நிகழ்வுகளின்போது, எதிர்பாராத திருப்பங்களின்போது, மகிழ்ச்சியான
தருணங்களில், சோகமான சூழல்களில் பழமொழிகளைப் பயன்படுத்துகிறோம். சோதனைகள்
வரும்போது நம்பிக்கையூட்டுவதற்கு, சிக்கல்கள் ஏற்படும்போது சோர்வடையாமல்
இருப்பதற்கு, ஆழ்ந்த துயரங்களின்போது ஆறுதல் அடைவதற்கு, குழப்பத்தின்போது
வழி காட்டுவதற்கு என்று பற்பல வழிகளில் பழமொழிகள் கையாளப்படுகின்றன.
வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உதவிடும் அனுபவப் பிழிவுகளாகப் பழமொழிகள்
உடன் வருகின்றன.
எடுத்துக்காட்டாக, ஒருவர் தனக்கென ஒரு தொழிலைத் தொடங்குவதாக
வைத்துக்கொள்வோம். அந்தத் தொழிலை ஏற்றுத் தொடங்கியபிறகு, அந்தத்
தொழிலுக்கே உரிய நெருக்கடிகள் ஏற்படத்தான் செய்யும். "என்னங்க
இப்படியெல்லாம் நடக்குது," என்று அலுத்துக்கொள்கிறவரிடம் "கழுதைக்கு
வாக்கப்பட்டா உதைக்கு அஞ்சக் கூடாது" என்று சொல்வது அப்படிப்பட்ட ஒரு
அனுபவச் சாறுதான். அதே போல், எந்த ஒரு தகவலையும்
உறுதிப்படுத்திக்கொள்ளாமல் அப்படியே நம்பி அவசர முடிவுக்கு
வந்துவிடக்கூடாது என்பது ஒரு அனுபவப் பாடம். அந்தப் பாடத்திலிருந்து வந்த
சொல்லாக்கம்தான், "கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும பொய், தீர
விசாரிப்பதே மெய்," என்ற பழமொழி.
பழமொழி என்ற சொல்லே அது பழங்காலத்திலிருந்து புழக்கத்தில் இருப்பது
என்பதை உணர்த்திவிடுகிறது. புதுமொழிகள் அவ்வளவு எளிதில் சமூகப் பழக்கமாக
ஊன்றிவிடுவதில்லை. திரும்பத்திரும்பச் சொல்லப்பட்டு சொல்லப்பட்டு ஒரு
பரம்பரை ஞானம்போலப் பாடமாகிவிட்டவையே பழமொழிகள். எப்போதோ யாராலோ
உருவாக்கப்பட்ட 'பஞ்ச் டயலாக்'!
அதே வேளையில், பழமொழி ஒரு அனுபவச் சொல்லாடல் மட்டுமல்ல, அது ஒரு
சமூகவிதியை நிலைப்படுத்துவதற்கான கலாச்சாரச் செயலுமாகும். ஒவ்வொரு
சமூகமும் தனக்கென சில நியதிகளையும், அந்த நியதிகளைக் கட்டாயமாக்குகிற
விதிகளையும் ஏற்படுத்திக்கொள்கிறது. அந்த நியதிகளையும் விதிகளையும்
நியாயப்படுத்தி, குடிமக்கள் மனங்களில் பதியம் போடுகிற வேலையைப் பழமொழிகள்
செய்கின்றன. "ஐந்திலே வளையாதது ஐம்பதில் வளையாது," என்று இப்போதும்
சொல்கிறோம். பணிவையும் அடக்கத்தையும் குழந்தைப் பருவத்திலேயே
கற்றுக்கொள்ள வேண்டும், எதையும் எதிர்த்து நெஞ்சு நிமிர்த்தக் கூடாது
என்ற நியதி இதற்குள் இருக்கிறது. இன்னொரு புறத்தில், எந்த ஒரு
சமூகத்திலும் விதியை மீறும் போராட்டங்களும் நடந்துகொண்டுதான் இருக்கும்.
வெளியே போகாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடப்பவர்கள் தனிமைப்பட்டுப்
போவார்கள் என்ற உண்மையைச் சொல்கிற, "நடந்தால் ஊரெல்லாம் உறவு, படுத்தால்
பாயும் பகை" என்ற பழமொழி, ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடக்க முயன்ற
அன்றைய சமூக விதிகளை மீற முயன்றவர்களின் குரலாகவும் ஒலிக்கிறது.
பழமொழிகள் இரண்டு இரண்டு தன்மைகளால் நீடித்திருக்கின்றன. ஒன்று -
வாழ்க்கை சார்ந்ததாக இருப்பதால், இன்று வரையில் மனிதர்கள்
வாழ்ந்துகொண்டிருப்பதால், அவர்களுக்கு வழித்துணைகளாகப் பழமொழிகள் உடன்
வருகின்றன. இரண்டு - அவற்றின் எதுகை மோனை, சொல் நயம், தாள லயம்.
"அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்" என்றும், "குந்தி தின்றால்
குன்றும் அழியும்" என்றும் சட்டென நினைவுக்கு வருவதற்குக் காரணம், பாடல்
வரிகள் போன்ற அவற்றின் தாள லயம்தான்.
இத்தகைய கவிதை நயத்துடன் இருப்பதால், பழமொழிகளை உருவாக்கியவர்கள்
அந்தக்காலத்திய நாட்டுப்புற கலைஞர்களாகவோ, மக்களோடு மக்களாகச் செயல்பட்ட
எழுத்தறியாப் புலவர்களாகவோ இருந்திருக்கக்கூடும் என ஊகிக்கலாம்.
தெருக்கூத்து போன்ற கலைக்குழுக்கள் ஊர் ஊராகச் சென்று கூத்து
நடத்தியபோது, ஒரு ஊரில் உருவாகிய சொல்லாடல்களை அடுத்தடுத்த ஊர்களுக்குக்
கொண்டுசென்றிருப்பார்கள், அந்த ஊர் மக்களிடமும் அந்தச் சொல்லாடல்கள்
பரவியிருக்கும் என புரிந்துகொள்ளலாம். அதனால்தான் தமிழ்ப் பழமொழிகள்
தமிழ் மக்கள் அனைவரிடமும் பரவியிருக்கின்றன. கலைஞர்கள் மூலமாக
வெளிப்படுகிற பஞ்ச் டயலாக்குகள் இன்றும் பரவலாகச் சென்று பலநாட்கள்
அழியாமல் நின்றுவிடுவதைப் பார்க்கிறோம். பழைய திரைப்படங்களின் "அடைந்தால்
மகாதேவி, இல்லையேல் மரணதேவி," "இதுதாங்க அந்த இன்னொரு வாழைப்பழம்,"
அண்மைக்கால படங்களின் "நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி,"
"பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மென்ட் வீக்கு" என்பன போன்ற வசனங்களை இதற்குச்
சான்றுகளாகக் குறிப்பிடலாம். மிக முக்கியமான ஒன்று - நாம் விவாதிக்கிற
பொருளோடு தொடர்புடையது - பழமொழிகள் இன்றைக்கும் ஆதிக்கம்
செலுத்துவதற்குக் காரணம், சமுதாயம் இன்னும் மாறாமல் இருப்பதுதான்.
சமுதாயம் பழைய நிலையிலேயே இருப்பதுதான். சமுதாய மாற்றம் நிகழ்ந்திருநதால்
பழமொழிகள் வழக்கொழிந்து போயிருக்கும். உதாரணமாக, பெண்ணுரிமைக் குரல்
ஓங்கி ஒலிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், அரசியலிருந்து ஐ.டி. செக்டார்
வரையில் பெண்கள் சாதிக்கத் தொடங்கிவிட்ட சூழலில் இனி "அடுப்பூதும்
பெண்களுக்குப் படிப்பெதற்கு" என்ற பழமொழிக்கு மரியாதை இல்லையல்லவா?
ஆனால், அந்தப் பழமொழியின் செல்வாக்கு சரிந்துவிடக்கூடாது என்று, பெண்ணின்
கல்வி வாய்ப்பை நேரடியாகவோ மறைமுகமாகவோ பறிப்பதற்கான ஆணாதிக்க சமூக
ஏற்பாடுகளும் தொடர்கின்றன. ஆகவேதான், பெண்களைக் கட்டிப்போட்ட பண்பாட்டுச்
சிறையின் பழமொழிக் கம்பிகள் பற்றி நாம் ஆராய வேண்டிய தேவையும்
ஏற்பட்டிருக்கிறது.
வரலாற்றுப் பின்னணி
பெண்கள் குறித்த தமிழ்ப் பழமொழிகள் பற்றிப் பேசுகிறபோது, பெண்கள் குறித்த
தமிழ்ச் சமுதாயத்தின் பார்வைகள் பற்றியும் பேசியாக வேண்டு. சமுதாய
நியதிகளின் வெளிப்பாடுதான் பழமொழி என்பதால், பெண்களுக்குத்
தமிழ்ச்சமுதாயம் அல்லது ஒட்டுமொத்த இந்தியச் சமுதாயம் எப்படிப்பட்ட
நியதிகளை நிர்ணயித்திருந்தது என்பதிலிருந்தே பழமொழிகளின் தாக்கத்தையும்
ஆராய வேண்டும். நான் பார்த்த சில பழமொழிப் புத்தகங்கள் இப்படிப்பட்ட சமூக
ஆராய்ச்சிகளுக்குள் செல்லாமலே பழமொழிகளைத் தொகுத்துச் சொல்கிற
வேலையைத்தான் செய்திருக்கின்றன. பேராசிரியர் ச. மாடசாமி எழுதிய
"சொலவடைகளும் சொன்னவர்களும்" என்ற புத்தகம் பழமொழிகளின் சமூகப் பின்னணியை
அலசுகிறது. இணையத்தில் சென்று பார்த்தால் சில வலைப்பூக்களில் பெண்களுக்கு
எதிரான பழமொழிகள் பற்றிய கட்டுரைகள் ஓரளவுக்கு இருக்கின்றன.
இந்தியச் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமைகள் என இரண்டைச் சொல்வார்கள்.
ஒன்று - வேலைப்பிரிவினை சார்ந்த சமூகக் கட்டமைப்பு; மற்றொன்று -
பெண்களைப் போற்றுகிற மரபு. வலைப்பிரிவினை சார்ந்த சமூகக் கட்டமைப்பு
என்பது வர்ணாசிரமக் கட்டமைப்பாக வலுப்படுத்தப்பட்டது. அடிப்படையில் அது
சாதிப் பாகுபாட்டையும், தீண்டாமை உள்ளிட்ட சாதிய ஒடுக்குமுறைகளையும்
கெட்டிப்படுத்துவதேயாகும்.
இந்தியத் துணைக்கண்ட மண்ணில் நில உடைமைச் சமுதாய அமைப்பு உருவாகியபோது,
அது வரையில் சமமாகவும் தலைமைக்கு உரிய தகுதியோடும் இருந்த பெண், ஆணின்
ஒரு உடைமையாக அடிமைப்படுத்தப்பட்டாள். அந்த வரலாறு இன்று வரையில் மாற்றி
எழுதப்படவில்லை.
அதே போல், பெண்ணுக்கு மரியாதை செலுத்துகிற பண்பாடு என்பதும், உண்மையில்
அவளை அலங்காரத்துடன் அடிமைப்படுத்துகிற ஏற்பாடேயாகும். நதிகளுக்கெல்லாம்
பெண்ணின் பெயர் சூட்டிய தேசம் இது, பெண் கடவுள்களையும் கூட வணங்குகிற
மக்கள் எம்மவர் என்றெல்லாம் இங்கே பெண்ணின் பெருமை பேசப்படும். ஆனால்,
அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு ஆகியவையே பெண்ணின் சிறப்பு என்ற தத்துவமே
அழுத்தமாக வலியுறுத்தப்படும்.
இப்படி சாதிப்பாகுபாட்டையும், பெண்ணடிமைத்தனத்தையும் தத்துவமாகவும்
அரசியலாகவும் நிலைநாட்டுவதுதான் பிராமணியம் அல்லது வர்ணாசிரமம் அல்லது
இந்துத்துவ தர்மம். கொடுமை என்னவென்றால், இந்தியாவில் உருவான, அல்லது
இந்தியாவிற்கு வந்த பிற மதங்களும் இங்கே காலந்தள்ள வேண்டுமானால் இந்த
சாதியம், பெண்ணடிமைத்தனம் இரண்டையும் அங்கீகரித்தாக வேண்டும் என
ஏற்றுக்கொண்டதுதான். அதனால்தான், இந்துக்கள் மட்டுமல்லாமல் பிற
சமயங்களைச் சேர்ந்தோருரிடையேயும் சாதி, பெண்ணிழிவு ஆகிய இரண்டும்
செல்வாக்கோடு இருக்கின்றன.
நமது பழமொழிகளும் கூட, ஒரு பக்கம் வாழ்க்கை அனுபவப் பாடங்களைச்
சொல்லிக்கொண்டே, இன்னொரு பக்கம் சாதியத்தையும் பெண் அவலத்தையும்
காப்பாற்றுகிற கைங்கர்யத்தைச் செய்துவருகின்றன. சாதிய ஒடுக்குமுறைக்கும்
ஆணாதிக்கத்துக்குமான கருவிகளாகப் பழமொழிகளும் சேவை செய்துவருகின்றன.
இங்கே நாம் பெண் பற்றிய பழமொழிகளை மட்டும் பார்ப்போம். பெண்ணின்
ஒழுக்கம், பெண்ணின் குணம், பெண்ணின் சார்பு, பெண்ணின் தகுதி,
பெண்ணுக்கான பொருளாதாரம், பெண்ணுக்கான அரசியல் என்ற கோணங்களில் நம்
பழமொழிகள் எப்படி பெண்ணை முன்னிறுத்துகின்றன என்று விசாரிக்கலாம்.
ஒழுக்கம்
"பொம்பளை சிரிச்சாப் போச்சு, புகையிலை விரிச்சாப் போச்சு," என்பது,
கலகலப்பாகப் பேசுகிற பெண்ணின் மீது வீசப்படும் சவுக்கு. புகையிலையைப்
பொத்திவைக்காமல் விரித்துவிட்டால் அதன் நாற்றம் வெளியே வீசும்,
கெட்டுப்போய்விடும். அதே போல், கட்டுப்பாடாக இல்லாமல் சிரித்துப் பேசுகிற
பெண்ணும் நாறிப்போய்விடுவாள் என்பது இதன் போதனை. பெண்ணாய்ப் பிறந்தவள்
அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டிலிருந்தே இந்தப்
பழமொழி பிறந்திருக்கும் என்பதை எளிதில் புரிந்துகொள்ளலாம்.
"ஒண்ணும் தெரியாத பாப்பா, உள்ளே போடுவாளாம் தாப்பா" -வெளியே
ஒழுக்கமானவளாகவும் அப்பாவியாகவும் காட்டிக்கொள்ளும் பெண்,
படுக்கையறைக்குள் ஆட்டம் போடுவாள் என்று இந்தப் பழமொழி கேலி செய்கிறது.
உண்மை என்னவென்றால் பெண் தன் இயற்கையான பாலியல் உணர்வுகளை ஆணைப்போல
வெளிப்படுத்தவோ, ஆலோசனை பெறவோ வழியில்லை என்பதுதான். அப்படியெல்லாம்
பேசினாலே அவளது ஒழுக்கம் சந்தேகத்திற்கு உரியதாக்கப்பட்டுவிடும்.
"ஆடத் தெரியாத தேவடியாள் தெரு கோணல் என்றாளாம்," "ஊருக்கொரு தேவடியாள்
யாருக்கென்று ஆடுவாள்," "தான் பத்தினியானால் தேவடியாள் தெருவிலும்
வாழலாம்," "அவுசாரி போனாலும் முகராசி வேணும், அங்காடி போனாலும் கைராசி
வேணும்" என்றெல்லாம் பெண்ணின் ஒழுக்கம் சார்ந்ததாகக் கட்டப்பட்டுள்ள
பழமொழிகள், பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட பெண்களின் அவலத்தை மறைக்கின்றன.
பெண்ணின் கற்பொழுக்கம் குறித்து இப்படி போதிக்கிற பழமொழிகள், ஆணின்
கற்பொழுக்கம் குறித்து என்ன சொல்கின்றன? இதோ மாதிரிக்கு ஒன்று: "சேறு
கண்ட இடத்தில் மிதிச்சு, தண்ணி கண்ட இடத்தில் கழுவிட்டுப் போறவன்தான்
ஆம்பிளை." ஆக, எவ்வளவுக்கெவ்வளவு ஆண் பிற பெண்களோடு உறவு
வைத்திருக்கிறானோ அதுவே அவனுக்குப் பெருமை! "அழகான பொண்ணு தலைவலி,
அழகில்லாத பொண்ணு வயித்துவலி" என்று ஒரு பழமொழி. பெண் எப்படி இருந்தாலும்
ஆணுக்குச் சுமைதான் என்று கூறுகிறது.
குணம்
சமூகம் விதித்துள்ள நியதிகளை ஏற்க மறுக்கிற பெண்களெல்லாம்
குணக்கேடர்கள்தான். "தான் திருடி பிறரை நம்பாள், பெண்டுக இருக்கிற இடம்
சண்டைக பெருத்த இடம்" என்பன போன்ற பழமொழிகள் பெண்ணை சந்தேகப்
புத்திக்காரியாகவும், சண்டைக்காரியாகவும் சித்தரிக்கின்றன.
பெண் யாரையும் நம்ப முடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டிருப்பது பற்றியும்,
பொது வெளியில் செயல்படுகிற வாய்ப்புகள் தடுக்கப்பட்டு மாமியோரோடும்
நாத்தனார்களோடும் அக்கம்பக்கத்தாருடனும் குழாயடியிலும்
சண்டைபோட்டுக்கொண்டிருக்க வேண்டியவளாகப் பெண்ணின் குணம்
குறுக்கப்பட்டுவிட்டது பற்றியும் பழமொழி எதுவும் இல்லை.
இதன் தொடர்ச்சியாகத்தான், "மாமியார் உடைச்சா மண்குடம், மருமகள் உடைச்சா
பொன்குடம்," என்று மாமியார்கள் தங்களது மருமகள்களைக் குறைகூறிக்கொண்டே
இருப்பது பற்றிய பழமொழியும் புழங்குகிறது. அந்த மாமியாரும் ஒரு பெண்,
அவரது பொதுவெளியும் தடுக்கப்பட்டுவிட்டது என்பதே உண்மை. "சீற்றமுள்ள
மனைவியும் நாற்றமுள்ள மனையும் நரகமாகும்," என்ற பழமொழி, பெண்ணின்
ஆயிரமாயிரமாண்டு கோபத்தைக் கொச்சைப்படுத்துகிறது.
சார்பு
"கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்" என்ற பழமொழி எல்லோருக்கும்
உடனே ஞாபகம் வரும். கட்டிக்கொண்டவன் எப்படிப்பட்டனவனானாலும் அவனைச்
சார்ந்து அனுசரித்து வாழ வேண்டியவளே பெண்.
"பேய் பிள்ளையானாலும் தாய் தள்ளிவிடுவாளா" என்ற பழமொழி, பெண்ணின்
தாய்ப்பாசத்தைப் பாராட்டுவது போல அவள் கணவனையடுத்துப் பிள்ளையைச்
சார்ந்திருக்க வேண்டியவளே என வலியுறுத்துகிறது. இந்தப் பழமொழிகளின்
தொடர்ச்சியாகவே "வீடுவரை உறவு, வீதி வரை மனைவி,காடு வரை பிள்ளை, கடைசி
வரை யாரோ" என்றும், "நல்ல மனைவி நல்ல பிள்ளை நல்ல குடும்பம் தெய்வீகம்"
என்றும் ஆணின் தேவையைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிற திரைப்பாடல்கள்
உருவெடுத்தன.
தகுதி
இவ்வாறெல்லாம் தகுதியற்ற பெண்ணைச் சாடுகிற பழமொழிகள், நல்ல பெண்ணுக்கான
தகுதி என்ன என்று சொல்லாமல் விடுமா? "பின் தூங்கி முன்னெழுவாள் பத்தினி"
என்ற பழமொழி, கணவன் உறங்கியதற்குப் பிறகு தான் உறங்கி, அவன் எழுவதற்கு
முன்பே தான் எழுந்து பணிவிடைகள் செய்கிறவளே உத்தமமான பெண் என்று
போதிக்கிறது.
இப்படி வீட்டு வேலைகள் செய்து சமையல் முடித்து வைத்தால் மட்டும் போதாது.
சாப்பிடுவதிலும் அவள் தகுதியுள்ள மனைவியாக இருக்க வேண்டும். எப்படி?
"உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு."
"பெட்டைக் கோழி கூவியா பொழுது விடியப்போகுது," என்ற பழமொழியைப் போல
பெண்ணின் தகுதியை சிறுமைப்படுத்துகிற இன்னொரு பழமொழி வந்துவிட முடியுமா?
ஆண் சேவல் கூவியும் பொழுது விடிவதில்லை என்ற இயற்கை உண்மையை மறைக்கத்தான்
முடியுமா?
பொருளாதாரம்
ஆணாதிக்க சமுதாயத்தின் அடிப்படையே பெண்ணின் பொருளாதார பலத்தைத்
தட்டிப்பறித்துக்கொண்டதில்தான் இருக்கிறது. அவனுடைய பொருளாதாரத்தை எப்படி
இவள் பேணுகிறாள் என்பதே பெண்ணுக்கான பொருளாதார நிலை. அதிலிருந்துதான்,
"அரைக்காசை ஆயிரமாக்குவதும் பெண், ஆயிரத்தை அரைக்காசாக்குவதும் பெண்,"
என்ற அரிய தத்துவம் சொல்லப்பட்டது. பெண்ணின் பொருளாதார நிர்வாகத்திறனைப்
போற்றுவது போல் அவள் ஆணுடைய பொருளாதாரத்தை நிர்வகிக்க வேண்டியவளாக
அமுக்கப்பட்டுவிடுகிறாள்.
பெண் அப்படி அமையாவிட்டால் என்ன ஆகும்? "கூத்தாடிப் பெண்ணுக்கு சூதாடிப்
புருசன்," என்ற பழமொழியால் இதற்கு பதில் சொல்கிறது நம் சமூகம்.
அப்படியெல்லாம் நிர்வாகத் திறமை உள்ள பெண்தானா எப்படிப் பார்த்துத்
தேர்வு செய்வது? "தாயைப் பார்த்து பெண்ணைக் கொள், பாலைப் பார்த்து
பசுவைக் கொள்," என்பது அறிவுரை. ஆக, பெண்ணும் மாடும் ஒன்று.
இப்படி ஒடுக்கப்படுவதில் அவள் சுகம் கண்டு எதிர்க்காமல் இருக்க என்ன
செய்ய வேண்டும்? "பெண்ணுக்கு பொன் இட்டுப் பார், சுவருக்கு மண்
இட்டுப்பார்."
"சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை," என்று ஆணை உயர்த்துகிற சமூகம்தான்
இப்படி பெண்ணை வெறும் பொன்னுக்கு ஆசைப்பட்டு அடங்கிப்போகிறவளாக
ஆக்கிவைத்திருக்கிறது.
அரசியல்
பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும், ஆணுக்குச் சமதையாய் அரசியல் நடத்த
வேண்டும் என்பதே மார்க்சியவாதிகளும் இதர முற்போக்காளர்களும்
வலியுறுத்துவது. ஒப்பிட்டளவில் முற்காலத்தை விட பெண்கள் அரசியலுக்கு
வருவது கூடுதலாக இருக்கிறது. ஆயினும் ஒட்டுமொத்தத்தில் பார்த்தால்
பெண்ணின் அரசியல் என்பது மறுபடியும் பொது வெளி சாராததாக, குடும்ப
அரசியலோடு கதவு மூடப்பட்டதாகவே இருந்துவருகிறது. பெண் சுய அறிவோடு
அரசியலில் தலைமைப் பாத்திரத்திற்கு வந்துவிடலாகாது என்று அக்கறையோடு
கூறப்படும் ஒரு பழமொழி: "பேதைமை என்பது பெண்ணுக்கு அழகாம்."
இதிலிருந்தே பெண்ணின் வெகுளித்தனம், அசட்டுத்னம் ஆகியவை ரசனைக்குரிய
தன்மைகளாக வர்ணிக்கப்படுகின்றன. இதன் ஆணாதிக்க அரசியலைப் புரிந்துகொண்டாக
வேண்டும்.
"பிரியமில்லாத பெண்ணிலும் பேய் நன்று," "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்
உள்ளே இருக்குமாம் ஈறும் பேணும்" என்பன போன்ற பழமொழிகள் இந்த அரசியலின்
வெளிப்பாடுகள்தான்.
புதுமொழி
கொற்றவையாக இருந்தவள் குடும்ப விளக்காக சிமினிக்குள் வைக்கப்பட்டதை
எதிர்த்து பெண்கள் காலமெல்லாம் போராடியே வந்திருக்கிறார்கள். அவற்றை
எதிரொலிக்கும் பழமொழிகளைப் பார்க்க முடியவில்லை. பெண்ணின் குரலை
ஒடுக்கியது போலவே அதையொட்டி உருவாகியிருக்கக்கூடிய சொல்லாக்கங்களையும்
ஆணாதிக்க சமூகம் அழித்திருக்கும் என்பது நிச்சயம்.
இந்தத் தொடர்ச்சியிலிருந்து அறுக்க முயன்றவன் பாரதி. பெண்பாற்புலவரான
அவ்வையார் கூட தனது ஆத்திச்சூடியில் "தையல் சொல் கேளேல்" என்று
எழுதியிருக்க, இவன்தான் தன் புதிய ஆத்திச்சூடியில் "தையலை உயர்வு செய்"
என்று புதுமைப்பெண்ணின் அணிவகுப்புக்கு அச்சாரம் போட்டுக்கொடுத்தான்.
"மாதர்தமை அடிமை செய்யும் மடமையைக் கொளுத்துவோம்," என்றான்.
அந்த வழியில்தான் மாதர் சங்க மேடைகளில் பாடப்படும் "அச்சம் நாணம் மடம்
பயிர்ப்பு ஆகிய சொற்கள் வெறும் பசப்பு" என்ற வரிகள் புதிய சிந்தனையை
தூண்டுகின்றன.
"நாளும் கிழமையும் நலிந்தோருக்கில்லை,
ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை,"
-என்று உண்மை நிலையை எடுத்துரைத்துச் சென்றார் கந்தர்வன்.
"ஆதியில் நின்றவள் கொற்றவை,
சாதித்து வென்றவள் கொற்றவை
அடிமையில் உழலும் பெண்ணினமே-அவர்
கண்களில் உன் சுடர் பற்றவை,"
-என்கிறார் ஜீவி.
பெண் படைப்பாளிகளும் தங்கள் பங்கினை நிறைவேற்றி மனசாட்சியை உலுக்கும்
வரிகளை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
"இன்பம் பலவாக்குவோம், அதை
இருவர்க்கும் பொதுவாக்குவோம்,"
- என்று மக்கள் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் கூறிய வழியில்,
சமத்துவ உரிமைகளை நிலைநாட்டும் போராட்டம் வெல்ல வேண்டும். அந்தப்
போராட்டத்தின் வெற்றியில் இப்படிப்பட்ட புதுமொழிகளே எதிர்காலத்தின்
பழமொழிகளாகப் பரிணமிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக