ஹேர் டை… ஒரு 'திகீர்' ரிப்போர்ட்
"ஆறு மாசத்துக்கு முன்ன, தன்னோட நீளமானதலைமுடியைக் கொஞ்சம் கட் பண்ணிட்டு, ஹேர் கலரிங்அடிச்சுட்டு ஏதோ மாடல்போல வந்து என் முன்ன நின்னா, என் ஃப்ரெண்டு ஒருத்தி. அதப் பார்த்ததும் எனக்கும் ஆசை வந்தது. வீட்டுல கேட்டதும் 'இப்ப அது ஒண்ணுதான் உனக்குகொறச்சல்'னு திட்டிட்டாங்க. சரினு நானும் விட்டுட்டேன்.திடீர்னு போன வாரம் அவ வீட்டுக்குப் போயிருந்தப்ப ரூமை விட்டு வெளிய வராம அழுதுட்டே இருந்தா. என்னனு கேட்டதும்.. 'ஹேர் கலரிங் அடிச்சதால அவளுக்கு பிளட் கேன்சர் வந்துடுச்சு'னு அவங்க அம்மா சொன்னதும் ஆடிப்போயிட்டேன். இப்படிலாம்கூட நடக்குமா?"
சென்னையைச் சேர்ந்த நம் தோழி ஒருவர் நம்மிடம் சொன்ன இந்தத் தகவலை, சிலரிடம் பகிர்ந்தபோது, கேட்ட அனைவருமே அதிர்ச்சியை வெளிப்படுத்தத் தவறவில்லை.
இதுகுறித்து, சென்னை, பேட்டர்சன் கேன்சர் சென்டரின்புற்றுநோய் சிறப்பு மூத்த மருத்துவர் எஸ்.விஜயராகவனிடம்கேட்டபோது, "ஹேர் கலரிங் மட்டுமில்லை, 'முடி வெள்ளையா இருக்கு' என்று சொல்லி அடித்துக்கொள்ளும் 'டை' கூட, கேன்சர் வருவதற்கு காரணமாகலாம்" என்றுஅதிர்ச்சியைக் கூட்டியவர், விரிவாகப் பேசினார்.
"இன்று நம் நாட்டில் 18 வயதைக் கடந்தவர்களில் 40 சதவிகிதம் பேரும், 40 வயதைக் கடந்தவர்களில் 10 சதவிகிதம் பேரும் கேசத்துக்கு டை பயன்படுத்துகிறார்கள்.இந்தச் செயற்கைச் சாயங்களில் உள்ள கெமிக்கல்கள் காரணமாக ரத்தப் புற்றுநோய் வர வாய்ப்பிருக்கிறது. இது தவிர தோல் சம்பந்தமான பலவித நோய்களும் வர வாய்ப்பிருக்கிறது என்பது அதிர்ச்சி செய்தி. அதனால்தான் அமெரிக்கா போன்ற நாடுகளில் உணவுப் பொருள் தொடங்கி, ஹேர் டை வரை சில வண்ணங்களைப் பயன்படுத்த தடை உள்ளது.
புற்றுநோய்க்கு காரணமாகும் சாத்தியமுள்ள ரெட் 7, புளூ 4 உள்ளிட்ட அந்த வண்ணங்கள், நம் நாட்டில் எந்தக்கட்டுப்பாடுகளுமின்றி பரவலாக விற்பனை செய்யப்பட்டு,தொடர்ந்து பயன்படுத்தப்பட்டும் வருகிறது. குறிப்பாக, இன்று கடைகளில் கிடைக்கும் பெரும்பாலான டை மற்றும் ஹேர் கலரிங் பொருட்களில் 'பாரா ஃபினாலைனெனின் டையாமின்' (para phenylalanine diamine) என்கிற கெமிக்கல் உள்ளது. இதைப் பயன்படுத்துவதால் ரத்தப் புற்றுநோய், சிறுநீரக புற்றுநோய்வரக்கூடும் என்று 1980-களிலேயேகண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், அந்தக் மூலக்கூறில்உருவான ஹேர் டைகள் தடை செய்யப்படாமல் தொடர்ந்துபயன்பாட்டில் உள்ளன" என்றவர், ஹேர் டை பயன்படுத்திகேசத்தின் இயல்பை பல வருடங்களாகத் தொடர்ந்து மாற்றுவதால் ஏற்படும் விளைவுகள் பற்றிப் பகிர்ந்தார்.
"கேசத்தின் நிறம் வெள்ளையாகக் காரணம், தலைப்பகுதியில் உள்ள மெலானோசைட் செல்களின் உற்பத்தி குறைவதுதான்.அதனால் ஏற்படும் நரை என்பது, இயற்கையானது. அதைச்செயற்கையாக மறைக்க ரசாயனங்களை நாடும்போது அவை பக்கவிளைவுகளையே ஏற்படுத்தும். மேலும், கேசம் 24 நாட்களுக்கு ஒருமுறை ஒன்றரை இன்ச் அளவுக்கு வளரக்கூடியது. எனவே, ஹேர் டை பயன்படுத்தினாலும் முடியின் வேர் வெள்ளையாகவே வளரும். அப்படிஇயல்புக்குப் புறம்பாக தொடர்ந்து ஹேர் டை பயன்படுத்திக்கொண்டே இருப்பதால் பிரச்னைகள் பெருகும். ஒரு வேதிப்பொருளை தொடர்ந்து பல வருடங்களாக நம் தலையில் பயன்படுத்தும்போது வலி, அலர்ஜி உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும்பட்சத்தில் உடனடியாக மருத்துவரைஅணுக வேண்டும்" என கேச சாயங்களின் ரிஸ்க்ஃபேக்டர்களைச் சொன்ன டாக்டர், தற்காலிகத் தீர்வாக நாம்பயன்படுத்தும் வலி நிவாரணிகளும் ரிஸ்க் ஃபேக்டர்களுக்கு உட்பட்டதே என்கிறார்.
"தலை வலி, கால் வலி, முதுகு வலிகளுக்காகப் பயன்படுத்தும் வலி நிவாரணிகள், ஏற்கெனவேஉள்ள வலியில் இன்னும் கொஞ்சம் பாதிப்பை உருவாக்குவதால் அது சரியானது போன்ற மாயை ஏற்படும் என்பதே உண்மை. உதாரணமாக, ஒரு சின் னக் கோடு போடுங்கள். பின் அதன் மீது பெரியளவில் கோடு போடுங்கள். இப்போது பார்ப்பதற்கு ஒரு கோடு மட்டுமே தெரியும். அப்படித்தான் நம் வலிகள் சரியாவதும். உட்சபட்சமாக உடலில் தடவும் வலி நிவாரணிகள் மற்றும் கிரீம்களால் 1.5 சதவிகிதம் பேருக்கு சிறுநீரக புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. அதாவது, உடலில் சேரும் கழிவுகள் அனைத்தையும் வெளியேற்றுவது சிறுநீரகங்களே. வலி நிவாரணிகள் தொடர்ந்து பயன்படுத்தப்படும் போதுவீரியமான அந்த மருந்துக் கழிவுகளை தொடர்ந்து வெளியேற்றும் செயல்முறையில் சிறுநீரகச் செல்கள் பாதிப்புக்குள்ளாவதோடு செயல் இழக்கவும் செய்யும். மேலும், இன்று கடைகளில்கிடைக்கும் விதவிதமான ரசாயன குளிர் பானங்கள் குடல் புற்றுநோய்க்கு காரணமாகலாம் என்பதும்அடுத்த அதிர்ச்சி" சுற்றியிருக்கும் ஆபத்துகளை சுட்டிக் காட்டிய டாக்டர், "35 வயதைக் கடந்தஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒருமுறைபுற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம். வீட்டில் ஏற்கெனவே புற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பின், மரபு காரணத்துக்காக அவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியதும் அவசியம். இன்றையசூழ்நிலையில் யாருக்கு வேண்டுமானாலும்புற்றுநோய் வரலாம். பொதுவாக புற்று நோய் பாதிப்பு வெளியில் தெரியவர 14 – 16 ஆண்டுகள்வரை ஆகும். மேலும் இது எளிதில் குணப்படுத்தக்கூடிய நோயும் அல்ல. இவ்வளவு ஆபத்தான நோயை, விலை கொடுத்து வாங்கி தலையில் வைத்துக் கொள்ள வேண்டுமா என்ன? ஹேர் டைகள், கலர்கள் தவிர்ப்போம்!"
அக்கறையோடு தந்தார் பிரிஸ் கிரிப்ஷன்!
பின்பற்றுவோமா..?!
நரை அழகு!
40 வயதின் அழகு என்பது, நரைதான். எனவே, அதை அப்படியே ஏற்பது சிறந்தது. இளநரையால்பாதிக்கப்பட்டவர்களும்கூட, செயற்கை ஹேர் டைகள்தவிர்த்து, கேசத்துக்கு மருதாணி போன்ற இயற்கைச் சாயங்களைப் பயன்படுத்தலாம்.
இன்றைய சூழலில், முப்பது வயதுக்குள் நரை வந்தால், அதை இளநரை என்று சொல்லலாம். இந்த இளநரை வேரிலிருந்தே நரைக்க ஆரம்பித்தால் அதை மாற்றவே முடியாது. ஆனால், டை போடலாம். அதற்கான இயற்கை டை இதோ!
கறுப்பு வால்நட் கொட்டை, நீலி அவுரி இலை, நெல்லி முள்ளி, ஒற்றை செம்பருத்தி பூ, அஞ்சனக் கல்பொடி, பிள்ளையார்குன்றிமணி (இதெல்லாம் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்). குறிப்பிட்ட அளவுக்கு இவற்றைஎடுத்துக்கொண்டு தனித்தனியாக பொடித்து, அதிலிருந்து சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். முதல் நாள் இரவேபீட்ரூட்டை துருவி எடுத்து, தண்ணீர் விடாமல் அரைத்து சாறு எடுக்க வேண்டும். இந்தச் சாற்றுடன் தயாராக இருக்கும் பொடிகளையும் இரும்பு பாத்திரம் ஒன்றில் சேர்த்துக்கலந்துகொள்ள வேண்டும். இதுதான் இயற்கை ஹேர் டை.அடுத்த நாள் காலை… எண்ணெய், அழுக்கு, பிசுக்கு இல்லாத சுத்தமான தலையில் தடவி இரண்டு மணி நேரம் ஊறவைத்து அலசினால், இயற்கை ஹேர் டையினால் கூந்தல் பளபளக்கும். இந்த டையை 15, 16 வயதினர்கூட உபயோகிக்கலாம். பக்கவிளைவுகள் ஏதுமில்லை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக