Pages

சனி, மே 23, 2015

தியானம்!!!


தியானம் செய் என்றார் குரு நான்தான் கவிதை எழுதுகிறேனே என்றேன்
சினந்தார் எனக்கு தியானம் புரிந்த அளவுக்கு அவருக்கு கவிதை புரியவில்லை!
 (கவிஞர் நாகூர் இஜட்.ஜபருல்லா)
meditationதியானம் பற்றிய அதிர்ச்சியூட்டும் உண்மை ஒன்று உண்டு. அது இன்ப அதிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அது என்ன? தியானம் என்றால் என்னவென்று புரிந்து கொள்ளாமல் வாழ்வில் வெற்றி கிடைக்காது. ஆமாம், இதுதான் அந்த உண்மை. எனவே தியானம் பற்றிய சரியான புரிந்து கொள்ளலலை ஏற்படுத்திக் கொள்வது அவசியம்.
தியானம் என்பது இருவகைப்பட்டது. ஒன்று நாம் செய்வது. இன்னொன்று நம்மோடே அது இருக்கின்றது என்பதைப் புரிந்துகொண்டு நடப்பது. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? என்ன செய்வது, நமக்குள்ளே பல ஆச்சரியங்களை இறைவன் ஒளித்து வைத்திருக்கிறான்! இரண்டாவதைப் பற்றி முதலில் சொல்லிவிடுவது நல்லது.
நம்மோடே இருக்கின்ற தியானம் என்ன? தினசரி நாம் தூங்குகிறோம் அல்லவா, அதைத்தான் சொன்னேன். ஆமாம். தூக்கமும் ஒருவிதமான தியானம்தான். அதைத்தான் நாம் தினமும் இரவில் மட்டுமின்றி பகலிலும் செய்து கொண்டிருக்கிறோமே என்கிறீர்களா!
இரவிலோ பகலிலோ, ஒவ்வொரு நாளும் நாம் தூங்கித்தான் ஆகவேண்டும். அதாவது தூக்கம் எனும் தியானத்தை நாம் தினமும் செய்துதான் ஆகவேண்டும். தூக்கமென்பது தன்னுணர்வற்ற தியானம். ஆனால் அதனால் நமக்கு பெரிதாக ஒரு பயனுமில்லை என்பதுதான் இங்கே நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம். அதிக பட்சமாக கொசு கடிப்பது நமக்குத் தெரியாமலிருக்கலாம். (சிக்கன் குனியா வந்த பிறகு அதைப் பற்றித் தெரிந்துகொள்வோம் என்பது வேறு விஷயம்).
பயனில்லாத தியானத்தை நாம் பெரிது படுத்த வேண்டியதில்லை. காரணம் பயனே இல்லாத ஒரு தியானம் குப்பை மாதிரிதான். வாழ்க்கையில் நாம் சந்திக்கும் எதுவாக இருந்தாலும், யாராக இருந்தாலும் ஏதாவது ஒரு விதத்தில் அது பயன் தருவதாக இருக்க வேண்டும். நமக்கோ, சமுதாயத்துக்கோ அல்லது உலகத்துக்கோ. அப்படி இல்லையெனில் அதை நாம் மதிக்கத் தேவையில்லை.
எனவே, தியானமானாலும் சரி, ஞானமானாலும் சரி, அது நமக்காகத்தான். நமக்குத் தெரியாமலே நாம் செய்யும் தூக்க தியானத்தை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை. ஏனெனில் நமக்குத் தெரியாமல் நடப்பது எல்லாமே, அது எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும், அது ஒரு குழந்தைக்கு முன் அல்லது ஒரு பைத்தியத்துக்கு முன் நடக்கும் காரியம் போன்றதாகும்.
"தியானம் செய்யும்போது சிகரெட் பிடிக்கலாமா?" என்று சீடன் ஒருவன் குருவிடம் கேட்டான். அதற்கு அந்த குரு அவனைத் திட்டி அனுமதி மறுத்துவிட்டார். இன்னொரு சீடன் அதே குருவிடம் போய், "சிகரெட் பிடிக்கும்போது தியானம் செய்யலாமா?" என்று கேட்டான். அதற்கந்த குரு அப்படிக் கேட்ட அந்த சீடனைப் பாராட்டி பேஷாக செய்யலாம் என்று அனுமதியளித்தார். இது ஓஷோ சொல்லும் ஒரு கதை.
இந்த கதை ஒரு உண்¨மையை மிக அழகாகச் சொல்கிறது. தியானம் என்ற ஒரு செயல் நம் அன்றாட நடவடிக்கைக்கு அப்பாற்பட்டதாக இல்லை என்ற உண்மைதான் அது. அரவிந்தர் நடக்கும்போதே தியானம் செய்வாராம். அதாவது நடப்பதைக்கூட ஒரு தியானமாக அவர் மாற்றிக் கொண்டிருந்தார் என்று அர்த்தம்.
தியானமே செய்ய முடியவில்லை, இதை வேறுவகையில் சரிக்கட்ட முடியுமா என்று வருத்தத்துடன் என்னிடம் கேட்டு வருபவர்களுக்கு நான் 'பைக் தியானம்' என்ற ஒன்றைச் செய்யும்படிச் சொல்லுவேன். அதாவது மோட்டார் பைக் ஓட்டும்போதே செய்ய வேண்டிய தியானம். என்ன, கண்ணை மூடிக்கொண்டு பைக் ஓட்டுவதா என்று கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன் (அப்படி 'பைக்' ஓட்டுபவர்களும் உண்டு)! 'பைக்' ஓட்டுவதையே ஒரு தியானமாக மாற்றுவது. அவ்வளவுதான்.
விழிப்புணர்வோடு செய்யப்படும் எந்தக் காரியமும் தியானம்தான். நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் உண்டல்லவா, அதைப்போல தியான மனநிலைக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. தியானம் செய்தால் அமைதியான மனநிலைக்குப் போவோம் என்று வைத்துக் கொண்டால் அதை அப்படியே திருப்பியும் பார்க்கலாம். அதாவது அமைதியான மனநிலைக்குப் போவதற்கு வேண்டுமென்றே முயற்சி செய்தால் தியான நிலைக்குப் போய்விடுவோம். இதுதான் நாம் தியானத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய ரகசியமாகும்.
தியானம் எதையெல்லாம் கொண்டு வரும் என்று சொல்லப்படுகிறதோ அதில் ஏதாவது ஒன்றையாவது நாம் வேண்டுமென்றே இழுக்க முடிந்தால் தியானம் கிடைத்துவிடும். உதாரணமாக, தியான நிலையில் ஒருவர் மிகவும் விழிப்புணர்வோடு இருப்பார். அப்படியானால் வேண்டுமென்றே நாம் விழிப்புணர்வோடு காரியங்களைச் செய்தால் அந்தக் காரியம் ஒரு தியானமாகிவிடும். 'பைக்' தியானத்தின் அடிப்படை அதுதான். ஓஷோ சொன்ன கதையும் அரவிந்தர் நடக்கும்போதே தியானம் செய்வார் என்ற தகவல் சொல்வதும் அதுதான்.
அப்படியானால் உடலை எந்த நிலையில் வைத்திருந்தாலும் தியானம் சாத்தியமா என்ற கேள்வி சோம்பேறித்தனத்தால் வருவதாகும். இஷ்டத்துக்கு உடலை அஷ்டகோணலாக வைத்துக் கொண்டு தியானம் செய்ய முடியாது. உதாரணமாக, கோணிக்கொண்டு உட்கார்ந்தும், சாய்ந்து கொண்டும் சொரிந்து கொண்டும் இருக்கும்போது யாராலும் தியான நிலைக்குச் செல்ல முடியாது. வேண்டுமானால் தலையைப் பிராண்டிக் கொண்டே அமைதியாக இருக்க முயன்று பாருங்களேன். அப்போது தெரியும் நான் சொல்வதன் உண்மை.
உடலில் இருந்து தொடங்கும் சில பயிற்சிகள் மூலம் விழிப்புணர்வோடு நாம் தியான நிலைக்குச் செல்வதன் மூலம் பல நன்மைகளைப் பெற்றுக் கொள்கிறோம். அந்த நிலையில் நாம் எப்போதும் இருக்க முடியுமா என்றால் அது நடைமுறையில் சாத்தியமில்லை. நமக்கு 'டென்ஷன்' கொடுப்பதற்கென்றே இந்த உலகம் காத்துக் கொண்டிருக்கிறது.
வேண்டுமென்றால் ஒரு தனியிடத்தில் அமைதியாக அசையாமல் ஐந்து நிமிடம் உட்கார வேண்டும் என்று நினைத்து உட்கார்ந்து பாருங்கள். அப்போதுதான் உங்களிடம் கேட்பதற்கு உங்கள் மனைவிக்கு ஆயிரம் கேள்விகள் வரும். அப்போதுதான் பால்காரன் மணியை அழுத்துவான். மனிதர்கள்தான் இப்படியென்றால் கொசு முதலான சகல ஜீவராசிகளும் நம் தியானத்தை எப்படியாகிலும் கெடுத்துவிடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படும். அதுவரை இல்லாத ஒரு பூச்சி கண்ணை மூடி அசையாமல் உட்கார்ந்தவுடன் எங்கிருந்தோ பறந்து வந்து மூக்கில் அராஜகமாக உட்காரும். எங்கிருந்தோ வரும் எறும்புகள் அப்போதுதான் ரகசியமாக உள்ளே நுழைந்து முக்கியமான இடத்தில் கடித்து வைக்கும்.
இப்படியாக ஒரு மனிதன் முன்னேற வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான முயற்சிகளை எடுக்க ஆரம்பித்தாலே போதும், இந்த பிரபஞ்சமனைத்தும் அவனுக்கு எதிராக வேலை செய்ய ஆரம்பித்துவிடுவதைப் பார்க்கலாம்! இதையெல்லாம் மீறித்தான் நாம் சாதிக்க வேண்டியிருக்கிறது. எனவே இருபத்து நான்கு மணி நேரமும் தியான நிலையில் இருப்பது நமக்கு சாத்தியமில்லை.
அப்படியானால் என்ன செய்யலாம்? குறைந்த பட்சம் தேவைப்படும்போதெல்லாம் தியான நிலையில் இருக்க முடியுமானால், அந்த மனநிலையை ஏற்படுத்து முடியுமானால் போதும். நம் வாழ்க்கையை நாம் விரும்பும் விதத்தில் மாற்றி அமைத்துக் கொள்ளலாம். இன்னும் கொஞ்சம் முன்னேறிப் போனால், அடுத்தவர் வாழ்க்கையையும் மாற்றி அமைக்கலாம். நாம் விரும்புவதுபோல. ஆம். இந்த உலகில் நடந்து கொண்டிருக்கும் எல்லா சாதனைகளுக்கும் வேதனைகளுக்கும் காரணம், நல்ல அல்லது கெட்ட தியான மனநிலைகள்தான் என்று சொன்னால் மிகையில்லை. தீவிரமான ஜார்ஜ் புஷ் மனநிலை பலகீனமான சதாம் ஹுசைன் மனநிலையை தூக்கில் போட்டுவிடக்கூடிய அபாயம் உண்டு. எல்லாமே எண்ணத்தின் தீவிரத்தால் வரக்கூடிய விளைவுகள்.
பிரச்சனைகள் தீர்வதற்கு தியானம் உதவுமா? நிச்சயமாக. தியானமே அதற்காகத்தான். நீங்கள் யார் என்று தெரிந்துகொள்ள தியானம் உதவும். நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ளும்போது, அப்படித் தெரிந்து கொள்ளாமல் இருந்தபோது செய்ய முடியாததையெல்லாம் செய்யலாம். உங்கள் பிரச்சனைகளை மட்டுமல்ல, அடுத்தவர் பிரச்சனைக்கும் வழி சொல்லலாம்.
உங்களுக்கு வரும் நோய்களை நீங்களே தீர்த்துக் கொள்ளலாம். ஒட்டு மொத்த சமுதாயத்தையும் பாதிக்கும் காலரா, சிக்கன் குன்யா, எய்ட்ஸ் போன்றவை எல்லாம் உங்களை அண்டாமல் தடுத்துக் கொள்ளலாம். (மாத்திரை, மருந்து, தடுப்பூசி இத்யாதி போட்டுக்கொள்ளாமல்தான்). மற்றவர்கள் கஷ்டப்பட்டு அடைவதையெல்லாம் நீங்கள் கஷ்டப்படாமல் அடையலாம். ராட்சஷர்களைத் தூக்கி எறிந்து குழந்தை கிருஷ்ணன் வெற்றிகொண்டதுபோல.
நாம் தெரிந்துகொள்ள வேண்டியதெல்லாம் நமக்குள்ளே இருக்கும் பேராற்றலைத் தூண்டிவிடும் தொழில் நுட்பத்தைத்தான். அந்த பேராற்றலைத் தூண்டிவிடும் மனநிலையைத்தான் நாம் தியானம் என்றும் இன்னும் பல பெயர்களாலும் குறிப்பிடுகிறோம். நமது ஆன்மிக வளர்ச்சிக்கு தியானம் மிகமிக அடிப்படையானது.
இறைத்தூதர்கள், ஞானிகள், சூஃபிகள், சித்தர்கள், புத்தர்கள் என்று எல்லா ஞானிகளும் தியானம் செய்தவர்கள்தான். தியானம் செய்யாமல் ஞானம் பெற்றவர் என்று ஒருவரைக்கூட மனிதகுல வரலாற்றில் காட்ட முடியாது. நபியாவதற்கு முன் பெருமானார் (ஸல்) ஹீரா என்ற குகைக்குள் சென்று மாதக்கணக்கில் தியானம் செய்திருக்கிறார்கள். எல்லா முயற்சிகளும் நினைத்த பலனைத் தராமல் போனபோது கடைசியாக போதி மரத்தடியில் அமர்ந்து விபாசனா என்ற தியானத்தை புத்தர் செய்தபோதுதான் ஞானம் பெற்றதாகக் கூறுகிறார்கள். ஒரு ஞானி தியானம் செய்யவில்லை என்று யாராவது சொன்னால், அவர் தியானம் செய்த தகவல் நமக்குக் கிடைக்கவில்லை என்றுதான் அர்த்தம். அந்த அளவுக்கு ஞானத்தோடும் ஆன்மிகத்தோடும் பின்னிப் பிணைந்தது தியானம்.
இரண்டு வகையான தியானத்தைப் பற்றிப் பார்த்தோம். குறிப்பிட்ட உடல், மன நிலைகளை உண்டாக்கிக் கொண்டு ஒரு குரு அல்லது வழிகாட்டி சொன்னபடி செய்வது. ஆல்ஃபா தியானம், மூச்சுப் பயிற்சிகள், யோகாசனங்கள், சுதர்ஷன் க்ரியா, ஈஷா யோகோ போன்ற பயிற்சிகள் ஒருவகை. இன்னொன்று நாம் அன்றாட வாழ்வில் செய்யும் எந்தக் காரியத்தையும் விழிப்புணர்வோடு செய்வது. இதுவும் உயர்ந்ததொரு தியானம். பல் துலக்குவது, பசியாறுவதும், உணர்வதும், புணர்வதும்கூட தியானமாக மலரும் சாத்தியம் உண்டு. எனவே வாழ்க்கையையே தியானமாக மாற்ற முடிந்தால் சிறப்பு. முடியாவிட்டால், அதற்கு தயார் படுத்திக் கொள்ளும் விதமாக வாழ்க்கையில் அவ்வப்போது சில தியானங்களைச் செய்யலாம். தியானமே வாழ்வு. வாழ்வே தியானம்.

கருத்துகள் இல்லை: