Pages

வெள்ளி, ஆகஸ்ட் 24, 2012

நிறை செல்வம்!

சுப்பு என்பவர் ஓர் பெரிய செல்வந்தர்.ஆனால் அந்த ஊரில் அவரைக்  கருமி என்றே எல்லோரும் அழைத்தனர்.அதற்குக்  காரணமும் இருந்தது.அவர் பள்ளியில் படித்த போது ஒருமுறை  "கஞ்சன்" என அவரது வாத்தியார் எழுதச் சொன்னார்.'கஞ்சன்' என்றால் நான்கு எழுத்து எழுத வேண்டுமே!, அதே அர்த்தமுள்ள "கருமி" என்ற மூன்றெழுத்தே போதுமென எழுதியவர்தான் சுப்பு.அன்றிலிருந்து சுப்புவைக்  கருமி என்றே ஊர்மக்கள் அழைத்தனர். 
எப்போதும் கிழிந்த சட்டை அணிந்து செல்வது சுப்புவின் வழக்கம்.ஒருமுறை உறவினர் ஒருவர் அவரிடம்  "செல்வந்தராகிய  நீங்கள், ஏன் கிழிந்த சட்டையுடன் அலைகிறீர்கள்?" என்று கேட்டதற்கு, "என்னைப்  பற்றித்தான் இந்த ஊரில் எல்லோருக்கும் தெரியுமே!, கிழிந்த  சட்டை போட்டால் என்ன? " என்று கிண்டலாகப்  பதில் சொன்னார் சுப்பு.
இன்னொரு நாள் பட்டணத்தில் சுப்புவைப் பார்த்த வேறொரு நபர் அதே கேள்வியைக்  கேட்டதற்குச் சுப்புவும் "என்னைப்  பற்றி இங்கே யாருக்கும் தெரியாதே!,கிழிந்த சட்டையை நான் ஏன் போடக்கூடாது?" என்று சாமர்த்தியமாகப் பதில் அளித்தார்.
செலவு செய்யாமல் செல்வம் சேர்ப்பதில் சுப்பு பெரிய கில்லாடி.தனது கல்யாணத்திற்குச்  செலவே செய்யாமல் மண்டபமோ விருந்தோ ஏற்பாடு செய்யாமல் நடத்தி அசத்தியவர். இப்படிப் பட்டவருக்கு அருளே வடிவான மனைவி வந்து வாய்த்தாள்.        
தான் காலமெல்லாம் சம்பாதித்த பணத்தைத், தன்  குடும்பத்திற்குக்  கூடச்  செலவு செய்யாமல் கருமித்தனமாகச் சேமித்து வைத்திருந்த சுப்புக்கு  இளமையிலேயே  நோயும் முதுமையும் அழைக்காமலேயே தேடி  வந்தது.அவரது மனைவி புத்திகூர்மையுடையவள்.கணவரை அனுசரித்து நடந்து கொள்பவள்.ஆனால்  பண விசயத்தில் சுப்புவிற்கு நேரெதிராகவே செயற்பட்டு வந்தாள்.உதவி கேட்டு வருவோருக்கு இல்லையென்று சொல்லாமல் இருப்பதைக் கொடுக்கும் சுவாபம் உள்ளவள்.சுப்புவிற்கு அவளின் தயாள குணமும் இல்லாதவர்களிடம் அவள் காட்டும்பரிவும் அறவே பிடிப்பதில்லை.
சுப்புவிற்குத்  தீராத நோய் வந்தபோது கண்ணும் கருத்துமாய் அவரைக்  கவனித்துக்கொண்டாள். அவர் இறப்பதற்குச் சிறிது காலத்திற்கு முன் தன் மனைவியை அழைத்து "நான் இறந்துவிட்டபின்பு  நான் சம்பாதித்த பணம் முழுவதையும்  என் கூடவே எடுத்துச்  செல்ல விரும்புகிறேன். எனவே என் பணத்தை என்னுடன் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்து விடு" என்றார். தான் சம்பாதித்த பணம் முழுவதையும் ஏழைகளுக்குத்  தானமாகக்  கொடுத்துவிடுவாளோ என்ற பயம்தான் இதற்குக் காரணம். பணம் முழுவதையும் சவப் பெட்டிக்குள் வைக்கவேண்டும் என உறுதிமொழியும் வாங்கிக் கொண்டார். கணவனின் கடைசி ஆசையை  நிறைவேற்றுவதுதானே  மனைவியின் கடமை?. நோயின் தீவீரத்தால் சுப்பு விரைவிலேயே இறந்துபோனார். சவத்தை அடக்கம் செய்ய எல்லா ஏற்பாடுகளும் நடந்தேறின. சவப்பெட்டியை மூடுந் தறுவாயில் அந்தப் புத்திசாலி மனைவி, "கொஞ்சம் பொறுங்கள்  எனக் கூறியவண்ணம் அறைக்குள்ளே ஓடிச்சென்று  ஒரு துணிப் பையை எடுத்து வந்து சவப் பெட்டிக்குள்  வைத்தாள்.
அவளுடைய கடினமான வாழ்வையும் சுப்புவின்  கஞ்சத்தனத்தையும் அறிந்திருந்த அவளது  தோழி "நீயும் முட்டாள்தனமாகச்  சுப்பு சொன்னது போலவே  செய்து விட்டாயா?" என்று கேட்டாள்.அதற்கு சுப்புவின் மனைவி,"அவரிடம்  சவப்பெட்டியினுள் முழுப் பணத்தையும் வைப்பதாக உறுதிமொழி கொடுத்து விட்டு மாற்றவா முடியும்?.
அவரது  சேமிப்புகள்  சொத்துக்கள்   அனைத்தையும் பணமாக்கி என்னுடைய வங்கிக் கணக்கிலே போட்டு விட்டேன்.வங்கியில் உள்ள முழுத்தொகைக்கும் காசோலை ஒன்றை  எழுதி அதைத் துணிப்பைக் குள்ளே இட்டுச் சவப் பெட்டியில் வைத்து விட்டேன்.அவர் போகும்  இடத்தில் காசோலையை மாற்றி  எடுத்துக் கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை"என்றாள்."அந்தப் பணத்தை உயிருடன் இருக்கும்போதே சுப்பு அனுபவிக்கவில்லை, இறந்தபின் அந்தப் பணம் அவருக்கு  உதவும் என்றா நினைக்கிறாய்?" என்றாள்.
தொண்டுள்ளம் கொண்ட சுப்புவின் மனைவி  கணவன் விட்டுச் சென்ற சொத்து அனைத்தையும் ஏழை எளியவர்களுக்குக் கொடுத்து உதவுவதற்கும்  தான தருமங்கள் செய்வதற்கும்  பயன்படுத்தினாள்.அதே நேரத்தில் செல்வத்தை நல்வழியில் ஈட்டும் பணியிலும் ஈடுபட்டாள். 
சுப்புவைப்போல்  உடலை வருத்தித்  தேவைக்கு அதிகமாய்ப்  பொருள் சேர்த்துச்  செல்வந்தர் போல் வலம் வருவோர்  நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகிறார்கள்.செல்வம்மட்டுமே வாழ்க்கையல்ல என வேதாத்திரி மகரிஷி விளக்கும்போது, 
"இக்காலத்தில் ஒரு சிலர் செல்வந்தர்களாகவும்,மிகப் பலர் ஏழைகளாகவும் இருப்பதனால் செல்வத்திற்கு மதிப்பு இருக்கிறது.எல்லோரும் செல்வந்தர்களாகிவிட்டால் செல்வத்திற்கு மதிப்பு எப்படி ஏற்படும்?.நீங்கள் எவ்வளவோ செல்வங்களைச் சேகரித்து வைத்து இருக்கிறீர்கள்.உங்கள் எதிர்கால வாழ்வைப் பற்றி உறுதியாகவும் கவலையற்றும் இருக்க முடிகிறதா?ஏன் முடியவில்லை?எப்படி முடியும்?நீங்களும் மனிதர்கள்தானே ! எண்ணிறைந்த மக்கள் வறுமையின் காரணமாக எண்ணங்களைச் சிதறவிட்டு வருந்திக் கொண்டிருக்கும்போது அவர்கள் எல்லோருடைய  வாழ்க்கைப் போராட்டக் கவலைகள்  உலகில்  யாரைத்தான் நிம்மதியாக,அமைதியாக இருக்கச் செய்யும்?இந்த உண்மையை உங்கள் அறிவிலே பதித்துக் கொள்ளுங்கள்.உலகில் மனிதனாகப் பிறந்தவர்களில்  ஒருவன் கூட வறுமையில் வாடினாலும் மனித இனத்தின் வாழ்வில் அமைதி ஏற்படாது.உலகில்பொருளாதாரத்துறையில் மாறுதலை ஏற்படுத்தச் செல்வந்தர்களிடமிருந்து பணத்தையும் சொத்துகளையும் பிடுங்கி அனைவருக்கும் பங்கு போட்டு கொடுத்துவிட வேண்டியதில்லை.அப்படிச் செய்வது தவறான பாதையாகும்.செல்வந்தர்களாக இருப்பவர்களும் மனிதர்கள்தான்.அவர்கள் மனம் வருந்தவும், அவர்களின் எதிர்கால வாழ்வில் துன்பங்கள் அதிகரிக்கவும் செய்வது மனித தர்மத்திற்கு ஏற்றதல்ல.நாம் கோரும் பொருளாதார சீர்திருத்தம் செல்வந்தர்களை ஏழைகளாக்கி விடுவதல்ல.மக்கள் சுகமாக வாழ வேண்டுமெனில் பணம் மட்டும் இருந்தால் போதாது.வாழ்க்கைப் பொருள்களும் அவற்றைப் பகிர்ந்து   நிரவியனுபவிக்கும் பொது நோக்கமும் தேவை." என்கிறார்.
 
கொசுறு :
பணம் உள்ளவனுக்குக்  கருமித்தனம் அவசியமில்லை.
கருமித்தனம் உள்ளவனுக்குப்  பணம் அவசியமில்லை.

 

கருத்துகள் இல்லை: