விவாகரத்து ஆனவர்கள் மறு காதல் அல்லது மறு திருமணத்தில் இறங்கும்போது சில சாதக பாதகங்கள் வந்து நிற்கும். சாதகமான விஷயங்கள் எப்போதும் சங்கடத்தைத் தராது. அதேசமயம், பாதகமான அம்சங்கள் நிச்சயம் மனதில் கிலேசத்தை ஏற்படுத்தும்.
காதல் மலர்வது தவறான விஷயமில்லைதான். இருப்பினும் மலர்கின்ற காதல், இருவருக்குமே எந்தவித சங்கடத்தையும் தராத வகையில் இருக்க வேண்டியதும் அவசியமாகும். குறிப்பாக மணமுறிவு ஏற்பட்ட ஒருவருடன் மலரும் காதலில் மிகுந்த கவனம் இருக்க வேண்டியது அவசியம் என்கிறார்கள் நிபுணர்கள்.
திருமணம் முறிந்த உடனேயே பெரும்பாலும் யாரும் மறுதிருமணம் குறித்து யோசிக்க மாட்டார்கள். அதேபோல காதலில் விழுவதும் கூட சாத்தியமில்லைதான். இருப்பினும் சிலருக்கு விதி விலக்காக, மணமுறிவு ஏற்பட்டு குறுகிய காலத்திலேயே மீண்டும் ஒரு காதல் துளிர்க்க வாய்ப்பு கிடைக்கும். இப்படிப்பட்டவர்களுடன் பழக நேரிடும்போது காதல் வயப்பட்டவர்கள் என்ன மாதிரியான விஷயங்களை சந்திக்க நேரிடும் என்பது குறித்த ஒரு அலசல்தான் இது...
விவாகரத்தானவர்கள் மீண்டும் ஒரு காதல் தங்களை அணுகும்போது மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க முயற்சிப்பார்கள். ஒருமுறை செய்த தவறை மறுபடியும் செய்ய வேண்டுமா என்ற அச்சமே அதற்குக் காரணம். எனவே புதிய காதலை அவர்கள் பல கோணங்களிலும் அலசி ஆராய முயற்சிப்பார்கள்.
அதேசமயம், பழைய தவறுகளை கைவிட்டுவிட்டு புதிய காதலில் உண்மையாக இருப்பார்கள். நீங்கள் காதலிக்கும் நபர் விவாகரத்து ஆனவராக இருந்தால் அவரது முந்தைய திருமணம் ஏன் முறிந்தது, என்ன காரணம் என்பதை அறிந்து கொள்வது நல்லது.
கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், ஒவ்வொருவரையும் பக்குவப்படுத்த உதவும். எனவே அந்த வகையில் திருமண முறிவு ஏற்பட்டவர்களுக்கு நிச்சயம் அடுத்த உறவு சந்தோஷமாக அமையும் என்பது பொதுவான கருத்தாகும். அது பல நேரங்களில் உண்மையாகவும் இருக்கும்.
இதை சாதகமான விஷயமாக கூறலாம். அதேசமயம், சில பாதகமான அம்சங்களும் இதில் இருக்கிறது. கடந்த கால கசப்பான அனுபவங்கள், விவாகரத்து பெற்றவருக்குள் ஒரு பயத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
புதிய காதலும் நம்மை விட்டுப் போய் விட்டால் என்ன செய்வது என்பதே அந்த பயத்திற்குக் காரணம். இந்தப் பயம் தேவையில்லால் அவர்களை அலைக்கழித்தபடி இருக்கும். கடந்த கால நினைவுகள் மீண்டும் மீண்டும் வந்து மனதை வாட்டி புதிய உறவில் சந்தோஷமாக ஈடுபட முடியாமல் தடுக்கலாம்.
விவாகரத்து பெற்றவர்களுக்கு எப்போதும் மனதுக்குள் ஒரு விதமான சந்தேக உணர்வும், அச்ச உணர்வும் இருக்கும் என்பார்கள். எனவே அதை சமாளித்து புதிய உறவானது, ஆறுதல் தரும் வகையில் நடந்து கொள்ள வேண்டியது சவாலான காரியம்தான். விவாகரத்து ஆகி நீண்ட காலம் ஆனவர்களை மணப்பதோ அல்லது காதலிப்பதோ நல்லது என்கிறார்கள் நிபுணர்கள்.
வெளிப்படையாக இருக்க வேண்டியது முக்கியமானது, அவசியமானது. எந்த சந்தேகமாக இருந்தாலும் பட்டென்று தேங்காய் உடைப்பது போல போட்டு உடைத்து கேட்டு விடுவது நல்லது. விவாகரத்து ஆனவர்களுடான காதலில் மட்டுமல்ல எந்த வகையான காதலிலும் வெளிப்படையான அணுகுமுறையே சாலச் சிறந்தது
விவாகரத்து பெற்றவருக்கு பல்வேறு பொறுப்புகள் வந்து சேரும். எனவே இந்த பொறுப்புகளை அவருடன் சேர்ந்து சுமக்க புதிய காதலில் ஈடுபடுவோர் முன்வர வேண்டியதும் அவசியமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக