அதிசய வெள்ளைக் காகம்…!!!
கோவை சரவணம்பட்டி பகுதியில் பிடிபட்ட வெள்ளைக் காகத்தை வனத் துறையினர் கூண்டில் வைத்துப் பராமரித்து வருகின்றனர். சரவணம்பட்டி பேருந்து நிறுத்தப் பகுதியில் வெள்ளைக் காகம் இருப்பதாக அப்பகுதி பொது மக்கள், வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, அங்கு சென்ற வனத் துறையினர் வெள்ளைக் காகத்தை மீட்டு, வடகோவையில் உள்ள வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். ஒரு மாதமேயான வெள்ளைக் காகத்திற்கு சரியாக இறக்கைகள் வளராததால் அதனால் பறக்க முடியவில்லை. இதனால், வனச்சரக அலுவலகத்தில் கூண்டில் வைத்துப் பராமரிக்க வனத் துறையினர் முடிவு செய்துள்ளனர். இறக்கைகள் வளர்ந்து பறக்கும் நிலைக்கு வந்தவுடன் பறக்கவிடப்படும் என கோவை வனச் சரகர் சேகர் தெரிவித்தார். நிற மாற்றம் (அல்பினோ) காரணமாக அந்தக் காகம் வெள்ளை நிறத்தில் இருப்பதாக வனத் துறையினர் தெரிவித்தனர். இது போன்ற அதிசய வெள்ளை நிற காகங்கள் கொல்லிமலை அல்லது பச்சமலையில் அதிகம் காணப்படும். வழி மாறிய ஒரு சில காகம் இது போன்று ஊருக்குள் வருவது இயல்பு என்றார். கடந்த ஆண்டு கோவை உப்பிலியபுரம் பகுதியில் வெள்ளை நிற காகம் ஒன்று சுற்றி திறிந்தது. இதை கண்ட மற்ற காகங்கள் அதை விரட்டியடித்தன. இதனால் பயந்து போன வெள்ளை நிற காகம் குடியிருப்பு பகுதியில் நுழைந்தது. இதை கண்ட பொதுமக்கள் அந்த அதிசய வெள்ளை நிற காகத்தைப் பிடித்து வைத்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து சென்ற வனத்துறை அதிகாரி ராதாகிருஷ்ணன் வெள்ளை நிற காகத்தை பிடித்து மலைப்பகுதியில் விட்டனர். தமிழகத்தில் வெள்ளை நிறக்காகங்கள் சேலம், உத்திரமேரூர் ஆகிய ஊர்களிலும் பிடிபட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக