சென்னைக்கு அருகில் பறவைகளை நோக்குவதற்கான பல்வேறு தளங்கள் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கது பழவேற்காடு ஏரி. கடற்கரைக்கு அருகிலுள்ள மிகப் பெரிய உப்புநீர் ஏரி இது. பண்டைக்காலத்தில் திருப்பாலைவனம் என்ற பெயரில் துறைமுகமாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது.
டச்சுக்காரர்களும், ஆங்கிலேயர்களும் இதை துறைமுகமாகப் பயன்படுத்தியுள்ளனர். ஆங்கி லேயர் காலத்தில் பக்கிங்ஹாம் கால்வாயின் தொடர்ச்சியாக நீர்வழிப் பாதையாக பயன் படுத்தப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் வாயில் பழவேற்காடு என்ற பெயர் நுழையாததால், புலிகாட் ஆகிவிட்டது.
இந்தியாவில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய கழிமுக உப்புநீர் ஏரி (Lagoon) இது. (முதல் மிகப்பெரிய ஏரி ஒரிசாவில் உள்ள சிலிகா ஏரி) தமிழகம் –ஆந்திரம் என இரு மாநலங்களில் அமைந்துள்ளது. பரப்பளவில் பார்த்தால் அதுவே தமிழகத்தின் பிரம்மாண்ட பறவை சரணாலயம். 46,102 ஹெக்டேர். 35 கி.மீ. அகலம் கொண்டது. 1980களிலேயே இந்த ஏரி பறவை சரணாலயமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. கிழக்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள இந்த ஏரிக்கு 150 வகை பறவைகள் வந்து சென்றதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம், கோடியக்கரை ஆகிய கடற்கரையோர பகுதிகளுக்கு பூநாரைகள் வருகின்றன என்றாலும் பழவேற்காடுதான் பார்ப்பதற்கு உகந்த இடம். ஶ்ரீஹரிகோட்டாவுக்குச் செல்லும் ஷார் சாலையில் உள்ள அடகாணிதிப்பாவில் பூநாரைகளை பெருமளவு பார்க்கலாம். இங்கு ஸ்வர்ணமுகி, காலங்கி, ஆரணி ஆகிய மூன்று நதிகள் கூடுகின்றன. இது பூநாரைகளின் அரண்மனை. 15,000க்கு குறையாத பூநாரைகள் வரும் என்கிறார்கள். அதிகபட்சம் 25 ஆயிரம் வரலாம்.
ஜனவரி மத்தியில் பூநாரைகள் அதிகம் வருகின்றன என்கிறார்கள் உள்ளூர்வாசிகள். அதேபோல 2008 ஜனவரி தொடக்கம் முதலே பூநாரைகள் வரவு தொடங்கிவிட்டது. இவற்றின் தாயகம் குஜராத்.
பூநாரைகளின் உடல் அமைப்பு வித்தியாசமானது. மற்ற நீர்ப்பறவைகளைப் போலவே கால்கள் நீளமானவை. அதேநேரம் கழுத்தும் கால் போன்று நீளமாக இருக்கும். உடல் ரோஸ் நிற இறக்கைகளால் ஆனது. மண்வெட்டி போன்று வளைந்த அலகு என பல அம்சங்கள் பூநாரைகளை வேறுபடுத்திக் காட்டுகின்றன. பறக்கும்போது நடுவில் உடல் முன்னால் நீட்டிய தலை, பின்னால் நீட்டிய கால்கள் என்ற வகையில் வித்தியாசமாகப் பறக்கும். இளஞ்சிவப்பு வண்ண மேகப்பொதிகள் வேகமாக நகர்வது போலிருக்கும். பூநாரைகள் சகதியில் பானை வடிவில் கூடமைத்து முட்டையிடும்.
பூநாரைகளின் வருகையை ஆந்திர வனத்துறை 'பூநாரைத் திருவிழா' என்ற பெயரில் ஆண்டுதோறும் கொண்டாடுகிறது. ஏரி சூழ்ந்த வேணாட்டில்தான் பூநாரைத் திருவிழா நடை பெறுகிறது.
பழவேற்காடு ஏரிக்கு 'ராம்சர் பேரவை அந்தஸ்து' (Ramsar Convention Site) வழங்க வேண்டும் என்று இயற்கையியலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பல்லுயிரிய முக்கியத்துவம் வாய்ந்த ஏரிகளுக்கு இந்த சர்வதேச அந்தஸ்து வழங்கப்படும். கடும் நெறிமுறைகளை கடந்து வழங்கப்படும் இந்த அந்தஸ்து கிடைத்தால், ஏரியையும் அதில் வாழும் பல்லுயிரிகளையும் பாதுகாக்க சர்வதேச நிதியுதவி கிடைக்கும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையும் அதிகரிக்கும்.
ஹாலந்தைச் சேர்ந்தவர்கள் இந்த ஏரியைப் பாதுகாப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். 'சூலூர்பேட்டை பறவை ஆர்வலர்கள் சங்கம்' (SPLS) என்ற அமைப்பை பழவேற்காடு பறவை ஆர்வலர்கள் அமைத்துள்ளனர்.
எண்ணூர் அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் வெந்நீர் அப்படியே கடலில் கலப்பதால் மீன்கள் இறந்து போய் பல்லுயிரியம் கெடுகிறது. இதனால் பழவேற்காடு ஏரியின் தமிழக பகுதிக்கு பறவைகள் வருகை குறைவாக இருக்கிறது.
விம்ப்ரெல் (Whimbrel) பறவை ஆர்டிக் பகுதியில் இருந்து 4000 கி.மீ. இடைவெளி விடாமல் பறந்து வந்து இப்பகுதியை அடைகின்றன. பழவேற்காடு நண்டு என்று பெயர்பெற்ற சேற்று நண்டுகளை மட்டுமே இவை உண்கின்றன. Caspian Tern (ஆலாக்கள்) இந்த ஏரிக்கு வருகிறது. இந்த ஏரியில் கலக்கும் ஆறுகள் இந்த சேற்று நண்டுகளை கொண்டு வருகின்றன.
இந்த ஏரி பல்வேறு ஆபத்துகளை சந்தித்து வருகிறது. அதில் முதலாவது மேற்கண்ட நண்டுகளை ஏற்றுமதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள 34 இறால் தொழிற்சாலைகள் ஏரியின் பல்லுயிரியத்தை பாதிக்கின்றன. இரண்டாவது 1500 சதுர கி.மீ. பரப்புக்கு விரிந்திருந்த பழவேற்காடு ஏரி வண்டல் படிவதால் 350 சதுர கி.மீ. ஆகச் சுருங்கிவிட்டது என்று சென்னையில் உள்ள இயற்கை அறக்கட்டளை தெரிவிக்கிறது.
நவம்பர், டிசம்பரில் வண்டல் படிவதால் வலசை வரும் பறவைகளுக்கு உணவாகும் மீன், நீரடி பல்லுயிரியம் அமிழ்ந்துவிடுகிறது. பறவைகளுக்கு உணவு கிடைப்பதில்லை. அவற்றின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்கு மீன்கள் வேண்டும். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பருவகாலத்தில் மீன் பிடிக்கிறார்கள். வலைகளில் சிக்கி நாரைகள் கால் ஒடிந்து போகின்றன.
மீனவர்கள் குஞ்சுகளை பிடிக்காமல் இருக்க வேண்டும். ஏரியில் மீன்களை ஒட்டுமொத்தமாக வடித்துப் பிடிப்பது முறையானதல்ல.
மூன்றாவது, ஏரியில் வடக்கு புறத்தில் ரியல் எஸ்டேட் வியாபாரம் பெருகி வருகிறது என்கிறார் சென்னையைச் சேர்ந்த பேராசிரியரும் பறவை ஆர்வலருமான முருகவேள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக