Pages

செவ்வாய், டிசம்பர் 18, 2012

வறுமையை உடைத்தெறிந்து சிறகடித்த செஸ் வீராங்கணை - மனதை உருக்கும் உண்மைக் கதை

வறுமையை உடைத்தெறிந்து சிறகடித்த செஸ் வீராங்கணை - மனதை உருக்கும் உண்மைக் கதை

கட்டுரை
http://www.kodangi.com/
லிருந்து மீள்பதிவு.
வறுமையை உடைத்தெறிந்து சிறகடித்த செஸ் வீராங்கணை - மனதை உருக்கும் உண்மைக் கதை
by இக்பால் செல்வன்
உலகின் அனைத்து இன்பங்களையும் துய்த்துக் கொண்டு ஏக போகமாக வாழ்ந்து வரும் நமக்கு இதே
உலகில் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு வாழத் தகுதியில்லாத பகுதிகளில் வாழ்ந்து
வரும் ஏழை எளிய மக்களைப் பற்றிச் சிந்திக்க நேரம் இருப்பதில்லை அல்லவா. ஆனால்
அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை உண்டு, ஒரு கனவு உண்டு ஆனால் அதற்கான வாய்ப்புக்கள்
மட்டும் கிடைக்கப் பெறுவதில்லை என்பதை நாம் நினைவில் கொள்வதில்லை. அவ்வாறான தாழ்நிலையில்
இருந்து மேலோங்கி வந்துவிடுவது என்பது எளிதான காரியம் இல்லை, இருந்த
போதும் போராடும் குணமும், விடா முயற்சியும் எல்லாவற்றுக்கும் மேலாகத் தன்னம்பிக்கையும்
கொண்டவர்கள் தாழ்ந்துவிடுவதில்லை. முயற்சி திருவினை ஆக்கும் என வள்ளுவனின்
வாக்கை நாம் இக் கணத்தில் நினைவில் கொள்ள வேண்டும். அத்தகையை முயற்சியைப் பெற்று புகழோடு
தோன்றியவர் தான் 16 வயதே ஆன பியோனா முடேசி (
Phiona Mutesi
) என்ற இளம் பெண்.
உகாண்டாவின் மிகவும் பின் தங்கிய பகுதியில் அமைந்திருக்கும் சேரிப் புறமே கத்வே ஆகும்.
அங்குத் தான் வசித்து வருகின்றார் பியோனா முடேசி.
உலகின் பின் தங்கிய கண்டம் ஆப்பிரிக்கா ஆகும், அந்த ஆப்பிரிக்காவிலேயே பின் தங்கிய நாடு
உகாண்டா, அந்த உகாண்டாவிலேயே பின் தங்கிய பகுதி கத்வே ஆகும். அங்கு வசிப்போரிலேயே
பின் தங்கியவர்கள் அங்கு வாழும் பெண்கள், அதிலும் மேற்கூரை இல்லாமல் தெருவோரத்தில்
வசிப்பது கொடுமையிலும் கொடுமை என்பேன். அத்தகைய பின் புலத்தில் இருந்து வந்தவர்
தான் பியோனா முடேசி. இன்று உகாண்டாவின் செஸ் விளையாட்டில் நம்பிக்கை நட்சத்திரமாக
மிளிர்ந்து கொண்டிருக்கின்றார் அவர்.
செஸ் என்ற ஒரு விளையாட்டு இருப்பதே அவளுக்குத் தெரியாதாம். செஸ் விளையாட்டு
அறிமுகமாக முன் தெருவில் தான் அவள் வசித்து வந்தாள் எனக் உருக்கத்துடன் கூறினாள்.
" தெருவில் சாப்பிடக் கூட ஒன்றுமே கிடைக்காது" என்றார் அவர்.
இந்த நிலையில் 2005-ம் ஆண்டுப் பசிக் கொடுமையைத் தாங்க முடியாமல் ஒரு பொதுத் தொண்டு
விடுதிக்கு வந்தடைகின்றார் பியோனா. அந்த விடுதியை நடத்தி வருபவர் 28 வயதானா
ராபர்ட் கடேண்டே என்பவர். அவர் உள்ளூர் வாசிகளுக்குச் செஸ் விளையாடக் கற்றுக் கொடுத்தும்
வந்தார். பசித்தவனுக்குச் செஸ் விளையாட ஏது நேரமும், மனமும். ஆகவே அவரின்
தொண்டு நிறுவனம் ஒருவேளை கஞ்சியையும் சேர்த்துக் கொடுத்தது. ஆகவே உகாண்டாவின் பல
பகுதிகளில் இருந்து பசியால் துடிக்கும் பல சிறார்கள் இங்கு வந்து கஞ்சிக்கு
ஆகவாவது செஸ் விளையாடுவது வழக்கம். அப்படித் தான் வந்து சேர்ந்தார் பியோனாவும்.
உகாண்டா என்பது ஆப்பிரிக்காவிலேயே மிகவும் மதவாதம் நிறைந்த நாடு ஆகும். அனைத்து
இயற்கை வளங்களும் இருந்த போதும் வறுமையும், சீர்குலைந்த வாழ்க்கையும் அந்த நாட்டைப்
புரட்டிப் போட்டு இருந்தது.
பெரும்பாலான இளம் பெண்கள் பருவம் அடைந்ததுமே மணம் முடிக்கப் படுவார்கள், அல்லது
பலாத்காரம் செய்யப்பட்டு விடுவார்கள். பல பெண்கள் தங்கள் பதின்ம வயதைக் கூடக்
கடக்காத நிலையில் தாய்மை அடைந்துவிடுவதும், வறுமையில் வாடுவதும் அங்குக் கண்கூடான ஒன்று.

அது மட்டுமில்லாமல் தொடரும் தீவிரவாதம், ஆள் கடத்தல்கள், விபச்சாரங்கள், நோய்கள், விவசாயம்
மற்றும் தொழில்கள் படுத்துவிட்ட நிலை என எங்குத் திரும்பினாலும் துன்பமே
மிஞ்சியது. அத்தகைய பலருக்கு ஆறுதலாக இருந்தது ஒரு வேளை கஞ்சியும் அதற்காகச் செஸ்
விளையடுவதுமே.
இந்த நிலையிலேயே செஸ் விளையாட்டை மிகவும் நேசிக்கத் தொடங்கினாள் பியோனா, அவளுக்குச்
செஸ் விளையாட்டின் அடிப்படை விதிகளைக் கற்றுக் கொடுத்தார் ராபர்ட் முடேண்டே.
ஆனால் தீரா ஆர்வமும், மிளிரும் கண்களில் செஸ் மீதான ஆசையும் பியோனாவை மனம் தளரவிடவில்லை.
அவள் தினமும் ஆறு கி.மீ.க்கள் செஸ் விளையாடுவதற்காக நடந்தே வருவாள்
என ESPN கூறுகின்றது.
இன்று அந்த ஊர்களில் இருப்போரை விட நன்கு செஸ் விளையாடக் கூடியவள் பியோனா தான். ''
எதிராளியினைத் தனது மூவ்-களில் தாக்கி செஸ் கட்டைகளை நகர்த்த முடியாமல் திணறடிப்பதில்
அவள் வல்லவள்'' எனக் கூறுகின்றார் ராபர்ட்.

தனது ஆசானான ராபர்ட்டைத் தோற்கடிக்கும் அளவுக்கு வளர்ச்சிக் கண்டாள். இன்று ஒட்டு மொத்த
ஆப்பிரிக்காவிலேயே சிறந்த செஸ் வீராங்கணையாக மாறியுள்ளார் பியோனா. இளம்
வயதிலேயே ஆப்பிரிக்கன் செஸ் சாம்பியன்சிப்பைத் தட்டிச் சென்ற பெருமை இவளுக்கே சேர்ந்துள்ளது.
இவளின் செஸ் திறமையால் விட்டுப் போன தனது கல்வியைத் தொடரவும் பல வாய்ப்புக்களும்,
உதவிகளும் குவிய தொடங்கியுள்ளது. எதிர்க்காலத்தில் தான் ஒரு மருத்துவர் ஆகவே
விரும்புவதாக
CNN-க்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளாள் அவள்.
பன்னாட்டுப் போட்டிகளில் உகாண்டா சார்பாகக் கலந்துக் கொண்டும் வருகின்றாள். மேட்டுக்
குடிகளின் செல்வச் செழிப்பில் தலைசிறந்த பயிற்சியை எல்லாம் பெற்று, சுக
போக வாழ்க்கைப் பின்னணியில் எவ்விதக் கவலையும் இன்றிப் போட்டிகளில் கலந்து கொள்ளும் பல
நாட்டவர்களோடு அவள் போடும் போட்டி மிகவும் சவாலானது என்ற போதும், தனது
விடா முயற்சியால் அனைவரோடும், பல சமயங்களில் தனது வயதை விடவும் இரு மடங்கு
மூத்தவர்களோடும் சரிநிகராகப் போட்டி போடுகின்றார் பியோனா.
இருந்த போதும் அவருக்கு உலகச் செஸ் ஜாம்பவான்களோடு மோத மேலும் பல ஆழ்ந்த பயிற்சியும்,
உதவியும் தேவைப் படுகின்றது. அவை கிட்டும் பட்சத்தில் அவள் நிச்சயம் உலகின்
தலை சிறந்த செஸ் வீராங்கணையாக வலம் வருவாள் என்பதில் ஐயமில்லை.
இவளின் வாழ்க்கைக் கதையைக் கேட்ட டிம் குரோதர்ஸ் என்பவர் '' The Queen of Katwe '' (
கத்வேயின் அரசி ) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். சிறப்பான விடயம் என்றால்
இவளது வாழ்க்கைச் சரிதம் ஹாலிவுட் திரைப்படமாகவும் எடுக்கப்படவுள்ளது.

block quote
அவள் மிகப் பெரிய போட்டியில் வெற்றிப் பெற்ற போதும், அவளுக்கு அது என்னவென்றே தெரியாமல்
இருந்தது. அந்த வெற்றியால் அவளுக்கு என்னக் கிடைக்கும் என்றும் தெரியாமல்
இருந்தது, எப்போதும் விளையாடுவது போலவே விளையாடினாள். மிகப்பெரிய ஒலிம்பியாட்
போட்டியில் தான் கலந்துக் கொள்ள தகுதி பெற்றது கூட அவளுக்கு தெரியவில்லை. சொல்லப்
போனால் ஒலிம்பியாட் என்றால் என்னவென்று கூட தெரியாது. இதில் வெற்றிப் பெற்றுவிட்டதால்
இன்னும் சில மாதங்களில் அவள் மத்திய ரசியாவில் இருக்கும் காண்டி-மான்சியிஸ்கில்
நடைபெறும் போட்டியில் கலந்துக் கொள்ளப் போகின்றாள் என்பதைக் கூட அவள் அறியவில்லை. ரசியா
எங்குள்ளது என்று அவளுக்குத் தெரியாது. அவளுக்கு அவை எல்லாம் தெரிய வரும்
போது, அவள் கேட்ட ஒரேக் கேள்வி : '' அங்கு குளிராக இருக்குமோ '' என்பது மட்டுமே. -
டிம் குரோதர்ஸ், ஆசிரியர் '' கத்வேயின் அரசி ''
block quote end

எய்ட்ஸ் நோயால் தந்தையைப் பறிக்கொடுத்துவிட்டு, போதிய வசதி இல்லாததால் தாயாரால்
பள்ளிக்கும் அனுப்ப முடியவில்லை என்பதால் கல்வியையும் தொலைத்துவிட்டு, சாப்பிட
கூட வசதி இல்லாத நிலையில் தெருவில் சுற்றித் திரிந்த அவளுக்கு ஒரு விளையாட்டு புதிய
வாழ்க்கையையும், அங்கீகாரத்தையும் கொடுத்துள்ளது என்பதை அறியும் சோர்வுற்றுக்
கிடக்கும் நாம் எல்லாம் எம்மாத்திரம் என்பதை மட்டும் நினைவுப் படுத்துகின்றேன்.
பியோனா முடேசி வாழ்வின் பல வெற்றிகளை அடைய வேண்டும், அவரின் மூலமாகப் பிற்படுத்தப்
பட்ட மக்களும், முக்கியமாகப் பெண்கள் தன்னம்பிக்கைக் கொள்வார்கள் எனக் கருதுகின்றேன்.

கருத்துகள் இல்லை: