Pages

வெள்ளி, ஆகஸ்ட் 30, 2013

செயல் விஷயத்தில் மட்டுமே உனக்கு அதிகாரம் உண்டு. பயனைப் பொறுத்தவரையில் உனக்கு அதிகாரம் இல்லை'

கீதையின் இரண்டாவது அத்தியாயத்தில் பகவான் கிருஷ்ணன் கூறியிருக்கும் ஒரு கருத்து பெரிய பெரிய அறிஞர்களையெல்லாம் குழப்பியிருக்கிறது! அர்ஜுனனிடம் அவர் சொன்னது:

"அர்ஜுனா, செயல் விஷயத்தில் மட்டுமே உனக்கு அதிகாரம் உண்டு. பயனைப் பொறுத்தவரையில் உனக்கு அதிகாரம் இல்லை' என்கிறார். பகவானின் இந்தக் கூற்று பல அறிஞர்களையும் குழப்பியுள்ளது! பலனை எதிர்பாராமல் செயலைச் செய்ய வேண்டும் என்றே பலரும் இதனைப் புரிந்து கொள்கின்றனர். இதுதான் கிருஷ்ணன் கூறிய கருத்து என்றால், தான் கூறியதை அர்ஜுனன் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பாராமலா அவர் அர்ஜுனனுக்கு உபதேசித்தார்? தனக்குத்தானே பேசிக்கொண்டிருக்கும் பைத்தியக்காரனும் ஏதோ ஒரு பலனை எதிர்பார்க்கிறான். அவனும் தன் எதிரே ஒரு கூட்டம் இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு அவர்கள் தன் பேச்சுக்குக் கை தட்டுவார்கள் என்றே எதிர்பார்க்கிறான். ஆதலால், மந்த புத்தியுள்ளவனும் பலனை எதிர்பாராமல் செயல் புரிவதில்லை.

பின், இந்தக் கூற்றுக்கு என்னதான் பொருள்?


நாம் ஒரு செயலைச் செய்யத் துவங்கும்போது பலன் அமைவது நம் வசத்தில் இல்லை என்பது தெரிந்தாலும், பலனை எதிர்பார்த்துத்தான் நாம் செயல்புரிகிறோம். இந்த எதிர்பார்ப்பு நம் விருப்பு, வெறுப்புகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையை அடிப்படையாகக் கொண்டது. இந்த எதிர்பார்ப்பு பொதுவாக எல்லாருக்குமே உள்ளது என்பதால் இது பிரச்னை இல்லை. ஆனால் பலன் கிடைக்கும்போது நாம் அதை எதிர்கொள்ளும் விதம்தான் பிரச்னையை உருவாக்குகிறது!

ஆதலால்,""பலனை மனதில் கொண்டு செயல்படு. அந்தப் பலனை அடைவதற்குத் தகுந்தமாதிரி திட்டமிட்டு நன்கு செயல்படு. ஆனால், பலன் நீ எதிர்பார்த்த மாதிரி அமையவில்லை என்றால் உணர்ச்சிவசப்படாதே, அதை ஏற்றுக் கொள்வதில் கோபம், சலிப்பு, தளர்வு, வெறுப்பு போன்ற எதிர்ப்பு உணர்வுகள் கொள்ளாதே. பலனை வைத்து உன் வெற்றி, தோல்விகளை நிர்ணயிக்காதே''

இப்படித்தான் பகவானின் இந்தக் கூற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.

("பகவத்கீதையின் ஸாராம்சம்' என்ற நூலில் ஸ்வாமி தயானந்த சரஸ்வதி)

கருத்துகள் இல்லை: