையும் தீர்க்க வல்லது.

விளாமரத்து பிசினை உரிய மருத்துவ ஆலோசனையோடு உண்டு வந்தால் மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் ஆகியன நீங்கும். விளாமர வேரிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வித மருந்தினை பாம்புக்கடிக்கு விஷ முறிவுக்காக ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள். விளாமரத்து பட்டையை பொடி செய்து தண்ணீரில் கலந்து தந்தால் சுவாசப் பிரச்சினைகள் தீரும்.

'பழ' மொழிகள்

1. ஆனைக்கு விளாம்பழம் ஓட்டோடு

2. விட்டதடா ஆசை விளாம்பழத்து ஓட்டோட.

இந்த பழமொழிக்குப் பொருள் கடினமான ஓட்டை உடைப்பதுடன் ஆசை விட்டுப்போகிறது என்பது அல்ல. விளாங்காயாக இருக்கும் போது அதன் சதைப்பற்று ஓட்டுடன் ஒட்டிக்கொண்டுதான் இருக்கும். கனிந்த பிறகு ஓட்டிலிருந்து பிரிந்து விடும். அது போல மனிதர்கள் முதிர்ந்த வயதில் தங்களது லவுகீக ஆசைகளை விட்டொழிக்க வேண்டும் என்பதாகும்.

பழமும் பதார்த்தமும்

விளாம்பழ அல்வா: ரவையை சிறிதளவு நெய்யில் வறுத்து பொடியாக்கி. அதனுடன் வறுத்த முந்திரி, உலர் திராட்சை, தேவையான அளவு சர்க்கரை, தேங்காய் துருவல், பச்சைக் கற்பூரம், ஏலக்காய் ஆகிய பொருட்களையும் விளாம்பழ சதைப்பகுதியோடு கலந்து அடுப்பில் வைத்து, நன்கு கிளறி பதமான சூட்டில் இறக்கி வைத்தால் சுவையான அல்வா தயார்.

கருத்துகள் இல்லை: