நடன அசைவில் அசாதாரண மொழி
தேனீக்கள் ஆடும் கூத்திற்கு ஒரு அர்த்தம் உண்டு.
தேனீக்கள் தங்கள் உணவிற்காக வெளியில் சென்று ஏதேனும் புதிய உணவாதாரத்தைக் கண்டறிந்தால் கூட்டிற்குத் திரும்பி அந்த இடத்தைப் பற்றிய துல்லியமான தகவல்களை வித்தியாசமான உடல் அசைவின் மூலம் தெரிவிக்கின்றன. உதாரணமாக உணவின் இருப்பிடம் 100 கஜத்திற்கு(yards) உட்பட்ட இடத்தில் ஒரு தேனீயால் கண்டுபிடிக்கப்பட்டால் அது முதலில் அந்த மலரின் குளுகோஸை உறுஞ்சி தன் தேன் பையில் சேகரித்து கூடு திரும்புகின்றன. திரும்பியவுடன் கூட்டில் முதலில் இரண்டு செ.மீ அளவிற்கு சிறிய வட்டமாக (round dance) சுற்றுகின்றது. பின்னர் படிபடியாக சுற்றை பெரிதாக்கி சுற்றுகின்றது. பின்னர் அந்த சுற்றுக்கு எதிர் திசையில் சுற்றுகின்றது. இப்போது அதனுடன் இணைந்து மற்ற ஈக்களும் அந்த நடனத்தில் இணைந்துக் கொள்கின்றன. பின்னர் புதிய இடத்தை கண்டறிந்த தேனீயால் கொண்டு வரப்பட்ட மலரின் மகரந்தம் மற்றும் மலரின் குளுகோஸ் போன்றவற்றின் வாசனையை நுகர்ந்து அது எத்தகைய தாவரம் என்பதை உறுதி செய்து கொள்கின்றன. பின்னர் கூட்டை விட்டு வெளியேறி 100 கஜத்திற்க்குள் பெரிய வட்டம் அடித்து உணவின் இருப்பிடத்தைக் கண்டறிகின்றன. இதே நேரத்தில் 100 கஜத்திற்கு அப்பால் உணவாதாரம் இருக்குமேயானால் தற்போது வேறுவிதமாக நடனத்தை அரங்கேற்றுகின்றன. தங்கள் பின்புறத்தை அசைத்தபடி(waggle dance) மையத்திலிருந்து நேராக சென்று பின்னர் அறைவட்டம் அடித்து அதற்கு எதிர் திசையில் அதைப் போன்றே சுற்றுகின்றன. மேலும் மிக அதிக தொலைவு என்றால் இவை சூரியனின் இருக்கும் திசையையும் உணவு இருக்கும் திசையையும் ஒரு காம்பசின் அமைப்பில் திசையை துல்லியமாக தெரிவிக்கின்றன. இவை கணிதம் அறிந்த ஈக்கள் என்று தவறாக நினைக்க வேண்டாம். எல்லாம் நம் இறைவன் ஜீன்களைக் கொண்டு நடத்தும் ஜால வித்தைகள்தான் இவைகள்.
இந்த முறையில் 10 கிலோ மீட்டர் தொலைவின் இருப்பிடத்தை கூட இவைகளினால் இந்த அதிசய முறையினால் மற்றவற்றிற்கு தெளிவுபடுத்த இயலுகின்றது. யார் இவைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தது? என்ன ஒரு திட்டமிட்ட பிரமிக்க வைக்கும் செயல்பாடுகள். இத்தகைய நடன அசைவுகளை வெளிச்சம் அறவே இல்லாத அடர்ந்த இருளிலும் அவைகளினால் எப்படி அறிந்துக் கொள்ள முடிகின்றது என்பது இதுவரை புரியாத புதிராகவே இருந்து வருகின்றது.
தவறுதலின் பலன்தான் கில்லர் தேனீக்கள் (KILLER BEE)
1950 ஆண்டு பிரேசில் விஞ்ஞானிகளுக்கு அதிக தேன் கொடுக்கக் கூடிய ஐரோப்பிய தேனீக்களையும் அதிக வெப்பத்தைத் தாங்கி தேனை உற்பத்தி செய்யும் ஆப்ரிக்கத் தேனீயையும் சேர்த்து கலப்பினம் செய்தால் தங்கள் நாடான பிரேசில் நாட்டின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற ஒரு ரகத்தை உருவாக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன் விளைவாக புதிய ரகம் உருவாக்க ஆப்பிரிக்க இராணித் தேனீக்கள் சிலவற்றை பிடித்து பிரேசில் கொண்டு சென்றார்கள். ஆனால் அவற்றில் சில ஈக்கள் தப்பித்து காட்டுக்குள் சென்றுவிட்டன. இந்த ஆப்ரிக்க தேனீக்கள் மிக அதிக அளவிற்கு பாதுகாப்பு உணர்வுக் கொண்டதாகும். மற்ற வகை தேனீக்களைக் காட்டிலும் மிக வேகமாக இவை பறக்கக் கூடியவை. இங்குதான் பிரச்சனை ஆரம்பமாகியது. இவை தங்கள் கூட்டை தாக்க வரும் எதிரிகளை மாத்திரம் அல்லாது அதன் சுற்று புறத்தில் வந்தால் கூட கொத்த ஆரம்பித்துவிடும். மற்ற தேனீக்களை விட எதிரி மூன்று மடங்கு தொலைவில் வரும் போதே இவை தாக்கும் தொழிலில் இறங்கி விடுகின்றன. ஆப்ரிக்காவின் அதிக வெப்ப நிலையைத் தாங்கிய இவைகளுக்கு தென் அமெரிக்கா கண்டத்தின் மிதமான வெப்ப நிலையை தாங்கி பரவிச் செல்வதில் எந்தச் சிரமமும் இருக்கவில்லை. இவற்றின் இராஜ்ஜியம் தங்கு தடையின்றி பரவிச் சென்றது. இவை வருடத்திற்கு 500 சதுர மைல்கள் வீதம் தங்கள் பரப்பளவை விஸ்திகரித்துக் கொண்டே செல்கின்றன. இதன் விளைவாக 1950ல் ஆரம்பித்த இவற்றின் பரவல் 1990ம் ஆண்டு அமெரிக்காவை எட்டிவிட்டது. 40 ஆண்டு காலத்தில் தென் அமெரிக்காவை கடந்து வட அமெரிக்காவை எட்டிவிட்டன. மேலும் இவை பரவிக்கொண்டே செல்கின்றன. இவற்றால் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றார்கள். இவை 1990 ஆண்டு முதன்முதலாக அமெரிக்காவில் காணப்பட்டது. அவை டெக்ஸாஸிலிருந்து மெக்ஸிகோவிற்கும் பிறகு 1994ம் கலிஃபோர்னியா மகாணத்திற்கும் பரவின. உலக நாடுகளை அச்சுறுத்தி ஆக்கிரமிப்பு செய்யும் அமெரிக்கவில் இவை சப்தமின்றி தங்கள் ஆக்ரமிப்பைத் தொடர்கின்றன. இன்னும் 50 ஆண்டுகளில் முழு அமெரிக்காவும் ஆக்கிரமிக்கக் கூடிய அபாயம் இருக்கின்றது. மெக்ஸிகோவிலும் அர்ஜெண்டினாவிலும் இவைகளினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களும் உண்டு. அமெரிக்காவைப் பொறுத்தவரை உயிர்இழப்பு ஏற்படாவிடினும் 1990 ஆண்டு அதிகபடியான நபர்கள் இவற்றால் கடிக்கப்பட்டு பாதிக்கப்பட்டனர்.
தேன்
தேன்
தேன் என்பது குளுகோஸ், புரக்டோஸ், நீர், மற்றும் சில என்ஸைம்கள் சிலவகை எண்ணெய்கள் ஆகியவை அடங்கியதாகும். இவை மலரிருந்து கொண்டு வரும் குளுகோஸ் 40 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரை நீர் நிறைந்ததாக இருக்கும். ஆனால் இவை உற்பத்தி செய்யும் தேனில் 16 முதல் 18 சதவிகிதமே நீர் இருக்கும். இவற்றின் நிறம் மற்றும் சுவை தேனீக்களின் வயது மற்றும் அந்த பகுதியில் அமைந்திருக்கும் தாவர வகைகளைப் பொறுத்து மாறுபட்டு இருக்கும். பொதுவாக தேன் மஞள் நிறமுடையதாய் இருக்கும். வெளிர் மஞ்சள் நிற தேன் தரம் வாய்ந்ததாய் இருக்கும். ஆரஞ்சு மரத்தின் பூக்களைக் கொண்டு தேனீக்களினால் உருவாக்கப்படும் தேன் முதல் தரமானதாகக் கருதப்படுகின்றது. குறைந்த தரம் வாய்ந்த தேன் பஹ்வீட் (Buckwheat) என்னும் தாவரத்திலிருந்து பெறப்படும் தேனாகும். ஏனெனில் அந்த தேன் அடர்ந்த மஞ்சள் நிறமானதாய் இருக்கும். தேனைக் கொண்டு மனிதர்கள் பயன் பெறவே எல்லாம் வல்ல நம் இறைவன் இவற்றை நமக்கு வசப்படுத்தி தந்துள்ளான். அவன் கருணையாளன்.
உலகம் முழுதும் தேனீக்கள் பொருளாதார ரீதியாக செயற்கை முறையில் (Bee Keeping) வளர்க்கப் படுகின்றது. நல்ல பொருளாதாரத்தை ஈட்டிக்கொடுக்கக் கூடிய தொழிலாகவும் இது விளங்கிவருகின்றது. நல்ல ஆரோக்கியமான கூட்டில் 14 முதல் 23 கிலோ வரை தேன் சேகரிக்கப்படுகின்றது. இவை தங்கள் குளிர்கால உணவுத் தேவையைக் காட்டிலும் மிக கூடுதலாகும். இவற்றின் மிஞ்சிய தேன் எடுத்துக்கொள்ளப்பட்டு அவற்றின் உயிர் தேவைக்கான கொஞ்சம் தேன் விட்டு வைக்கப்படுகின்றது. உலகத்தின் தேன் தேவையை பெருமளவிற்கு செயற்கைத் தேன் வளர்ப்பின் மூலமே சரிகட்டப்படுகின்றது. 8 முதல் 10 பவுண்டு தேனை சேகரிக்கும் போது அந்த கூட்டிலிருநது 1 பவுண்டு எடையுடைய தேன் மெழுகு கிடைக்கின்றது. தேன் என்பது ஒரு தூய கார்போ-ஹைட்ரேட் உணவாகும். இவை பல மருத்துவப் பயன்பாட்டிற்கு உதவுகின்றன.
இது நிறைய கலோரி நிறைந்ததாகும். உதாரணத்திற்கு ஒரு அவுன்ஸ் தேன் மூலம் ஈக்களுக்கு கிடைக்கும் ஆற்றல் ஒரு முறை உலகைச் சுற்றி வரப் போதுமானதாகும். இந்த தேன் மற்ற திரவத்தைக் காட்டிலும் அடர்த்தி நிறைந்ததாகும். ஒரு குவளை சர்க்கரை நீரின் எடை சுமார் 7 அவுன்ஸ் ஆகும். ஆனால் ஒரு குவளைத் தேனின் எடை 12 அவுன்ஸ் ஆகும். ஏறக்குறைய இருமடங்கு எடையாகும்.
தேனின் இதர பயன்கள்
தேனின் இதர பயன்கள்
இந்த பூமிக் கோளின் தாவரப் பரவலுக்கு தேனீக்களின் பங்கு மிக இன்றியமையாததாகும். அமெரிக்காவில் மாத்திரம் நான்கில் ஒரு பங்கு தாவரம் தேனீக்களினால் இனப்பெருக்கம் அடைகின்றன. இது அமெரிக்காவிற்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதற்கும் உள்ள பொதுவான பயனாகும். இவற்றினால் ஏற்படும் பயன்பாட்டின் மதிப்பு அமெரிக்காவில் மாத்திரம் 200 பில்லியன் டாலர் வரை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை உதாரணமாக குறிப்பிடுவதை குறையாக எண்ணுபவர்கள் தயவு செய்து தவறாக எண்ண வேண்டாம். ஏன் என்று சொன்னால் இத்தகைய புள்ளி விபரங்களை சேகரிக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ள இவர்களுக்கே போதிய கால அவகாசமும் பொருளாதாரமும் இடம் தருவதனால் இத்தகைய புள்ளி விபரங்கள் இவர்களிடமிருந்து கிடைக்கப்பெருகின்றன என்பதல்லாமல் வேறு ஒரு காரணமும் இல்லை.
இறைவனின் ஒப்பற்ற ஏற்பாட்டின்படி இவை நமக்கு இனிய தேனை மருத்துவப் பயன்பாட்டிற்கு நல்குவதோடு மட்டுமல்லாமல் வேறு பல அவசியத்தையும் இவற்றில் வைத்த நம் இறைவன் போற்றுதலுக்குறியவன்! புகழுக்குறியவன்! பகுத்தறிவு என்பது இறைவன் மனிதனுக்கு பிரத்யேகமாகக் கொடுத்துள்ளது போன்றே மற்ற சில உயிரினங்களுக்கும் இறைவன் தன் அருட்கொடையின் மூலம் வியக்கத்தக்க அம்சங்களை வைத்துப் படைத்துள்ளான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
மனிதன் மற்ற எல்லாவற்றையும் விட தன்னை மிகப் பெரியதாக நினைக்கின்றான். இருப்பினும் தன்னை விட மிகத் தாழ்ந்த உயிரினமாக கருதப்படும் பல உயிரினங்கள் பெற்றிருக்கும் அபரிதமான ஆற்றல்கள் பல இவனைக் கொண்டு சாத்தியமற்றதாக இருப்பதை நடுநிலையோடு உணர்ந்து இறைவனின் வல்லமையை ஏற்று அவனுக்கு கட்டுப்பட்டு வாழ கல்வி ஞானத்தை வேண்டுவோம். நேர் வழி செல்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக